மதுரை - யானைமலை யோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்



* நலம் தரும் நரசிம்மர் தரிசனம் : 3

மதுரை ஒத்தக்கடை யோக நரசிம்மர் ஆலயம், குடைவரைக் கோயில். சக்தி வாய்ந்த இந்தத் திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருட்பாலிக்கிறார். தாயார் பெயர் நரசிங்கவல்லி. ஆலய தீர்த்தம் சக்ர தீர்த்தமாகும். ரோமச முனிவரின் கடும் தவத்தில் மகிழ்ந்த பெருமாள், அவருக்கு ஸ்ரீயோக நரசிம்மராக மலையின் கீழ் காட்சி கொடுத்து அருளினார். அந்த மலை ஆனைமலை. பக்த பிரகலாதனுக்கு காட்சி தந்த அதே கோலத்தில்... ஸ்ரீநரசிம்மராக எனக்கும் காட்சி தாருங்கள்; புத்திரப் பேறும் அருளுங்கள்’- என்ற ரோமச முனிவரது வேண்டுதல்கள் பலித்த திருத்தலம்- ஆனைமலை!

இந்த மலையை சம்ஸ்கிருதத்தில். கஜகிரி என்பார்கள். இங்கே அமைந்துள்ள சக்ர தீர்த்தத்தின் (தாமரைக் குளம்) அருகில்தான்... புத்திர பாக்கியம் வேண்டியும், பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததைப் போல் தனக்கும் ஸ்ரீநரசிங்க வடிவில் காட்சி தர வேண்டும் என்றும் ரோமச முனிவர் யாகம் செய்து தவம் இருந்தார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்மர், இரண்யனை வதம் செய்த தருணத்தில் இருந்த அதே உக்கிர கோலத்துடன் முனிவருக்குக் காட்சியளித்தாராம்.

ஸ்ரீநரசிம்மரின் கடும் உக்கிரத்தால் அக்னி ஜுவாலை எழுந்தது. இதனால் அனைத்து உலகமும் வெப்பத்தால் தகித்தது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்த தேவர்களும் முனிவர்களும் கஜகிரி தலத்துக்கு ஓடோடி வந்தனர், ‘உக்கிரம் தணிந்து, சாந்தமடையுங்கள்’ என ஸ்ரீநரசிம்மரை வேண்டினர். அப்போதும் நரசிம்மரது உக்கிரம் தணிந்தபாடில்லை. இதையடுத்து, வாயு பகவான் மூலம் பிரகலாதனை அழைத்து வந்தனர் தேவர்கள். அவனது வேண்டுகோளை அடுத்து ஸ்ரீநரசிம்மரது உக்கிரம் சற்றே தணிந்தது. ஆனாலும் தேவர்களது பதட்டம் குறையவில்லை. ஸ்ரீமகாலட்சுமி தேவியை தரிசித்தனர்.

“சாந்த வடிமாக நரசிம்மர் காட்சி தர தாங்களே எங்களுக்கு உதவ வேண்டும்’’ என்று வேண்டினர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ஸ்ரீமகாலக்ஷ்மி, ஸ்ரீநரசிம்மரின் வலது மார்பில் குடியேறி, அவரை பரிபூரணமாக சாந்தப்படுத்தினாள். ஸ்ரீநரசிம்மரும் சாந்த வடிவில், யோக நிலையில் காட்சி தந்தார். ரோமச முனிவருக்கு புத்திர பாக்கியத்தையும் வழங்கி அருளினார். ரோமச முனிவருக்கு மட்டுமல்ல, சிவபெருமானுக்கும் நரசிம்மமூர்த்தி திருவருள் புரிந்த திருத்தலம் இது என்கிறது தல புராணம்!

ஒரு முறை,  நான்முகனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து விட்டதால், சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார். இதில் இருந்து விடுபடுவதற்காக, கஜகிரி எனும் ஆனைமலை திருத்தலத்துக்கு வந்தார் சிவபெருமான். இங்கு உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடியவர், ஒரு மண்டல காலம் இங்கேயே தங்கி, ஸ்ரீநரசிம்மரை வழிபட்டாராம்! நரசிம்மமூர்த்தி இங்கே எழுந்தருளியதற்கு மற்றொரு புராண காரணமும் கூறப்படுகிறது, விக்கிரமப் பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து வந்த காலம். விக்கிரமப் பாண்டியன் வேதநெறியில் மாறாப் பற்றுக் கொண்டவனாக விளங்கியதால்,

பாண்டிய நாட்டில் வேதம் செழிக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், கள்ளழகர் கோயிலிலும், கூடலழகர் கோயிலிலும் வழிபாடுகள் சரியான முறையில் நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். பாண்டி நாட்டில் வாழ்ந்த சில போலித் துறவிகளுக்கு விக்கிரமப் பாண்டியனைப் பிடிக்கவில்லை. அவர்கள் விக்கிரமப் பாண்டியனைப் பழிவாங்க என்ன வழி எனச் சிந்தித்தார்கள். காஞ்சியை ஆண்டு வந்த பல்லவ மன்னனுக்கும், விக்கிரமப் பாண்டியனுக்கும் தீராத பகையுண்டு. போரில் பாண்டியனை வெல்ல முடியாத பல்லவன், தந்திரம் செய்து அவனை வெல்ல நினைத்தான்.

அதனால் விக்கிரமன் மேல் அதிருப்தியில் இருக்கும் அந்தப் போலித் துறவிகளைக் காஞ்சிக்கு வரவழைத்தான். பாண்டியனோடு சேர்த்துப் பாண்டிய நாட்டையே அழிக்கும் விதமாக ஒரு யாகம் செய்யச்சொன்னான். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள். வேப்பெண்ணெயைத் தீயில் ஊற்றி, எட்டிக் குச்சிகளைப் போட்டுக் குரூரமான ஒரு வேள்வியை அந்தத் துறவிகள் காஞ்சியில் செய்தார்கள். இரும்பு உலக்கையைத் துதிக்கையில் ஏந்திக் கொண்டு ஒரு பெரிய யானை வேள்வித் தீயிலிருந்து வந்தது. “போ! பாண்டிய நாட்டை அழித்து விட்டு வா!” என்றார்கள் அந்தத் துறவிகள். அதுவும் காஞ்சியிலிருந்து மதுரையை நோக்கி விரைந்தோடியது.

யானை வருவதைக் கண்டு அஞ்சிய மக்கள் விக்கிரமப் பாண்டியனிடம் வந்து முறையிட்டார்கள். யானை, குதிரை, தேர், காலாட் படைகளைத் தயார் நிலையில் வைத்துவிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு விரைந்த விக்கிரமன், “சிவபெருமானே! நீங்கள் தான் இந்நாட்டைக் காக்க வேண்டும்!” எனப் பிரார்த்தித்தான். கருவறையிலிருந்து புறப்பட்டார் சுந்தரேஸ்வரர். மேரு மலையையே வில்லாகப் பிடித்தார். வாசுகி எனும் பாம்பையே அதில் நாணாகக் கட்டினார். அந்த யானையை அழிப்பதற்கேற்ற அம்புக்கு எங்கே போவது என யோசித்த சிவபெருமான்,

கூடலழகர் கோயிலில் உள்ள திருமாலிடம் வந்து தனக்கு நல்ல அம்பைத் தந்தருளுமாறு கோரினார். “நரசிம்ம வடிவில் நானே வந்து உன் வில்லில் கணையாக அமருகிறேன்!” என்றார் திருமால். மதுரையின் வட எல்லைக்குச் சென்ற சிவன், தனது வில்லில் நரசிம்மப் பெருமாளையே அம்பாக்கி, நகரை நெருங்கிக் கொண்டிருந்த யானையின் மேல் எய்தார். அடுத்த நொடியே அந்த யானை அப்படியே உறைந்து மலையாக உருவெடுத்து விட்டது. அம்பாகப் புறப்பட்டுச் சென்ற நரசிம்மர் அந்த யானைமலைக்குள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.

இன்றும் ஆனைமலையில் சிவனுடைய வில்லிலிருந்து அம்பாக வந்து யானையை அழித்துவிட்டு மலைக்குகையில் அமர்ந்திருக்கும் நரசிம்மரைத் தரிசிக்கலாம். இவ்வரலாற்றைத் திருவிளையாடல் புராணத்தின் “யானை எய்த படலத்தில்” பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளார். யானை ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றம் தரும் இந்த மலை வெகு அழகு. இதன் அடிவாரத்தில் அமைந்த குடைவரைக் கோயிலில் அருட்பாலிக்கிறார்கள் ஸ்ரீயோக நரசிம்மரும் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரும்! கோயிலுக்குள் நுழைந்ததும் தெற்கு பார்த்தபடி சுகாசனத்தில்...

அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை, முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார். கருட மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம். கடந்து உள்ளே செல்ல... சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக நரசிம்மர். பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ... முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் ஸ்ரீயோக நரசிம்மரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்! வேண்டியதை வேண்டிய முன்னே தரும்  தெய்வம் இந்த நரசிம்மர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முதலாம் வரகுணபாண்டியனின் அமைச்சரான மாறங்காரி என்பவன், கி.பி.770-ல் இந்த ஆலயத்தை எழுப்ப முற்பட்டானாம். ஆனால், இந்த திருப்பணிகள் முற்றுப் பெறாமல் பாதியிலேயே நின்றன. மாறங்காரிக்கு பிறகு அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவனின் தம்பி மாறன் பொன்னன், கோயிலின் திருப்பணியை நிறைவேற்றி, முன்மண்டபமும் எழுப்பியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஒத்தக்கடை - யானை மலை எனும் இத்தலம் மதுரைக்கு வடக்கில் 8 கி.மீ தொலைவில் மேலூர் செல்லும் சாலையில் உள்ளது.

(தரிசனம் தொடரும்)