எல்லையிலா பரவசம்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

நிமலன் வாக்கு கேட்டு நீரால் விளக்கு எரித்த நமிநந்தி கட்டுரை வியக்க வைத்தது. உமையம்மையை உணர்த்துகிற ஞானமே கிளி எனும் கட்டுரை ஆன்மிக உணர்வை அளித்து மெய்சிலிர்க்க வைத்தது. ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
- சு. இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை-6.

மன இருள் அகற்றும் ஞான ஒளி. திருமங்கை யாழ்வாரும், சுந்தரரும் செய்த சேவை ஈடு இணையற்றது. மனிதனின் மனத்தை செம்மைப்படுத்தி இறையருளை பெற எளிமையான வழியை காட்டி வாழ்க்கையில் அமைதியை பெற்று ஆனந்தமாய் வாழ பற்பல வழிமுறைகளை வகுத்த விதம் மெய்சிலிர்க்கிறது. தீவினைகளை இடம் தெரியாமல் அழிக்க வல்ல ஆன்மிகப் பாக்கள். பேரின்பம் நல்கும் பக்திப் பாடல்கள். நம்பிக்கையளிக்கும் நற் விதைகள். கர்ம வினைகளில் இருந்து விடுபட ஞான ஒளி.
- A.T.சுந்தரம், சென்னிமலை.

ஆகாயத் தத்துவமே ஆடலரசே என்ற கட்டுரை ஆடலரசனின் ஆன்மிக மகத்துவங்களை மனங் குளிரும்படியாக எடுத்துரைத்த விதம் அபாரம்,
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

திருவரனெறி என்னும் திருத்தலத்தில், நிமிலன் வாக்கு கேட்டு நீரால் விளக்கு எரித்த நமிநந்தியடிகள் வரலாறு படிக்கப் படிக்கப் பக்திப் பரவசம் ஊட்டியது.
- இராம.கண்ணன், சாந்தி நகர், திருநெல்வேலி.

நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்த சிதம்பரம் திருத்தலத்தை ஆனித் திருமஞ்சனத் தருணத்தில் தரிசிக்க வைத்து விட்டீர்கள். வண்ணப் படங்கள் எல்லையிலா பரவசத்தை அளித்தன. இவ்வளவு விரிவான தகவல்களை எந்த இதழும் தந்ததில்லை எனலாம். ஆலய மரத்தில் மணிகளைக் கட்டி வணங்கிடும் அபூர்வ அம்மன் தலமான கொல்லம் பத்ரகாளி மகிமைகள் மறக்க முடியா ஆச்சரிய அனுபவம்!
- அயன்புரம் த.சத்தியநாராயணன்,

அட்டையில், குழல் ஊதும் கண்ணன் குருவாயூரப்பனாக காட்சி தந்திருப்பது ‘ஆனி’ மாதத்திற்கே பெருமை தேடித் தருவதாக உள்ளது. ஆஹா... மீண்டும் நாங்கள் நலம் பல(ம்) பெற தெய்வீக கேரள ஆன்மிக யாத்திரையா! குருவாயூரப்பா! எல்லாம் நின் கருணை. சிதம்பரம் தில்லைக் கூத்தனை ஆனித் திருமஞ்சன நாளில் எங்கே, எப்படி, என்ன? என்று காண வைத்து புண்ணியத்தை அள்ளித் தந்து விட்டீர்கள்.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.