எந்த கோயில்? என்ன பிரசாதம்?புளியோதரை என்றாலே அடுத்ததாக நம் நினைவுக்கு வருவது பெருமாள்தான். புளியோதரையும், பெருமாளையும் சேர்த்தே நம் மனம் நினைக்கத் தொடங்கி விடும். நகைச்சுவையாக கூட சொல்லும் சொலவடை உண்டு. ‘‘பெருமாள் கோயிலுக்கு போறியா, புளியோதரை சாப்பிடவா’’ என்பதுதான் அது. பெருமாள் கோயில் புளியோதரையில் திருவல்லிக்கேணி கோயில் புளியோதரை என்பது சிறப்பு வாய்ந்தது.

வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகவும், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதுமான அற்புதத் திருத்தலம் திருவல்லிக்கேணி. ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அகோபிலம், அயோத்தி போன்ற ஐந்து திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள திருமாலின் அர்ச்சாவடிவங்கள் இத்தலத்தில் தனித்தனி சந்நதிகளில் அருளுவது, பிற தலங்கள்  காண இயலாத தனிச் சிறப்பு. இத்தலம் ப்ருந்தாரண்ய தலம் என்றும் வழங்கப்படுகிறது.

மிகத்தொன்மை வாய்ந்த ஆலயம் இது என்கின்றன கல்வெட்டுகள். மகாமண்டலேஸ்வரர் மற்றும் வீரப்ரதாப சதாசிவதேவ மகராயர் காலத்தில் இங்கு ஸ்ரீமன்நாதரின் (ரங்கநாதரின்) சந்நதியும், பார்த்தசாரதி ஸ்வாமி சந்நதியும் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கின்றன. சுமதி என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க திருவேங்கடமுடையான், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்த கோலத்துடன் மட்டுமல்லாது, தன் குடும்பத்தாரோடும் இங்கே சேவை சாதிக்கிறார். ஆலயத்திற்கு எதிரே நீராழி மண்டபத்துடன் காணப்படும் திருக்குளத்திற்கு கைரவிணி என்று பெயர்.

ராஜகோபுரத்தின் முன் 36 தூண்கள் தாங்கும் பெரிய மண்டபம் உள்ளது. அதில் தன் மடியின் இடது பக்கத்தில் லட்சுமிதேவியை அமர்த்திக்கொண்டு அருள்கிறார் நரசிம்மமூர்த்தி. இந்த மண்டபத்திலிருந்துதான் உற்சவ மூர்த்தங்கள் திருவீதி புறப்பாடு ஆகும்; வேதபாராயண கோஷ்டி முன்னே செல்லும். வீதியுலா முடிந்ததும் திருவந்திக்காப்பும் இந்த மண்டபத்தில்தான் நடக்கிறது. பெருமாள் கருவறைக்கு முன், மகாமண்டபத்தில், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் அருள்கின்றனர். மூலக்கருவறையில் ஒருகையில் சங்குடனும், மறுகையில் வரதஹஸ்தத்துடனும் மீசையுடனும் கம்பீரமாக  வேங்கடகிருஷ்ணன் தரிசனம் சாதிக்கிறார்.

அருகில் ருக்மிணி தேவி. தாயாரின் வலது பக்கத்தில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமர்; பெருமாளுக்கு இடப்பக்கத்தில் தம்பி சாத்யகி; மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் என்று கிருஷ்ணனின் குடும்பத்தை தரிசிக்கலாம்.  மூலவரின் வலது கையில் உள்ள சங்கு, கீதையின் முதல் அத்யாயத்திலுள்ள 15வது ஸ்லோகமான பாஞ்ஜசன்யம் என்பதின் பொருளையும், இடது கை வரத ஹஸ்தமாக இருப்பது சரம ஸ்லோகமான (18ம் அத்யாயம்) ‘ஸர்வதர்மாந்..’ என்பதையும் உணர்த்துகின்றன. மூலவரின் திருவடிகளின் கீழ் நித்ய உற்சவர், பலிபேரர் - சயனபேரர் ஆகிய மூர்த்திகளும் நவநீத கண்ணனும், சுதர்சனமூர்த்தியும் அருட்காட்சி அருள்கின்றனர்.

 ‘பள்ளியிலோதி வந்ததன்...’ என்ற பாசுரம் மூலம் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட யோகநரசிம்மர், ‘அழகியசிங்கர்’ என்ற பெயருடன் தனி சந்நதியில் தரிசனம் தருகிறார். அத்ரி முனிவரின் நோய்தீர்க்க யோகநரசிம்மராய், தெள்ளிய சிங்கமாய் காட்சி தந்திருக்கிறார் திருமால். இப்போதும் தன்னை நாடிவருபவர்களுக்கு அபய, ஆஹ்வான அஸ்தங்களுடன் அருள் பொழிகிறார்.  ஒரு சிறிய தூணில் சிற்பமாகக் காட்சி தந்து, பக்தர்களால் கொண்டாடப்படுகிறார் அனுமன். ஆண்டாள் சந்நதி முன் நின்று பார்த்தால், பார்த்தசாரதியின் கருவறை விமானமான ஆனந்த விமானத்தை கண்குளிரக் காணலாம்.

கலௌ வேங்கடநாயகம்’ என்றும், ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்றும் மகான்களால் போற்றப்பெற்ற வேங்கடாசலபதியும், கிருஷ்ணனும் ஒன்றிணைந்து ஒருவாய், வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஜனவரி மாதமும் ஏதாவது ஒரு சனி-ஞாயிறன்று ஈக்காட்டுத்தாங்கலுக்கு பெருமாள் எழுந்தருளி திருமஞ்சனம் ஏற்கிறார். பிறகு, சைதை பிரசன்னவெங்கடாசலபதி ஆலயத்திற்கு வந்து அலங்காரம் செய்து கொண்டு திருவல்லிக்கேணிக்குத் திரும்புகிறார். இது திருவூரல் உற்சவம் எனப்படுகிறது.

உற்சவர் பார்த்தசாரதி, முகத்தில் வடுச் சின்னங்களோடு, புன்னகை ததும்ப, உபயநாச்சியார்களுடன் தரிசனம் தருகிறார். அர்ஜுனனுக்குத் தேரோட்டியபோது எதிர்ப்பட்ட அம்புகள் தைத்ததால் ஏற்பட்ட வடுக்கள் அவை. அவருக்கு சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்களில் மிளகாய் சேர்த்தால் அந்த நெடி சுவாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், நிவேதனங்களில் மிளகாய் சேர்ப்பதில்லை. இத்தலத்தின் விசேஷ பிரசாதங்களுள் ஒன்றான புளியோதரையின் செய்முறையை அறிவோம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 5 கப்
நல்லெண்ணெய் - 50 கிராம்
மிளகு - 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி - 100 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
கடுகு - 10 கிராம்
பெருங்காயம் - சிறிது
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் - 10 கிராம்

செய்முறை :

புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்து வைக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெயை கடாயில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும். எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.

2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்’மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.] மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிட வேண்டும். சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணெயோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

 - ந.பரணிகுமார்