அஜாமிலன் என்பவர் யார்?



தெளிவு பெறுஓம்  

- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

இறைவனின் திருநாமத்தைச் சொல்பவர்களுக்கு மோட்சப்ராப்தி நிச்சயம் கிடைக்கும் என்பதை உணர்த்துவதே அஜாமிலனின் கதை. ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாவது ஸ்காந்தத்தில் அஜாமிலனின் கதை வருகிறது. பரீட்சித்து மகாராஜாவின் சந்தேகங்களுக்கு சுகப்பிரம்ம மகரிஷி விளக்கம் அளித்து வரும் காலத்தே சொல்லப்பட்ட கதையாக இது அமைந்துள்ளது. மனிதன் பூலோகத்தில் செய்யும் பாவங்களின் பயனாக நரகத்தில் கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருப்பதை எண்ணிக் கலங்கும் பரீட்சித்து மகாராஜா, இதற்கு விமோசனம் கிடையாதா என்று சுகமுனிவரிடம் வினவ, இது அவரவர் செய்யும் கர்மாவின் பயன், இதனைக் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும் என்று சுகரும் பதிலுரைத்தார்.

இந்த பதிலில் சமாதானம் அடையாத பரீட்சித்து, உலகில் எல்லோரும் புண்யாத்மாக்களாக இருந்துவிட முடியாது, ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதேனும் ஒரு வகையில் பாவத்தினைச் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அறியாமல் பிழை செய்வோருக்கு விமோசனம் கிடைக்காதா என்று ஆதங்கத்துடன் கேட்க, அவருடைய கேள்விக்கு சுகப்பிரம்மம் பதில் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது இந்த கதை. கன்யாகுப்ஜம் என்ற நகரத்தில் அஜாமிலன் என்ற அந்தணன் இருந்தான். அவன் நான்கு வேதங்களைக் கற்று நேர்மையுடனும்,

நாணயத்துடனும் வாழ்ந்து வந்தான். எவரோடும் பகை இன்றி அன்புடனும், மரியாதையுடனும் பழகி வந்தான். அழகான மனைவியுடனும், அன்பான பெற்றோர்களுடனும் அவனது வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது. ஒருநாள் பூஜைக்கு மலர்களைப் பறிப்பதற்காக நந்தவனத்திற்குச் சென்றபோது அங்கே அழகான ஒரு பெண்ணைக் கண்டான். பரத்தையர் குலத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் வனப்பு மிகுந்த அழகில் மயங்கி அவளோடு சென்றான். தனது மனைவியையும், பெற்றோரையும் மறந்து அந்தப் பெண்ணுடனேயே காலத்தைக் கழிக்கத் துவங்கினான். அந்தப் பெண்ணுக்கு பல பிள்ளைகள் பிறந்தார்கள்.

அவனுடைய குடும்பம் பெருகியது. பெருஞ்செல்வமும், சொத்துகளும் செலவில் கரைந்து போயின. தன் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டி அஜாமிலன் பாவச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினான். ஒன்றும் அறியா மிருகங்களைக் கொன்று உணவாக்கிக் கொண்டான். பலருடைய பொருட்களையும் ஏமாற்றிப் பிடுங்கினான். கொடுஞ்செயல்கள் பலவும் புரிந்தான். அவனுடைய கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயரிட்டிருந்தான். இந்தக் கடைக்குட்டியின் மழலைச்சொற்கள் அஜாமிலனின் மனக்கவலைகளுக்கு ஆறுதலாய் அமைந்ததால் அவன்பால் அதிக பிரியம் வைத்திருந்தான்.

நாட்கள் உருண்டோடின. அஜாமிலன் முதுமையடைந்தான். அவனுடைய விதி முடியும் காலம் வந்தது. அவன் செய்த பாவங்களின் சுமையால் எமன் ஆணையின்படி எமதூதர்கள் அவனது உயிரைப் பறித்துச் செல்ல வந்தனர். இளம்வயதில் நான்குவேதங்களையும் கற்றறிந்து நல்லவனாக வாழ்ந்து வந்த காரணத்தினாலும், பூர்வஜென்ம புண்ணியத்தின் பலனாகவும் எமதூதர்கள் வருவது அஜாமிலனின் கண்களுக்குத் தெரிந்தது. நரகத்தின் கொடுமையை எண்ணி அஜாமிலன் பயம் கொண்டான். செய்வதறியாது திகைத்த அவன் அச்சத்தின் காரணமாக உதவிக்கு தன் கடைசி மகனை ‘நாராயணா, நாராயணா’ என்று அழைத்தான்.

மரணத்தருவாயில் அவனது அலறல் மகனான நாராயணனுக்குக் கேட்டதோ இல்லையோ, விஷ்ணு தூதர்களின் காதை எட்ட, உதவிக்கு அவர்கள் ஓடோடி வந்தார்கள். அங்கே காத்திருந்த யமதூதர்களைத் தடுத்தார்கள். யமதூதர்களுக்கும் விஷ்ணுதூதர்களுக்கும் இடைய கடும் விவாதம் உண்டானது. இவன் பக்தியுடன் நாராயணனின் நாமத்தை உச்சரிக்கவில்லை, பயத்தால் தனது மகனைத்தான் பெயரிட்டு அழைத்தான் என்று யமதூதர்களும், அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, எப்படியாகிலும் மரணத் தருவாயில் இருக்கும் அவன் நாராயணனின் நாமத்தைச் சொன்னதால் அவனது பாவங்கள் விலகிவிட்டன, அவனை யமதூதர்களாகிய நீங்கள் அழைத்துச் செல்ல முடியாது என்று விஷ்ணுதூதர்களும் விவாதம் செய்தனர்.

யமதூதர்கள், யமதர்மராஜனிடம் சென்று இந்தப் பிரச்னையைச் சொல்ல, அவரும் தனது பணியாட்களிடம் ‘நான் உங்களுக்கு எஜமானன், ஆனால் எனக்கும் ஒரு எஜமானன் உண்டு, அவரே மந்நாராயணன், எனவே அவரது நாமத்தினைச் சொன்னவனை நம்மால் நரகத்திற்குள் கொண்டுவரமுடியாது’ என்று சொல்லி விஷ்ணுதூதர்களின் கருத்தினை ஆமோதித்தார். யமதூதர்களின் பிடியிலிருந்து விடுபட்ட அஜாமிலனுக்கு மறுவாழ்வு கிடைத்தது. மரணம் மற்றும் நரக ப்ராப்தியில் இருந்து மீண்ட அஜாமிலன் இரு தரப்பு தூதர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தை எண்ணிப் பார்த்தான்.

பகவானின் திருநாமத்தினை, அறியாமல் சொன்னதற்கே இத்தனை சக்தி இருந்தால் இறைநாமத்தின் மகிமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாக்கிவிட்டோமே என வருந்தினான். இறையருளால் தனக்குக் கிடைத்த மறுவாழ்வினை பகவத்சேவையில் கழிக்க வேண்டும் என உறுதிபூண்டு கங்கைக் கரையில் அமைந்திருக்கும் ஹரித்துவார் க்ஷேத்ரத்திற்குச் சென்று குடில் அமைத்து இறைவனின் சேவையில் தனது காலத்தினைக் கழித்தான்.

நாராயணனின் நாம சங்கீர்த்தனத்தில் தனது நேரத்தினை செலவிட்டான்.
ஒருநாள் அவனை நோக்கி ஒரு தங்க விமானம் வந்தது. அந்த விமானத்தில் ஏற்கெனவே அவனது உயிரைக் காப்பாற்றிய விஷ்ணு தூதர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அவனை பத்திரமாக தங்கவிமானத்தில் அழைத்துச் சென்று வைகுந்தலோகத்தில் சேர்ப்பித்ததாக அந்தக் கதை முடிகிறது. அஜாமிலனின் கதையைச் சொல்லி முடித்த சுகப்பிரம்மம் இந்த லோகத்தில் மனிதன் அறியாமல் செய்யும் பாவங்கள் நீங்க பகவன்நாமாவை உச்சரிப்பதே சிறந்த வழி என்றும்,

இதுவே பாப விமோசனத்திற்கும், மோக்ஷப்ராப்திக்கும் துணைபுரியும் என்றும் சொல்லி பரீட்சித்து மகாராஜாவின் ஆதங்கத்திற்கு உரிய தீர்வினைச் சொல்வதாக மத் பாகவதம் உரைக்கிறது. இந்தக் கதையைப் படித்துவிட்டு தெரிந்தே பாவத்தினைச் செய்து நாராயணனின் நாமத்தினைச் சொன்னால் பாவம் தீர்ந்துவிடுமா என்று விதண்டாவாதம் பேசக்கூடாது. காம, க்ரோத, லோப, மோக, மதமாத்சர்யங்களாலும், ஊழ்வினைப் பயனின் காரணமாகவும் வேறு வழியின்றி பாவத்தினைச் செய்பவர்களுக்கு விமோசனம் கிடைக்க அஜாமிலனின் கதை தீர்வு சொல்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

* சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சியின்போது நவகிரஹங்களில் உள்ள சனி, ராகு-கேது விக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். ஆனால் குருப்பெயர்ச்சியின்போது தக்ஷிணாமூர்த்தியைத்தானே விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்?

- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்.

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. குருப்பெயர்ச்சி நாளில் நவகிரஹங்களில் உள்ள குருவிற்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ஆனால் ‘விசேஷமாக’ என்று நீங்கள் அழுத்திச் சொல்லியிருக்கும் பூஜைகள் தக்ஷிணாமூர்த்திக்குத்தான் நடைபெறுகின்றன. வருடந்தோறும் நடைபெறும் குருப்பெயர்ச்சிக்கான நேரத்தில் மட்டும் இந்த விவாதங்கள் எழுகின்றன. குருப்பெயர்ச்சி முடிந்த கையோடு இந்த விஷயத்தை மறந்தும் போகிறோம். அவ்வாறு இல்லாமல் வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்தியின் சந்நதிக்குச் சென்று வழிபடும்போதாவது இந்தக் கருத்தினை மனதில் கொண்டு செயல்பட்டால் இந்த குழப்பத்திற்கு ஒரு தெளிவான தீர்வினைக் காண இயலும்.

கடந்த சில வருடங்களாக சாஸ்திரம் அறிந்த பல பெரியவர்களும் நவகிரஹ குரு வேறு, ஞான குருவான தக்ஷிணாமூர்த்தி வேறு என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். ‘தெளிவு பெறுஓம்’ பகுதியில் நாம் கடந்த காலத்தில் விவாதித்த கருத்துதான் என்றாலும் புதிய வாசகர்களின் சந்தேகம் தீரவும், நெடுநாட்களாக நீடித்து வரும் இந்த குழப்பம் தீர வேண்டியும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டிப் பார்ப்போம்.

நவக்ரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்குச் செய்வது சரிதானா? இதுவே நம் எல்லோர் மனதிலும் எழுகின்ற அடிப்படை சந்தேகம். முதலில் இவர்கள் இருவருக்கும் இடையே இந்தக் குழப்பம் எவ்வாறு உருவானது என்பதை யோசிப்போம். இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாட்டினை அறிய நவக்ரஹங்களில் உள்ள குரு பகவானை இனி வியாழன் என்ற பெயரில் அழைப்போம். ஞானகுருவாம் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதற்கு பள்ளிக்குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

 “ குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை குரவே நம: ”

இந்த ஸ்லோகத்தில் அடிக்கடி இடம்பிடிக்கும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து வியாழ பகவானும், தக்ஷிணாமூர்த்தியும் ஒன்று என ஒரு சில பக்தர்கள் நினைத்திருக்கலாம். குரு பகவானுக்கு உரிய பரிகாரத்தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவக்ரஹங்களில் உள்ள வியாழபகவான் வடக்கு திசை நோக்கி நின்றுகொண்டிருப்பார். திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதேபோல வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள். இவருக்கு உரிய தானியம் கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தி வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். ‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்..’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள். வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். தட்சிணாமூர்த்தியோடு வியாழ பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ எங்கும் சொல்லப்படவில்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, வியாழனுக்குப் பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் ஞானகுருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுவது சரிதானா? தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பகவானுக்கு தொல்லை கொடுப்பதுபோல் அமைகின்றன இச்செய்கைகள். ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராகக் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதேநேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர். ஞானகுரு வேறு, நவக்ரஹ குரு வேறு என்பதை ஆன்மிக அன்பர்கள் புரிந்துகொள்வது நல்லது. இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்ரஹங்கள்.

ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுபக்ரஹமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ பகவான். குருபார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும். இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குருபகவான். குருபலம் இருந்தால் திருமணம் நடைபெறும். குருவின் அனுக்ரஹம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும். திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர்கல்வியில் இடம்பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர்.

அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்பும் அன்பர்கள் இந்த குருப்பெயர்ச்சி நாளிலும், இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவக்ரஹங்களில் வடக்கு நோக்கி அருட்பாலிக்கும் வியாழ பகவாக்னுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் மற்றும் கொண்டைகடலை மாலை சாற்றியும் வழிபடுங்கள். கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்குமுகமாய் நெய்விளக்கு ஏற்றியும் வழிபடலாம். அதேநேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் எப்போது வேண்டுமானாலும் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

மன சஞ்சலத்திற்கு உள்ளாகும் நேரத்தில் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். இல்வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகங்களைத் தருபவர் வியாழன். ஞான மார்க்கத்திற்கு வழிகாட்டுபவர் தக்ஷிணாமூர்த்தி. இந்த அடிப்படை வேறுபாட்டினைக்கூட புரிந்துகொள்ளாமல் எந்த இடத்தில் எந்த கோரிக்கையை வைக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறோம். சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் தீர்க்க வேண்டிய பிரச்னையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் கொண்டு செல்கிறோம்.

உள்ளூர் வங்கியின் மூலம் பெற வேண்டிய ஆதாயத்தை அடைய ரிசர்வ் வங்கி கவர்னரை அணுகி முறையிடுகிறோம். உள்ளூர் கவுன்சிலர் தீர்த்து வைக்க வேண்டிய சாதாரண விஷயத்திற்கு நாட்டின் ஜனாதிபதியிடம் மனு செய்கிறோம். வியாழ பகவானுக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் இடையே உள்ள இந்தக் குழப்பம் தீர எளிதான ஒரு வழி இருக்கிறது. பொதுவாக தக்ஷிணாமூர்த்தியின் சந்நதி சிவாலயத்தில் உள்ள மூலஸ்தானத்தின் சுற்றுச்சுவரில்தான் அமைக்கப்பட்டிருக்கும். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தி சந்நதிக்கு நேர் எதிரே பிராகாரத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியவாறு வடக்கு முகமாக ப்ருஹஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவானின் சிலையை அனைத்து ஆலயங்களிலும் பிரதிஷ்டை செய்யலாம்.

அவ்வாறு ஞானகுருவாம் தக்ஷிணாமூர்த்தியின் சந்நதிக்கு நேரெதிரே வியாழ பகவானை பிரதிஷ்டை செய்யும்போது அவருக்குரிய வடக்கு திசை நோக்கி அவர் வீற்றிருக்க வேண்டிய விதிமுறையும் மாறாது, அதேநேரத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தியின் பார்வையும் வியாழ பகவானின் மீது நிரந்தரமாக விழும். சதா இறைவனின் பார்வையிலேயே அமர்ந்திருக்கும் வியாழ பகவானும் முழுமையான சக்தியோடு பக்தர்களின் கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றி வைக்க இயலும். கொண்டைக்கடலை மாலைகளையும், மஞ்சள் ஆடையையும் வியாழ பகவானுக்கு அணிவிப்பதோடு, தக்ஷிணாமூர்த்திக்கு வெண்ணிற ஆடையை அணிவித்து அவரையும் சர்வ அலங்காரத்தோடு வழிபடலாம்.

வியாழக்கிழமைகளில் செய்யப்படும் சிறப்பு பூஜைகளும், பரிகாரங்களும் எதிரெதிரே அமைந்திருக்கும் இரண்டு சந்நதிகளிலும் நடைபெறும்போது பக்தர்களுக்கும் ஆனந்தம் பெருகும், ஒன்றாக தீபாராதனை நடைபெறும்போது பக்தர்கள் அளவிலா பரவசத்தினை அடைவர். இரண்டு சந்நதிகளுக்கும் இடையே நின்று பக்தர்கள் தரிசனம் செய்யும்போது ஒரே நேரத்தில் ஆதிகுரு, தேவகுரு இருவரின் அருளையும் பெற இயலும். வியாழ பகவானுக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் இடையே உள்ள குழப்பமும் தீரும். ஆலய நிர்வாகிகளும், சிவாச்சாரியார்களும் இதற்கான ஏற்பாட்டினை செய்து குருபகவானின் அருட்பார்வையை பக்தர்களுக்கு கிடைக்கச் செய்ய முயற்சிக்கலாம்.

* ஜடாமுடி தாங்கிய சாமியார்களும் இருக்கிறார்கள். தலையை மழுங்க மழித்துக்கொண்ட சுவாமிகளும் இருக்கிறார்கள். இதில் எது சிலாக்கியம்? துறவறத்திற்கு இலக்கணம் எது என்று நிர்ணயிக்க முடியுமா? - அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

    
இந்த வினாவிற்கு திருவள்ளுவர் தெளிவாக பதில் கூறியிருக்கிறார். திருக்குறளில்  கூடவொழுக்கம் எனும் 28வது அதிகாரத்தின் பத்தாவது குறள்:

 ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்’

உலகத்தால் பழிக்கப்பட்ட செயல்கள், அதாவது தவறான காரியங்கள் என்று விலக்கப்பட்ட குற்றங்களைச் செய்யாதிருந்தாலே போதும். அதனை விடுத்து தலையை மொட்டை அடித்துக் கொள்வது, அல்லது தலைமுடி, தாடி முதலியவற்றை வளரவிடுவது முதலான சின்னங்கள் உண்மையான துறவிக்கு அவசியமில்லை. தனது நன்னடத்தையின் மூலமாக மட்டுமே தன் நிலையை உலகத்தாருக்கு உணர்த்த வேண்டுமேயல்லாது வெறும் வெளிவேடத்தினால் அல்ல. மனதில் ஆசைகளை விடாமல், விட்டுவிட்டவர்களைப் போல் உலகத்தை ஏமாற்றி வாழ்க்கை நடத்துகிறவர்களுக்கு ஈடான நெஞ்சழுத்தமுள்ள கொடியவர்கள் வேறெவரும் இருக்க முடியாது.

உள்ளத்தில் கெட்டநோக்கங்களை வைத்துக்கொண்டு, அதற்காகவே துறவிகளைப் போல் வேடம் பூண்டு அதில் மறைந்துகொண்டு தம்முடைய இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொய்த்துறவிகளும் உண்டு. வெளிவேடத்தினைக் கண்டு மக்கள் ஏமாறக்கூடாது என்பதனையும் தனது கூடாவொழுக்கம் எனும் அதிகாரத்தில் அய்யன் வள்ளுவர் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகம் உண்டு.

தனக்குள் ஒளிந்திருக்கும் அந்த தெய்வீகத்தினைக் கண்டு கொண்டால் அவன் தனியாக ஒரு சாமியாரைத் தேடி அலைய வேண்டியதில்லை. கள்ளத்துறவிகளால் ஏமாற்றத்திற்கு ஆளாக வேண்டிய அவசியமும் இல்லை. பொய், புரட்டு, கபடு, சூது, வஞ்சனை, மது, மாது என உலகம் பழிக்கும் தீய பழக்கங்களை ஒழித்துவிட்டாலே போதும். தலையை மொட்டையாக மழித்தலும் தேவையில்லை, தாடியை நீட்டலும் தேவையில்லை. இதுவே துறவறத்திற்கான இலக்கணம் என்றுரைக்கிறது திருக்குறள். உலகப்பொதுமறை சொல்லும் இந்த இலக்கணத்தினை மறுக்க இயலுமா என்ன?

* புரட்டாசி அமாவாசையின் மகத்துவம் என்ன?  
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

மாதந்தோறும் வரும் அத்தனை அமாவாசை நாட்களும் முன்னோர்களுக்கு உரிய நாட்கள்தான். ஒவ்வொரு அமாவாசை நாளிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினர் இன்றளவும் அவ்வாறு செய்துவருகிறார்கள். அப்படி மாதந்தோறும் தர்ப்பணம் செய்ய இயலாத பிற பிரிவினர்கள் குறைந்த பட்சம் புரட்டாசி மாத அமாவாசை நாளன்றாவது முன்னோர்களுக்கான தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசை, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் 15 நாட்களை மஹாளய பட்சம் என்று சொல்வார்கள். ‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இறந்துபோன நம் பெற்றோர் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா,

சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நண்பன் என நாம் அறிந்தவர்களில், இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காணவரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த 15 நாட்களும் சுபநிகழ்வுகளைத் தவிர்த்து, முன்னோர்களின் நினைவாக சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.

15 நாட்களும் முடியவில்லை என்றாலும், அமாவாசை நாளில் மட்டுமாவது விரதமிருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும். இதற்கு மகாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. தான தர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன், இறந்தபிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலைமலையாகக் கிடைத்ததாம். ஆனால் அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. காரணம் இதுதான் - அவன் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்தபோதிலும் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 14 நாட்களுடன் இறுதி நாளான அமாவாசையையும் சேர்த்து மொத்தம் 15 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை என்பது சூரிய-சந்திர சேர்க்கையைக் குறிக்கும். பிதுர்காரகன் சூரியனும், மாதுர் காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி ராசியில் ஒன்றிணையும் நாள்தான் மஹாளய அமாவாசை.

பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும்கூட இந்தப் புரட்டாசி மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்தால், பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர். ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர் சொல்லத் தெரிந்து கொண்டவர்கள், மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். பிதுர்காரியம் முடிந்தவுடன் தேவகாரியம் துவங்கும் என்பதை உணர்த்தும் வகையில் மஹாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து நவராத்திரி என்ற அம்பிகைக்கு உரிய திருவிழாவானது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் மகத்துவம் நாம் அறிந்ததே. இவ்வாறு தெய்வத்தையும், முன்னோரையும் ஆராதனை செய்து புண்ணியம் தேடுவதால் புரட்டாசி ஒரு புனிதமான மாதமாக நம்மால் கொண்டாடப்படுகிறது.

- K.B ஹரிபிரசாத் சர்மா