ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்



129. வேதாய நமஹ (Vedhaaya namaha)

திருமங்கையாழ்வார் வடக்கே பத்ரிநாத் முதல் பல திவ்யதேசத்துப் பெருமாள்களைப் பாடியபடிச் சீர்காழியை வந்தடைந்தார். அவரை அவரது சீடர்கள் பல்லக்கில் சுமந்துகொண்டு, “ஆலிநாடர் வந்தார்! அருள்மாரி வந்தார்! அரட்டமுக்கி வந்தார்! அடையார் சீயம் வந்தார்! கொங்குமலர்க் குழலியர் வேள் வந்தார்! பரகாலன் வந்தார்! கலியன் வந்தார்! மங்கை மன்னர் வந்தார்! நாலுகவிப் பெருமாள் வந்தார்!” என்றெல்லாம் முழக்கமிட்டார்கள்.

அப்போது சீர்காழியில் உள்ள ஞானசம்பந்தரின் சீடர்கள், “நிறுத்துங்கள்! எங்கள் சம்பந்தர் பெருமான் வாழும் இவ்வூரில் வேறு ஒருவரை நாலுகவிப் பெருமாள் என அழைப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்!” என்றார்கள். “எங்கள் ஆழ்வார் ஆசுகவி, மதுரகவி, விஸ்தாரகவி, சித்ரகவி என நாலுவிதக் கவிகள் பாடவல்லவராதலால் நாலு கவிப் பெருமாள் என்கிறோம்! அதில் என்ன தவறு?” என்று கேட்டார்கள் ஆழ்வாரின் சீடர்கள். “அப்படியானால் எங்கள் தலைவருக்கும் உங்கள் தலைவருக்கும் போட்டி வைத்துப் பார்ப்போம். அதில் யார் வெல்கிறார்களோ அவரே நாலுகவிப்பெருமாள்!” என்றார்கள் சம்பந்தரின் சீடர்கள். ஆழ்வாரின் சீடர்களும் அதை ஏற்றார்கள்.

எப்போதுமே தலைவர்களுக்குள் சண்டையோ பொறாமையோ இருப்பதில்லை. சீடர்கள் போட்டியை விரும்பியதால் ஆழ்வாரும் சம்பந்தரும் அதற்கு இசையும்படி ஆயிற்று. ஆனால் மனதளவில் அவர்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். குறித்த நாளில் போட்டிக்காகக் குறித்த இடத்துக்குத் திருமங்கை ஆழ்வாரும் சம்பந்தரும் வந்தார்கள். அப்போது சம்பந்தர் திருமங்கை ஆழ்வாரைப் பார்த்து, “சீர்காழியின் சிறப்பைச் சித்தரித்து ஒரு செய்யுள் பாடும்!” என்றார். திருமங்கை ஆழ்வாரோ, சீர்காழியில் கோவில் கொண்டிருக்கும் உளகளந்த பெருமாளைக் குறித்து ஆசிரிய விருத்தத்தில்,

“ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில்மலி விழா வளமும் சிறக்கும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மின் நீரே”

எனத் தொடங்கி ஒன்பது பெரிய பாடல்கள் பாடினார்.

“ஒன்றே முக்கால் அடியில் குறள் பாடச் சொன்னால் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடுகிறாரே!” எனச் சிரித்தார்கள் சம்பந்தரின் சீடர்கள். “இல்லை! அவர் பாடியது சரி!” என்றார் சம்பந்தர். “ஒன்றே முக்கால் அடி உயரம் கொண்ட வாமன மூர்த்திக்குக் ‘குறள்’ என்று பெயர். ‘ஒருகுறள் பாடும் ஒருகுறள்’ என்றால் ‘ஒரு குறளால் பாடப்பட்ட ஒரு குறள்’ என்று பொருள். திருக்குறளின் 610-வது குறள் - “மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு”. (உலகளந்த பெருமாள் எப்படி மண்ணுலகம் விண்ணுலகம் அனைத்தையும் அளந்தாரோ அதுபோலச் சோம்பலில்லாத மன்னவனின் ராஜ்ஜியம் விரிந்து பரந்திருக்கும் என்பது இக்குறளின் பொருள்.)

எனவே வாமன மூர்த்தி இந்த ‘ஒரு குறளால்’ பாடப்பட்ட ‘ஒரு குறள்’ ஆவார். சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் உலகளந்தபெருமாளைப் பாடச் சொல்லும் நோக்கில் தான் “சீர்காழியின் சிறப்பைச் சித்தரித்து ஒரு குறள் பாடும் ஒரு குறள் பாடும்!” என்று நான் கூறினேன். அவரும் சரியாகப் பாடிவிட்டார்!” என்றார் சம்பந்தர்.

மேலும், “ஆழ்வீர்! நாலுகவிப் பெருமாள் என்ற பட்டமும் உங்களுக்குப் பொருந்தும்!” என்று சொன்ன சம்பந்தர் தன்னுடைய வேலைத் திருமங்கை ஆழ்வாருக்குப் பரிசாக அளித்தார். இன்றும் திருவாலி திருநகரியில் சம்பந்தர் பரிசளித்த வேலைக் கையில் அணைத்தபடி திருமங்கை ஆழ்வார் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

திருமங்கையாழ்வாரைப் பாராட்டும் வகையில்,

“கடியுண்ட நெடுவாளை கறாவில் தப்பக்
கயத்துக்குள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட தெங்கின் பழத்தால் காயம்
அலையுண்டு குலைசிதறும் ஆலிநாடா
படியுண்ட பெருமானைப் பறித்துப்பாடிப்
பதம்பெற்ற பெருமாளே கவியேன் பெற்ற
கொடியொன்று நின்பவனிக்கெதிரே சென்று
விட்டாள் உயிரொன்று கொண்டு வந்தாளே”

என்ற பாடலைச் சம்பந்தர் பாடினார். சம்பந்தரைப் பாராட்டும் வகையில்,

“வறுக்கை நுறுங்கண்ணி சிதறிச் செந்தேன் பொங்கி
மறுக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலைதனில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்வு தானே”

என்ற பாடலைத் திருமங்கையாழ்வார் பாடினார். “நான் வேதம் படித்த அந்தணர்கள் குலத்தில் பிறந்தவன். ஆனால் நீங்களோ வேளாளர் குலத்தில் பிறந்திருந்தாலும் எப்படி வேதத்தின் சாரத்தை இவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார் சம்பந்தர். அதற்குத் திருமங்கையாழ்வார், “அடியேன் முறைப்படி வேதம் கற்காவிட்டாலும், திருமாலே குருவாக வந்து வேதத்தின் சாரமான எட்டெழுத்து மந்திரத்தை அடியேனுக்கு உபதேசம் செய்துவிட்டார்!” என விடையளித்தார்.

இவ்வாறு வேதத்தின் ஆழ்பொருளைத் தானே குருவாக வந்து தன் அடியவர்களுக்கு வழங்குவதால், திருமால் ‘வேத’ என்றழைக்கப்படுகிறார். ‘வேத:’ என்றால் வேதப்பொருளை வழங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 129-வது திருநாமம். “வேதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறும்படித் திருமால் அருள் புரிவார்.

130. வேதவிதே நமஹ (Vedhavidhe namaha)

ஆயர்பாடியில் கண்ணன் ஒரு வீட்டில் வெண்ணெய் திருடச் சென்றான். அங்கிருந்த வெண்ணெய்ப் பானைக்கு அருகே ஒரு மணி இருந்தது. அந்த மணியைப் பார்த்து, “மணியே! நீ இப்போது மணியடித்து ஓசை எழுப்பினால் நான் மாட்டிக்கொள்வேன். அதனால் அமைதியாக இருக்க வேண்டும்! சரியா?” என்றான் கண்ணன். “அடியேன்!” என்றது அந்த மணி. கண்ணன் வெண்ணெயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். உடனே மணி அடித்து விட்டது. “ஏன் ஒலி எழுப்புகிறாய்?” என மணியிடம் கேட்டான் கண்ணன். “நீ பிரசாதம் உண்ணும் போது ஒலி எழுப்ப வேண்டியது என் கடமை அல்லவா?” என்றது மணி.

“முதலில் ‘அடியேன்’, அதாவது ‘அடிக்க மாட்டேன்’ என்று எனக்கு வாக்களித்தாயே!” என்று கேட்டான் கண்ணன். “கண்ணா! அடிக்க மாட்டேன் என்ற பொருளில் அடியேன் என்று சொல்லவில்லை. ‘உனது அடியவன் நான்’ என்று குறிப்பதற்காக அடியேன் என்று சொன்னேன்!” என்றது அந்த மணி. “மணியே! பேச்சாற்றலில் உன்னை அடித்துக்கொள்ள யாருமில்லை. நீ கலியுகத்தில் ஒரு ஆசார்யனாக அவதாரம் செய்து வேதத்துக்குத் தவறான பொருள் கூறுபவர்களை உன் பேச்சாற்றலைக் கொண்டு வாதம் செய்து வெல்ல வேண்டும்!” என்றான் கண்ணன்.

பின்னாளில் ஆயர்பாடியில் இருந்து திருமலையை அடைந்த அந்த மணி, அங்கே திருவேங்கடமுடையானின் பூஜைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து அனந்தசூரி, தோத்தாரம்பா தம்பதிகள் குழந்தை வரம் வேண்டித் திருமலைக்கு வந்தார்கள். அன்றிரவு தோத்தாரம்பா, தான் திருமலையப்பனின் மணியை விழுங்குவதாகக் கனவு கண்டாள். அடுத்த நாள் காலை திருமலையப்பனின் கருவறையை அர்ச்சகர் திறந்தபோது, அங்கு மலையப்பனின் மணியைக் காணவில்லை. இது பெரும் சர்ச்சையாகிச் செய்தி ஊரெங்கும் பரவியது. அப்போது அங்கு வந்த ஜீயர் ஸ்வாமி, “பெருமாளே ஒரு பக்தைக்குத் தன் மணியைப் பரிசளிப்பதாக நான் கனவு கண்டேன்!” என்று கூறினார்.

அடுத்த சில நாட்களில் தோத்தாரம்பா கருவுற்றாள். புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையப்பனின் மணியின் அம்சமாக ஒரு ஆண் குழந்தையை ஈன்றாள். ‘வேங்கடநாதன்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். இவ்வாறு ஆயர்பாடியில் இருந்த மணி, திருமலையை அடைந்து, பின் காஞ்சியில் வேங்கடநாதனாக அவதரித்தது. வேங்கடநாதன், தன்னுடைய இருபதாவது வயதுக்குள் அனைத்து வேத சாஸ்திரங்களையும் தன்னுடைய தாய்மாமாவான அப்புள்ளாரிடம் கற்றுத் தேர்ந்தார். வேதாந்த ஞானத்தில் ஒப்புயர்வற்றவராக அவர் விளங்கியபடியால், திருவரங்கநாதனே அவருக்கு ‘வேதாந்தாச்சாரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

அந்த வேதாந்தாச்சாரியார் தான் ‘வேதாந்த தேசிகன்’ என்று நாம் பிரசித்தியாக அழைக்கும் வைணவ மத குரு ஆவார். ஆயர்பாடியில் கண்ணன் வழங்கிய உத்தரவின் படி, வேதாந்த தேசிகன் வேத நெறியை நாடெங்கும் பரவச் செய்வதற்கும், பாமரர்களும் வேதப் பொருளை அறிவதற்கும் பல முயற்சிகள் மேற்கொண்டார். வேதத்துக்குத் தவறான பொருள் கூறுவோரை வாதம் செய்து வென்றார். அந்த வகையில் கிருஷ்ண மிச்ரர் என்றொரு பண்டிதர் தேசிகனை எதிர்த்து வாதம் செய்ய வந்தார். அவர் தேசிகனிடம், “சுவாமி! நீங்கள் மட்டும் என்னை வாதில் வென்று விட்டால் நான் என்னுடைய சித்தாந்தத்தையே விட்டுவிட்டு உங்களது சித்தாந்தத்துக்கு வந்து விடுகிறேன்!” என்றார்.

“சரி! வாதத்தைத் தொடங்குவோமா?” என்று கேட்டார், தேசிகன். “சற்றுப் பொறுங்கள் சுவாமி! நான் தோற்றால் உங்கள் சித்தாந்தத்துக்கு வருவதாகப் பந்தயம் கட்டினேன். நீங்கள் தோற்றால் என்ன செய்வீர்கள் என்று பந்தயம் கட்டவே இல்லையே!” என்று கேட்டார் கிருஷ்ண மிச்ரர். “நான் தோற்கமாட்டேன்! அதனால் பந்தயம் கட்டவேண்டிய அவசியமில்லை!” என்றார், தேசிகன். “அதெப்படி வாதம் தொடங்குமுன்பே தோற்கமாட்டேன் என அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் கிருஷ்ணமிச்ரர்.

“நான் எனது சொந்தக் கருத்தைச் சொல்லி வாதம் செய்தால் தானே வெல்வேனா தோற்பேனா என்ற விசாரம் ஏற்படும்? கீதையில் கண்ணன் ‘வேதவிதேவ சாஹம்’ என்கிறான். அனைத்து வேதங்களையும் ஐயமில்லாமல் அறிந்தவன் தான் ஒருவனே என்று கூறியிருக்கிறான் கண்ணபிரான். அந்தக் கண்ணனின் திருவுள்ளத்திலுள்ள கருத்துக்களையும், அவற்றைப் பிரதிபலிப்பவரான ராமானுஜரின் திருவுள்ளத்திலுள்ள கருத்துக்களையும் கொண்டு இப்போது அடியேன் வாதம் செய்யப் போகிறேனே ஒழிய எதுவுமே என் சொந்தக் கருத்தில்லை. எனவே தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை!” என்றார். வியந்து போனார் கிருஷ்ண மிச்ரர். அவ்வாறே வாதத்தில் கிருஷ்ண மிச்ரரை வென்று தமது சீடராக்கினார் தேசிகன்.

அனைத்து வேதங்களின் கருத்துக்களையும் ஐயமின்றி அறிந்தவர் திருமால் ஒருவரே. மனித புத்தியால் வேதக் கருத்துக்களை முழுமையாக அறிய முடியாது. வேதவேத்யரான திருமாலே, நம்மாழ்வார், ராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் போன்ற மகான்களுக்கு அந்த வேதங்களின் பொருளை ஐயம் திரிபறத் தானே உணர்த்தி அவர்களைப் பேச வைக்கிறார். இவ்வாறு சந்தேகத்திற்கு இடமில்லாமல் வேதங்களின் பொருளை அடியார்களுக்கு உணர்த்துவதால் திருமால் ‘வேதவித்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 130-வது திருநாமம்.

“வேதவிதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் வாசகர்களுக்கு வாழ்வில் எந்த விஷயத்திலும் சந்தேகமில்லாமல் தெளிவான ஞானம் பிறக்கும்படித் திருமால் அருள்வார்.

131. அவ்யங்காய நமஹ  (Avyangaaya namaha)

சாந்தோக்ய உபநிஷத்தில் ‘வைச்வானர வித்யை’ என்ற பகுதியில் இடம்பெற்றுள்ள சரித்திரம் இது. பிராசீனசாலர், சத்தியயஜ்ஞர், இந்திரத்யும்னர், ஜனர், புடிலர் ஆகிய ஐந்து முனிவர்கள் ஒன்று கூடி, “நம்முடைய ஆத்மா என்பது என்ன? இறைவன் யார்?” என்று விவாதம் நடத்தினார்கள். எவ்வளவு பேசியும் இவ்விஷயத்தில் தெளிவு ஏற்படாமையால், அருண முனிவரின் புதல்வரான உத்தாலகரை அணுகினார்கள். உத்தாலகர், “இவ்விஷயம் அடியேனுக்கு முழுமையாகத் தெரியாது. கேகய தேசத்து அரசரான அச்வபதிதான் ஆத்மா, இறைவன் இவற்றையெல்லாம் பற்றி நன்கறிந்தவர். வாருங்கள் நாம் அவரை அணுகுவோம்!” என்று சொல்ல, ஆறு முனிவர்களும் அச்வபதியிடம் சென்றார்கள்.

அப்போது அச்வபதி ஒரு வேள்வி செய்து கொண்டிருந்தார். இந்த ஆறு முனிவர்களையும் வரவேற்ற அச்வபதி, “இந்த யாகம் செய்விக்கும் அந்தணர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் தட்சிணையை உங்களுக்கும் தருகிறேன். நீங்கள் அறுவரும் இருந்து யாகத்தை நடத்தித் தர வேண்டும்!” என வேண்டினார். ஆனால், அவர்களோ “எங்களுக்குப் பொன்னோ பொருளோ வேண்டாம். எங்களுக்கு நீங்கள் ஆத்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் உபதேசம் செய்யுங்கள். அதுதான் நாங்கள் விரும்பும் தட்சிணை!” என்றார்கள்.

ஆன்மிகத்தில் அவர்களுக்குள்ள நாட்டத்தைக் கண்டு மகிழ்ந்த அச்வபதி, முதலில் பிராசீனசாலரிடம், “நீங்கள் எதைத் தெய்வமாக வணங்குகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் சொர்க்க லோகத்தை வணங்குகிறேன்” என்றார். அவ்வாறே ஒவ்வொருவரிடமும் அச்வபதி கேட்க, சத்தியயஜ்ஞர் சூரியனையும், இந்திரத்யும்னர் காற்றையும், ஜனர் ஆகாயத்தையும், புடிலர் தண்ணீரையும், உத்தாலகர் பூமியையும் தெய்வமாகக் கருதி வணங்குவதாகக் கூறினர்.

அதைக் கேட்ட அச்வபதி, “நீங்கள் யாருமே இறைவனை முழுமையாக வணங்கவில்லை. வெறும் சொர்க்கலோகத்தையோ, வெறும் சூரியனையோ, வெறும் ஆகாயத்தையோ இறைவனாக எண்ணி வழிபட்டால் இம்மைப் பயன்கள் மட்டுமே கிடைக்கும். சொர்க்கலோகத்தைத் தலையாகவும், சூரியனைக் கண்ணாகவும், காற்றை மூச்சாகவும், ஆகாயத்தை இடுப்பாகவும், தண்ணீரை வயிறாகவும், பூமியைப் பாதங்களாகவும் கொண்ட முழு வடிவமாக இறைவனை வணங்கினால் தான் முக்தியடைய முடியும்.

இவ்வாறு ஜீவாத்மாக்களுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கும் இறைவனைத் தியானித்து, ஜீவாத்மாக்கள் ஒவ்வொருவரும் அவனுக்கு மேன்மை சேர்ப்பதற்காக ஏற்பட்டவர்கள் என்ற ஞானத்தோடு உபாசனை செய்தால், தீயிலிட்ட பஞ்சுபோல் நம் பாபங்கள் எரிந்து போகும்!” என்றார். மேலும், பூர்ணமாக இருக்கும் இறைவனைப் பகுதிகளாகப் பிரித்து உபாசித்தால் பலனும் குறைவாகவே கிட்டும் எனவும், குறையொன்றுமில்லாத இறைவனைப் பகுதிகளுக்கப்பாற்பட்ட முழுமையானவனாக உபாசித்தால் மட்டுமே முழுமையான பலன் கிட்டும் என்றும் விளக்கினார்.

(உபநிஷத் இவ்வாறு கூறியிருப்பதால்தான், கோயில்களில் இறைவனின் விக்கிரகத்தை வணங்கும்போது, இது வரையறைக்குட்பட்ட வெறும் விக்கிரகம் என எண்ணி வணங்காமல், வரையறைக்கப்பாற்பட்ட இறைவன் இந்த வடிவில் வந்து நமக்குக் காட்சியளிக்கிறான் என உணர்ந்து வணங்க வேண்டும் என்று பெரியோர்கள் வலியுறுத்துகிறார்கள். விக்கிரகத்தை முழுமையான இறைவன் என உணர்ந்து வழிபட்டால் தான் முழுமையான பலன் கிட்டும்.)

வேதத்துக்கு ஆறு அங்கங்கள் உள்ளன. அவை சிக்ஷை (உச்சரிப்பு விதிகள்), வியாகரணம் (இலக்கண விதிகள்), நிருக்தம் (அகரமுதலி), சந்தஸ் (பா வகைகள்), ஜோதிடம், கல்பம் (செய்முறைகள்). இந்த ஆறு அங்கங்களையும் சரீரமாக உடையவனாகவும் இறைவனைத் தியானிக்கும் முறை உள்ளது. சந்தஸ்ஸைத் திருவடிகளாகவும், நிருக்தியைக் காதுகளாகவும், சிக்ஷையை மூக்காகவும், ஜோதிடத்தைக் கண்களாகவும், வியாகரணத்தை வாயாகவும், கல்பத்தைக் கரங்களாகவும் கொண்டவனாகவும் இறைவனைத் தியானிக்கலாம் என்று கூறினார் அச்வபதி.

அனைத்துலகங்களையும், அவ்வாறே வேதத்தின் அனைத்து அங்கங்களையும் தனது அவயவங்களாகக் கொண்டு குறையில்லாத முழுமையானவராகத் திருமால் விளங்குவதால், ‘அவ்யங்க:’ என்றழைக்கப் படுகிறார். வடமொழியில் ‘வ்யங்க:’ என்றால் ஊனம் அல்லது குறைபாடு என்று பொருள். ‘அவ்யங்க:’ என்றால் குறையில்லாத முழுமையான வடிவைக் கொண்டவர் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 131-வது திருநாமம். “அவ்யங்காய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியவர்களுக்கு வாழ்க்கையில் முழுமையான நன்மைகள் ஏற்படும் படித் திருமால் அருள்புரிவார்.

132. வேதாங்காய நமஹ  (Vedhaangaaya namaha)

ஆயிரம் வருடப் போராட்டத்துக்குப் பின் தன் முயற்சியால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என உணர்ந்தது அந்த யானை. “ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே! நீ தான் வந்து இந்த முதலையின் பிடியிலிருந்து அடியேனை விடுவிக்க வேண்டும்!” என உரக்க அழைத்தது. கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் வைகுண்டத்திலிருந்து திருமால் அதிவேகமாகப் புறப்பட்டார். கருடன் மேல் ஆரோகணித்தார். சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை என எட்டு கரங்களில் எட்டு ஆயுதங்கள் ஏந்தியபடி குளக்கரையை நோக்கி விரைந்தார்.

“கருடா! வேகமாகச் செல்! என் பக்தன் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறான். விரைவில் அவனைக் காக்க வேண்டும்!” என்றார். கருடனும் முழு வேகத்தில் சென்றார். ஆனாலும் திருமாலுக்குத் திருப்தி இல்லை. ஒரு நிலையில், கருடனின் தோள்களில் இருந்து இறங்கிய திருமால், கருடனைத் தன் தோளில் வைத்துக் கொண்டு குளக்கரையை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்.

கருடனைத் தோளில் ஏந்தியபடி குளக்கரையை அடைந்த திருமால், சக்கரத்தால் முதலையைக் கொன்றார், யானையை மீட்டார். தான் பறித்த தாமரையைத் திருமாலின் திருவடித் தாமரைகளில் கஜேந்திரன் சமர்ப்பித்தான். கஜேந்திரனுக்கு முக்தியளித்து அவனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார் திருமால். வைகுண்டம் சென்ற கஜேந்திரன் திருமாலிடம், “எம்பெருமானே! எனக்கொரு சந்தேகம். என்னைக் காக்க வருகையில் நீங்கள் ஏன் கருடனை உங்கள் தோளில் சுமந்து வந்தீர்? கருடன் உம்மைச் சுமந்து வருவது தானே வழக்கம்?” என்று கேட்டான். “அவன் பயணித்த வேகம் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் தான் அவனைத் தோளில் சுமந்து கொண்டு நான் வேகமாகப் பறந்து வந்துவிட்டேன்!” என்றார் திருமால்.

“என்னைக் காக்க வேண்டியது நீங்கள் தானே? கருடன் இல்லையே! அப்புறம் ஏன் அவரைச் சுமந்து கொண்டு பறந்து வர வேண்டும்? அவரை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் வந்தால் போதாதா?” என்று கேட்டான் கஜேந்திரன். அதற்குத் திருமால், “நீ என்னை அழைக்கும் போது ‘ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே!’ என்று அழைத்தாய் அல்லவா? எனவே நானே வேதம் போற்றும் முதல்வன் என்பதை உனக்கு நிரூபிப்பதற்காக வேதமே வடிவெடுத்தவரான கருடனைச் சாட்சியாக உடன் அழைத்து வந்தேன்!” என்றார் திருமால். வேதத்தின் பகுதிகளே கருடனின் திருமேனியில் அங்கங்களாக இருக்கும் விதத்தையும் திருமால் விளக்கினார்.

வேதப்பகுதி - கருடனின் அங்கம்
காயத்ரி மந்திரம் - கண்கள்
த்ரிவ்ருத் - தலை
வாமதேவ்யம் - உடல்
ஸ்தோமம் - ஆத்மா
சந்தஸ் - கால்கள்
தீஷ்ண்யம் - நகங்கள்
யஜ்ஞாயஜ்ஞம் - வால்
ப்ருஹத், ரதாந்தரம் - இறக்கைகள்

அப்போது குறுக்கிட்ட கருடன், “கஜேந்திரா! எம்பெருமானின் திருமேனியிலேயே அனைத்து வேத மந்திரங்களும் எப்போதும் உள்ளன. வேத மந்திரங்களையே அங்கங்களாக உடையவராய் விளங்குவதால் தான் அவர் ‘வேதாங்க:’ எனப் போற்றப்படுகிறார்!” என்றார். “ஆனால் உங்களது உடல் உறுப்புகளாக வேத மந்திரங்கள் இருப்பதாகத் திருமால் கூறுகிறாரே!” என்று கேட்டான் கஜேந்திரன். அதற்குக் கருடன், “தன்னுடைய பக்தர்களையும் தன்னைப் போலவே ஆக்கி அழகு பார்ப்பவர் நம் பெருமாள். அதனால் அவரது தொண்டனான அடியேனுக்கும் வேத மந்திரங்களை உடல் அங்கங்களாகத் தந்து விட்டார். அவர் இயற்கையாகவே வேத அங்கங்களைத் தனது அங்கங்களாகக் கொண்டவர். அடியேன் அவரது அருளால் அவற்றை அங்கங்களாகப் பெற்றவன்!” என்றார்.

“இப்போது மற்றொரு சந்தேகம் எழுந்து விட்டது!” என்ற கஜேந்திரன், “திருமாலின் திருமேனியிலேயே வேதங்கள் அனைத்தும் இருக்கின்றன என்றால், அவர் உங்களை ஏன் வேத சொரூபி எனக் கூறிச் சாட்சிக்கு அழைத்து வந்தார்?” என்று கருடனிடம் கேட்டான். அதற்குக் கருடன், “கருணைக் கடலான திருமால், கஜேந்திர மோட்சக் காட்சியை அடியேனும் கண்டு அனுபவிக்க வேண்டும் என எண்ணியுள்ளார். அதனால், தாமே என்னைக் குளக்கரைக்குச் சுமந்து கொண்டு வந்து என் கண் முன்னால் அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார்!” என்று கூறிப் பரவசப்பட்டார்.

கருடன் சொன்னபடி, வேத மந்திரங்களையே தனது அங்கங்களாகக் கொண்டு விளங்குவதால், திருமால் ‘வேதாங்கஹ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 132-வது திருநாமம். உலகியல் வாழ்க்கையாகிய குளத்தில், நாம் செய்த முன்வினைகளாகிய முதலைகள் நம்மைப் பிடித்துக் கொண்டு வாட்டுகையில், “வேதாங்காய நமஹ” என்ற இத்திருநாமத்தைச் சொன்னால், அந்த முதலைகளிடமிருந்து திருமால் நம்மை விடுவித்தருள்வார்.

133. வேதவிதே நமஹ (Vedavidhe namaha)

வடுவூரில் சீதை, லட்சுமணன், அனுமனோடு கோதண்டராமர் புன்னகை தவழும் முகத்துடன் எழுந்தருளியுள்ளார். அவ்வூரில் வாழ்ந்த ஸ்ரீநிதி சுவாமிகள், தினமும் ராமனின் புன்னகையைக் குறித்து ஒரு ஸ்லோகம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுப் ‘புன்னகை ராமாயணம்’ என்ற ராமாயணமே உருவாகிவிட்டது. ஒருநாள் ராமனை அவர் தரிசிக்கையில் ஸ்ரீநிதி சுவாமிகளின் உள்ளத்தில் ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி தோன்றியது.

வனவாச காலத்தில் அத்ரி, சரபங்கர், அகஸ்தியர் உள்ளிட்ட பல முனிவர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று அவர்களை வணங்கினான் ராமபிரான். அந்த வகையில் சுதீட்சணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தை ஒருநாள் மாலை அடைந்தான் ராமன். உடன் லட்சுமணனும் சீதையும் சென்றிருந்தார்கள். அவர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சுதீட்சணர். ராமன் அவரிடம், “மகரிஷியே! நீண்ட தூரம் நடந்து வந்த நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம். அதனால் சீக்கிரமாக உணவைப் பரிமாறுங்கள்!” என்றான்.

“இப்போது இயலாது ராமா! சற்றுப் பொறுத்திரு!” என்றார் சுதீட்சணர்.ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணன் வெகுண்டெழுந்தான். “சுதீட்சணரே! என் அண்ணனையும் அண்ணியையும் விருந்துக்கு அழைத்து விட்டு, அவர்கள் பசி என்று சொல்லும் போது, தாமதமாகும் என்கிறீர்களே! உங்கள் விருந்தோம்பலின் லட்சணம் இது தானா?” எனப் பலவாறு பேசினான் லட்சுமணன். அவனைச் சமாதானப் படுத்திய ராமன், “மகரிஷியே! ஏன் விருந்து இன்னும் தயாராகவில்லையா?” என்று பணிவுடன் கேட்டான்.

அதற்கு சுதீட்சணர், “ராமா! விருந்தெல்லாம் தயார் நிலையில் தான் உள்ளது. ஆனால் இப்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம். காயத்திரி மந்திரத்தை ஜபிக்க வேண்டிய காலம். இந்த சந்தியா காலத்தில் உணவு உட்கொள்ளக் கூடாது என்று சாஸ்திரத்தில் நீ தானே விதித்துள்ளாய். எனவே சந்தியா காலம் போய், இரவுப் பொழுது வந்தபின் விருந்தளிக்கிறேன்!” என்றார்.

“லட்சுமணா! நான் சாஸ்திரத்தில் விதித்த தர்மங்களைத் துளிகூடப் பிறழாமல் இந்த ரிஷி பின்பற்றுகிறாரே! அந்த விதியை விதித்தவனான நானும் அதைப் பின்பற்ற வேண்டாமா? எனவே பொறுத்திருப்பாம். சந்தியாகாலம் போனபின் நாம் உணவருந்தலாம்!” என்று கூறிய ராமன் சுதீட்சணரின் சிரத்தையை எண்ணி அவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.
இக்காட்சியை மனத்திரையில் கண்ட ஸ்ரீநிதி சுவாமி, “வடுவூரில் உறையும் சக்கரவர்த்தித் திருமகனே! அன்று தர்மங்களைச் சரியாகப் பின்பற்றிய சுதீட்சணரைப் பார்த்து நீ சிந்திய அதே புன்னகையோடு இன்று வடுவூரில் எழுந்தருளியிருக்கிறாயே! உன்னுடைய இந்தப் புன்னகை எம் போன்றவர்களை தர்மத்தின் பாதையில் வழிநடத்தட்டும்!” என்றொரு ஸ்லோகத்தை இயற்றினார்.

அந்த ஸ்லோகம்:
“ஸ்ரீமன்! ராம! தவாகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ
தத்தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீகாமாத்  விலம்பான்விதே |
புக்திம் தாதுமயே ததா ரகுபதே! தர்மாத்மனஸ்தே முகே
யன் மந்தஹாஸம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம் ||”

ராமாவதாரம் போன்ற அவதாரங்களின் வாயிலாக, வேதம் விதிக்கும் தர்மத்தின் நெறியில் தானும் வாழ்ந்து காட்டி, மக்களையும் அந்நெறியில் வழிநடத்துகிறார் திருமால். அதனால் ‘வேதவித்’ - தர்மங்களை வளர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 133-வது திருநாமம். “வேதவிதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தர்மத்தின் பாதையிலிருந்து தடம் மாறாதபடி திருமால் காத்தருள்வார். (தொடர்ந்து நாமம் சொல்வோம்)

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்