பெருந்தவப் பெருமான் மருகன்அருணகிரி உலா - 71

‘‘புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப்
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
குலகிரி யடைய இடிந்து தூளெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.’’
என்பது திருப்பாதிரிப்புலியூர் பாடலின் பிற்பகுதியாகும்.

பொருள்: கடலில் படிந்து உதிக்கும் சூரியன் நேராகப் போவதற்கு அஞ்சி கீழாகத் தாண்டும் மதில் கொண்ட இலங்கையின் அரசனான ராவணனின் பொன்மய ரத்தினங்கள் தரித்திருக்கும் சிரங்கள் ஒரு பத்தும் நிலை மாறி அறுந்துபோய், பூமியில் உருளும்படி கோபித்து, கூரிய அம்புகள் பொருந்திய வில்லை வளைத்து முயற்சியுடன் சென்ற மேக நிறத்தன், மிக்க வலிமை வாய்ந்த ஹரி, விஷ்ணு எனும் மாலோன் மருகனே! அழகிய கயிலை மலை அசைய, எட்டு திக்கிலுள்ள மலைகள் அனைத்தும் தூளாக, அலை வீசும் கடல் கலங்க வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே!

உமையவள் பாதிரிமர நிழலில் அரிய தவம் செய்து அருந்தவநாயகி எனப் பெயர் பெற்ற திருப்பாதிரிப்புலியூரில் பொருந்தி விளங்கும் குருநாதா! அறுமுகவா! வள்ளி மணாளா! பெரும் தவ சிரேஷடர்களின் பெருமாளே! (உபநிடமதனை விளங்க நீ அருள் புரிவாயே!). கஜலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்குகிறோம். தலமரமான ஆதி பாதிரி மரம் கவசமிட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளது. மரத்தடியில் ஒரு சந்நதியில் வெறும் பீடத்தை மட்டுமே காண முடிகிறது. அம்பிகை இத்தலத்தில் அருவமாக இருந்து பூஜை செய்த காரணத்தினால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

‘‘பவனரூபி பவவனம் அயின்றந்தப்
பவனமென்னும் பவனத்தின் மன்னியே
பவனப் போலிகள் நீங்க, சரவண
பவனும் தேட நின்றாள் அப் பவானியே.’’
- திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்

(அன்னை பவானியானவள் காற்றின் உருவம் கொண்டு, வாயுவையே பட்சணமாக உட்கொண்டு வாயு லோகம் எனும் உலகத்தில் தங்கிப் பாவனை செய்யும் போலிகள் நீங்க, தன் குமாரனான முருகனும் தேடிக்காண இயலாதவாறு வாயுவாய் நின்றாள்) நடராஜ சபை, நவகிரஹ சந்நதி மற்றும் பைரவர், சூரியன் ஆகியோரையும் கண்டு வணங்குகிறோம்.

அம்பிகை பெரியநாயகி, தனிக்கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். ஏராளமான பசுக்கள் உள்ள கோசாலை நம் கண்ணைக் கவர்கிறது. விசாலமான முன்மண்டபத்தில் பல இறை உருவங்கள் கற்றூணில்  செதுக்கப்பட்டுள்ளன. கொடிமரமும் நந்தியும் உள்ளன. நுழைவாயிலில் விநாயகர், தண்டபாணி இருவரையும் கண்டு வணங்குகிறோம். உட்சுற்றில் விநாயகர், ஆறுமுகர், உற்சவ அம்பிகை மூர்த்தங்கள் உள்ளன.

பிராகார வலம் வந்து மீண்டும் ஒருமுறை அம்பிகை பெரியநாயகியை வணங்கி வெளியே வருகிறோம். ‘ஞானா விபூஷணி’ எனத்துவங்கும் திருப்புகழ் யோதுப் பாடலில் வரும் ‘வாகினி’ என்ற சொல் நினைவுக்கு வருகிறது. (வாகினி= பாதிரிமர நிழலில் தவம் செய்தவள்)

‘‘பாடலேசன் பருமணிக்க கோயிலுள்...
ஏடவிழ்ந்தவர் பாதிரியின் நிழல்...
எண்ணருந் தவம் செய்தனள் யாவரும்
கண்ணருஞ் சிவன் தன்னருள் காணவே.’’
- திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்

நாம் அடுத்ததாகச் செல்லவிருக்கும் தலமான ‘திருமாணிக்குழி’ கடலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ளது. மகா பலியிடமிருந்து மூவடி மண் கேட்டு மூவுலகங்களையும் பெற்றுக்கொண்டு அவனை அழித்த தோஷம் நீங்க வாமனர் சிவனைப் பூஜித்த திருத்தலம். (மாணி = பிரம்மச்சாரி) இறைவன் - வாமனபுரீஸ்வரர், உதவி நாயகர், இறைவி =  அம்புஜாட்சி, உதவி நாயகி (இறைவி பெயர்: அம்புஜாட்சி என்று வடமொழி எழுத்தான ‘ஜ’ என்பதை மாற்றி எழுதப்பட்டுள்ளது, மிகப் பெரிய தவறு. ‘‘தாமரைக் கண்களை உடையவள்’’ என்ற பொருளில் வரும், அம்புஜாட்சி என்பதை அம்பு சாட்சி என்று எழுதுகையில் பொருளே மாறி விடுகிறது அல்லவா?)

இறைவன் சந்நதி எப்போதும் திரையிடப்பட்டே இருக்கிறது. பக்தர்கள் தரிசிக்க வரும்போது திரையிலுள்ள பீமருத்ரருக்கு ஆரத்தி காட்டி பின்னர் இரு நிமிடங்களுக்கு மட்டும் திரை விலக்கப்படுகிறது. இறைவனுக்கு தீப ஆரத்தி காட்டிய பின்பு மீண்டும் திரையால் மூடி விடுகின்றனர்.‘‘வாமனர் பூஜைக்கு பீமருத்ரர் காவலாக இருக்கிறார் என்பது ஐதீகம்’’ என்கிறார் உ.வே.சா, அவர்கள். திருமாலின் சிவ பூஜைக்கு இடையூறு வராதிருக்கவே திரையிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

அத்ரி எனும் வடநாட்டு வணிகர் ஒருவரை இறைவன் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றியதால் ‘உதவி நாயகர்’ என்றும் இறைவி = ‘உதவி நாயகி’  என்றும் (தலம் ‘உதவி’ என்றும்) அழைக்கப்படுகின்றனர். சம்பந்தப் பெருமான் தன் பாடலில் ‘‘வயல் பாயு மணமாருதவி மாணிகுழியே’’ என்று பாடியுள்ளார். இதற்குச் சான்றாகக் கல்வெட்டில் இத்தலம் ‘உதவி’ என்றே குறிப்பிடப்படுகிறது.

திருமாணிக்குழி கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. காஞ்சி சங்கர மடத்தின் உதவியோடு அம்பாள், சுவாமி விமானங்களும் ராஜகோபுரத் திருப்பணியும் நடத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடம் உள்ளன. இடதுபுறமாகச் சுற்றி வந்து ஆலயத்திற்குள் செல்கிறோம். கருவறையின் முகப்பில் தலபுராணம் பற்றிய சுதைச் சிற்பங்களைக் காணலாம். முகமண்டபத்தைத் தாண்டி வலம் வரும்போது விநாயகர், அறுபத்து மூவர், சப்த மாதர்கள், யுகலிங்கங்கள் (துவாபர, த்ரேதாயுக, கலியுக) கஜலட்சுமி நடராஜர் ஆகியோர் சந்நதிகளை வணங்குகிறோம்.

கருவறைக் கோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோரைக் கண்டு வணங்குகிறோம். கன்னி மூலையில் விநாயகரின் புடைப்புச்சிற்பம் மிக அழகுற விளங்குகிறது. சோமாஸ்கந்தர் என எழுதப்பட்ட அறை மூடிக்கிடக்கிறது. பாலசாஸ்தா வீற்றிருக்கிறார். மகிஷ வதத்திற்கு முந்தைய துர்க்கை ஆதலால் கைகளில் சங்கு, சக்கரம், செந்தாமரை, யோக தண்டம் இவை ஏந்தியுள்ளாள். பிரம்மா, துர்க்கை இவர்களை அடுத்து சொர்ணாகர்ஷண பைரவர் விளங்குகிறார்.

நீண்ட வெளிப்பிராகாரத்தில் செல்வ விநாயகர், ஆறுமுகர், அவரது தேவியரைக் கண்டு மகிழ்கிறோம். சூரசம்ஹாரத்திற்கு முந்தைய தோற்றமாதலால் இந்திர மயிலுடன் காட்சி அளிக்கிறார். மயிலின் தலைப்பகுதி இடப்புறமும் தோகைப்பகுதி வலப்புறமும் உள்ளன. அருணகிரியார் இத்தலத்தில் பாடியுள்ள ஒரு திருப்புகழ் கிடைத்துள்ளது.

‘‘கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
          கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் ...... வஞ்சவேலா
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
          கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா
குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
          குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங்
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
          குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.’’

பொருள்: ‘கொதிப்புடன் மேல் எழுந்துவரும் பெரிய சூரர்கள் சேர்ந்துள்ள சேனையைப் பொடியாக்கி, குதிரை, தேர், யானைப் படைகளைச் சிதற அடித்து, சிறிய ஊர்களையும், பெரிய நகரங்களையும் நெருப்பெழச் செய்த வஞ்சனை வேல் உடையவனே! மகிழ்ச்சி கொண்ட பேய்க்கூட்டங்களும் பெரிய காளியும், கழுகுக் கூட்டங்களும், போர்க்களத்தில் திரளாகக் கிடக்கும் சடலங்களின் மேல் வீழ்ந்து, அவற்றின் மூளைச் சதைகளைக் கடித்துத் தின்னும் பூதங்களுடன் கூடிப் பாடி ஆடுவதைக் கண்ட வீரனே! குரங்குகள் குதித்து மரத்தின் மேலேறி காய் குலைகளை வீழச் செய்து நீண்ட பாக்கு மரங்களில் விளையாடுவதால் அவை அறுந்து வாழைக்குலை மேல் வீழும் அழகு மிகுந்த வளப்பமும், பெண்கள் குளிக்கும் குளத்தில் வளரும் தேன் ரசத்தையும், மகரத்துகள்களையும் உண்டு உலாவுகின்ற சேல் மீன்கள் நீந்தும் திருமாணிக்குழியில், வீற்றிருக்கும் தேவர்கள் தம்பிரானே! பாடலில் மிக அழகிய சொல்லோவியமாகத் திகழும் அருள் வேண்டலையும் அமைத்துள்ளார்.

‘‘பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொ டேகலை
          பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும்
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
     வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
          படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ’’ என்பது அவ்வேண்டுதல்.

பொருள்: ‘‘சிலம்பு அணியப் பெற்ற சீரான திருவடி மலரும், பன்னிரெண்டு ஆயுதங்களில் ஒன்றான உடைவாளும், ஒளிவீசும் பருத்த தோள்களோடு பன்னிரெண்டு காதணிகள் விளங்கும் காதுகளும், உனக்கு வாகனமாக விளங்கும் (பாம்பை அடக்கிய மயிலும்) வேலும், சேவலும், கூரிய சூலாயுதமும், ஒளிவீசும் வில்லைப்பிடித்த வெற்றிக்கோலத்தையும் விரும்பி தியானிக்காமல் பாழான சிந்தனைகளிலும் செயலிலும் (விலை மாதர் மயக்கில்) மனத்தைச் செலுத்தித் தடுமாறலாமா?’’ என்று உருகிக் கேட்கிறார்.

முருகனை வணங்கி, இறைவி அம்புஜாட்சி எழுந்தருளியுள்ள தனிக்கோயிலுக்குச் செல்கிறோம். உயரமான திருமேனி, நின்றுகொண்டிருக்கும் அழகிய திருக்கோலம். ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. நந்தி, கொடிமரம் வணங்கி வலதுபுறமுள்ள கால பைரவரை வணங்குகிறோம். கருவறையின் வாசலில் பால விநாயகர், ஜெயவிஜயர்கள், தண்டாயுதபாணி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.

வாசலில் தலத் திருப்புகழ் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மணிமகுட விநாயகரின் புடைப்புச்சிற்பம் மிக அழகாக உள்ளது. மாணிக்குழியின் மேற்கேயுள்ள புஷ்பகிரியில் ஒரு பிலத்தில் சாஸ்தா வீற்றிருக்கிறார் என்றும் அப்பிலத்தின் அருகிலுள்ள சிவாலயம் ராஜராஜேசம் என்னும் பெயருடையது என்று தலபுராணம் கூறுவதாக உ.வே.சா.அவர்கள் குறிப்பிடுகிறார். இங்கு கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் தீபதரிசனம் நடைபெறுகிறது.

மாணிக்குழி இறைவனை வணங்கி, இறைவனின் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான திருவதிகையை நோக்கிப் பயணிக்கிறோம். பண்ருட்டியிலிருந்து கடலூர் நோக்கிச் செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருவதிகை. (சென்னையிலிருந்து செல்வதானால் விக்ரவாண்டி சுங்கச்சாவடி கடந்து இடப்புறம் ‘அரசூர்’ என்ற பெயர்ப்பலகை அருகில் திரும்பும் சாலையில் 17 கி.மீ. சென்றால் பண்ருட்டியை அடையலாம்) ஈசன் முப்புரத்தை எரித்த வீரச்செயல் இங்கு நிகழ்ந்ததால் ஆலயம் வீரட்டானம் எனப்படுகிறது. எனவே திருவதிகை ஈசர் வீரட்டேஸ்வரர் என்றும் அதிகை நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஏழுநிலையுடைய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கோயிலுக்கு முன்னாலுள்ள 16 கால் மண்டபம் திருநீற்று மண்டபம் எனப்படுகிறது. சுவாமி திரிபுரம் எரித்த கோலம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கோயிலுள் நுழைந்ததும் வலப்புறம் ஒவ்வொரு கிரஹத்திற்கும் உரித்தான மரங்களும், இடப்புறம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரித்தான மரங்களும் அழகாக நடப்பட்டு விவரங்கள் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. (உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி