ஹலோ, நாங்க ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசறோம்!



சம்பவம் 1
ராஜேஷ் அன்று பார்ட்டி மூடில் இருந்தார். அவரின் மூன்று வயது சுட்டி தன்வந்துக்கு பிறந்த நாள். உற்சாகம் பொங்க பிறந்த நாள் கேக்கை வாங்கி வந்து மேசை மீது விரித்த போது வந்தது அந்த போன்கால். ‘‘சார், ஆதரவற்றோர் இல்லத்துல இருந்து பேசறோம். மூணு வயசு பிஞ்சுக் குழந்தைக்கு இதயத்துல ஆபரேஷன் சார். உங்களால முடிஞ்ச உதவிய செய்ங்க சார், ப்ளீஸ்!’’ 



கெஞ்சியது ஒரு பெண் குரல். ‘‘அப்புறம் கூப்பிடுங்க!’’  ராஜேஷ் அப்போதைக்கு தவிர்த்துவிட்டார். ஆனால், அன்று முழுக்க அவர் தன் மகனைப் பார்க்கும் போதெல்லாம் ‘அந்த மூன்று வயதுக் குழந்தை... ஹார்ட் ஆபரேஷன்...’ நினைவில் வந்து வந்து போனது. அன்றைய கொண்டாட்ட மனநிலை காணாமலே போனது!

சம்பவம் 2
சென்னையைச் சேர்ந்த சாரதாவுக்கு வயது 70 ப்ளஸ். இதய நோயாளி. இளகிய மனம். சின்னச் சின்ன வீட்டுக் கவலைகள் கூட அவர் காதுக்குப் போகக் கூடாது என்பதில் அந்தக் குடும்பமே அவ்வளவு கவனம் கொள்ளும். ஒரு நாள் சாரதாவின் போனில் அழைப்பு... ‘‘அம்மா, அப்பா இல்லாத பிள்ளைங்க மேடம்... அவங்க படிப்புக்கு, நல்ல துணிமணிக்கு உங்களால முடிஞ்ச தொகையைக் கொடுங்க!’’  கேட்டதுமே மனதைப் பிசைந்தது சாரதாவுக்கு.

‘‘இதப் பாருங்க, நாங்களே வருஷம் ஒருக்கா ஏதாவது ஒரு இல்லத்தை தேடிப் போய் கொடுக்கத்தான் செய்யறோம். அவ்வளவுதான் முடியும். இப்படி அடிக்கடி போனைப் போட்டு உங்க கஷ்டத்தை எங்ககிட்ட கொட்டாதீங்க. தாங்க முடியல!’’  நெஞ்சைப் பிடித்தபடி சொல்லி வைத்தார் சாரதா.

‘‘என்னைக்காவது இப்படி ஒரு போன்கால் வந்துதான் என்ன கொண்டு போகப் போறது!’’ என்பது அவரின் அன்றாடப் புலம்பலாகிவிட்டது. இப்படிப்பட்ட அழைப்புகளை நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் அழைப்பாளர்களைப் போல இவர்களிடம் கோபப்பட மனம் வருவதில்லை. ‘‘என் நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?’’ என்ற நியாயமான கேள்வியைக் கூட கேட்பதில்லை. அது மனிதத்தன்மை அற்ற செயலாகத் தோன்றுகிறது.

ஆனால், கரிசனங்களுக்கு தகுதியுடையவர்களா இவர்கள்? ‘நிச்சயம் இல்லை’ என்கின்றன வர்த்தக வட்டாரங்கள். ‘‘இன்று இது வேகமாய் வளரும் ஒருவகை வர்த்தகம். Telephone Fundrising என்பார்கள். ஆதரவற்றோரைப் பராமரிக்கும் இல்லங்கள் தங்களுக்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்களை நாடுகின்றன. அவர்கள் டெலிகாலர்களை பணியமர்த்தி, தினம் சில நூறு பேருக்கு போன் போட்டு கெஞ்சச் சொல்கிறார்கள்.

இதன் மூலம் டொனேஷன் கிடைத்தால், அதில் குறிப்பிட்ட சதவீதம் அந்த மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு. ஆக, இது நம் கருணையைக் காசாக்கி கமிஷன் பார்க்கும் தந்திரம்!’’ என்கிறார் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர். இப்படிப்பட்ட டெலி காலர்களுக்கு மனம் இளகி ஒருமுறை நாம் நன்கொடை கொடுத்துவிட்டால் போச்சு. ‘இவர்கிட்ட ஈசியா டொனேஷன் வாங்கிடலாம்’ என்ற லேபிளோடு நமது மொபைல் நம்பர் சக மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்கப்படும்.

அவர்கள் காலை முதல் மாலை வரை நம்மை கெஞ்சல்களால் கிழித்தெடுக்கத் துவங்கிவிடுவார்கள். அயல்நாடுகளில் இது அளவு கடந்து போய்விட்டது. கடந்த வருடம் இங்கிலாந்தில் ‘ஆலிவ் குக்’ எனும் வயோதிகப் பெண்மணி இவ்வாறான கருணை இல்ல அழைப்புகளின் தொல்லை தாங்காமல் தற்கொலையே செய்துகொண்டார்.

அவ்வளவு ஆபத்தானதா இந்த அழைப்பு? ‘‘நானும் மார்க்கெட்டிங் துறையிலதான் இருக்கேன். பத்து டெலி காலர்களை வேலை வாங்குறேன். ஆனா, இந்த மாதிரி கால்ஸ் வரும்போது என்ன சொல்றதுனு தெரியாம நானே பதறித்தான் போறேன்!’’ என்கிறார் தனியார் நிறுவனத்தில் கிளை மேலாளராக இருக்கும் எம்.சந்தோஷ்குமார். ‘‘ஒரு மீட்டிங்ல, மதிப்பா நம்மை காட்டிக்கிட்டு கெத்தா இருப்போம். அப்ப இந்த போன்கால் வரும். ‘அப்புறமா கூப்புடுங்க’ன்னா நமக்கு டொனேஷன் தர ஆர்வம் இருக்குனு அர்த்தமாகிடும்.

‘தொந்தரவு செய்யாதீங்க’னு சொல்லி அவங்களைப் புண்படுத்த மனசு வராது. ‘நானே கஷ்டத்துல இருக்கேன்மா’னு பதிலுக்கு பஞ்சம் பாடினா நம்ம மானம் போயிடும். எதுவுமே பேசாம கட் பண்றதுதான் ஒரே வழி!’’ என்கிறவர், இப்படிப்பட்ட கருணை போன்கால்கள் ஏன் அதிகமாயின என்பதற்கும் விளக்கம் தருகிறார்.

‘‘தனக்கு எந்த மார்க்கெட்டிங் கால்ஸும் வரக்கூடாதுனு நினைக்கிறவங்க, ‘டூ நாட் டிஸ்டர்ப்’ வசதியை ஆக்டிவேட் பண்ணிடறாங்க. அப்படிப்பட்ட நம்பர்களுக்கு மார்க்கெட்டிங் கால் பண்ணி அது புகார் ஆச்சுன்னா, தொலைத்தொடர்பு ஆணையமான ட்ராய் கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதனாலயே மற்ற எல்லா வகை டெலிகாலிங்கும் இப்ப ரொம்பக் குறைஞ்சுடுச்சு. ஆனா, ‘ஒரு அநாதை இல்லத்தில் இருந்து எனக்கு கால் பண்ணி தொந்தரவு பண்றாங்க’னு யாரும் புகார் தர மாட்டாங்க. பாவமாச்சேனு யோசிப்பாங்க. அதைப் பயன்படுத்தித்தான் இவங்க தைரியமா வெளுத்து வாங்குறாங்க!’’ என்கிறார் அவர்.

‘‘நமது நாட்டு சட்டங்கள் இப்படிப்பட்ட அழைப்புகளைத் தடுக்காதா?’’ என்றால், இல்லையெனத் தலையாட்டுகிறார் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த சிபி கனகராஜ். ‘‘ ‘டூ நாட் டிஸ்டர்ப்’ என்று சொல்லப்படும் National consumer preference register என்கிற பட்டியலில் மொபைல் எண்ணைப் பதிவு செய்து வைத்தால் அந்த  எண்ணுக்கு எந்த மார்க்கெட்டிங் அழைப்புகளும் வரக் கூடாது என்பதே சட்டம்.

ஆனால், இதில் தொண்டு நிறுவங்களுக்கும் தேசிய பேரிடர் தொடர்பான அழைப்புகளுக்கும் அரசுப் பிரசாரங்களுக்கும் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில்தான் இவர்கள் தப்பிக்கிறார்கள். அதற்காக இதிலிருந்து நமக்கு விமோசனமே கிடையாது என்று அர்த்தமில்லை. அரசும் ட்ராய் அமைப்பும் இந்த விஷயத்தில் இன்னும் முறையாக கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக்கை.

ஒருவேளை தொண்டு நிறுவனம் என்ற சலுகையைப் பயன்படுத்தி நம்மை தொந்தரவு செய்யும் அளவுக்கு இந்த அழைப்புகள் எல்லை மீறினால், www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் நமது புகார்களைப் பதிவு செய்யலாம்!’’ என்கிறார் அவர். எங்க மேலேயும் கொஞ்சம் இரக்கப்படுங்க மார்க்கெட்டிங் கைஸ்!

‘இது’, ‘அதை’விட ஆபத்து!

இப்படிப்பட்ட அழைப்புகள் நம் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும்? மனநல மருத்துவர் டாக்டர் கவிதா விளக்குகிறார்... ‘‘நம் ஊரில் பெரும்பாலானவர்கள் இம்மாதிரி டெலி காலர்களை நம்புவதே இல்லை. ஆனால், ஏற்கனவே மனப்பிரச்னைகளில் சிக்கி இருப்பவர்களை இவை ரொம்பவே துன்புறுத்தக் கூடும். ‘நம்மால் இவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லையே’ என்ற நினைப்பு அவர்களை தங்கள் மீதே கோபப்பட வைக்கும். சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் மிதந்தபோதே இப்படிப்பட்ட மனப் பிரச்னைகளோடு நிறைய பேர் வந்தார்கள். இது விரக்தி, மன அழுத்தம், ஏன்... தற்கொலை வரை கூடப் போய்விடும்.

இப்படிப்பட்ட டெலிகாலர் வேலைகளில் இருக்கும் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். தினம் சில நூறு பேருக்கு போன் செய்து கெஞ்ச வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு அன்றாட வேலை. காலப் போக்கில் இது அவர்கள் வாழ்வை கடுமையாக பாதிக்கும். அலுவல் நேரத்தில் எத்தனை ‘ப்ளீஸ்’ சொல்கிறார்களோ அதற்கெல்லாம் சேர்த்து தங்கள் வீட்டில் யாரிடமாவது கோபப்படுவார்கள். பி.பீ.ஓ., கால் சென்டர் வேலைகளில் உள்ள பெண்கள் பலரும் இப்போது குடும்பப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இது அதை விடவும் ஆபத்தானதாகத் தெரிகிறது. இதன் தீவிரம் காலப் போக்கில்தான் தெரியவரும்!’’ என்கிறார் அவர் கவலையாக!

இங்கிலாந்தில் ‘ஆலிவ் குக்’ எனும் வயோதிகப் பெண்மணி இவ்வாறான கருணை இல்ல அழைப்புகளின் தொல்லை தாங்காமல் தற்கொலையே செய்துகொண்டார்!

-கோகுலவாச நவநீதன்