லட்சியத்தை அடைய புலன்களை அடக்க வேண்டும்!



மகாபாரதம் - 94

திருதராஷ்டிரன் மிகுந்த ஆவலுடன் கேட்டார்: ‘‘என்ன அது? எதனால் ஸ்ரீ கிருஷ்ண சொரூபத்தை நீ அறிய முடிகிறது?’’

‘‘மன்னா நான் மாயையில் வசப்படுவதில்லை. எல்லா விவகாரங்களிலும் உண்மையைத் தேடுகிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் மீது உள்ள பக்தியாலேயே இந்த நிலை எனக்கு ஏற்பட்டது. சாஸ்திரங்கள் சொல்லுகின்ற வசனங்களால் ஸ்ரீ  கிருஷ்ணருடைய திவ்ய சொரூபத்தை காண்கிறேன்.’’ இந்தப் பேச்சு திருதராஷ்டிரனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ‘‘துரியோதனா, நம்முடைய சஞ்சயன் நம்மிடம் பொய் சொல்வானா, நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இல்லையா, சஞ்சயன் சொல்வது உண்மையென்றே தோன்றுகிறது. போர் புரிவது பாண்டவர்கள் அல்ல. ஸ்ரீ கிருஷ்ணன். அவருக்கும் நமக்கும் என்ன பகை? நீ ஸ்ரீ கிருஷ்ணரை சரணடைந்து விடு.’’

‘‘சஞ்சயன் உண்மையானவர் என்பதை அறிவேன்’’ துரியோதனன் நிதானமாகப் பேசினான். ‘‘அவர் சொல்படி 'கிருஷ்ணர் சாட்சாத் பகவான் அவர் உலகம் முழுவதையும் அழித்து விடுவார் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர் தன்னை அர்ஜுனனின் நண்பன் என்று சொல்கிறார். அர்ஜுனன் எனக்கு எதிரி. அதனால் 'கிருஷ்ணரை சரணடைய மாட்டேன்.’’ ‘‘காந்தாரி,’’ திருதராஷ்டிரன் அலறினான். ‘‘உன் பிள்ளைக்கு புத்தி சொல். அவன் நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். யார் தடுத்தாலும் அழிவை நோக்கி ஓடுகிறான்.’’

காந்தாரி மிருதுவாகவும் அமைதியாகவும் பேசத் துவங்கினாள். ‘‘ஐஸ்வர்யத்தை விரும்பி பெரியவர்களின் பேச்சை முட்டாள்தனமாக மறுதலிக்கிறாய் துரியோதனா. இதற்காக தந்தையையும் தாயையும் நீ தியாகம் செய்வாய். பீமசேனனுடைய கதையால் அடித்து கொல்லப்படும் பொழுது உனக்கு உன் தந்தையின் பேச்சு ஞாபகம் வரும்.’’ வியாஸர் தன் பேச்சை துவக்கினார். ‘‘திருதராஷ்டிர மன்னா, நீயும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமானவனே, அதனால்தான் சஞ்சயன் போன்ற தூதுவன் கிடைத்திருக்கிறான். மனதை ஒருமுகப்படுத்தி இவ்வளவு யோசிக்க வைக்கின்ற தன்மையை சஞ்சயன் உனக்கு ஏற்படுத்தியிருக்கிறான். அவன் ஸ்ரீகிருஷ்ணனை அறிந்தவன்.

அவர் தத்துவத்தை புரிந்தவன். எந்த ஒரு மனிதன் தன் செல்வத்தால் திருப்தியடையவில்லையோ, அவன் காமத்திற்கும், கோபத்திற்கும் பந்தப்பட்டு குருடனின் தலைமையில் செயல்படும் குருடர்களைப்போல தன்னுடைய கர்மங்களால் தூண்டப்பட்டு, எமனிடம் மாட்டிக் கொள்கிறான். ஞானிகள் செல்லும் வழியைப் பார்த்து பிறப்பு இறப்பு என்ற சம்சாரத்தை கடப்பது அவ்வளவு எளிதல்ல. பற்றற்றவனாலேயே இது செய்ய முடியும்.’’ ‘‘சஞ்சயா’’ திருதராஷ்டிரன் கை கூப்பினார். ‘‘எந்த வழியில் நான் 'கிருஷ்ணனை அடைய முடியும் என்று கூறு’’ என்று வினயத்துடன் கேட்டார்.

‘‘மன்னா, புலன்களை வசப்படுத்தாது இந்த விஷயத்தை அடைய முடியாது. புலன்கள்தான் கர்மாக்களை (காரியங்களை) செய்ய வைக்கின்றன. அந்தச் செயல்களின் விளைவால் காம, குரோத, லோப, மார்ச்சரியங்கள் ஏற்படுகின்றன. குற்றங்கள் மேலும் அதிகரிக்கின்றன. சக உயிர்களை இம்சை செய்யும் வெறி உண்டாகிறது. புலன்களை வெல்ல முடியாததற்கு சோம்பல் ஒரு காரணம். அறிவால் சோம்பலை விரட்ட வேண்டும். லட்சியத்தை அடைய புலன்களை அடக்க வேண்டும். அந்தணர்கள் இதை ஞானம் என்று சொல்கிறார்கள். மன்னா, புலன்களை வெல்லாது கிருஷ்ணரை அடைய முடியாது. அவர் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது.’’

‘‘சஞ்சயா பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு விதவிதமான செயல்களால் பெயர்கள் உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன அது? அந்த வர்ணனையை எனக்குச் சொல்ல முடியுமா?’’ ஆவலுடன் திருதராஷ்டிரன் கேட்டார். ‘‘கடவுள் பக்தி என்பது பிறர் தன் அனுபவத்தைச் சொல்ல, அதன் மூலம் மற்றவருக்கு ஏற்படுவது. திறந்த மனதோடு உள்ளவர்கள் இதை விரைவாக அடைகிறார்கள். பிரபஞ்ச ரகசியத்தைச் சொல்லும் கடவுள் தத்துவத்தைக் கேட்டு அதில் மூழ்கி ஒரு பரவச நிலையை அடைகிறார்கள். இந்தக் கடவுள் பக்தியிலிருந்தே சத்தியம், தர்மம் போன்ற சத் விஷயங்கள் துவங்குகின்றன.

‘‘மன்னா, வசுதேவ புதல்வரான ஸ்ரீகிருஷ்ணனின் பெயர்களை நான் பெரியவர்கள் மூலம் கேட்டிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். உலகத்திலுள்ள அத்தனை பிராணிகளிலும் அவர் வசிப்பதால் வசு ஆவார். தேவர்களிலும் அவர் வசிப்பதால் தேவன் என்றும் கூறப்படுகிறார். அதனால் அவர் வாசுதேவன் என்று அழைக்கப்படுகிறார். எங்கும் வியாபித்திருப்பதால், உயிர்கள் இல்லாத இடத்திலும் இருப்பதால், அவர் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார். தியானம் என்கிற தவத்தால் அவருடைய சாட்சாத்காரம் கிடைக்கிறது. அவர் அண்மை புரிகிறது.

அதனால் மாதவன் என்ற பெயர் பெறுகிறார். மது என்ற சப்தம் பூமியை, பூமியிலுள்ள சுகங்களைக் குறிக்கிறது. அதனால் அவர் மதுசூதனன் ஆகிறார். கிருஷ் என்பது சத்துள்ள ஒரு பொருளாகும். அதைச் சொல்லுகிற வாசகமாகும். ண என்பது ஆனந்தத்தை குறிக்கிறது. சத்துள்ள பொருளை அறியும் ஆனந்தத்தை தருவதால் கிருஷ்ணா என்று அழைக்கப்படுகிறார். மிகச்சிறந்த பகவத் தர்மத்தின் பெயர் புண்டரீகம். அசைக்க முடியாத பக்தியே பகவத் தர்மம். அந்த நம்பிக்கையில் அவர் வாழ்வதால் புண்டரீகாட்சன் என்று கூறப்படுகிறார். இப்படியும் சொல்லலாம் - புண்டரீகம் என்றால் கமலம். அட்சீ என்றால் நயனம். அதனால் புண்டரீகாட்சன் என்கிற விதமாகவும் கொள்ளலாம்.

எதிரிகளுக்கு ஆத்தன் அளிப்பதால், அதாவது துன்பம் அளிப்பதால் ஜனார்தனன் என்று அழைக்கப்படுகிறார். அவர் சத்தியத்திலிருந்து பிரிவதில்லை. சத்துவத்திலிருந்தும் பிரிவதில்லை. அதனால் சாத்வன் ஆகிறார். வ்ருஷ என்றால் வேதம். ஈஷன என்ற வார்த்தைக்கு கண்களைப் போன்று என்று அர்த்தம். வேதத்தை கண்களைப் போல கொண்டவன் என்பதால் வ்ருஷபேக்ஷன என்று அழைக்கப்படுகிறார். பிறருக்கு ஜென்மம் அளிப்பதால் அவருக்குப் பிறப்பு இல்லை. அதனால் அஜன் எனப்படுகிறார். தேவர்களைப் போல உன்னத ரூபத்தில் பிரகாசிப்பதால் உதர் என்பதான நிலை ஏற்படுகிறது. தமம் என்கிற குணம் இவரிடம் நிரம்பியதால் இவர் தாமம் ஆகிறார்.

தாமமும் உதரமும் கலந்து தாமோதரன் ஆகிறார். மகிழ்ச்சியும் சுபமும் உடையவர் என்பதால் க்ருஷீகன் என்று பெயர். சுகமான ஐஸ்வர்யம் நிரம்பியதால் ஈஷன் ஆகிறார். இவை இரண்டையும் சேர்த்து ரிஷிகேசன் என்ற பெயரை தரிக்கிறார். தன் இரு புஜங்களாக ஆகாயத்தை அளக்கிறார். இதனால் மகாபாகு என்று அழைக்கப்படுகிறார். ஒருபொழுதும் அவர் கீழே விழுவதில்லை. அதனால் அதோக்ஷஜன் என்று அழைக்கப்படுகிறார். அவர் நரங்களின் ஜயம் ஆவார். அதனால் அவரை நாராயணன் என்று அழைக்கிறார்கள். அவர் எங்கும் நிறைந்தவர். அதனால் அவர் உயிர்களுக்கு புருஷனாவார். அவர் உத்தமர்.

அதனால் புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார். அவர் அனைத்தையும் அறிந்தவர். அதனால் சர்வ என்ற அடைமொழி கிடைக்கிறது. சத்தியத்தில் நிலைத்தவர். அதனால் அவர் பெயர் சத்ய என்பதும் ஆகும். வாமன அவதாரத்தில் மூவுலகையும் ஆக்ரமித்ததால் விஷ்ணு என்று பெயர் பெறுகிறார். எல்லோரையும் வென்றதால் ஜிஷ்ணு என்ற பெயர் பெறுகிறார். அவர் நித்யமாக இருப்பதால் அனந்தன் என்று பெயர் பெறுகிறார். இந்த ரூபத்திலேயே புலன்களை வென்றதால் கோவிந்தன் என்று அழைக்கப்படுகிறார்…‘‘இப்பேர்பட்ட புகழை உடைய ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு வரப்போகிறார். கௌரவர்களை நாடி கௌரவர்களுக்கு நல்லது செய்வதற்காக இங்கே எழுந்தருளப்போகிறார்.’’

இதைச் சொல்லி விட்டு சஞ்சயன் மனதில் ஸ்ரீகிருஷ்ணரை நிறுத்தி ‘நல்லதே நடக்கட்டும்’ என்று கைகளை கூப்பி வேண்டிக் கொண்டார். திருதராஷ்டிரன் குதூகலமாகப் பேசினார். ‘‘ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு வரப்போகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி. கண்களை உடையவர்கள் அவரை தரிசனம் செய்வார்கள். அவர்கள் பாக்கியவான்கள். அந்த மாதிரியான ஒரு பாக்கியத்தை நானும் பெற விரும்புகின்றேன்.

பகைவரின் புகழை பலமாக பிடுங்கி தன்னிடம் வைத்துக் கொள்கிறவர் இங்கு வரப்போகிறார். மென்மையான வார்த்தைகளை பேசப்போகிறார். மோகிக்கச் செய்யப் போகிறார். அவர் பேச்சால் இந்த சபை சரியான முடிவை எடுக்கும். நான் மனப்பூர்வமாக ஸ்ரீகிருஷ்ணரை சரணடைகிறேன். அவர் வரட்டும். அவர் வரவு நல்வரவாகட்டும்.’’ திருதராஷ்டிரன் கை கூப்பினார். கௌரவ சபையில் திருதராஷ்டிரன் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தபோது யுதிஷ்டிரர் தனக்காக கிருஷ்ணர் தூது போக வேண்டியதின் அவசியத்தை
உணர்ந்தார்.

அர்ஜுன, பீம, நகுல, சகாதேவரோடு, அவர் பக்கம் இருக்கிற மன்னர்களும், ஸ்ரீகிருஷ்ணரை சூழ்ந்து கொண்டார்கள். ‘‘யுத்தம் வேண்டும் என்பது இங்கு எவருடைய ஆசையும் அல்ல. யுத்தம் செய்து ஜெயிக்கின்ற புகழில் பெரிய நாட்டம் இல்லை. மாறாய் துன்பம் தரும் யுத்தத்தை தவிர்க்கவே விரும்புகின்றோம். கௌரவர் பக்கமும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர் பொருட்டாவது சமாதான நடவடிக்கையை மனமாற எடுத்துத்தான் ஆகவேண்டும். எங்களைக் கண்டால் ஆத்திரம் ஏற்படுகின்ற துரியோதனனுக்கும், கர்ணனுக்கும் உங்களைக் கண்டால் சமாதானம் உண்டாகலாம். உங்களைக் கண்டதால் அங்குள்ளோர் துரியோதனனை சமாதானப்படுத்தலாம்.

ஆனால் திருதராஷ்டிரன் நிலைமை பரிதாபமானது. அவர், மகன் என்ன சொன்னாலும் அதை ஆராயாது தலையாட்டுகிறார். துரியோதனை புறக்கணித்து விட்டுப் பார்த்தால் திருதராஷ்டிரனுக்கே ராஜ்யத்தின் மீது ஆசை இருக்கிறது. எங்களைப் பற்றிய பயமும் இருக்கிறது. அதனால்தான் எங்களுக்கு எங்கள் ராஜ்யத்தை அளிக்காமல் சமாதானம் பேச முயற்சிக்கிறார். திருதராஷ்டிரன் தான் சொன்ன சொல்லில் நிலைத்திருப்பார் என்று கருதியே பன்னிரண்டு வருட வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் செய்தோம். ஆனால் தன் புதல்வன் சரி என்று நினைப்பவருக்கு எங்களைப் பற்றி சிந்திக்க முடியாது.

‘‘நான் ஐந்து கிராமங்கள் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். என் ராஜ்யத்தைக் கூட கேட்கவில்லை. அவிஸ்தலம், பிருகஸ்தலம், மாகந்தி, வாரணவதம் மற்றும் ஒரு கிராமம் கொடுங்கள், போதும் என்றேன். இதில் நாங்கள் ஐவரும் ஒன்றாக இருக்க முடியும். இதனால் பரத வம்சத்திற்கு எந்த நஷ்டமும் வராது. ஆனால் அந்த ஐந்து கிராமங்களைக் கூட தருவதற்கு கௌரவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றவருடைய செல்வத்தை எடுத்துக் கொள்ள விரும்பினால் அது ஒருவனின் ஆராயும் சக்தியை அழித்து விடுகிறது. அவனுடைய வெட்கத்தை அழித்து விடுகிறது. வெட்கம் தர்மத்தை அழித்து விடுகிறது. தர்மம் செல்வத்தை அழித்து விடுகிறது. நஷ்டமுற்ற செல்வம் மனிதனையே அழிக்கிறது.

செல்வம் இல்லாத நிலை, மனிதனின் மோசமான நிலை. அவனைக் கண்டு உற்றார் உறவினர்களும், நல்லவர்களும், மலரும், பழமும் இல்லாத மரத்தை விட்டு பட்சிகள் பறப்பதைப் போல நகர்ந்து விடுகிறார்கள். உலகில் செல்வந்தனே உயிர் வாழ முடியும். செல்வம் இல்லாதவன் இறந்தவனுக்கு சமானம். யார் ஒருவன் பலத்தின் மூலம் மற்றவர் செல்வத்தை அபகரிக்கிறானோ அவர்கள் நஷ்டமடைந்தவனையே அழிக்கிறார்கள். இதனால் ஏழ்மையான நிலையைப் பெற்ற மனிதர்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். வேறு இடங்களுக்குப் போய் அனாதைகளாக திரிகிறார்கள். அல்லது பைத்தியமாகி விடுகிறார்கள். அல்லது அடிமையாகிறார்கள். செல்வம் அழிவது மிகப் பெரிய விபத்து.

அது மரணத்தைக் காட்டிலும் கொடியது. பிறப்பிலேயே ஏழ்மை உள்ளவனுக்கு இந்த துக்கம் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் செல்வ சுகபோகத்தில் வாழ்ந்து அந்த செல்வம் பறிக்கப்பட்ட மனோ வேதனை மிகக் கொடியது. செல்வமற்ற நிலையில் மனிதனுக்கு கோபம் மட்டுமே வருகிறது. தான் சார்ந்த சமூகத்தை பழிவாங்கும் மனோநிலை ஏற்படுகிறது. அவன் இனக் கலப்பாலும், வேறு குரூரமான காரியங்களாலும் அந்த சமூகத்தை அழிக்கத் துவங்குகிறான். ஆனால் ஞானம் என்னும் கண்களைப் பெற்றவன் செல்லும் திசை அறிந்து, அதாவது என்ன செய்ய வேண்டும் என்றுத் தெரிந்து, தொடர்ந்து சங்கடங்களை கடக்கிறான். தர்மத்தின்படி நடக்கிறான்.

‘‘தர்மத்தின் அடிநாதம் லஜ்ஜை. அதாவது வெட்கம். வெட்கம் மேலிட்டு தர்மம் உள்ளவன் பாபங்களை செய்ய பயப்படுகிறான். சரியான வழியில் நடக்கிறான். இதனால் அவன் செல்வம் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. செல்வம் வர, தர்ம காரியத்தில் ஈடுபடுகிறான். அதர்மத்தில் மனம் திரும்புவதில்லை. அவன் தேவர்களையும், பித்ருக்களையும் பூஜித்து தன்னைக்காப்பாற்றிக் கொள்கிறான். அவன் செல்வம் மேலும் பெருகுகிறது. ‘‘எங்களுக்கு வேண்டிய எங்கள் முன்னோர்கள் சொத்துகளை நாங்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை. இதற்காக எல்லா முயற்சியும் செய்து அதனால் கொல்லப்பட்டாலும் அது நல்லதுதான். எங்களுடைய முதல் கொள்கை சமாதானம்.

அது நடக்கவில்லையெனில் போர் செய்து எங்கள் சொத்துகளை மீட்பதே உத்தமமாகும். இது பயங்கரமான கொடுமை மிகுந்த செயலாகும். எவ்வளவு பரிதாபமான நிலைமை எங்களுடையது என்று, யோசிக்க யோசிக்க புலப்படுகிறது. எங்கள் முன்னோர்களுடைய சொத்துக்ளை அடைவதற்கு நாங்கள் போரிட வேண்டியிருக்கிறது. இது தலையெழுத்து. நீசமானவர்களை, துரோகிகளை, பகைமை பாராட்டுபவர்களை கொள்வதே தவறு என்ற கொள்கை எங்களுக்கு இருக்க, எங்கள் உற்றார் உறவினர்களை, நண்பர்களை, மதித்து போற்றத் தகுந்தவர்களை, நாங்கள் செல்வத்தின் பொருட்டுக் கொல்ல வேண்டியிருப்பது மிகப்பெரிய பாபம். கொடுமையிலும் கொடுமை.

‘‘நான் க்ஷத்திரியன். அதனால் போரிட்டுத்தான் ஆக வேண்டும். யாசிக்கின்ற தர்மத்தை நான் எடுத்துக் கொள்ளக்கூடாது. அது நிந்தைக்குரிய விஷயம். எந்த ஜாதியும் சுய ஜாதியைக் கொல்வதில்லை. சூத்திரனோ, வைசியனோ, பிராமணனோ இப்படி செய்வதில்லை. க்ஷத்திரியன் க்ஷத்திரியனை வதம் செய்கிறான். மீனை மீன் விழுங்குகிறது. நாயை நாய் கடித்து விடுகிறது. இது பரம்பரை பரம்பரையாக நடந்து வருகிறது. போரினால் கலகம்தான் உண்டாகும். எங்களுக்கு வெற்றியோ தோல்வியோ ஏற்படட்டும். மனிதர்களின் வாழ்க்கையில் மரணமும் அவர்கள் விருப்பப்படி நடப்பதில்லை. ஒரு போரினால் இரு பக்கத்து செல்வமும் புகழும் பங்கப்படுகின்றன.

ஒருவனைக் கொன்றவன் கொல்லப்படாதவனாக எப்படி ஆக முடியும்? அவன் கொல்லப்படாமல் இருக்க முடியுமா? கொலை கொலையைத்தான் கொண்டு வந்து கொடுக்கும். போரில் வெற்றி பெற்றவனும், செல்வத்தையும் நண்பர்களையும் இழக்க வேண்டியிருக்கிறது. புதல்வர்களையும், சகோதரர்களையும் பலி கொடுக்க நேரிடுகிறது. போர் முடிந்து தன் உறவுகளை காணாதபோது அவன் போர் பற்றிய விரக்தியை அடைகிறான். ஒரு செயலை செய்துவிட்டு அதனால் துக்கமடைவது என்பது எவ்வளவு பேதமை. இது அந்த செயலை செய்வதற்கு முன்பு ஏன் தோன்றுவதில்லை? நல்லவர்கள், வீர தீரம் உடையவர்கள் போரில் கொல்லப்பட்டு விடுகிறார்கள். அதர்மமான, வெறுக்கத்தக்க மனிதன் தப்பிப்பிழைத்து விடுகிறான். போரின் லட்சணம் இதுதான்.

இப்படிப்பட்ட விஷயத்தை மிக உயர்ந்தது என்று எப்படி கொள்வது? பகைவர்களை கொன்ற பிறகு ஐய்யோ இறந்தானே என்ற பச்சாதாபம் ஏற்படுகிறது. ஆனால் கொல்லப்படும் பகைவர்களில் எவரேனும் தப்பிவிட்டால் வெற்றி பெற்றவன் விடுவதில்லை. பின் தொடர்ந்து போய் அடிக்கிறான். வெற்றி நிரந்தரமான பகையை அளிக்கிறது. எதையும் முடித்து வைப்பதில்லை. யாரிடமும் பகைமை கொள்ளாமல் எவன் இருக்கிறானோ அவன் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லாமல் சுகமாக தூங்குகிறான். எவன் பகைவர் குலத்தில் மிகுந்த பயத்தால் குழந்தைகளிலிருந்து கிழவர்வரை தேடித் தேடிக் கொல்கிறானோ அவன் புகழ் நிந்திக்கப்படுகிறது. ஆனாலும் அந்த பகைமை என்ற தீ அணைவதில்லை.

அந்த குலத்தில் ஒருவன் தப்பித்தாலும் வென்றவனுக்கு தூக்கமில்லை. நெய் விட்டதும் தீ அணைவதில்லை. மாறாய் கொழுந்து விட்டு எரிகிறது. பகைமையால் போர் செய்த பிறகு பகைமை அழிவதில்லை. மாறாய் அதிகரிக்கிறது. இதுதான் போரின் லட்சணம்.‘‘ஆனால் மதுசூதனா, எங்கள் ராஜ்யத்தைத் தியாகம் செய்யும் நிலைமை இந்தப் போரைக்காட்டிலும் கேவலமானது. என் பகைவன் என்னை ஒருகாலும் ஒரு விஷயத்திற்கும் நம்ப மாட்டான். செல்வத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதன் ஏதேனும் ஒருநாளில் ஏதேனும் ஒரு வழியில் அந்த செல்வத்தை மீட்கப் போராடுவான் என்ற பயம் எதிரிக்கு நிச்சயம். இப்படி எல்லா கோணங்களிலும் பார்க்க எங்கள் ராஜ்யத்திற்காக நாங்கள் போர் செய்வதே உத்தமம் என்று தோன்றுகிறது.

‘‘ஆனால் யுத்தத்தை விரும்பாமல் சாம, தான, பேத உபாயங்களால் என் செல்வத்தை அடைய பாடுபடுகிறேன். தண்டிப்பதுதான் எனக்கு விடப்பட்ட வழியென்றால் நான் எப்படி மௌனமாக இருக்க முடியும்? போர் என்பதை நாய்களின் சண்டைக்கு உவமானமாகக் காட்டலாம். முதலில் அவை ஒன்று கூடுகின்றன. இரண்டாக பிரிந்து கொள்கின்றன. ஒன்றை ஒன்றைப் பார்த்து முறைக்கின்றன. பிறகு குரைக்கின்றன. பிறகு பல்லை காட்டி பயமுறுத்துகின்றன. ஒன்றின் மீது ஒன்று சீறி விழுகின்றன. கண் மண் தெரியாத வேகத்தில் துரத்துகின்றன. கடித்துக்குதறுகின்றன. வெற்றி பெற்றது சண்டைக்கு காரணமான மாமிசத்தை உண்ணுகின்றன.

இந்த உண்ணலில் என்ன சிறப்பு இருக்கமுடியும்.’ ‘‘நாய்கள் முதலில் வாலாட்டுவது மன்னர்களின் கொடி அசைவதற்கு உவமையாகும். நாய்களின் முரைப்பு மன்னர்களின் சிம்மநாதம். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்து குரைப்பது பரஸ்பர ஆட்சேபணைகள், வெறும் வசனங்கள். மன்னர்கள் பல்லைக்கடிப்பது நாய்கள் பல்லை காட்டுவதற்கு சமம். ஓடுவதும், துரத்துவதும், கடிப்பதும், யுத்தம். பிறகு கிடைக்கும் மாமிசம் ராஜ்யம். ஆக, போர் என்பது மனிதனுக்கு ஏற்பட்ட நாய் குணம். போருக்கு ஆவேசப்படுவது நாய்க் கூட்ட உறுமல்.

‘‘இந்த மாதிரி நேரத்தில் இரண்டு பக்கமும் யோசித்து நிற்கையில் எல்லா விஷயங்களும் தீர்மானமான கொள்கையுடைய உங்களிடம் வருவதே மிகச் சிறந்தது அல்லவா.’’ இவ்வாறு சொன்ன யுதிஷ்டிரரை அமைதியாகப் பார்த்தார் கிருஷ்ணர். ‘‘கவலைப்படாதே யுதிஷ்டிரா. உங்கள் இருவருக்காகவும் சமாதானம் செய்ய நான் திருதராஷ்டிரனிடம் செல்வேன். கௌரவ சபையில் நிற்பேன். க்ஷத்திரியர்களை சாவிலிருந்து விடுவிப்பேன்,’’ என்றார்.

‘‘ஹே கிருஷ்ணா, எங்கள் பொருட்டு நீங்கள் கௌரவர்களிடம் போவது எங்கள் விருப்பம் அல்ல. என்ன செய்வது என்று கேட்க வந்தேனே தவிர, எங்களுக்காக தூது போகச் சொல்லவில்லை. நீங்கள் என்ன நல்ல வார்த்தை சொன்னாலும் துரியோதனன் ஏற்றுக் கொள்ள மாட்டான். பல மன்னர்கள் ஆவேசமாக இருக்கின்ற சபையில் நீங்கள் போய் நிற்பது உசிதமல்ல. அவர்கள் துரோகாவேசமாக, உசிதமற்று நடந்துக் கொள்ளக்கூடும். அதனால் கிடைக்கின்ற எந்த செல்வமும் எங்களை மகிழ்விக்காது.’’

‘‘யுதிஷ்டிரா, புரிகிறது. துரியோதனன் பாவச் செயலுக்கு அடங்கியவன் அல்ல. ஆனால் நான் சமாதானத்திற்கு முயன்றால் அது பரத கண்ட க்ஷத்திரியர்களுக்கு நல்லது. போருக்கு அஞ்சும் க்ஷத்திரியர்களின் நிந்தனைக்கு நாம் ஆளாகக் கூடாது. கோபம் கொண்ட சிங்கத்திற்கு முன்பு எந்த விலங்கும் நிற்க முடியாது. அங்கே உசிதமற்ற செயல் ஒன்று நடைபெற்றால் நான் கோபம் கொண்டு அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கி விடுவேன். நான் அங்கு போவது அர்த்தமில்லாமல் போகாது. இந்தப் போரிலிருந்து செல்வம் கிடைக்கிறதோ இல்லையோ சமாதானத்திற்கு உண்மையாக முயற்சி செய்யவில்லை என்ற பழியிலிருந்து நாம் தப்பிக்கலாம்.’’

‘‘கிருஷ்ணா, நீங்கள் தீர்மானம் செய்து விட்டீர்கள். உங்கள் ருசிப்படியே செய்யுங்கள். எப்படி பேச வேண்டும் என்று உங்களுக்கு யாரும் சொல்லித் தர முடியாது. யாரிடம் என்ன பேச வேண்டும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். சமயத்தில் பேசாது இருக்கவும் உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு என்ன நன்மை உண்டாகுமோ அவை அனைத்தையும் துரியோதனனிடம் சொல்லுங்கள். அவனுக்குப் புரியும் வண்ணம் மென்மையாகவோ கடுமையாகவோ பேசுங்கள்.’’

பாண்டவர்கள் போர் செய்ய விரும்பி அந்த மிகப் பெரிய போருக்கு முன்பு 'கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தார்கள். அவரையே வழிகாட்டியாக கொண்டார்கள். நாம் என்ன செய்கிறோம், இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துச் சொல்ல ஒரு குலத்திற்கு அருகே நல்லவரும் வல்லவருமான ஒருவர் இருப்பது பேரதிர்ஷ்டம். அது பெரிய சுமையை எளிதாகக் குறைக்கிறது. தன்னை நம்பிய பஞ்சபாண்டவர்களை பகவான் 'கிருஷ்ணர் ஆதூரத்துடன் பார்த்தார். பிரபஞ்ச சக்தியின் அருகாமை மிகப் பெரிய வரம். அது ஒரு ரகசியம்.

(தொடரும்)

- பாலகுமாரன்