ஆலயங்களுக்கு ஓர் அற்புத வழிகாட்டி!



பொதுவாகவே யாரேனும் ஏதேனும் ஒரு ஆலயத்துக்குப் போய்வந்தால் தம் பயணம், கோயிலில் தாம் கண்டவை, கேட்டவை, (பிரசாதமாகப்) பெற்றவை எல்லாவற்றையும் விரிவாகச் சொல்வார். இவற்றைக் கேட்பவர்கள் தாமும் அந்த ஆலயத்துக்குச் சென்றுவர ஆவல் கொண்டு, அனுபவப்பட்டவரின் வழிகாட்டலின்படி சென்று வந்து தாமும் அதே தெய்வானுபவம் பெறுவார்.  இந்தப் பணியை, இன்னும் சீரிய வகையில், பூரணமாய் அனைத்துத் தகவல்களையும் கொண்ட புத்தக வடிவில் அளிப்பது என்பது பெரிதும் பாராட்டுதலுக்குரியது.

ஒரு கட்டுரையாளர் தாம் பார்த்த ஒரு கோயிலைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறார் என்றால், அந்தக் கட்டுரையின் சுவையைக் கூட்டுவதற்காகத் தன் கற்பனை இனிமையைச் சேர்ப்பார். அந்தக் கோயிலின் தலபுராணத்தை, அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் தன் சொந்த சொற்களால், அலங்கரித்து தன் கட்டுரைக்கு மட்டுமல்லாது, அந்தக் கோயிலுக்கும் மேன்மை சேர்ப்பார் பிறரும் சென்று தரிசிக்க வேண்டும் என்ற சேவை மனப்பாங்கு இருந்தாலும், தன் கைவண்ணம் பொலிய வேண்டும் என்ற மெலிதான சுயநலத்தால், அவரால் முழு தகவல்களையும்,

முழுமையாகச் சொல்லிவிட முடியாமல் போகலாம். அதைவிட, தாம் மட்டும் ஏதேனும் தலத்துக்குச் சென்று தரிசிப்பது அல்லாமல், பிற அனைவரும் அவ்வாறு தரிசித்து உய்வடையவேண்டும் என்ற நோக்கத்தால் எந்த வர்ணனையும் இல்லாமல், மிகைப்படுத்துதல் இல்லாமல், நேரடியாகத் தகவல் சொல்வதும் அற்புதமான இறைசேவைதான். நன்றாகக் கட்டுரை புனையத் தெரிந்தும், தன் மேதமையை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நேரடியாகத் தகவல்களைக் கொடுப்பதற்குப் பெரிய தியாக மனப்பான்மை வேண்டும்.  அத்தகைய ஆன்மிகத் தியாகியாகத் திகழும் ஓர் எழுத்தாளர், திரு சாய்குமார். அந்த வகையில் இதுவரை மொத்தம் 20 நூல்களை அளித்துள்ளார் அவர்.

1. தேவாரப் பாடல் பெற்றத் திருத்தலங்கள், 2. திவ்ய தேசங்களும், திருத்தல யாத்திரையும், 3. சக்தி தலங்களின் வழிகாட்டி, 4. அறுமுகனின் திருப்புகழ்த் தலங்கள், 5. நால்வர் நயந்த வைப்புத் தலங்கள், 6. வந்தாரை வாழவைக்கும் வைணவத் தலங்கள், 7. சிவபெருமானின் 64 வடிவங்களும், காசி- ராமேஸ்வர யாத்திரையும், 8. விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தலங்கள், 9. அல்லல் போக்கும் ஆனைமுகன் தலங்கள்,

10. அபயமளிக்கும் அம்பிகை ஆலயங்கள், 11. வெற்றி தரும் வேலவன் தலங்கள், 12. சுகமளிக்கும் சூரிய வழிபாடு, 13. வேண்டுவன வழங்கும் வைப்புத் தலங்கள், 14. நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில், 15. சப்த கரைகண்ட தலங்களும், சப்த கைலாசங்களும், 16. சரணடைந்தோரை ரட்சிக்கும் ராமர் தலங்கள், 17. எல்லாத் தலங்களின் எளிய வழிகாட்டி, 18. ஆலங்குடியும், அஷ்டதிக் தலங்களும், 19. நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள், 20. தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணி தலங்கள்.

இந்த ஒவ்வொரு புத்தகமும் ஒரு கையேடு என்றே சொல்லலாம். அந்தவகையில் புதிதாக அந்தந்தக் கோயிலுக்குச் செல்லும் ஒரு அன்பருக்கு மிகத் தேவையான தகவல்களைக் கொண்டவை அப்புத்தகங்கள். வெறும் ஆன்மிகத் தகவல்கள் மட்டுமல்லாமல், போகும் வழி, முழு முகவரி, தொடர்பு தொலைபேசி எண்கள் என்று யாரும், யாரையும் கேட்கத் தேவையில்லாத, தடுமாறும் அவசியமில்லாத, அவசியமான தகவல்களை நிறையச் சொல்கின்றன.

ஒவ்வொரு புத்தகத்துக்கும் விலை என்று இருந்தாலும், அவ்வாறு கிடைக்கும் மொத்தத் தொகையும் சிதிலமுற்ற கோயில்களில் உழவாரப் பணிக்கும், அவற்றின் புனரமைப்புக்கும் செலவிடப்படுகிறது என்ற குறிப்பு திரு சாய்குமாரின் பக்தி சேவைக்கு அச்சாரமாக விளங்குகிறது.மேலும் விவரம் வேண்டுவோர், 9382872358 மற்றும் 044-23637212 ஆகிய தொலைபேசி எண்களிலும் saikumarlalitha@gmail.com என்ற இணைய முகவரியிலும் திரு சாய்குமாரைத் தொடர்பு கொள்ளலாம்.  

- பக்தன்