பஞ்சாமிர்தமாய் இனித்தது



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

முருகா என்றதும் உருகாதா மனம் என்ற பக்திப் பாடலையே தலைப்பாக்கி பழனிமலையில் நின்று அருள்புரியும், பரமனின் மைந்தன் தண்டாயுதபாணியின் மகத்துவங்களை உணர வைத்த கட்டுரை உள்ளத்தை உருக வைத்து விட்டது. தைப்பூச தருணத்தில் முருக பக்தர்கள் மனதில் பூத்தது சந்தோஷம், தீராத நோயையும் தீர்க்கும் வல்லமை படைத்த தோரணமலை முருகனின் மகிமைகளை விவரித்த கட்டுரை, அந்த அற்புதத் திருத்தலத்திற்குச் சென்று வரவேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தி விட்டது.      
- அயன்புரம் த.சத்திய நாராயணன்.

தைப்பூசத்தின் மகிமையை திருமுறை காட்டும் தைப்பூசத்தில் தொடங்கி திருமுருகன் பூண்டி ஆறுமுகர், சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்... இப்படி முருகனின் திருப்புகழை அடுக்கடுக்காக அமுதசுரபிபோல் அள்ளி, அள்ளி ஆன்மிகத்தின் சிறப்புகளை வழங்கிய ‘ஆன்மிகம் பலனு’க்கு எங்கள் அன்பையும், ஆதரவையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
- எஸ்.எஸ்.வாசன்,  வந்தவாசி.

 
பலமுறை பயணித்த பழம்-நீ திருக்கோயில் பற்றியும் கடந்த மாதம் முதன் முறையாக மனைவியுடன் சென்று திவ்விய தரிசனம் செய்த நெல்லை மாவட்ட தோரண மலை முருகன் தொடர்பான இரண்டு கட்டுரையும் மீண்டும் மனதால் திருமுருகனை நினைத்தும் மகிழ்ந்தும் கொண்டாடினேன்.
- ப.மூர்த்தி, பெங்களூரு.
 
திருப்பரங்குன்றம் முருகனின் பல மகிமைகளை வரிசைப்படுத்தி தைப்பூச வழிபாட்டில் அதன் பிரவாகத்தைப் பதிவிட்டு அங்குள்ள பரம் குன்றில் உறையும் குமரனையும் சேவித்தால் பரம புண்ணியம் தரும் என்பதை அறிந்ததும் நெகிழ்ந்து மகிழ்ந்தோம்.
- ஆர்.ஜி.காயத்திரி, திசையன்விளை.
 
மிகப்பழமையான தத்துவங்களைக்கூட புதுமையான தொகுப்பாக்கித் தந்து அருமையாக ஜொலிப்பதுதான் ஆன்மிகம். சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள் தொகுப்பு அருமையிலும் அருமை.   
- ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.
 
முருகா என்றதும் உருகாதா மனம் என்ற பாடல் வரியைத் தலைப்பாக்கி ஆவினன்குடிஆகிய பழநி ஆண்டவரின் தத்துவப் பஞ்சாமிர்தங்களைத் தொகுப்பாக்கித் தந்து பொங்கல் சீசனின் நம்பர் ஒன் இனிப்பாக்கி விட்டீர்கள்.
- ஆர்.ஆர்.உமா, திருப்பதி.
 
திருமுறை காட்டும் தைப்பூசம் என்ற பதிகத்தகவல் பரவசம் தந்தது. அலங்கார வேலும் அழகன் முருகனின் அருட்கோலமும் நெஞ்சை நிறைத்தது.
- ஆர். விநாயகராமன், செல்வமருதூர்.
 
கற்சிலைக்கு முன்னால் காசு போடாதீர் என்று எழுதியிருந்தாலும் போட்டு வைப்பதும், அகழி போன்ற அமைப்பில்  நீரில் காசு போடாதீர் என்றால் ரூபாய் நோட்டு முதற்கொண்டு அனைத்தையும் போடுவது என்பதை எல்லாம் வெளிப்படுத்தும் நோக்கில் எச்சரிக்கை மணி அடித்து ‘பரிகார  நியாயம்’ என்று தலையங்கம் தந்துள்ள ஆசிரியருக்கு, அந்த ‘மகாலட்சுமி’ ஆசி கூறுவாள் என்பது திண்ணம்.
- ஆர்.இ.மணிமாறன்,  இடையன்குடி.
 
தைப்பூசம் பக்தி ஸ்பெஷலின் முகப்பினை அலங்கரித்திருந்த பழனி மலையின் பின்னணியில் பழனி ராஜஅலங்கார முருகனின் அழகிய வண்ணப்படம். திருமுறை காட்டும் தைப்பூசம் மற்றும் முருகன் புகழ் பாடியிருந்த இதர கட்டுரைகளும் இதழிற்கு சிறப்பு சேர்த்திருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
 
அறுபடையில் ஒரு படைக்கார பழனி முருகனின் ராஜ அலங்கார வண்ண ஓவியம் கொண்ட அட்டைப்படம், கண்கொள்ளாக்காட்சி. தைப்பூசத்தின் மகிமை எளிமையாகச் சொல்லியது மிக நேர்த்தி . திருமுருகன் பூண்டி- பழனி - சிவாலய முருகன் - இலஞ்சி - சுப்ரமணிய புஜங்கத்தின் தமிழாக்கம் தோரணமலை - அருணகிரி உலா என ஒவ்வொன்றையும் செதுக்கி முருகனின் புகழை நிலைநாட்டிய தைப்பூசம் பக்தி ஸ்பெஷல் எங்களுக்கு கிடைத்திட்ட பழனி பஞ்சாமிர்த பிரசாதம். நலம் தரும் நரசிம்மர் தரிசனத்தில் பழைய சீவரம் பெருமாள் கம்பீரமாக நிற்கிறார். சக்தி தத்துவத்தில் ஐம்புலன்களும் அடக்கம் பெறுவது அருமையான விளக்கம்.
- சிம்ம வாஹினி, வியாசர்நகர்.