தீரா ஆசை!



புதூர் சரவணன்

நவீனுக்கு காலை நான்கு மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. எல்லாம் கவலை. ஆசை மகள் ஸ்வப்னாவுக்கு நாளை ஒன்பதாவது பிறந்த நாள். அவள் பேசப் பழகியது முதலே கேட்டு அடம் பிடிக்கும் ஆசை ஒன்றை நவீனால் இன்றுவரை நிறைவேற்ற முடியவில்லை. கழுத்தை முட்டும் கடன்தான் காரணம். அவன் கடன்கள் தீர பத்துப் பதினைந்து வருடம் கூட ஆகலாம். ஸ்வப்னாவின் குழந்தைப் பருவம் இன்று போனால் வருமா? நவீனுக்கு அவன் மீதே வெறுப்பு..!



‘கடனோடு கடன்... நாளைக்கு அவ ஆசையை நிறைவேத்திடணும். என் குழந்தை திருப்தியா சிரிச்சு பார்க்கணும்’ முடிவெடுத்துப் படுத்தான். அடுத்த நாள் ஸ்வப்னாவையும் மனைவியையும் சர்ப்ரைஸாக அழைத்துக்கொண்டு விமான நிலையம் போனான் நவீன். ‘‘குட்டி, ஃப்ளைட்ல போகணும்னு ஆசைப்பட்டே இல்ல. இன்னைக்கு போறோம். பெங்களூருக்கு... அப் அண்ட் டவுன். ரவுண்ட் ட்ரிப்!’’ ஸ்வப்னா அவனைக் கட்டியணைத்து தேங்க்ஸ் சொன்னாள்.

இருமுறை விமானத்தில் பறந்து மீண்டும் சென்னையில் இறங்கினார்கள். ‘‘என்னடா உனக்கு சந்தோஷமா? திருப்தியா?’’ வரும் வழியில் ஸ்வப்னாவைக் கேட்டான் நவீன். ‘‘சூப்பர்பா, மறுபடி நாம எப்பப்பா ஃப்ளைட்டுல போவோம்?’’ நவீன் அதிர்ந்தான்!