பிரசாதங்கள்



* பீட்ரூட் சென்னா டிக்கி

என்னென்ன தேவை?

பீட்ரூட் - 2,
வேகவைத்து மசித்த பெரிய உருளைக்கிழங்கு - 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
வேகவைத்த கொண்டைக் கடலை - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - தலா 1 டேபிள் ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை துருவி லேசாக வதக்கவும். கொண்டைக்கடலையை குழையாமல் பதமாக வேகவைக்கவும். மிக்சியில் கொண்டைக்கடலையை கரகரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய பீட்ரூட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த கலவை, எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கெட்டியாகப் பிசைந்து விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.

தவாவை சூடு செய்து டிக்கிகளை வைத்து மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, விரும்பினால் மேலே முந்திரி பதித்து, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

* கோல் மிர்ச்சி சேவ்

என்னென்ன தேவை?

கடலை மாவு - 250 கிராம்,
அரிசி மாவு - 25 கிராம்,
சமையல் எண்ணெய் - 50 கிராம்,
மைதா - 100 கிராம்,
சோடா உப்பு - 1 சிட்டிகை,
கரகரப்பாக உடைத்த மிளகு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கு,
சீரகம், ஓமம், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மைதாவை லேசாக வறுத்து, சலித்து இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அரிசி மாவு மற்றும் கடலை மாவை சலித்து மைதாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும். அகலமான தட்டில் 50 கிராம் எண்ணெய், சோடா உப்பு சேர்த்து நுனி விரல் கொண்டு தேய்க்கவும். இது சாஃப்டாக வரும்போது உப்பு போட்டு தேய்த்து, சிறிது சிறிதாக மாவுக் கலவையை சேர்த்து மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், ஓமம், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து காராசேவ் தேய்க்கும் கண் கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை வைத்து அழுத்தித் தேய்க்கவும். சிறிது பொன்னிறமாக வெந்து வரும்போது திருப்பி போட்டு எடுத்து வடித்து பரிமாறவும்.

* காமன் டோக்ளா

என்னென்ன தேவை?    

கடலை மாவு - 2 கப்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
ரவை - 2 டீஸ்பூன்,
ஃப்ரூட் சால்ட் - 1 சிறிய பாக்கெட்,
தயிர் - 1/2 கப்,
பொடித்த பச்சைமிளகாய்,
துருவிய இஞ்சி - தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1-2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கீறிய பச்சைமிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிது,
தேங்காய்த்துருவல்,
பொடித்த மல்லித்தழை - தேவைக்கு,
சர்க்கரை + தண்ணீர் - தலா 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, சர்க்கரை, ரவை, மஞ்சள் தூள், எண்ணெய், இஞ்சி, பச்சைமிளகாய், தயிர் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்து உடனே பொங்கி வரும்போது மாவைக் கலந்து எண்ணெய் தடவிய குக்கர் தட்டில் ஊற்றி, விசில் போடாமல் ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்து கேக் போல் ஓரத்தை வெட்டி எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சர்க்கரை + தண்ணீர் சேர்த்து கலந்து டோக்ளாவின் மேல் பரவலாக ஊற்றி கொத்தமல்லி, தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

* மோட்டா தானா

என்னென்ன தேவை?

உளுத்தம்பருப்பு - 1 கப்,
பொரிக்க நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கு.

முதல் பாகு செய்ய:

சர்க்கரை, தண்ணீர் - தலா 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.

இரண்டாம் பாகு செய்ய :

சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?

உளுத்தம் பருப்பை கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். முதல் பாகிற்கு கொடுத்த பொருட்களை ஒரு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும். இரண்டாம் பாகிற்கு கொடுத்த பொருட்களை தேன் போன்று இரண்டு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும். ஊறிய உளுத்தம் பருப்பை வடித்து மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நைசாக வடை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.

கடாயில் நெய்  ஊற்றி மிதமான தீயில் வைத்து மாவை விருப்பமான வடிவத்தில் செய்து நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து வடித்து முதல் பாகில் போட்டு 2 நிமிடம் உறியதும் மெதுவாக எடுத்து வடித்து கிண்ணத்தில் போடவும். அதன் மீது இரண்டாம் பாகு ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

* குஜராத் பேசன் லட்டு

என்னென்ன தேவை?

கடலை மாவு - 2 கப்,
நெய் - 1/2 கப்,
பொடித்த சர்க்கரை - 1¼ கப் - 1½ கப்,
உடைத்த முந்திரி - 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
அலங்கரிக்க உடைத்து வறுத்த முந்திரி,
காய்ந்த திராட்சை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுத்தெடுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து கடலை மாவை சேர்த்து கைவிடாமல் 15 நிமிடம் வரை கறுகாமல் வறுக்கவும். அதனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். பின்பு அதனுடன் உப்பு போட்டு கலந்து சிறிது ஆறியதும் சர்க்கரைத்தூள் சேர்த்து லட்டு பிடிக்கவும். மேலே முந்திரி, திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும்.  குறிப்பு: கலவை சிறிது சூடாக இருந்தால்தான் லட்டு பிடிக்க வரும்.

* ராஜஸ்தான் கேரட் கோவா பர்ஃபி

என்னென்ன தேவை?

தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,
கேரட் துருவல் - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க பிஸ்தா - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும். மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும். சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன்  கடைசியாக சேர்க்கலாம்.

- சந்திரலேகா ராமமூர்த்தி