நெற்றிக்கண் தெய்வங்கள்



சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உள்ளதுபோல் வேறு சில தெய்வங்களுக்கும் நெற்றிக்கண் உண்டு. செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் எனும் தலத்தில் கோயில் கொண்டுள்ள நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன. இவரை ‘திரிநேத்ரதாரி’ என்று போற்றுவர். திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையணிந்து, வெண்தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சரஸ்வதி தேவி அருள்புரிகிறாள். இத்தேவிக்கு சிவ பெருமானைப்போல் மூன்று கண்கள் காணப்படுகின்றன.

நெற்றியில் உள்ள மூன்றாவது  கண்‘ஞானக்கண்’ என்று போற்றப்படுகிறது. மேலும் இத்தேவியின் கையில் வீணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனந்த மங்கலத்தில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி திருக்கோயில். இங்கு ‘திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் (மூன்று கண்கள் உடையவர்) எழுந்தருளியுள்ளார். பெரம்பலூரை அடுத்த தொழுதூர் என்னும் தலத்தில் அமைந்துள்ளது மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோயில். இங்கு அருள் புரியும் அம்பாளுக்கு நெற்றியில் ஒரு கண் உள்ளது. இந்த அம்மனை ஜன்னல் வழியாகத்தான் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

கடலூரிலிருந்து மேற்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவயிந்திபுரம் எனும் திருத்தலம். இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மூலவர்: தெய்வ நாயகன், நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். தாயார்: வைகுந்த நாயகி. (ஹேமாம் புஜவல்லி). உற்சவர் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் சின்னங்களையும் கொண்டவர். உற்சவரின் திருமேனியில் வலது உள்ளங்கையில் பிரம்மனின் தாமரை மலரும்,

நெற்றியில் சிவன் சின்னமான நெற்றிக்கண்ணும், சிரசில் ஜடா முடியும், மற்ற இரு கரங்களில் விஷ்ணுவின் சின்னமான சங்கு, சக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். அகந்தை கொண்டிருந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க வேண்டிய நிலையில் இறைவன் எடுத்த கோலமே பைரவர் கோலமாகும். மூன்று கண், செந்நிறம், சூலம், கபாலம், பாசம், உடுக்கை, வாகனமாகிய நாய் போன்றவற்றுடன் உக்கிர பைரவராகத் தோன்றினார். இத்திருக்கோலத்தை தஞ்சைக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்தில் தரிசிக்கலாம்.

- T.R. பரிமளரங்கன்