கவிதைக்காரர்கள் வீதி
* தலைச்சன் பிள்ளையை எரித்தும் மற்றவர்களை கிழமேல் திசையாக புதைத்தும் திருமணமாகாதவர்களை தென்வடல் திசையாகப் புதைத்தும் வந்த ஊர் இன்று பெருத்துவிட்டது மயானம் ஊருக்கு வெளியே தள்ளியே போய் விட்டது உயிரோடிருப்பவர்களுடன்
போட்டியிடத் திராணியற்று எரிய சம்மதித்து விட்டன பிரேதங்கள் புதைக்கப்பட்டவர்களை அசைக்க முடியவில்லை வலுவான கான்க்ரீட் எழுப்பி கணபதி ஹோமம் நடத்தி அவர்கள் மார்பின் மேலேயே படுத்துறங்கி முன்னோரின் பிள்ளையாகி விட்டனர் முன்னொரு காலத்தில் பேய்களின் பிள்ளைகளாய் அழைக்கப்பட்டவர்கள்!
* பரந்த இருளின் ஒரு பகுதிதான் என்றாலும் வேறுபாடு தெரியவில்லை அறையின் இருளில் சுரீரென்று பற்றிய ஒற்றைத் தீக்குச்சியின் மீது அத்தனை இருளும் தொற்றிக்கொள்ள யத்தனிக்கிறது சுடர் நோக்கி படையெடுத்த வண்டுகள் சுடச்சுட பொரிந்து மாய்ந்தன சிறிய வெளிச்சத்தில்தான் பெரிய பெரிய நிழல்கள் செதுக்கப்பட்ட உயிர் இருளாய் நடை பயில்கின்றன திடீரென்று வந்த மின்சார வெளிச்சத்திற்குப் பிறகு மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பதற்கு கடும் போட்டி நடக்கிறது மின்விசிறிக்கும் குழந்தைகளுக்கும் எரிந்து உருகிய மெழுகின் காலடியில் இன்னொரு இருளுக்கான தாகம் தங்கிக் கிடக்கிறது!
-கு.திரவியம்
|