இறைவனை துதித்து பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே



இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 20

‘அதிர்ஷ்டம் என்பது என் வாழ்வில் அறவே இல்லை’ என்று அலுத்துக் கொள்பவர்களும், சலித்துக் கொள்பவர்களும் அநேகம் பேராக இருக்கின்றனர். அவர்களின் அறியாமையைக் கண்டு என்ன கூறுகின்றனர் தெரியுமா ?

 ‘வாய்த்தது ஈதோர் பிறவி! இதை மதித்திடுமின்’
என்பது தான் அவர்களின் அறிவுரை.

அதாவது மனிதப்பிறவி நமக்கு அமைந்திருக்கிறதல்லவா! இதுவே ஒரு நல்ல வாய்ப்பு தானே ! ஆடாகவோ, மாடாகவோ, ஓணானாகவோ, உடும்பாகவோ, பாம்பாகவோ, பல்லியாகவோ நாம் பிறக்காமல் ஆறறிவு பெற்ற மனிதர்களாக மலர்ந்திருக்கிறோமே இது பெற்ற குரிய பேறல்லவா! கொண்டாடி மகிழத்தக்க அதிர்ஷ்டம் அல்லவா! இதுதெரியாமல் அதிர்ஷ்டமே இல்லை என்று அரற்றுபவர்களை தன் பலம் தனக்கே தெரியாதவர்களின் பட்டியலில் தானே வைக்க வேண்டும்.

‘அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது!’
‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? ’

- என்னும் ஞானியர்களின் வாசகங்களை ஒவ்வொருவரும் தம்மனத்தில் மறக்காமல் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அஃறிணைகளின் பட்டியலில் இல்லாமல் உயரிதிணை மனிதர்களாக இறைவனின் திருவருளால் உதித்த நாம் அதற்காக அன்றாடம் ஆண்டவனிடம் நன்றி செலுத்த வேண்டும். அதுவே தெய்வவழிபாடு. ‘பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே!’ என்று திருநாவுக்கரசர் நமக்கான கடமையை, அன்றாட வழிபாட்டின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
பிராணிகளை நாம் வாயில்லாஜீவன் என்கின்றோம். ஒரு பசுமாட்டை ஒருவன் அடிக்கிறான் என்றால் பார்த்துக் கொண்டிருப்பவர் என்ன சொல்கிறார்? ‘பாவம்! வாயில்லாஜீவன்! அதை ஏன் இப்படி வதைக்கின்றாய்?’’  மாட்டிற்கும், ஆட்டிற்கும், குதிரைக்கும், கழுதைக்கும் நம்மைவிட பெரிய அளவில் வாய் இருக்கிறதே பின் ஏன் அவற்றை ‘வாயில்லாஜீவன் என்கின்றோம்? சிந்தித்துப் பார்த்தால் புதிய செய்தி ஒன்று கிடைக்கும்!    பிராணிகளுக்கு அமைந்திருக்கிறவாய் ‘சாப்பிடுகிறவாய்’ மட்டுமே!

உணவை மட்டுமே உட்கொள்கின்ற வாயை நம் முன்னோர்கள் வாயாகவே மதிக்கவில்லை. அதனால் தான் அஃறிணை உயிர்களுக்கு சாப்பிடுகிற அகன்ற வாய் இருந்தும் அவற்றை ‘வாயில்லா ஜீவன்’ என்று கூறினர். மனிதர்களும் வாயால் உணவை மட்டுமே உட்கொண்டால் அவர்களையும் ‘வாயில்லா ஜீவன்’ பட்டியலில் தான் சேர்க்க வேண்டும். சாப்பிடுவதையே தொழிலாகக் கொள்ளாமல் உயர் திணையாகிய நாம் இறைவனைக் கூப்பிடவேண்டும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்!
என்று அனு பூதியிலும்.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை, செஞ்சுடர்வேல்
வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே!

என்று அலங்காரத்திலும் அருணகிரியார் ஆண்டவனின் திருநாமங்களை மொழிவதே மானுடரின் கடமை என்று குறிப்பிடுகின்றார். ஆறறிவு பெற்ற மனிதர்கள் தான் ஆண்டவன் படைப்பில் மிக மேலான நிலையில் உள்ளனர்.

செடிக்கும் கொடிக்கும் ஓர் அறிவு
சங்கிற்கும் நத்தைக்கு்ம் இரண்டு அறிவு
கரையானுக்கும் எறும்பிற்கும் மூன்று அறிவு
நண்டிற்கும் வண்டுக்கும் நான்கு அறிவு
விலங்குகளுக்கு ஐந்தறிவு.
மனிதர்களுக்குத்தான் ஆறறிவு.

மேற்படி வகைப்படுத்துகிறது செம்மொழித் தமிழின் தொல்காப்பியம், உயர்ந்த மானிடப் பிறவி பெற்ற நாம் இப்பிறவிக்கு காரண கர்த்தாவான கடவுளை வணங்க வேண்டாமா? கற்றதனால் ஆய பயன் என் கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின். என்று அறச்சீற்றத்துடன் வினா விடுக்கிறார் திருவள்ளுவர். எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த நாம் இனிமேலும் பிறவாதிருக்க இறைவனின் திருப்புகழைத் தினம் தோறும் பேசவேண்டும்.

  ‘ மனிதனே ! நீ உய்வதற்கு ஐந்து உபாயங்களைக் கூறுகின்றேன். ஐந்தில் ஒன்றையாவது தேகத்தினால் எவ்விதப் பயனும் இல்லை. என்கிறார்  திருநாவுக்கரசு.
ஆகச்சிறந்த அந்த ஐந்து வழிகள் என்ன என்பதை அவர் பாடல் மூலமே பார்க்கலாமா?

‘திருநாமம் ஐந்தெழுத்தும் செப்பா ராகில்
தீ வண்ணர் திறம் ஒருகால் பேசா ராகில்
ஒருக்காலும் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்
அளியற்றார் தாம் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிக நனியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே!

ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்று பெயராவில் அடங்கி விடுவதற்காகவா இறைவன் நமக்கு ஐம் பொறியும் ஆறறிவும் தந்தான் என்பதை வாழும் போதே, அதுவும் இளமைக் காலத்திலேயே நாம் ஒவ்வொரு வரும் எண்ணிப் பார்க்க வேண்டும் ஆலயத்திற்குச் சென்று அவன் திருவுருவை மனம் மொழி மெய்யால் வணங்கியும், அவன் அடியார்களுக்கு நம்மால் ஆன உதவிகள் செய்தும், பூக்கள் பறித்து அவன் பொற் பாதங்களில் சமர்ப்பித்தும் விபூதி, குங்குமம், சந்தனம், சிந்தூரம் என அவன் திருவருளைப் பெற பக்திச் சின்னங்கள் அணிந்தும், நா மணக்க மணக்க அவன் நாமாவளிகளைப் பாடியும் அடைந்த நம் மானிட ஆக்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் எத்தனை நாள் இவ்வுலகில் இவ்வுடம் போடு வாழப்போகிறோம் என்று எவருக்குமே தெரியாது எனவே ஒரு நாள் தவறாமல் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் அவன் புகழை உரைப்பாய் என்கிறது தேவாரம்.

‘நீ நாளும் நன் நெஞ்சே! தினைகண்டாய்!
யார் அறிவார் சா நாளும், வாழ் நாளும்!
சாய்க் காட்டு எம் பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்பப்
புகழ் நாமம் செவிகேட்ப
நா நாளும் நவின்று ஏத்தப்
பெறலாமே நல்வினையே!

என்று அழுத்தம் திருத்தமாக, அதி அற்புதமாக அறிவுரை பகர்கின்றது திருஞான சம்பந்தரின் தெய்வீகத் தமிழ்! திருப்பரங்குன்றம் திருப்புகழில் அருணகிரி நாத சுவாமிகளும் மொழிகின்றார்.

தினமும் உன்னைத்துதிக்க வில்லையே!
உன் திருவடியை என் மனத்தில் பதிக்கவில்லையே!
நிலைத்த பொருள் நீதான் என்று மதிக்க வில்லையே
அருட் கட்டளைகளை எனக்கு நானே விதிக்கவில்லையே!
அடியேன் சடலம் விழும் போது இறைவரே!
பெருங்கருணையுடன் தாங்கள் வந்து அடியேனைக் காப்பாற்றி அருள்க!

மேற்கண்டவண்ணம் நம்குறையை தன்குறை யாக்கிக் கொண்டுபாடுகிறார் அருணகிரியார்.

முதற் படை வீட்டில் அவர் பாடிய திருப்புகழ் இது தான்!
உனைத்தினம் தொழுதிலன் !  உனது இயல்பினை உரைத்திலன்!
பல மலர் கொடு உன் அடி இணை உறப் பணிந்திலன்!
ஒரு தவமும் இலன்! அருள் மாறாது
ஊத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்!
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்!
உவப்பொடு உன் புகழ் துதி செயவிழைகிலன் ! மலைபோலே    
கனைத்தெழும் பகடது பிடர் மின சவரு
கருத்த வெஞ்சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறடு கதைகொடு பொரு போதே
கலக்குறும் செயல் அழிவுற ஒழிவுறு
கருத்து நைந்து அலம் உறு பொழுது அளவை கொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவோனே!

தலை, கால், கை, வாய், மூக்கு, கண் என அங்கங்கள் பெற்ற நாம் அவ் உறுப்புக்களால் ஆண்டவனை வழிபடவேண்டும். இறைவனை ‘வாழ்த்தவாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’ என்கின்றனர் நாயன்மார்கள். நம் தேசப்பிதா காந்தி கூறுகின்றார். ‘நான் உணவின்றி பல நாட்கள் இருந்தாலும் இருப்பேன். இறை வழிபாடான ராமநாமஜபம் இன்றி ஒரு கணமும் இருக்க மாட்டேன்’ எனவே இறைவன் நாமத்தை எப்பொழுதும் ஜபிப்போம் அவனைப் பேசாத நாள் எல்லாம் நாம் பூமியில் பிறக்காத நாட்கள் என்று உணர்வோம். அப்பர் பெருமானின் அறிவுரையைக் கேட்டு அனுதினமும் அதன் வழி நடப்போம்.

‘அரியானை, அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழ் ஒளியை தேவர்கள்தம் கோனை மற்றைக்
கரியானை, நான் முகனைக் கனலைக் காற்றை
கனைகடலைக் குல வரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும் பற்ற புலி யூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே! (இனிக்கும்)

- திருப்புகழ் திலகம் மதிவண்ணன்