சொக்கலிங்கம் உண்டே துணை



குறளின் குரல் - 100

கேள்வி கேட்டுவிட்டு அந்தக் கேள்விக்கு இதுதான் பதில் என்று சொல்லும் போக்கு திருக்குறளில் பல இடங்களில் இருக்கிறது. கேள்வி கேட்பதன் மூலம் அறிவு வளரும் என்பதை வள்ளுவர் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால் தாமே சில கேள்விகளைக் கேட்கிறார். பின் தாம் கேட்ட கேள்விகளுக்கு மனித குலம் பயனடையும் வகையில் அவரே பதிலையும் சொல்கிறார். ஒரே திருக்குறளில் ஒரு பாதி கேள்வியாகவும் ஒரு பாதி பதிலாகவும் அமைகிறது என்பதுதான் அவரது சொற் சிக்கனத்தின் சிறப்பு.

அவர் கேள்வி கேட்கப் பயன்படுத்தும் பல சொற்களில் முக்கியமான சொல் யாது என்பது. ஒன்றை யாது எனக் கேட்டு, அது யாது எனின் எனத் தொடங்கி, பின்னர் பதிலைத் தெரிவிக்கிறார். யாதெனின் எனச் சொல்லி விளக்கும் வகையில் திருக்குறளில் மொத்தம் பதினோரு குறட்பாக்கள் உள்ளன.

`அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.’ (குறள் எண் -178)
 
ஒருவனுடைய செல்வம் குறையாமல் இருப்பதற்கு வழி யாது என்றால், அவன் பிறர் பொருளைக் கவர நினைக்காமல் இருப்பதே ஆகும்.

`அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.’ (குறள் எண் 254)

கருணை இல்லாத செயல் யாது என்றால், பிற உயிர்களைக் கொல்லுதலேயாகும். அப்படிக் கொன்ற மாமிசத்தைத் தின்னுதல் பொருளற்ற பாவச் செயலாகும்.

`வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.’ (குறள் எண் -291)

வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், எந்த வகையிலும் தீமையை உருவாக்காத சொற்களைப் பேசுவதேயாகும்.

`அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.’ (குறள் எண் 321)

அறச்செயல் யாது என்றால், அது ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே. கொல்லுதல் அறமற்ற பிற எல்லாச் செயல்களையும் செய்யத் தூண்டும்.

`நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.’  (குறள் எண் -324)

 உலகில் நல்ல நெறி யாது என்றால், எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதற்குக் கடைப்பிடிக்கப்படும் நெறியே ஆகும்.

`நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.’ (குறள் எண் -789)

நட்பிற்குச் சிறந்த நிலை யாது என்றால், வேறுபாடில்லாமல் இயன்ற போதெல்லாம் நண்பனுக்கு உதவி செய்து அவனைத் தாங்குவதுதான்.

`பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
 கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.’ (குறள் எண் -801)

பழைமை யாது என்றால், பழகிய நண்பர் உரிமையால் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காது ஏற்றுக் கொள்ளுதலே.

`பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்.` (குறள் எண் 831)

பேதைமை என்பது யாது என்றால், தீமை தருவனவற்றை ஏற்றுக் கொண்டு நன்மை தருவனவற்றைக் கைவிடுதல் தான்.

`வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.` (குறள் எண் 844)

புல்லறிவு என்பது யாது என்றால், நாம் அறிவுடையோம் என்று தன்னைத் தானே ஒருவன் உயர்வாக மதித்துக் கொள்ளும் ஆணவமே.  

`சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.’ (குறள் எண் - 986)

சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல் யாது என்றால், தமக்குச் சமமில்லாத தாழ்ந்தவரிடத்திலும் தோல்வியை ஒப்புக் கொள்ளும் நற்பண்பு ஆகும்.

`இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.’ (குறள் எண் - 1041)

வறுமையைப் போலக் கொடுமையானது யாது என்றால், வறுமையைப் போலத் துன்பம் தருவது வறுமை ஒன்றே. வேறெதுவும் இல்லை. யாதெனின் எனக் கேள்வி கேட்டு பதில் சொல்லும் இத்தகைய போக்கு முப்பாலாகிய திருக்குறளில் மூன்றாம் பாலாக இடம்பெற்றிருக்கும் காமத்துப் பாலில் அறவே இல்லை. மேலே சொல்லப்பட்ட பதினோரு குறட்பாக்களும் அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

கேள்வி கேட்டு பதிலைச் சொல்ல வேண்டிய அவசியம் காமத்துப் பாலுக்குத் தேவையற்றது என வள்ளுவர் கருதியிருக்க வேண்டும். `சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ என்பதை வள்ளுவரும் உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது!.... யட்சன் ஒருவன் கேட்ட கேள்விகளும் அதற்கு தர்மபுத்திரர் சொன்ன அறநெறி பிறழாத பதில்களும் யட்சப்ரச்னம் என்ற வகையில் மகாபாரதத்தில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளன.

இன்றும் அறிவைத் தீட்டிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு தர்மபுத்திரர் சொன்ன நடுநிலையான பதில்கள் பெரும் வழிகாட்டியாக அமைந்துள்ளன. போர்க்களத்தில் அர்ச்சுனன் கேட்ட கேள்விகளுக்குக் கண்ணன் சொன்ன பதில்கள் தான் பகவத் கீதையாக உருப்பெற்றன. மிகச் சிறந்த அற நூலாகக் கருதப்படும் கீதைக்கு மகாத்மா காந்தி, வினோபா பாவே, ஸ்ரீஅரவிந்தர், பால கங்காதர திலகர், மகாகவி பாரதி உள்ளிட்ட பலர் உரை எழுதியுள்ளனர். இன்றும் கீதைக்கு புத்தம்புதிய உரைகள் வந்தவண்ணம் உள்ளன. ...

தமிழ் மூதாட்டி அவ்வையும் கேள்வி பதில் மூலம் தமிழை வளர்த்திருக்கிறாள். அவ்வையாரிடம் முருகப் பெருமான் பல கேள்விகளைக் கேட்டதாகவும் அவ்வை அவற்றிற்குப் பொருத்தமான பதில் சொன்னதாகவும் ஒரு கதை இருக்கிறது. அவ்வையின் பாடல்கள் சில, ஒரு கேள்வியைத் தாமே எழுப்பிக் கொண்டு அதற்கு பதில் சொல்வனவாக அமைந்துள்ளன. அந்தப் பாடல்கள் இவ்விதம் முருகன் கேட்டபோது பாடப்பட்டவையே என்பதுதான் இந்தக் கதைக்கான ஆதாரம்.

`உலகில் அரியது என்ன?’ என்று வினவுகிறான் முருகன். அவ்வை சொல்கிறாள்:
`அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது!
மானிடராயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது!
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந்திடுமே!’

இவ்விதம் `கொடியது என்ன, இனியது என்ன’ என்று பல கேள்விகளைக் கேட்கிறான் முருகக் கடவுள். அவற்றில் `பெரியது என்ன?’ என்று முருகப் பெருமான் கேட்ட கேள்விக்கு அவ்வை சொல்லும் பதில் மிக சுவாரஸ்யமானது. அடியவர்கள் தான் மிகப் பெரியவர்கள், அத்தகைய அடியவர்களின் பெருமை சொல்லில் அடங்குவதல்ல என்பதைப் படிப்படியாக விளக்கி நிறுவுகிறார் அவ்வை மூதாட்டி.

`பெரியது கேட்கின நெறிதமிழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமும் நான்மகன் படைப்பு!
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்!
கரிய மாலோ அலைகடல் துயில்வோன்!
அலைகடலோ குறுமுனி கையில் அடக்கம்!
குறுமுனியோ கலசத்துப் பிறந்தோன்!
கலசமோ புவியில் சிறுமண்!
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்!
அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம்!
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்!
இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம்!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!` ....

இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண்பார்வையற்றவர். ஒருவர் கால் ஊனமானவர். கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார். அவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் கேள்வி பதில் பாணியில் அமைந்தவை. ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பதில் சொல்வார்.

மதுரைத் தெப்பக் குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். துணி குளத்தில் நழுவி எங்கோ சென்றுவிட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர் `அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர்அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?’ எனக் கேள்வி கேட்டார்.

தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியென்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள். பார்வையற்றவர், `எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!’ என்று வெண்பாவை நிறைவுசெய்தார். கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள். இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்கமாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில். பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

`அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து
நீர்அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ? -
எப்படியும்
இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க
மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!’

என்ற நேரிசை வெண்பா இடைக்காலத் தமிழிலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டது. இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. `தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?’ என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில் `அச்சாணியால்’ என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச் - சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். `நீ வசிக்கும் ஊர் எது? உன் காலில் காயம் வந்தது எப்படி?’ என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் `செங்கல் பட்டு’ என்பது.

`சாம்பார் மணப்பதேன்? உடல் நலிவதேன்?’ என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் `பெருங் காயத்தால்!’ என்பது. இன்று ஆங்கில வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுக்கள் குழந்தைகளின் தமிழறிவையும் சிந்தனைத் திறனையும் ஒருசேர வளர்த்தன. .... பிரம்மச்சரியம், இயற்கை வைத்தியம் போன்ற பற்பல துறைகளில் மகாத்மா காந்தியிடம் அவர் வாழ்ந்த காலத்திலேயே பலர் கேள்விகள் கேட்டு வந்தனர்.

மகாத்மா தம் ஹரிஜன் இதழில் அத்தகைய கேள்விகளுக்கு விரிவாகவும் விவாதபூர்வமாகவும் பதில் சொல்லி வந்தார். அருட்செல்வர் நா. மகாலிங்கம் கொடையுடன் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மகாத்மா காந்தி எழுத்துத் தொகுப்புகளில் பல இடங்களில் அந்தக் கேள்வி பதில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. திரைப் பாடல்களிலும் கேள்விகளாகவும் பதில்களாகவும் அமைந்த பாடல்கள் உண்டு. பார்த்தால் பசிதீரும் படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல் ஒன்று டி.எம்.எஸ்., பி. சுசீலா
குரல்களில் ஒலிக்கிறது.

`கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா? மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?’ எனத் தொடங்கும் அந்தப் பாடல் முழுவதுமே கேள்விகளால் ஆனதுதான். இப்படி இதுபோல் இன்னும் சில பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. ....

* வள்ளுவர் தொடங்கி வைத்த இந்தக் கேள்வி பதில் உத்தி, இப்போது ஓர் இலக்கிய வகையாகவே வளர்ந்து விட்டது. கேள்வி பதில் பகுதி இல்லாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லுமளவு எல்லாப் பத்திரிகைகளிலும் அது இடம்பெறுகிறது. வாகீச கலாநிதி கி.வா. ஜகன்நாதன் தாம் எழுதிய வினாவிடைப் பகுதிக்கு `விடையவன் விடைகள்’ என்று பெயரிட்டிருந்தார். அவரது இலக்கிய நயம் செறிந்த பதில்கள் தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

தீபம் நா. பார்த்தசாரதி தாம் எழுதிய கேள்வி பதில் பகுதிக்குத் தம் புனைபெயரை முன்வைத்து, `மணிவண்ணன் பதில்கள்’ என்று பெயரிட்டிருந்தார். அவரது பதில்களும் கமலம் சங்கர் என்ற பேராசிரியையால் தேர்வு செய்து தொகுக்கப்பட்டு நூல்களாகியுள்ளன. கி. கஸ்தூரிரங்கன் `தும்பி பதில்கள்’ என்ற தலைப்பில் பதில் சொல்லி வந்தார்.

ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியான சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழில் அன்பர்களின் பலப்பல ஆன்மிக ஐயப்பாடுகளுக்குத் தொடர்ந்து பதிலளித்து வந்தார். ஆன்மிக அறிவுச் சுரங்கம்போல் அமைந்த அந்த பதில்கள் `ஆன்மிக வினாவிடை’ என்ற தலைப்பில் பல தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பிரபல எழுத்தாளர்களான சாவி, சுஜாதா ஆகியோர் பதில்களில் குறும்புத்தனமும் நகைச்சுவையும் உண்டு. `உங்களால் சுருக்கமாக பதில் சொல்ல முடியுமா?’ என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு சாவி சொன்ன பதில் என்ன தெரியுமா? `ம்!` என்பதுதான் அவரது பதில்!  திருக்குறளைப் பற்றியே சுஜாதாவிடம் ஒருவர் கேள்வி கேட்டார். `திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் திருக்குறள்கள் என்றுதானே சொல்லவேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்? இந்தக் கேள்விக்கு சுஜாதா சொன்ன பதில்:  `திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை!’   (குறள் உரைக்கும்)

- திருப்பூர் கிருஷ்ணன்