கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கும்!



என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* என் மகனுக்கு 33 வயது. இதுவரை வந்த ஜாதகங்கள் எதுவுமே பொருந்தவில்லை. அதற்கு என்ன காரணம்? அவனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? விவாக காலம் எதுவரை உள்ளது? - ரமணி, சென்னை.

இதுவரை வந்த ஜாதகங்களில் ஒரு பெண்ணின் ஜாதகம் கூட பொருந்தவில்லை என்று எழுதியுள்ளீர்கள். உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் கல்யாண யோகம் தரும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான், எட்டாம் பாவகத்தில் நீச பலத்துடன் அமர்ந்திருப்பதால் திருமணத்தடை ஏற்படுகிறது. அவரது ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது.

திருமண யோகம் தரும் களத்ரகாரகனான சுக்கிரனும் இவரது ஜாதகத்தில் நீசம் பெற்று ஜென்ம ராசியில் இணைந்துள்ளார். களத்ரகாரகனும் நீசம், களத்ர ஸ்தான அதிபதியும் நீசம் எனும்போது அவ்வளவு எளிதாக மணவாழ்வு அமைந்து விடாது. விடாமுயற்சி அவசியம். மேலும் வசதி வாய்ப்புகளை அதிகம் எதிர்பார்க்க இயலாது. அவரது ஜாதகப்படி நெருங்கிய சொந்தத்தில் மணமகள் அமையும் வாய்ப்பு இல்லை.

அதேநேரத்தில் விலகிய சொந்தமான உறவினர் ஒருவர் மூலம் பெண் பற்றிய தகவல் கிடைக்கும். பெண்ணின் குடும்பப் பாரம்பரியம் கௌரவம் நிறைந்ததாக இருக்கும். ஒருகாலத்தில் நன்றாக வாழ்ந்து தற்போது பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பத்திலிருந்து பெண் அமைவார். ஆசார, அனுஷ்டானங்கள் அறிந்தவராகவும், ஆன்மிக ஈடுபாடு உடையவராகவும் இருப்பார்.

உங்கள் குடும்ப சாஸ்திரிகளின் துணைகொண்டு குரு மற்றும் சுக்கிரனுக்கு ப்ரீதி செய்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் உங்கள் வீட்டு பூஜையறையில் காமாக்ஷி அம்மன் படத்தை வைத்து பூஜை செய்து வாருங்கள். பதினெட்டு வார பூஜை முடிவதற்குள் மணமகள் பற்றிய தகவல் உங்களை எட்டும். உங்கள் மகனின் ஜாதகபலம் உணர்ந்து அதிக எதிர்பார்ப்பின்றி குணத்தை மட்டும் கருத்தில்கொண்டு பெண் தேடுங்கள். காமாக்ஷியின் அருளால் கெட்டிமேளச் சத்தம் விரைவில் ஒலிக்கும்.

* என் மகள் வயிற்றுப் பேத்திக்கு இப்போது 12 வயது. ஐந்தாவது வயதில் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. உடல்நிலை மோசமாகி ஸ்டிராய்டு மருந்துகள் கொடுத்து காப்பாற்றினார்கள். படிப்பு மந்தமாகிவிட்டது. ஸ்கின் அலர்ஜி அடிக்கடி உண்டாகிறது. உடம்பு முழுவதும் சொறி, சிரங்குகள் வருகிறது. சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நோய் எப்போது நீங்கும்? அவளது எதிர்காலம் எப்படி இருக்கும்? - ஸ்ரீகாந்தன், பெங்களூரு.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் பேத்தியின் ஜாதகத்தில் உடல் ஆராக்யத்தைப் பற்றிச் சொல்லும் ஆறாம் பாவகம் சுத்தமாக உள்ளது. சிறுநீரகப் பிரச்சனையைச் சொல்லும் எட்டாம் வீடும் சுத்தமாக உள்ளது. ஜென்ம லக்னாதிபதி சனி, ஏழாம் வீட்டில் தனது சுயசாரத்தில் அமர்ந்திருக்கிறார். அவரது ஐந்தாவது வயதில் செவ்வாய் தசை நடந்து வந்திருக்கிறது. செவ்வாய் ஆட்சி பலத்துடன் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே.

அவருடைய ஜாதகப்படி அத்தனை இளம் வயதில் சிறுநீரகக் கோளாறு உண்டாவதற்கான வாய்ப்பு இல்லை. தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாவது சகஜமே. தற்போதைய சிகிச்சை முறையை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். நீண்டகாலம் பிடித்தாலும், இன்னமும் ஒன்றரை ஆண்டிற்குள் முற்றிலும் சரியாகிவிடும். கல்வியில் இருந்து வரும் மந்தத்தன்மையும் 16வது வயதிலிருந்து விலகும். 12ம் வகுப்பு முதல் நல்லபடியாக படிப்பார்.

அவருடைய ஜாதகத்தில் உத்யோக ஸ்தானம் பலமாக உள்ளது. பத்தாம் வீட்டில் சூரியன்-குருவின் இணைவு அவரை அரசுத்துறை சார்ந்த பணியில் அமர்த்தும். ஒன்பதாம் வீட்டில் இணைந்துள்ள சந்திரன்-கேதுவின் நிலை, பரம்பரை பிரச்னையைச் சொல்கிறது. குலதெய்வ ஆராதனையை வருடந்தோறும் தவறாமல் செய்து வாருங்கள். பேத்தியையும் குலதெய்வத்தின் கோயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். மாதம்தோறும் சங்கட ஹர சதுர்த்தி நாளில் அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கித் தந்து, பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்கள் பேத்தியின் உடல்நலம் சீரடைவதோடு எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

* எனது மகள் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றினாள். தற்போது பிராஜக்ட் இல்லாததால் வேறு கம்பெனிக்கு முயற்சிக்கிறாள். அவளுக்கு வேலை கிடைக்குமா? அவள் பெயரில் உள்ள காலி மனையை எப்போது விற்றால் நல்ல விலை கிடைக்கும்? அவளது மறுமணவாழ்வு சிறப்பாக அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - தீபா, ஈரோடு.

தற்போது நடந்து வரும் தசாபுக்தியைக் குறிப்பிட்டு சனி சூரியனுக்கு பகை கிரஹம், அட்டமாதிபதி சாரம் என்று எதிர்மறையான விஷயங்களை மட்டும் உங்கள் கவனத்தில் கொண்டு அநாவசியமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நேர்மறையான விஷயங்கள் உங்கள் மகளின் ஜாதகத்தில் நிறைந்திருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி உங்கள் மகள் மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில், மகர லக்னத்தில் பிறந்திருக்கிறார். தற்போது 25.11.2018 வரை சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் உங்கள் மகளுக்கு நிரந்தரமாக உத்யோகம் பார்க்கும் அம்சம் உண்டு.

வெளிநாடு சென்று சம்பாதிப்பதைவிட உள்நாட்டிலேயே அவரால் சிறப்பாக சம்பாதிக்க இயலும். திருமண வாழ்வைச் சொல்லும் ஏழாம் வீட்டில், வக்ரம் பெற்ற குருவும், கேதுவும் இணைந்திருப்பதால் உங்கள் மகள் சிரமப்பட்டு வருகிறார். என்றாலும் 25.11.2018ற்கு மேல் அவரது மறுமண வாழ்வு சிறப்பாக அமைந்துவிடும். பகை கிரஹங்களின் தசாபுக்தி காலத்தில், புதிய முயற்சிகள் ஏதும் செய்யாமல், இருப்பதை வைத்து திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.

அதனை விடுத்து எதை எதையோ நினைத்து குழம்பக்கூடாது. அவருடைய பெயரில் உள்ள காலி மனையை தற்போது விற்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். உங்கள் மகளின் 33வது வயதில் சொந்தவீடு வாங்கும் வாய்ப்பு வந்துசேரும். அந்த நேரத்தில் காலிமனையை விற்றால் அனுகூலமாக இருக்கும். அதுவரை அவசரப்படாதீர்கள். தினமும் காலையில் சூரிய உதயநேரத்தில் உங்கள் மகளை சூரிய நமஸ்காரம் செய்து வரச் சொல்லுங்கள்.

ஞாயிறு தோறும் நரசிம்ம ஸ்வாமியின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதும் நல்லது. தைரியமும், மன உறுதியும் மட்டுமே அவரை வாழ்வின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். இதை மனதில் நிலைநிறுத்தி செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

* எனது மகளுக்கு அவள் விரும்பியபடியே திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு இருந்த அன்பும், பாசமும், பின்னாளில் அவளது கணவரிடம் கிடையாது. 13 வயதில் ஒரு பெண்ணும், 11 வயதில் ஒரு பையனும் இருக்கிறார்கள். என் மகளின் ஜாதகம் எப்படி உள்ளது? நல்ல வழி கூறவும். -சரளா, இராமேஸ்வரம்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் நன்றாகவே உள்ளது. அவர் விரும்பியபடியே திருமணம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நல்வாழ்விற்கு அடையாளமாக ஆசைக்கு ஒன்றும், ஆஸ்திக்கு ஒன்றுமாக பெற்றெடுத்திருக்கிறார். மகம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் பேத்தி, ஜகத்தினை ஆள்வார். மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரன் பிறர் உள்ளங்களை ஆள்வார்.

முத்தாக இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்திருக்கும் உங்கள் மகளுக்கு இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்? அவரது கணவரின் ஜாதகக் குறிப்பினை நீங்கள் அனுப்பவில்லை. என்றாலும் உங்கள் மகளின் ஜாதகப்படி மணவாழ்வு நல்லபடியாகத்தான் உள்ளது. பொதுவாக எல்லோர் வீட்டிலும் உண்டாகும் இந்த வயதிற்கே உரிய பிரச்னைதான் உங்கள் மகளுக்கும் உண்டாகியிருக்கிறது. தாயார் என்ற முறையில் ஆண்களின் உள்ளுணர்வு எப்படியிருக்கும் என்பதை உங்கள் மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். தற்போது நடைபெற உள்ள குருப்பெயர்ச்சி அவரது ராசிக்கு சாதகமாக உள்ளதால் அக்டோபர் நான்காம் தேதி முதல் புத்துணர்வு பெறுவார்.

நம்மைவிட சிரமப்படும் குடும்பங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள், ஆண்டவன் நம்மை எவ்வளவு நன்றாக வைத்திருக்கிறான் என்பது புரியும். வருகின்ற குருப்பெயர்ச்சி நாளில் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று நவகிரக குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடச் சொல்லுங்கள். அன்றைய நாளில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவரால் இயன்ற அன்னதானம் செய்வதும் நல்லது. குரு பகவானின் அருளால் கணவரிடமிருந்து அன்பையும், பாசத்தையும் மீண்டும் பெறுவார். கவலைப்படத் தேவையில்லை.

* எனது மகனுக்கு திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை. 1992ம் வருடம்  ஒரு சற்குருவின் சந்திப்பு கிடைத்தது. 1994ல் ஜீவசமாதி ஆகிவிட்ட அந்த குருவின் மடத்திற்கு குடும்பத்துடன் சென்று வணங்கி வருகிறோம். எனது மகனின் மனதை என்னால் உணர முடிகிறது. அவனுடைய ஜாதக பலனை விளக்கிக் கூறுங்கள். - சிவசிதம்பரம், கோவை.

உங்கள் மகனின் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானத்தில் கேதுவின் தாக்கம் வலிமை பெற்றுள்ளது. கடந்த ஜென்மத்தின் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்தில் அவரது புண்ணிய பலன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் போல் சாதாரணமாக எண்ணாமல் சிறப்புக் கண்ணோட்டத்தில், பெற்றோராகிய நீங்கள் அவரைக் காணவேண்டும். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன், ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்துள்ளார். அதுவும் கேதுவின் சாரத்தோடு லக்ன கேந்திரம் பெற்றுள்ளார்.

கேதுவும் ஒன்பதில் இருப்பதால் உலக வாழ்வியல் சுகங்களில் மனம் ஒட்டாது. சற்குருவின் சந்திப்பு இறைவனால் நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சற்குருவை சந்தித்த பிறகும் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு பணியைச் செய்துகொண்டு, சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஒரேயடியாக துறவறத்திற்குள் நுழைந்துவிடவில்லை.

தற்போது துவங்கியுள்ள குரு தசை அவரது வாழ்வில் திருப்புமுனையைத் தரும். ஒரு குருவிற்கு உரிய அத்தனை தகுதிகளையும் தற்போது உங்கள் பிள்ளை அடைந்திருப்பார். அவரை இனிமேல் இல்லற வாழ்வில் ஈடுபடச் சொல்லி உங்களால் வற்புறுத்த இயலாது. மேலும் தனது சேவையின் மூலம் தீயவர்களை நல்லவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு வந்து சேரும். இல்லறம் என்ற ஒரு வட்டத்திற்குள் உங்கள் பிள்ளையை அடைத்து வைக்க நினைக்காதீர்கள்.

பல பேருடைய நல்வாழ்விற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு உங்கள் மகனுக்கு இருக்கிறது. அவரது முயற்சிக்கு பக்கபலமாக இருந்து துணை செய்யுங்கள். இறைவனின் அருளோடு அவர் தனது பணியினைத் தொடரட்டும். உங்கள் மகனின் பெருமையை ஊரார் பேசும்போது அவரைப் பெற்றதற்கான பயனை அடைவீர்கள். சத்புத்திரனைப் பெற்றதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டுமே தவிர, கவலைப்படக் கூடாது. சராசரி மனிதனாக உங்கள் பிள்ளையை எண்ண முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டீர்களேயானால் குடும்பத்தில் சந்தோஷம் நிரந்தரமாய் நிலைத்திருக்கும்.

- சுபஸ்ரீ சங்கரன்