திருமூலர் மந்திர ரகசியம்



உடம்பு -  விலை மதிப்பில்லாத ஆடை!

ஆடையை வைத்து ஏராளமான கதைகள் உள்ளன. பழமொழிகளும் பல உள்ளன. ‘ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்’ என்னும் பிரபலமான பழமொழி தெரிந்ததுதானே! ஆடையை வைத்து, அரசவையில் நடந்த வரலாறு இது. அயல்நாட்டு வியாபாரி ஒருவர், சோழ நாட்டிற்கு வந்தார். சிறுசிறு பொருட்கள் விற்பனை ஆயிற்றே தவிர, வியாபாரி எதிர்பார்த்த அளவிற்கு, மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை.

விற்பனை ஆகாத பொருட்களில் ஒரு சில ஆடைகள் முக்கியமானவை. அவற்றிலும் சில வேட்டிகள் முக்கியமானவை. இழை ஒன்றிற்கு ஒரு பொற்காசு அந்த வேட்டியின் விலை! ஒரு வேட்டியில் குறுக்கும் நெடுக்குமாக எத்தனை இழைகள் இருக்கும். ஓர் இழை ஒரு பொற்காசு என்றால், முழு வேட்டியின் விலை? யாரால் விலை கொடுத்து வாங்க முடியும்? வியாபாரி அரசரிடம் போனார். விவரம் சொல்லி, விலையையும் சொன்னார். அவர் காட்டிய ஆடையைக் கண்டு அரசர் ஆச்சரியப்பட்டாலும், தன்னால் அதை விலைக்கு வாங்க இயலாது எனச்சொல்லிவிட்டார் மன்னர்.

மனவருத்தத்தோடு அரண்மனையை விட்டு வெளியேறிய வியாபாரி வீதியில் வரும்போது அவர் முகவாட்டத்தைக் கண்ட சடையப்ப வள்ளல், ‘‘வியாபாரியே! சோழ நாட்டிற்கு வந்தும், உங்கள் முகம் சோர்ந்துபோய் இருக்கிறதே, ஏன்?’’ என்றார். வியாபாரி காரணத்தைச் சொன்னார்: ‘‘இழை ஒன்று ஒரு பொன் என்று விலை சொல்லி ஓர் ஆடையை மன்னரிடம் காட்டினேன். தன்னால் வாங்க இயலாது என்று சொல்லிவிட்டார். வியாபாரம் எதிர்பார்த்தாற்போல இல்லை. அதுதான் வாட்டத்தோடு வருகிறேன்’’ என்றார்.
சடையப்பர் வியாபாரியிடம், அவர் சொன்ன விலையைக் கொடுத்து, அந்த ஆடையை வாங்கினார்; ‘‘வியாபாரியே! வருத்தம் தீர்ந்ததா?’’ என அன்போடு கேட்டு அவரை வழியனுப்பி வைத்தார்.

தன்னால் வாங்க முடியாத விலை உயர்ந்த ஆடையை, சடையப்பர் வாங்கி விட்டார் என்ற தகவல், அரசருக்குத் தெரிந்தது. அரசரல்லவா? மனதில் பொறாமைத் தீ தானாகவே எரியத் தொடங்கியது. சில நாட்களாக அரண்மனை பக்கமே சடையப்பர் வராதது வேறு, அரசரின் கோபத்தைத் தூண்டியது. உடனே காவலர்களை அழைத்த அவர், ‘‘சடையப்பரை உடனே கையோடு அழைத்து வாருங்கள்!’’ என ஏவினார்.

காவலர்கள் போய் அழைத்ததும், அவசரத்தில் ஆயிரக் கணக்கில் பொன் கொடுத்து வாங்கிய ஆடையைக் கட்டிக்கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.அவரைப் பார்த்ததும் அரசருக்கு மனம் மேலும் பொருமியது. ‘‘நம்மால் வாங்க முடியாததை வாங்கியதோடு மட்டுமல்லாமல், அதை நம் எதிரிலேயே கட்டிக்கொண்டு வருகிறாரே’’ என எண்ணினார் அரசர். எண்ணம் வார்த்தைகளாக வெளிப்பட்டது; ‘‘சடையப்பரே! அரண்மனை பக்கமே வரக்காணோம், என்ன ஆயிற்று?

தகவலும் இல்லை...’’ என்றார். சடையப்பர் பதில் சொன்னார்; ‘‘தொடையில் சிலந்தி நோய் வந்துவிட்டது மன்னா! அதுதான் வரமுடியவில்லை’’ என்றார். மன்னர் சற்றே யோசனையுடன் ‘‘தொடையில் சிலந்தியா? எங்கே காண்பியுங்கள் பார்க்கலாம்’’ என்றார். காரணம்? சபையில் அவ்வாறு ஆடையை விலக்கிக் காண்பித்தால் அது மானக்கேடு! சடையப்பரை அவமானப் படுத்தவே அவ்வாறு கேட்டார் அரசர். சடையப்பர், மன்னரின் நோக்கத்தைப் புரிந்துகொண்டார். உடனே அருகில் இருந்த சேவகரிடம் இருந்த உடைவாளை உருவி, சிலந்தி நோய் உள்ள இடத்தில் ஆடையைக் கிழிக்கத்
தொடங்கினார்.

மன்னர் பதறினார்; ‘‘சடையப்பரே! இழை ஒன்றுக்கு ஒரு பொன் விலை அந்த ஆடை. அதைப்போய்க் கிழிக்கிறீர்களே!’’ எனக் கத்தினார்.சடையப்பரோ அமைதியாக, ‘‘போனால் போகிறது மன்னா! அரைக்காசுக்குப் போன மானம், ஆயிரம் கோடி கொடுத்தாலும் வராது. இதோ பாருங்கள்!’’ என்று, சிலந்தி கண்ட இடத்தை மட்டும் ஆடையைக் கிழித்துக் காட்டினார்.

அரசர் ஏன் வாய் திறக்கிறார்;
அமைதியானார்.
இப்போது திருமூலர் சொல்லும்
ஆடையைப் பார்க்கலாம்.
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீனும் அதனைப் பெரிது உணர்ந்தார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டெனும் நீரே.
 (திருமந்திரம் - 192)

கருத்து: சிக்கு இல்லாமல், இழை முடிச்சு விழாமல் ஒழுங்குபடுத்தி, அழகாக கரை போட்ட பட்டு உடை ஆடை கிழிந்து போகும். இந்த உண்மையை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கருப்பு நிறமாக இருந்த தலைமுடி, நரைத்துப் போய் வெள்ளையாவதைப்போல, இந்த உலகில் பிறப்பதும், வாழ்வதும் ஒரு சிறிது காலமே! இதை உணருங்கள். குழந்தைக்குச் சொல்வதைப் போலச் சொல்லும் பாடல் இது. தெரிந்ததை வைத்துத் தெரியாததை தெரிய வேண்டியதை அறிவுறுத்தும் இப்பாடல், திருமூலரின் கருணை உள்ளத்தையும் புலப்படுத்தும்.

ஆடையை நல்லதாக, அழகானதாகத் தேர்ந்தெடுத்து வாங்கி, அணிந்துகொள்கிறோம். அது சற்றேனும் கிழிந்து விட்டாலோ, அழுக்குப் பட்டு விட்டாலோ, மனம் பொறுக்க மாட்டேன் என்கிறது. நாம் பொருட்படுத்தாவிட்டாலும் ‘என்ன, கிழிஞ்சு போச்சா? அழுக்கா வேற இருக்கு...?’ என்று அடுத்தவர் கேட்கும்போது, கோபம் கோபமாக வருகிறது. இது கதையல்ல! நம்மை உயர்த்துவதற்காகத் திருமூலர் சொன்னது இது.

உடம்பை எப்படி ஆடை மறைத்துப் பாதுகாக்கிறதோ, அதுபோல ஆன்மாவை/உயிரை மூடி மறைத்துப் பாதுகாக்கிறது உடம்பு. ஓர் ஆடை போய்விட்டால் வேறு ஆடை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் உயிர் போய்விட்டால்? சிக்கு இல்லாமல், இழை முடிச்சு விழாமல், அழகான கரை போட்ட பட்டு ஆடையை உடம்பு என உருவகப்படுத்தியிருக்கும் திருமூலரின் உள்ளம் ஆழம் காண முடியாதது.

எந்தக் குறைபாடும் இல்லாமல், நரம்புகளில் முடிச்சு விழாமல், அழகான உடம்பைத் தந்திருக்கும் ஆண்டவன், அந்த அழகான உடம்பைக் கெடுத்துக் கொண்டால் சும்மாயிருப்பாரா? விலை உயர்ந்த ஆடையை வாங்கிக்கொடுத்த தந்தை, அதை அழுக்காக்கிக் கிழிக்கும் பிள்ளையிடம் சற்றாவது சினம் கொள்வாரல்லவா? அதுபோல, மிகவும் உயர்ந்ததான மனித உடம்பை, அதுவும் நல்லதாகக் கொடுத்த ஆண்டவன், நாம் முறைகேடாக நடந்து உடம்பிற்குக் கேடு உண்டாக்கினால் சும்மா இருப்பாரா?

‘ஆனால், என்னதான் உயர்ந்த ஆடையாக இருந்தாலும், நைந்து அழிந்துதானே போகும்? அதுபோல இந்த உடம்பும் என்னதான் நன்றாக இருந்தாலும், முதுமை வந்து தோல் சுருங்கி பார்வை மங்கி அழிந்துதானே போகும். இதற்காக நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்றலாம், பேசக்கூடப் பேசலாம். அதற்காக, அழுக்கான கிழிந்த ஆடையையா அணிந்து செல்கிறோம்? கிழிசல் இல்லாமல், தூய்மையானதாக அணிந்துகொண்டு போகிறோமல்லவா?

அதுபோல, உடம்பையும் நல்ல செயல்களில் ஈடுபடுத்தி மனதில் முடிச்சு விழாமல், நல்லவிதமாக வாழ வேண்டாமா? பார்வையில் பட்ட எல்லாவற்றிலும் மனதைப் பறிகொடுத்து, மனதைக் கெடுத்து, அதன்மூலம் உடம்பையும் கெடுத்துக் கொள்வதில், யாருக்கு என்ன லாபம்? மற்றவரை விடுங்கள், நமக்கே, எந்தவிதமான லாபமும் இல்லையே! நம் உடம்பில் நம்முடனேயே பிறந்த கருப்பான தலைமுடி, நாம் விரும்பியா நரைத்துப்போய் வெளுப்பாக இருக்கிறது? ஒருநாள் இல்லாவிட்டால், ஒருநாள் உதிர்ந்து போகிறதல்லவா? அதுபோல, இந்த உடம்பும் ஒருநாள் இல்லாவிட்டால், ஒருநாள் உதிர்ந்து போய்விடும்.

இதைச்சொன்ன திருமூலர், ‘‘வாழ்க்கையின் எல்லை/காலம் என்பது யாருக்கும் தெரியாது, உணருங்கள்! அது குறுகிய காலம்தான். அதற்குள் நல்லவற்றைச் செய்து, நலமாக வாழுங்கள் எனப் பாடம் நடத்துகிறார். சடையப்ப வள்ளலின் உயர்ந்த ஆடையைப் பார்த்து, அரசர் பொறாமை பட்டதைப்போல, அடுத்தவர் வாழ்க்கையைக் கண்டு பொறாமைப்படாமல் இருந்தால் கூடப்போதும். வாழ்வு தானே சீராகி நேராகி விடும். இதைச் சொல்கிறது அடுத்த பாடல்!

அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வல்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது    ஒரு
தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்ட போதே
 (திருமந்திரம் - 196)

கருத்து: அடுத்தவர் மீது பொறாமை கொண்டு, அவதூறு பேசி, அநியாயம் செய்யாதீர்கள். கடுங்கோபம் கொண்டு அடுத்தவர் பொருளைக் கவர்ந்துகொள்ளாதீர்கள். சிறப்பும் பெருமையும் பெற்று நன்னிலையில் இருக்கும்போதே, நீங்கள் உண்ணும்போது, ‘ஐயா! பசி!’ என்று வந்தால், ஓர் அகப்பை உணவாவது அவர்களுக்குத் தந்துவிட்டு, அதன்பிறகு நீங்கள் உண்ணுங்கள்.

வேறு வழியே இல்லை. விரும்புகிறோமோ, இல்லையோ? திருமூலர் சொல்வதைக் கேட்டு, அதன்படி நடந்துதான் ஆகவேண்டும். ஓர் ஊருக்குப் போகப் பாதை இருக்கிறது. வழியில் ஆங்காங்கே தங்கிப் போகவும் இடவசதி இருக்கிறது. அவற்றையெல்லாம் விட்டு விட்டு, ‘நான் இஷ்டப்படிதான் போவேன்; இஷ்டப்படிதான் நடப்பேன்; குறுக்கு வழியில் போவேன்’ என்றால், அது நியாயமா? சரியா? மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்; என்று சொன்ன நம் பழந்தமிழ் நூல்கள், ‘போகாத இடந்தனிலே போக வேண்டாம்’ என்றும் சொல்லியிருக்கின்றன.

குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட வேண்டிய மின்கட்டணம் (முதலானவை) கட்டியாகி விட்டது என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா என்ன? முறையாகச் செயல்பட்டு விட்டு, அதன் பிறகல்லவா உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும்? அதுபோல, முறையான வாழ்வு, முழுமையை அளிக்கும், நிறைவை அளிக்கும். இதைத்தான் திருமூலர் சொல்கிறார். அடுத்தவர் வாழ்வைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள் என்கிறார். தொடர்ந்து, அதன் விளைவையும் குறிப்பிடுகிறார்.

பொறாமை அவதூறு பேசச் சொல்லும். பொறாமை, தவறான வழியில் செயல்படச் சொல்லும். பொறாமை, அடுத்தவர் பொருளைக் கவர்ந்துகொள்ளச் சொல்லும். இவற்றிலிருந்து விலகி நிற்கச் சொல்கிறார் திருமூலர். கூடவே நாம் இருக்க வேண்டிய இடத்தையும், அதாவது செயல் படுத்த வேண்டியவற்றையும் பட்டியல் இடுகின்றார். உடம்பும் வாழ்வும் ஓரளவிற்காவது நல்ல நிலையில் இருக்கும்போதே, அடுத்தவருக்குச் சிறிதளவாவது உதவுங்கள் என வேண்டுகிறார்.

அதுவும், அள்ளிக்கூடக் கொடுக்கச் சொல்லவில்லை. சாப்பிடுகிறீர்களல்லவா? அந்த நேரத்தில் யாராவது வந்து, பசி என்று சொன்னால் ஓர் அகப்பை உணவாவது கொடுங்கள் அவர்களுக்கு என்கிறார். ஏற்கனவே ‘யாவருக்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி’ எனச் சொன்னதைப் பார்த்தோம். மிகவும் எளிமையான இந்த அறத்தை, மறுபடியும் சொல்லி நம் மனதில் நிலைநிறுத்துகிறார் திருமூலர்.

உதவுவோம்! உயர்வோம்! (மந்திரம் ஒலிக்கும்)

- பி.என் பரசுராமன்