கொய்த மலர்கள்



சரஸ்வதி அருள்வாள்!

‘புதுவையில் பாரதியார் முதலிய சுதேசிகள் மீது போலீஸ் கட்டுப்பாடுகள் அதிகரித்து, மணியார்டர், கடிதங்கள் எல்லாம் தடுக்கப்பட்டன. புதுவையிலிருந்து நாங்கள் எழுதும் கடிதங்கள் விழுப்புரத்தில் எரிக்கப்பட்டன. இப்படி எரிக்கப்பட்ட விஷயம் கூட எங்களுக்குத் தெரியாது. தபாலாபீசில் இருந்து சில புண்ணிய புருஷர்கள் மூலம் ஒரு வாரத்துக்குப் பின்தான் விஷயம் அறிந்தோம்.

அந்தக் கஷ்ட காலத்தில் பாரதியார் வீட்டில் எப்படித்தான் குடும்பம் நடத்தினார்களோ எனக்குத் தெரியாது. ‘பாரதியார், இப்போது ஏன் பாட்டு எழுதுவதில்லை’ என்று அடிக்கடி என் தந்தையைக் கேட்பேன். ‘ஏதேனும் வேறு வேலை இருப்பதால் செய்யவில்லை போலும்’ என்பார் அவர்.அப்புறம் ஒருநாள் நானும் என் தந்தையும் பாரதி வீட்டுக்குச் சென்ற போது, மாடியில் அவர் பாடும் குரல் கேட்டது. மூன்று மாத இடைவெளிக்குப் பின் அவர் பாடிய பாடல் என்று கூறி, ‘எங்ஙனம் சென்றிருந்தீர்?’ என்ற சரஸ்வதி ஸ்தோத்திரத்தைப் பாடிக் காட்டினார் பாரதி. அங்கே வந்த வ.வே.சு. ஐயர் பாட்டை பாடினார்.

பின்பு பாரதியார், ‘நமக்குக் கடிதங்கள் கூட வருவதில்லை; ஊருக்காவது போகிறேன் என்கிறாள் செல்லம்மா...’ என்று வருத்தத்தோடு சொல்லவே, ‘இன்று சரஸ்வதி ஸ்தோத்திரம் செய்திருக்கிறீர்... நாளைக்கு சுதேசமித்திரனிடமிருந்து காகிதம் வரும் பாரும்; பயமில்லை...’ என்று னிவாச ஐயங்கார் (தந்தை) சொன்னார். அதன்படி, மறுநாளே பாரதியாருக்கு, சுதேசமித்திரனிடமிருந்து கட்டுரை அனுப்பும்படி கடிதமும், மூன்று மாதங்களாக தடைப்பட்டிருந்த பணமும் வந்து சேர்ந்தன. (யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் நூலிலிருந்து)

சிலை கண் திறப்பது எப்படி?

கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலையை சிற்பி செய்து முடித்தவுடன், அச்சிலைக்கு கண் திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இது மிக முக்கியமானது. ஸ்தபதியானவன் குளித்து, புத்தாடை உடுத்தி, பூணூல் அணிந்து (சிலை செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினர் பூணூல் அணிவர்) நெற்றிக்குத் திலகம் இட்டு, விரல்களில் மோதிரம் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்த பின், முதலில் கணபதி பூஜை செய்ய வேண்டும். பிறகு படிமத்திற்கு (விக்கிரகம்) அருகில் அரிசியால் பீடம் அமைத்து, அதன் மீது கலசத்தை வைக்க வேண்டும்.

கலச பூஜை செய்து, அக்கலச நீரால் உரிய தேவதையை படிமத்தில் ஆவாஹனம் செய்து, தேவதையின் மந்திரத்தை ஜபித்து, படிமத்தை பூஜை செய்ய வேண்டும். இத்தருணத்தில் மணி ஒலித்து, மங்கல கோஷங்கள் முழங்கச் செய்தல் வேண்டும். பின், சிற்பியானவன் பிரம்மனை வணங்கி, அவன் அனுமதி பெற்று, கண் திறப்பதற்கு படிமத்தின் அருகில் சென்று, பொன்னால் ஆன உளியால் முதலில் வலது கண்ணைத் திறக்க வேண்டும். பின், இடது கண்ணையும், நெற்றிக் கண்ணையும் திறக்க வேண்டும்.

இறைவனின் வலது கண் சூரியனைக் குறிப்பதால், சூரிய பீஜ மந்திரத்தை மனதில் துதித்து, கண் திறக்க வேண்டும். அதே போன்று, இடது கண் சந்திரனைக் குறிப்பதால், சந்திர பீஜத்தையும், நெற்றிக் கண் அக்னியைக் குறிப்பதால் அக்னி பீஜத்தையும் துதித்து செதுக்குதல் வேண்டும். இதற்குப்பின் கூரிய உளியால் ஒளி மண்டலம் மற்றும் வழி மண்டலம் ஆகிய இரண்டையும் தெளிவுறச் செய்தல் வேண்டும். இரு கண்கள் மட்டும் இருப்பின், அவ்விரண்டு கண்களைத் திறத்தல் வேண்டும். பல முகங்கள் இருப்பின், அம்முகங்களில் உள்ள கண்களையும் திறந்திடல் வேண்டும். படிமத்திற்குக் கண் திறக்கும்போது, ஸ்தபதியைத் தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது.

எனவே, படிமத்திற்கு நாற்புறமும் திரையிட்டே இப்பணியைச் செய்தல் வேண்டும். தூப, தீபம் காட்டி, பாலும், பழமும், தேனும் படைக்க வேண்டும். இதுவும் திரைக்குள்ளே நடைபெற வேண்டும். கண்கள் திறந்தவுடன் முதன் முதலில் முகம் பார்க்கும் கண்ணாடியை (புதியது) சுவாமிக்கு முன் காட்டி, தர்ப்பண தரிசனம் செய்வதுடன், பசுவைக் கன்றுடன் கொண்டு வந்து நிறுத்தி பார்த்திடச் செய்தல் வேண்டும். பின், சுமங்கலிப் பெண்கள், நவதானியங்கள், கன்னியர், சந்நியாசிகள், வேத விற்பன்னர்கள், இறுதியாக ஆலயம் கட்டுவித்த எஜமானன் என வரிசை கிரமமாக சுவாமி முன் நிறுத்தி, வணங்கிடச் செய்ய வேண்டும். இவை ஆகம விதிகள்!  மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி ஆசிரியர் வை.கனகராஜன் எழுதிய ‘சிவ ஆகமச் செந்தூல்’ எனும் நூலிலிருந்து)

வீணையும் தெய்வமும்!

32 வகையான வீணைகளையும், வீணை சார்ந்த தந்தி வாத்தியங்களையும், அவற்றை விருப்பத்துடன் வாசித்த தெய்வங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோமா?

     தெய்வம்        வீணை    
1.    பிரம்மா    -    அந்தம்    
2.    விஷ்ணு   -    பிண்டம்    
3.    ருத்ரா     -    சராசரம்    
4.    கெளரி     -    ருத்ரிகா    
5.    காளி      -    காந்தாரி    
6.    லட்சுமி    -    சாரங்கி    
7.    சரஸ்வதி  -    கச்சபி    
8.    இந்திரன்   -    சித்ரம்    
9.    குபேரன்   -    அதிசித்ரம்    
10.    வருணன்  -    கின்னரி    
11.    வாயு      -    திருச்சிக யாழ்    
12.    அக்னி     -    கோலவானி    
13.    நாமா      -    அஸ்த கூர்மம்    
14.    நிருதி     -    வரளி யாழ்    
15.    ஆதிசேடர்  -    விபஞ்சகம்    
16.    சந்திரன்    -    சராவீணா    
17.    சூரியன்    -    நவீதம்    
18.    வியாழன்    -    வல்லஹி யாழ்    
19.    சுக்கிரன்    -    வதினி    
20.    நாரதர்     -    பகடி யாழ்    
21.    தும்புரு    -    கலாவதி (மகதி)    
22.    விஸ்வ வசு  -   பிரஹரதி    
23.    புதன்    -    வித்யாவதி    
24.    அரம்பை    -  ஏக வீணை    
25.    திலோத்தமை  -  நாராயணி    
26.    மேனகா    -    வாணி    
27.    ஜெயந்தன்  -  சதுசூம்    
28.    அகலகு    -   நிர்மதி    
29.    சித்ரசேனா  -  தர்மவதி    
30.    அனுமன்    -  ஹனுமதம்    
31.    ராவணன்   -  ராவணேஸ்வரம்    
32.    ஊர்வசி    -   வருவாட்சி    

(கர்ணாமிர்த சாகரம் நூலிலிருந்து)

பஞ்சசீலம் கண்டவரைக் கவர்ந்த பஞ்சாமிர்தம் ஜவஹர்லால் நேரு 1936ம் ஆண்டு, அக்டோபர் 5ம் தேதி முதல் 20ம் தேதி முடிய பதினாறு நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். உடுமலைப்பேட்டையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் பழனிக்கு வந்து சேர்ந்தார். காலை 8 மணி. ஒரு பெரிய கூட்டம்  கூடி, நேருவுக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டது. அந்தப் பத்திரத்துடன் அழகிய வேலைப்பாடு அமைந்த வெள்ளிப் பேழை ஒன்றில் அவருக்குப் பழனி பஞ்சாமிர்தமும் அளிக்கப்பட்டது.

நேரு வரவேற்புப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார். பேச்சு முடிந்ததும், பேழையில் வைத்திருந்த பஞ்சாமிர்தத்தைப் பற்றி விசாரித்தார். ‘இது என்ன? எப்படிச் செய்வது? எதற்காகச் செய்வது?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டார். பஞ்சாமிர்தத்தின் சுவை பற்றிய செய்தியைக் காட்டிலும், அது ‘பழனி தண்டாயுதபாணி கோயில் பிரசாதம்’ என்ற செய்தியை விருப்பத்துடன் கேட்டுக் கொண்டார். கோயில்களிலும் பிரசாதங்களிலும் நேருவுக்கு நம்பிக்கைக் கிடையாது. எனினும் பிரசாதத்தை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனேஜரிடம் சொன்னார்.

அரசியல் பிரச்னைகளிலும், சர்வதேசப் பிரச்னைகளிலும் அவருக்கு இருந்த நாட்டம் ஆன்மிகத்தில் இல்லை. எனினும் பழனி பஞ்சாமிர்தத்தைத் தனது தாயாருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கும்படியும் காங்கிரஸ் கமிட்டி மேனேஜரிடம் கூறியது, அவரது தாயன்பைப் புலப்படுத்துவதுடன், சமயப்பற்று போன்ற விஷயங்களில் பிறர் நம்பிக்கை மீது இவருக்குள்ள மதிப்பையும் நன்கு புலப்படுத்துகிறது. ‘‘சுவாமி பிரசாதம் என்று தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைவார்’’ என்றார், நேரு. அன்றே பஞ்சாமிர்தம் பேழை நேருவின் தாயார் சொரூபராணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது! (பி.ஸ்ரீ. தொகுத்த ‘நேர்மையே அழகு’ நூலிலிருந்து)

- ஆர்.சி.சம்பத்