ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

சுபா

கொடூரமாய் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்... கிடைத்திருக்கும் கொஞ்சமே கொஞ்சம் தடயங்கள் என டைமிங் தடத்தில் தடதடக்கிறது கதை...



மாலை வெயில், நிழல்களை நீளமான கோடுகளாக இழுத்திருந்தது. விஜய் பைக்கை நிறுத்திவிட்டு, கால்கள் புதையப் புதைய கடற்கரை மணலில் தனியே நடந்தான். மகிழ்ச்சியோ, துக்கமோ, குழப்பமோ, அவனுடைய போதிமரமாக சென்னை கடற்கரைதான் நட்புடன் இருந்து வந்திருக்கிறது. இப்போது அவனுக்குத் தனிமை தேவைப்பட்டது.

கரையோரம் அலைகளைப் பார்த்தபடி மணலில் அமர்ந்தான். அங்கங்கே மீனவர்கள் குவித்து வைத்திருந்த கயிற்றுச் சுருள்கள். கரை ஏறியிருந்த மீன்பிடிப் படகுகள். முழங்கால்களைக் கட்டிக்கொண்டான். திடீரென்று அவன் வாழ்க்கை ஏன் இப்படித் தடம்புரண்டு ஓடுகிறது..? இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட வேண்டும் என்று மனம் தவித்தது. ஒன்று, நடராஜர் சிலைத் திருட்டு. மற்றது கல்யாணியுடன் சந்தேகிக்கப்படும் உறவு.

கல்யாணி விவகாரத்திலாவது சிறு தகவல் கிடைத்திருந்தது. முரளிதரன் பற்றி பிரகாஷ் தெரிவித்ததை யோசிக்கலாம். திருடு போன நடராஜர் சிலை பற்றி யோசித்தால், அதில் அவனுக்குத் தெரிந்த தொடர்புகள் ஒவ்வொன்றாக அறுபட்டுப் போயிருந்தன. ஒரே ஒரு தொடர்புதான் மிச்சமிருந்தது. ஜார்ஜிடமிருந்து சிலையை வாங்கிப் போனவன். ‘சின்னா’ என்று ஜார்ஜால் அழைக்கப்பட்டவன். அந்த முகம் விஜய்யின் நினைவடுக்குகளில் தெள்ளத்தெளிவாகப் பதிந்திருந்தது.

அவன் யார், எங்கிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க எங்கே தன் தேடலைத் துவங்க வேண்டும்..? புரியவில்லை. முதலில் கல்யாணி விவகாரத்தை கவனிக்கலாமா? கல்யாணியின் பெற்றோரிடம் சவாலாகப் பேசிவிட்டு வந்துவிட்டானே தவிர, அவளுக்கு வயிற்றில் கரு கொடுத்தது யார் என்பதை எவ்வாறு கண்டறியப் போகிறான்..? புரியவில்லை.

எதிலிருந்தாவது, ஏதாவது குறிப்பு கிடைக்காதா என்ற சபலத்துடன்  அவளுக்கும், அவனுக்கும் இடையிலான பல நிகழ்வுகளை, அலைகளை வேடிக்கை பார்த்தபடி மனதில் அசைபோட்டான். கடல் அலைகள் பொங்கியெழுந்து வந்து, கரையை அறைந்தன. வலுவிழந்தன. தாய் வீட்டுக்குத்  திரும்பின. உடைகளை முழங்கால் வரை சுருட்டிவிட்டுக்கொண்டு, சில இளம்பெண்களும் இளைஞர்களும் கால்கள் நனைய, நனைய அலைகளில் நின்று, சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தனர்.

பெற்றோரின் கையை இறுகப் பற்றியபடி சில குழந்தைகள் தங்களைத் தேடி வரும் அலையைக் கண்டதும் அலறின. அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டன. கவுன் நனைய, நனைய ஒரு சிறுமி உட்கார்ந்து ஈர மணலில் தன் பெயரை ஒற்றை விரலால் எழுத ஆரம்பித்தாள். ஓங்கி அடித்த அலை ஒன்று, மணல் சரிவில் சர்ப்பம் போல் ஏறி வந்து அந்த எழுத்தை சாப்பிட்டுவிட்டுப் போனது. சிறுமி அழுகையுடன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்.

‘‘இப்ப, உனக்கும், அலைக்கும் போட்டி..! யார் ஜெயிக்கறாங்க பார்ப்போம்.. வா, இப்படித் தள்ளி வந்து உட்கார்ந்து எழுது..!’’ குழந்தை சந்தோஷமாக சற்றுத் தள்ளி வந்து அமர்ந்து மீண்டும் மணலில் தன் பெயரை எழுதத் துவங்கியது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, விஜய்யின் மனதில் மின்னலடித்தது போல் ஒரு காட்சி நினைவில் புரண்டது.

விஜய்யும், கல்யாணியும் கும்பமேளாவுக்காக வடநாட்டில் ஹோட்டலில் ஒரே அறையைப் பகிர்ந்துகொண்ட தினங்கள். அவன் தரையில் படுத்து உறங்கியிருந்தாலும், எழுந்தவுடன் சுறுசுறுப்பானான். காலை உணவை முடித்துக்கொண்டு, படப்பிடிப்புக்காகப் புறப்படத் திட்டமிட்டார்கள். கல்யாணி குளித்து உடை மாற்றும் நேரம், அவன் வெளியில் உலாத்திக்கொண்டிருந்தான். பளிச்சென்று உடுத்தி, கல்யாணி அறைக்கு வெளியில் வந்தாள்.

‘‘போ.. நீ சொரண்டிக் குளிச்சிட்டு வா.. நான் கீழ ரெஸ்டாரன்ட்ல வெயிட் பண்றேன்!’’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அவள் இறங்கிப் போனாள். குளித்துவிட்டு, அவன் கீழே இறங்கி வந்தான். கூட்டம் நெரிபட்டுக்கொண்டிருந்த உணவு விடுதியில் கல்யாணி ஓரத்தில் அமர்ந்திருந்தாள். கேமரா பையை அவளருகில் இறக்கி வைத்தபோதுதான் விஜய் கவனித்தான்.

சதுரமாக மடிக்கப்பட்ட கை துடைக்கும் காகிதத்தை மேஜை மீது வைத்து, கல்யாணி ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தாள். விஜய் எட்டிப் பார்த்தான். ஆங்கில எழுத்து ‘எம்’ என்பதைப் பெரிதாக எழுதி, அதன் ஒவ்வொரு கோட்டையும் அடர்த்தியாக்கி, வளைகோடுகளால் அவள் அலங்கரித்துக்கொண்டிருந்தாள். ‘‘அப்படிப் போடு...’’ என்றான் விஜய். ‘‘எம் என்றால், மேரேஜ்... வீட்ல கல்யாணத்தைப் பத்தி அடிக்கடி கேக்க மாட்டேங்கறாங்களேனு தவிப்பா..?’’

‘‘தப்பு...’’ ‘‘வெயிட்.. அந்தக் கல்யாணத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துட்டு இருக்கியே, பணம்..! எம் என்றால் மனி... கரெக்ட்..?’’ அவள் வாய்விட்டுச் சிரித்தாள். ‘‘உன்னோட எறும்பு மூளையை வச்சுக்கிட்டு, நீ எவ்வளவு யோசிச்சாலும், நான் என்ன எழுத வந்தேன்னு உன்னால கண்டுபிடிக்க முடியாது...’’

‘‘கல்யாணமும் இல்ல, காசு பணமும் இல்ல... அப்படின்னா, ரெண்டே நாள்ல சப்பாத்தி சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு... எம் என்றால் மசால் தோசை..?’’ ‘‘போடா முட்டாள்..!’’ ‘‘ஓ, எம் என்றால் முட்டாளா..?’’ ‘‘டேய், கடிக்காத..!’’ ‘‘எம்னா என்ன..?  ஒழுங்கா சொல்லிரு...’’ ‘‘நாம எதுக்கு வந்திருக்கோம்..? கும்பமேளா.. எம் என்றால் மகா கும்பமேளா...’’ என்று சொல்லியபடியே கல்யாணி அந்தக் காகிதத்தைக் கிழித்து, கசக்கி எறிந்தாள். கும்பமேளாவுக்கு அவனுடன் புறப்பட்டு வருவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன், முரளிதரனை ரகசியமாக அவள் சந்தித்தாள் என்று பிரகாஷ் கூறியதற்கு இப்போது அர்த்தம் கிடைத்துவிட்டாற்போல் இருந்தது.

முரளிதரன் என்பதைக் குறிக்கத்தான் எம் என்று அவள் கிறுக்கிக்கொண்டிருந்தாளோ? இனி அவளிடம் கேட்க முடியாது. உண்மையை அறிந்துகொள்ள ஒரே ஒருவரைத்தான் நாட முடியும். முரளிதரன்..! இன்ஸ்பெக்டர் துரை அரசன் விஜய்யின் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த அவனுடைய டைரியைப் புரட்டிக்கொண்டிருந்தார். டைரி என்றால், சுவாரசியமான அந்தரங்கத் தகவல்கள் இருக்க வேண்டாமோ..? ஒவ்வொரு பக்கத்திலும், ஏதோ பல் டாக்டர் அப்பாயின்ட்மென்ட் அட்டவணை போல், எத்தனை மணிக்கு யாருடன் சந்திப்பு, எங்கே படப்பிடிப்பு என்றுதான் குறித்து வைத்திருந்தான்.

அரவமணி நல்லூருக்குப் புறப்பட்டுப் போன தினம் வரைதான் குறிப்புகள் இருந்தன. அதற்கப்புறம் வெறுமையான பக்கங்கள். வேகமாகப் புரட்டியவர் கடைசிப் பக்கத்தில் பார்வையை நிறுத்தினார். அங்கே ஒரு அரசுடைமை வங்கிப் பெயரும், பதினைந்து இலக்க எண்ணும் இருந்தன. அந்த வங்கிக் கணக்குக்கு இணையம் மூலம் பணம் அனுப்புவதற்குத் தேவையான விவரங்களும் இருந்தன. இது யாருடைய கணக்கு? மறுநாளே அது பற்றி விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 

முன்னிரவு நேரத்தில் காற்றில் வெளிச்சப் புள்ளிகள் வைத்தது போல் தெருவிளக்குகள் விழித்திருந்தன. வாடகைக் காரிலிருந்து முரளிதரன் இறங்கினார். கண்ணாடிக் கதவைப் பணியாளர் திறந்துவிட அந்த உயர் ரக உணவு விடுதியில் நுழைந்தார். கண்கள் நாற்புறமும் தேடின. வெளிச்சம் குறைவான ஒரு மூலையில் இருந்த மேஜையில் விஜய் காத்திருந்தான். அங்கிருந்தே கையசைத்தான். முரளிதரன் அந்த மேஜைக்கு வந்து அமர்ந்தார்.

‘‘என்ன விஜய் இது புதுசா..? மீட் பண்ணணும்னா, ஆபீஸ் வர வேண்டியதுதான..? எதுக்கு என்னை இந்த ஹோட்டலுக்கு வரச்சொன்ன..?’’ ‘‘உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் சார்... உங்களுக்குப் பிடிக்குமேனு இறால் சுக்கா ஆர்டர் பண்ணிட்டேன்... இந்த ஹோட்டல் உங்களுக்கு ஓகேதான..? இல்ல, அண்ணா சாலைல இருக்கற சூர்யகலா ஹோட்டல்தான் பிடிக்குமா..?’’ ‘‘உன் பேச்சே குழப்பமா இருக்கு..? சூர்யகலா ஹோட்டல் பேரை இப்ப எதுக்கு சொல்றே..?’’

‘‘சார், நேரடியா சில கேள்விகள் கேக்கறேன். உண்மையான பதில் சொல்வீங்களா..?’’ ஹோட்டல் சிப்பந்தி கொண்டுவந்து வைத்த இறால் சுக்காவை கவனித்துவிட்டு, முரளிதரன் புருவங்களைச் சுருக்கினார். ‘‘கேளு...’’ சிப்பந்தி விலகும் வரை காத்திருந்துவிட்டு, விஜய் மெல்லிய குரலில் பேசினான்: ‘‘கல்யாணி செத்துப் போனது உங்களுக்கும் அதிர்ச்சியா இருக்கும்னு நெனைக்கறேன்..!’’

முரளிதரன் தலையசைத்தார். ‘‘அதைவிட அதிர்ச்சி, கொலையானபோது, அவ கர்ப்பமா இருந்தாங்கறதுதான்...’’ என்றார். ‘‘அதைவிடப் பெரிய அதிர்ச்சி, அந்தக் கருவைக் கொடுத்தது யாருனு தெரியாம இருக்கறது...’’ என்று சொல்லியபடி விஜய் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த டிஷ்யூ காகிதத்தை எடுத்தான். அதில் பெரிதாக ஆங்கிலத்தில் ‘எம்’ என்று எழுதினான். முரளிதரன் முகத்தில் சலனமில்லாமல் அவனைப் பார்த்துக்கொண்டே சுக்காவை முள்கரண்டியால் எடுத்தார்.

விஜய் தொடர்ந்தான். ‘‘ஒரு சமயத்துல கல்யாணி இதே போல ‘எம்’னு ஒரு பேப்பர்ல எழுதிட்டிருந்தா. நான் என்னனு கேட்டேன். தன் மனசுல இருக்கறவரோட பேருனு சொன்னா... நீங்க ரெண்டு பேரும் சூர்யகலா ஹோட்டல்ல சந்திச்சது பத்தியும் லேசா சொன்னா...’’ என்று கொஞ்சம் பொய்யையும் கலந்து சொன்னான். முரளிதரன் அவனைக் குழப்பமாகப் பார்த்தார். ‘‘என்னப்பா சொல்ற..? கல்யாணியை தனியா ஹோட்டல்ல நான் சந்திச்சேனா..? எப்போ..? எதுக்கு..?’’

‘‘எதுக்குனு நீங்கதான் சார் சொல்லணும். ஏன்னா, அதைச் சொல்றதுக்கு கல்யாணி இப்ப உயிரோட இல்ல..!’’ ‘‘சூரியகலா ஹோட்டலுக்கு நான் போறது உண்டு. ஆனா, நீ சொல்ற மாதிரி கல்யாணியைப் பார்க்க நான் அங்க போனது இல்ல...’’ ‘‘உங்க ரெண்டு பேரையும் அந்த ஹோட்டல்ல சேர்ந்து பார்த்ததா என் ஃப்ரெண்ட் ஒருத்தன் எனக்கு சொல்லியிருக்கான்!’’ முரளிதரன் முகத்தில் குழப்பம் விலகி, கோபம் குடியேறியது. ‘‘சுத்த உளறல்...’’

‘‘சார், நடராஜர் சிலை திருடு போனபோது, அதைக் கடத்தறதுக்குப் பயன்பட்ட கார், நம்ப ஆபீஸ்ல உங்களுக்குக் கொடுத்த கார். அது தொலைஞ்சு போச்சுனு போலீஸ்ல புகார் குடுத்திருந்தீங்க.. அந்த காரைப் பயன்படுத்தினவங்கதான் கல்யாணியைக் கொலை பண்ணாங்க... இதுவும் உளறல்னு நெனைக்கறீங்களா..?’’ முரளிதரனுடைய கண்கள் சிவந்தன.

‘‘என் கார் திருடு போனதுக்கும், சிலை கடத்தலுக்கும் என்ன தொடர்பு..? கல்யாணியைக் கொலை பண்ணணும்னு நான் ஏன் நினைக்கணும்..? அவ என்னை ஒரு அண்ணன் மாதிரிதான் நெனைச்சுப் பழகிட்டிருந்தா.. எனக்குக் கல்யாணம் ஆகி, அன்பா ஒரு பொண்டாட்டி இருக்கா, ரெண்டு குழந்தைங்க இருக்கு... இனிமேலாவது இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா கற்பனை பண்ணாத..!’’

‘‘இல்ல, சார், நீங்க பொய் சொல்றீங்க.. அந்த ஹோட்டலுக்கு எதிர்ல இருந்த கடையில லேம்ப் ஷேட் வாங்கற மாதிரி போயிட்டு, அங்கேர்ந்து கிளம்பி அந்த ஹோட்டலுக்கு ரகசியமா நீங்க போகல..?’’ முரளிதரன் முள்கரண்டியை ஓசையுடன் மேஜை மீது வைத்தார். ‘‘போனேன். என் தங்கைக்குக் கல்யாணத்துக்கு வரன் பார்த்துட்டு இருக்கோம்.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அங்க வந்து தங்கியிருந்தாங்க.. அவங்களைப் பார்க்கப் போனேன்...’’

‘‘ஏன் சார் நேரடியா ஹோட்டலுக்குப் போகக் கூடாது..?’’ ‘‘இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல... இருந்தாலும், சொல்றேன். அன்னிக்கு எனக்கு கார் ஓட்டிட்டு வந்தது பிரகாஷ். ஆபீஸ் கார்ல ஏற்கெனவே ரெண்டு தடவை நான் போனபோது, வந்த வரன் தட்டிப் போயிருந்தது. பிரகாஷ்க்கு ராசியில்ல, வேற கார்ல வாங்கனு என் மனைவி சொல்லியிருந்தா... அவ முன்னாலயே போய் அந்த ஹோட்டல்ல எனக்காகக் காத்திருந்தா... பிரகாஷை ராசியில்லாதவன்னு நான் நெனைக்கல.

ஆனா, அந்தக் கார்ல அங்க போய் இறங்கி, மனைவி மனசைக் காயப்படுத்த வேண்டாம்னு நெனைச்சேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை நாங்க ரெஸ்ட்டாரன்ட்ல மீட் பண்ணிப் பேசினோம். என் ஒய்ஃபை அனுப்பிட்டு நான் என் கார்ல ஆபீஸ்க்குத் திரும்பினேன். அதே ஹோட்டலுக்கு கல்யாணி வந்ததே எனக்குத் தெரியாது!’’

அவர் பதில் கேட்டு, விஜய் திகைத்தான். ஆனால், அதைப் பொய் என்று நிராகரிக்க அவனிடம் காரணங்கள் இல்லை. ‘‘ஸாரி சார்..!’’ என்று தலைகுனிந்தான். ‘‘இப்படிச் சில்லறைத்தனமா யோசிக்கறதை விட்டுட்டு, பெரிய மனுஷத்தனமா யோசி..! அவசரப்பட்டு ஏதாவது செய்யறதாலதான், ஒவ்வொண்ணா இழந்துட்டு இருக்க..!’’ என்று சொல்லிவிட்டு, முரளிதரன் தன் பர்ஸை எடுத்தார். சாப்பிட்ட உணவுக்குப் பணத்தை வைத்தார்.

‘‘அதில்ல சார்... கல்யாணி ‘எம்’னு எழுதினா... அதான்...’’ ‘‘மேல மேல முட்டாள்தனமா யோசிக்காத.. ‘எம்’னு எழுதிட்டா, முரளிதரன்தானா..? மாங்கா மடையனா இருக்கலாம்... ஏன், எம்.டியா கூட இருக்கலாம்...’’ முரளிதரன் கோபமாக வெளியேறினார். விஜய் திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கல்யாணி என்னை ஒரு அண்ணன் மாதிரி தான் நெனைச்சுப் பழகிட்டிருந்தா. எனக்குக் கல்யாணம் ஆகி, அன்பா ஒரு பொண்டாட்டி இருக்கா, ரெண்டு குழந்தைங்க இருக்கு... இனிமேலாவது இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா கற்பனை பண்ணாத..!

(தொடரும்...)