குறளின் குரல்



ஈரடிக் குறளுக்குள்தான்
எத்தனை பிரமாண்ட யானை!

எல்லோரையும் கவரும் ஒரு பெரிய விலங்கு யானை. சிங்கத்திற்கு இணையான வலிமை படைத்த விலங்கு. ஆனாலும் அது சைவ உணவை மாத்திரமே உட்கொள்ளும். சைவ உணவும் பெரும் உடல் வலிமையைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இன்றும் வாழும் விலங்கு அது. அது ஓர் இடத்தில் நின்றாலும் அசைந்து கொண்டே இருக்கும் இயல்புடையது. பெரிய பெரிய முறம் போன்ற செவிகளும் அழகிய நீண்ட தும்பிக்கையும் கொண்டு குழந்தைகளை மாத்திரமல்லாமல் பெரியவர்களையும் காலம் காலமாகக் கவர்ந்து வருகிறது யானை. அது வள்ளுவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. வள்ளுவர் தம் திருக்குறளில் பல இடங்களில் யானையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து. (குறள் எண் 24)

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களாகிய யானையை, தத்தம் புலன் இன்பங்களில் செல்ல விடாமல் அறிவாகிய அங்குசத்தால் காப்பவன் எவனோ அவன் வீட்டுலகிற்கு ஒரு விதை போன்றவன்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பில்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு. (குறள் எண் 597)

யானை தன்மேல் அம்பினால் புண்கள் ஏற்பட்டிருந்தாலும், எப்படி தன் பெருமையை நிலைநிறுத்துமோ அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தபோதும் மனம் தளரமாட்டார்.

'வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.’ (குறள் எண் 678)

ஒரு செயலால் இன்னொரு செயலையும் முடித்துக் கொள்வதென்பது, ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடிப்பதைப் போன்றதாகும்.

'குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாகச் செய்வான் வினை.’ (குறள் எண் 758)

தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பதுபோல் மிகவும் பாதுகாப்பானது.

'கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.’  (குறள் எண் 774)

தன் கைவேலினை யானைமேல் எறிந்து விட்டுப் படைக்கலமின்றி நடந்து வரும் வீரன் தன் மேனியில் புதைந்துள்ள வேலைப் பறித்துச் சிரிப்பான்.

'கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.’  (குறள் எண் 1087)

மாதர்களுடைய சாயாத மார்பகத்தின் மேல் உள்ள துகிலானது மதம்பிடித்த யானையின் மேல் இடப்பட்டுள்ள முகபடாம் போன்றது.இந்தக் குறட்பாக்கள் மூலம் யானையைப் பற்றிய அக்காலச் செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது. `யானையை அடக்க தோட்டி அதாவது அங்குசம் என்ற கருவி பயன்பட்டது, போர்க்களத்தில் யானை வெறியுடன் போரிடும், காட்டில் ஒரு யானையைக் காட்டி இன்னொரு யானையைப் பிடித்து வரும் பழக்கம் அக்காலத்திலேயே இருந்தது, யானைப் போர் நடக்கும்போது மக்கள் குன்றின்மேல் ஏறிப் பாதுகாப்பாக நின்று பார்ப்பார்கள், யானைக்கு முகபடாம் இட்டு அழைத்து வருவார்கள், என்பன போன்ற பல செய்திகளை இந்தக் குறட்பாக்கள் தாங்கி நிற்கின்றன.

நம் ஆன்மிகத்தில் யானைக்கு நிறைய இடம் உண்டு. அது மாபெரும் விலங்காயிற்றே? அதற்கு நிறைய இடம் தேவைப்படுவது இயல்புதானே!  யானை ‘வேழம்’, ‘களிறு’, ‘பிடி’ போன்ற பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது. விநாயகப் பெருமான் யானை முகம் உடையவன். `வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!’ என்கிறது ஒரு வெண்பா. விநாயகன் யானை முகத்தோடு இருந்தது மட்டுமல்ல, தன் தம்பி, வள்ளியைக் காதல் மணம் புரிய விரும்பியபோது யானையாகவே உருமாறி வந்து வள்ளியை அச்சுறுத்தி முருகனைக் கட்டித் தழுவ வைத்து தம்பிக்கு மணம் செய்துவைத்த பெருமைக்குரியவன். தான் பிரம்மச்சாரியாக இருந்தபோதும் தம்பியின் காதல் மணம் சார்ந்த இல்லற வாழ்வுக்கு உதவியவன்.

'கைத்தல நிறைகனி அப்பமொடவில் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!
முத்தமிழ் அழகினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே!
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா!
அத்துயரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளொடு அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே!’

- என்ற அருணகிரிநாதரின் திருப்புகழில் `அப்புனம் அதனிடை இபமாகி’ என்ற வரிகளில் விநாயகர் அங்கு யானையாய் வந்த செய்தி சொல்லப்படுகிறது. தேவருலகில் இந்திரனுக்கு ஓர் யானை உண்டு. அதற்கு ஐராவதம் என்று பெயர். அதன் விசேஷம், அது  வெள்ளை நிற யானை என்பதுதான். தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவனின் புனைபெயர்களில் ஒன்று `வெள்ளை யானை பெரிய சாமி’ என்பது. அது அவரது பெயரின் தமிழாக்கம்தான்!

பழைய வேந்தர்கள் நால்வகைப் படைகளை வைத்திருந்தார்கள். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பவையே அவை. யானைப்படை ஒவ்வொரு மன்னனிடமும் ஒரு வலுவான சக்தியாய் இருந்தது. மன்னனின் யானைப்படை அளவைப் பார்த்து எதிரிகள் அஞ்சினார்கள். யானை எல்லாக் கோயில்களிலும் வைத்துப் பராமரிக்கப்படுகிறது. திருச்சூர் பூரம் விழாவின்போது முகபடாம் அணிந்த யானைகளின் பிரமாண்ட அணிவகுப்பு ஒரு கண்கொள்ளாக் காட்சி.

குருவாயூர், மந்திராலயம் போன்ற ஆலயங்களில் கஜசேவை என்ற ஒரு தனி வழிபாடே உண்டு. உற்சவ மூர்த்தி யானையின் மேல் அமர்ந்து, ஆலயத்தை வலம்வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார். காலமான பின்னரும் குருவாயூரில் சிலையாய் வைத்து வணங்கப்படும் கேசவன் என்ற யானை அதன் பக்திக்காகவே பிரசித்தி பெற்றது. இன்றும் கேசவனைப் பற்றிய கதைகளைக் கேரள மக்கள் சொல்லிச் சொல்லி அனுபவிக்கிறார்கள்.

‘கஜேந்திர மோட்சம்’ கதை நமக்கெல்லாம் தெரியும். கஜேந்திரன் என்ற யானையின் காலை முதலை பிடித்ததும் அது திருமாலை நோக்கி ஆதிமூலமே எனக் கதறியதும் திருமால் வந்து முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றியதும் தான் அந்தக் கதை. அந்தக் கதைக்கு ஒரு வலுவான உட்பொருள் உண்டு. யானை ஜீவாத்மா. பிறவிப் பெருங்கடல் என்ற மாபெரும் பொய்கையில் அது நீராடுகிறது. அப்போது முன்வினை என்ற முதலை அதன் காலைக் கவ்வுகிறது. வினைத் தளையிலிருந்து அறுபட்டு முக்தி அடைய விரும்பிய யானை,

'ஆதிமூலமே!’ என அழைக்கிறது. திருமால் கருடன்மேல் பறந்தோடி வந்து முதலை என்ற முன்வினையைத் தன் அருள் என்னும் சக்கரத்தால் அறுத்து யானையைக் கரை சேர்க்கிறார். இதுவே கதையில் பொதிந்துள்ள தத்துவப் பொருள். திருச்சி அருகேயுள்ளது திருவானைக்கா ஆலயம். காவேரியாற்றின் கரையில் அமைந்திருக்கும் திருத்தலம். அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். யானை, சிவலிங்கத்தை வழிபட்ட புனிதத் தலம் அது. பக்தியுள்ள ஓர் யானை நாள்தோறும் சிவலிங்கத்திற்கு தும்பிக்கையால் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்யும். பின் மலர் தூவி வழிபடும்.

அதே கோயிலில் ஒரு சிலந்தி சிவலிங்கத்தின் மேல் இலைகள் விழாமல் பாதுகாப்பாக ஒரு வலை பின்னி தன் பக்தியை வெளிப்படுத்தியது.  ஆனால், சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதிய யானை, நாள்தோறும் அந்த வலையைச் சிதைத்துவிடும். யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, இவ்விரண்டின் இடையே சண்டை வந்து, இரண்டும் அழிந்துபட, சிவபெருமான் இரண்டிற்கும் முக்தி கொடுத்த தலமே திருவானைக்கா என்கிறது அந்தக் கோயிலின் தலபுராணம்.

சிவபெருமான் அந்த யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தது. முற்பிறவியின் வாசனை காரணமாக, யானை ஏற முடியாதன் குறுகலான படிகளைக் கொண்ட மலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து எழுபது கோயில்கள் கட்டினான் அந்தச் சோழ மன்னன். அவற்றை 'மாடக் கோயில்கள்’ என்கிறார்கள். கோச்செங்கட் சோழன் கட்டிய முதல்  மாடக்கோயில் திருவானைக்கா ஜம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்.  

'நம்பிக்கை கொண்டிங்கு நாளும் தொழுவோர்க்குத்
 தும்பிக்கை நாதன் துணை!’

- என்ற ஒரு வெண்பா தமிழில் உண்டு. அவ்வையார் வாழ்வில் அவள் கைலாயம் போக விரும்பியபோது விநாயகர்தான் அவள் எண்ணம் நிறைவேறத் தன் தும்பிக்கையால் உதவினார். சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை, குதிரை மீதேறிக் கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது அவ்வை 'சீதக் களப செந்தாமரை’ எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடி விநாயகரைப் பூஜை செய்தாள். அவ்வையின் பக்தியால் மனம் மகிழ்ந்த பிள்ளையார், தன்னைத் துதித்தவளைத் துதிக்கையால் தூக்கி சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சேரமான் பெருமாள் நாயனாருக்கும் முன்பாகவே கைலாயத்தில் சேர்ப்பித்தார் என்கிறது புராணக் கதை. யானை முகம் கொண்ட விநாயகரை வழிபடுகிறவர்கள், மிக எளிதாக மிக மேலான உயரங்களை வாழ்வில் அடைவார்கள் என்பது இந்தக் கதை கூறும் செய்தி.

கிருஷ்ணாவதாரத்தில் கம்ச வதம் நடப்பதற்கும் முன்னால் கிருஷ்ணரைக் கொல்லவென்றே கம்சனால் வழியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது பிரமாண்டமான ஒரு போர் யானை. 'குவலயாபீடம்’ என்பது அந்த யானையின் பெயர். மாவுத்தனின் தூண்டுதலால் அந்த யானை கண்ணனைத் தாக்க வந்தது. கண்ணனோ யானையின் கால் இடுக்குகளில் ஒளிந்து கொண்டான். யானை கண்ணனைக் கொல்ல முடியாமல் திகைத்தது.

கண்ணன் சடாரென்று வெளிப்பட்டு யானையின் இரண்டு தந்தங்களையும் பிடுங்கி யானையை வதம் செய்தான். யானையின் தந்தங்களின் அடியில் உயர்ந்த வகை முத்துக்கள் இருக்கும் என்று சொல்வதுண்டு. கண்ணன் குவலயாபீட யானையின் தந்தங்களின் அடியில் இருந்த முத்துக்களைத் திரட்டித் தன் நண்பனிடம் கொடுத்து தன் காதலி ராதைக்கு அந்த முத்துக்களால் மாலை செய்து அனுப்புமாறு சொன்னான். இச்செய்தி பாகவதக் கதையிலும் பின்னர் நாராயண பட்டதிரி எழுதிய அழகிய சம்ஸ்க்ருதக் காப்பியமான நாராயணீயத்திலும் வருகிறது.

மகாபாரதத்தில் ஓர் யானை வருகிறது. அது சாதாரண யானையல்ல. பொய்யே சொல்லாத தர்மபுத்திரரையே பொய் சொல்ல வைத்த யானை! அஸ்வத்தாமா என்பது அந்த யானையின் பெயர்.  அதே அஸ்வத்தாமா என்ற பெயரில் துரோணாச்சாரியாரின் மகன் ஒருவனும் உண்டு. என்றும் சாகாத ஏழு சிரஞ்சீவிகளில் அவனும் ஒருவன். அவன்மேல் அவன் தந்தை துரோணாச்சாரியார் அளவற்ற பாசம் வைத்திருந்தார்.

போர்க்களத்தில் கண்ணன் உத்தரவின்படி, பீமன் அஸ்வத்தாமா என்ற யானையைக் கொன்றான். அப்போது கண்ணன் உத்தரவின்படியே `அஸ்வத்தாமா மரணம், அந்த அஸ்வத்தாமா ஓர் யானை’ என்று தருமபுத்திரர் உரக்க முழங்கினார். ஆனால் அஸ்வத்தாமா மரணம் என்று தருமபுத்திரர் சொன்னபின் மீதிச் சொற்கள் யார் காதிலும் விழாதவாறு கண்ணன் தன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கை எடுத்து ஊதினான்.

துரோணாச்சாரியார் தருமபுத்திரர் பொய்சொல்ல மாட்டார் என்பதால் தன் மகனே இறந்துவிட்டதாகத் தவறாக எண்ணிக் கவலையில் ஆழ்ந்தார். பெரும் மனச் சோர்வடைந்தார். அந்தத் தருணத்தில் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையானார் அவர்.  மகாபாரதத்தில் தன் அடியவர்களான பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகக் கண்ணக் கடவுள் செய்த ஜாலங்கள் கொஞ்சமா நஞ்சமா! அவற்றில் தருமபுத்திரரையே பொய்யராக்கிய இந்தச் சம்பவமும் ஒன்றல்லவா?  

நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும், கவிதைகளிலும், கற்பனைகளிலும் வள்ளுவர் காலம் தொட்டு யானை அசைந்தசைந்து வந்துகொண்டே இருக்கிறது. இலக்கிய அன்பர்களையும் ஆன்மிக அன்பர்களையும் அது மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறது. அசையும் யானை நம் மனங்களையும் அசைத்துவிடுகிறது!

(குறள் உரைக்கும்)