பிரியாவிடை காணும் பெருமாள்



* தை அமாவாசை - 4:2:2019

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் மிகப் பிரசித்தமானதும், மகா புண்ய க்ஷேத்ரமுமான திருக்கண்ணபுரம் என்னும் திவ்ய தேசம் அஷ்டக்சர க்ஷேத்ரம் என்றும் புகழ் பெற்றது, திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் இவர்களால் (மங்களாசாஸனம்) பாடல் பெற்றதும் ஆகும். இப்பெருமானுக்கு செளரிராஜப் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு. இவருக்கு இந்தத் திருநாமம் வந்ததற்கே ஒரு சுவையான கதையுண்டு.

க்ஷேடஸ உபசார பூஜையில் சாமரத்தால் வீசி பூஜிப்பதும் ஓர் உபசாரமாகும். செளரிமானின் ரோமங்களைக் கொண்டு தயாரித்த சாமரங்களால் பெருமானுக்கு உபசாரம் (விசிறி வீசுதல்) செய்வது வழக்கம். முன்பு ஓர் சமயம் சோழ மன்னன் புண்ய கால ஸ்நானத்தின் பொருட்டு சமுத்திர ஸ்நானம் செய்யச் செல்லும் வழியில் திருக்கண்ணபுரத்துக்குச் சென்று பெருமாளைத் தரிசித்த  சமயம் அர்ச்சகர் மன்னனுக்கு பெருமாள் மாலையை அணிவித்து பிரசாதமாகத் தந்தார்.

அம்மாலையில் ஒரு ரோமம் இருந்ததைக் கண்ட மன்னன் அர்ச்சகரிடம் இதுபற்றி கேட்க, இது பெருமாளின் கேசம்(செளரி) என்று சொல்லிட மன்னனும் பெருமாளின் திருமேனியில் இருக்கும் செளரியைக் காண ஆசைப்பட, பயந்துபோன அர்ச்சகர் பெருமாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்ய, பெருமாளும் செளரியுடன் காட்சியளித்த அனுக்ரஹித்தார் என்று தலபுராணம் மூலம் அறிய முடிகிறது.

இத்தல எம்பெருமான் ஒவ்வொரு அமாவாசையிலும் விபீஷணனுக்கு நடையழகு காண்பிப்பதாகவும் ஐதீகம். இந்த உத்ஸவம் மத்தியான (பகல்) வேளையில் நடைபெறும். இதில் தை அமாவாசை உத்ஸவம் கொஞ்சம் வித்தியாசமானது. தை அமாவாசையன்று பகல் 2 மணியளவில் ஆலயத்தில் திருமஞ்சனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை - திருக்கைத்தல சேவை. மாலையில் கண்ணபுரத்தாயாருக்கு பட்டாபிராமன் திருக்கோலம் (அமர்ந்த நிலையில்) அதேசமயத்தில் பெருமானுக்கு நாச்சியராக திருக்கோலம் (நின்ற நிலையில்) பெருமாளும் தாயாரும் சேர்ந்து புறப்பாடு. இதனையே ஆண்கோலம், பெண்கோலம் என்று அழைப்பர்.

தன் நாயகன் செளரிப் பெருமாள் விபீஷணனுக்கு நடையழகைக் காண்பிப்பதால்தான் ராமர் கோலத்திலும், மன்னனுக்காக தான் செளரிப் பெருமாளாகக் காட்சியளித்ததால் பெருமான் நாச்சியார் திருக்கோலம் பூண்டுவிட்டானோ? என்று வியக்கும் வண்ணம் இத்திருவிழா நடைபெறுகிறது. புறப்பாட்டிற்குப் பிறகு பெருமாளும் தாயாரும் தம்தம் இயல்பான திருக்கோலங்களில் பெருமாள் சந்நதியில் உள்ள மகா மண்டபத்தில் சேர்ந்து காட்சியளிப்பார்கள்.

அன்றிரவு முழுவதும் பெருமாளும் தாயாரும் பட்டுப் பீதாம்பரங்களால் பனிமுக்காடுடன் (பனிக்காலமல்லவா) காட்சி தருவார்கள். அடுத்த நாள் பெருமாளைப் பிரிந்து தன் சந்நதிக்கு எழுந்தருளும்போது பெருமானைத் திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்வதாக எழுந்தருளப்படுவார். பெருமானை விட்டுப் பிரியாத மனநிலையில் பிரிவதால் இவ்விழாவிற்கே பிரியாவிடை உத்ஸவம் என்றும் பெயர். இந்தத் திருவிழா இரண்டு நாட்களிலும் திருக்கண்ணபுரத்தில் தை அமாவாசையன்று விசேஷமாகப் பிரதி வருடம் நடைபெறுகிறது. ஒருமுறை செல்ல இயலாதவர்கள் அடுத்த தை அமாவாசைக்கு திருக்கண்ணபுரம் செல்லலாமே!


 - எம்.என். ஸ்ரீநிவாசன்