அதிசயங்கள் மிகுந்த அற்புதத் திருத்தலம்!



மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலானது உலக அதிசயப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அற்புத ஆச்சர்யங்கள் கொண்ட ஆன்மிகத் தலமாகும். தமிழகத்தின் அடையாள வரிசையில் முன்னால் நிற்கிற, இந்த மீனாட்சி கோயிலுக்குள் வலம் வந்து வழிபட்டு திரும்புவது அளவிட முடியா ஆன்மிகப் பரவசத்தை அள்ளித் தரும். கோயிலுக்குள் நுழையுமுன்னால், தொன்மைமிக்க இக்கோயிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.

பதினேழு ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்திருக்கிற இக்கோயில் ஆதியில் இந்திரனால் கட்டப்பட்டதென்கின்றனர். தனக்கு ஏற்பட்ட கொலைப்பாவமான ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்க பல தலங்களுக்குச் சென்று வந்த இந்திரன், கடம்படவனக் காட்டுப் பகுதிக்கு வந்தபோது, சுயம்புவாகத் தோன்றியிருந்த லிங்கத்தை வழிபட்டு, சிவபெருமானின் அருள் பெற்றதும், இங்கேயே சிறு கோயில் நிர்மாணித்ததும், திருவிளையாடற் புராணத்தால் தெரியவருகின்றன.

அடுத்து வெகு காலத்திற்குப் பிறகு, வணிகர் தனஞ்செயன், தனது சொந்த ஊரான மணவூருக்கு திரும்பியபோது, இரவானதால் இடைப்பட்ட இந்த கடம்ப மரக்காட்டின் நடுவே, பொய்கைக் கரையோரம் தங்கினார். அன்றிரவு, அங்கிருந்த சுயம்புலிங்கத்தை விண்ணிலிருந்து வந்து தேவர்கள் பூஜித்த அதிசயம் கண்டு, அதனை மறுநாள் குலசேகர பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார். அன்றிரவு மன்னனின் கனவிலும் சிவபெருமான் தோன்றி, ‘கடம்பவனத்தை திருத்தி நகராக்கு’ என கட்டளையிட, அப்படி உருவானவைதான் பேரழகு மதுரை நகரும், பிரமாண்ட மீனாட்சியம்மன் கோயிலும்!

இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. ஆதியில் சுந்தரேஸ்வரரின் இந்திர விமானத்திற்குப் பிறகே பிற கட்டுமானங்கள் நடந்திருக்கின்றன. இந்திரன் கண்ட சுயம்பு சிவலிங்கத்திற்கென  எட்டு யானை சிற்பங்கள் தாங்கும் தோரணையில் முதல் விமானம் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திசைக்கு இரண்டாக நான்கு பக்கங்களிலும் இந்தக் கல்யானைகளை இன்றும் காணலாம். கருவறையின் முன்னர் உள்ள கல்யானைகள் ஐராவதமும், சுபரதீபமும் ஆகும். மேற்கில் வாமனா, அஞ்சனா;

தெற்கில் பண்டரீனா, குமுதா; வடக்கில் புஷ்பதந்தா, சார்வபவுமா என அவை பெயர் பெற்றிருக்கின்றன. பாண்டிய இளவரசியாக அன்னை மீனாட்சி அவதரித்ததையும், பிறகு சுந்தரேஸ்வரரான சிவபெருமானை மணமுடித்ததையும் தலவரலாறு தெரிவிக்கிறது. மதுரை மன்னர் திருமலை உள்ளிட்ட பலராலும் இத்தலத்தின் முக்கிய பகுதிகள் அழகுற எழுப்பப்பட்டு, உயர சுற்றுச்சுவருடன், விண்ணை முட்டும் நான்கு கோபுர வாயில்களும், அதனுள்ளே எட்டு சிறிய கோபுரங்களும் அமைந்து இத்தலம் ‘கோயில் மாநகரம்’ என்ற அடைமொழியையும் மதுரைக்குத் தந்திருக்கிறது.

இந்தக் கோயிலின் கிழக்கு கோபுர நடுவில் இருந்து மேற்கு கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் நடு உச்சி வழியாகப் போகும். அதேபோல வடக்கு-தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டு பார்த்தால், அது சுவாமி சந்நதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இது அன்றைய நம் சிற்பக்கலைஞர்களின் தனித்திறனுக்கான அடையாளம். பூஜை செய்வதற்காக, ஆலயக் குளத்தில் பொற்றாமரைகள் பூத்துப் பெருகிய விவரமும் அறிய முடிகிறது.

நான்கு திசைகளிலும் எழிலார்ந்த கோபுரங்கள் கோவில் வாயில்களாகவே திகழ்கின்றன என்றாலும், மீனாட்சி அம்மை கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதால், கிழக்கு கோபுரத்தை கைகூப்பி வணங்கியபடி உள்ளே நுழைவது மரபாகும். அவ்வாறு நுழைந்ததும் எதிர்ப்படுகிறது அட்டசக்தி மண்டபம். அதாவது எட்டு சக்திகளுக்கான மண்டபம். இடப்புறத்தில் கவுமாரி, ரவுத்ரி, வைணவி, மகாலட்சுமி எனவும் வலப்புறம் யக்ஞாரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி எனவும், இருபுறமும் எட்டு அம்பிகைச் சிற்பங்களைத் தரிசிக்கலாம்.

இத்துடன் துவாரபாலகியர் சிற்பங்கள், வல்லப கணபதி, சண்முகர், சைவசமயக் குரவர்கள் நால்வர் உள்பட மலையத்துவச மன்னன்வரை ஏகப்பட்ட கவினுறு சிற்பங்களைக் கண்டு ரசித்து, வணங்கி, மகிழலாம். தொடர்ந்து, மீனாட்சி நாயக்கர் மண்டபங்கள், அம்மன் முன் கோபுர வாயிலில் உள்ள திருவாசி விளக்குகள், முதலிப்பிள்ளை மண்டபம் என நடந்து சென்று, பொற்றாமரைக் குளத்தை அடையலாம். இந்தக் குளத்தின் மேலாகத் தழுவிவரும் தென்றல், நம்மைக் குளுமையாக வருடும் தெய்வீக சுகம் அலாதியானது.

இந்த குளக்கரைக்குப் பல சிறப்புகள் உண்டு. 165 அடி நீளம், 120 அடி அகலமிக்க இக்குளத்தைச் சுற்றி, நாலாபுறமும் தூண்களுடன் கூடிய பிராகாரங்கள் அமைந்திருக்கின்றன. இதன் தென்புறத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றம் கண்டிருக்கிறது என்கிறார்கள். இந்த மேன்மையைப் போற்றிடும் வகையிலேயே பிராகாரச் சுவரில் 1330 குறள்களையும் எழுதி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். விருத்திராசுரனைக் கொன்ற தேவர்குலத் தலைவன் இந்திரனின் பாவம் மதுரை கடம்பவனக் காட்டுப்பகுதியிலிருந்த லிங்கத்தால் தீர்ந்ததாம்.

மலர்களால் இந்த லிங்கத்தை இந்திரன் பூஜிக்க விரும்ப, உடனே இந்தக் குளத்தில் பொன் தாமரைகள் தோன்றின என்று இக்குளத்தின் வரலாறு கூறப்படுகிறது. இன்றைக்கும்கூட பொன் முலாம் பூசிய ஒரு தாமரையை குளத்திற்குள் மிதக்க விட்டுள்ளனர். குளத்தின் வடக்குப் பிராகாரத் தூணில் கடம்பவனத்தைச் சீராக்கி, கோயிலைக் கட்டிய மன்னர் குலசேகரபாண்டியர் மற்றும் வணிகர் தனஞ்சயன் இருவரின் சிலைகளும் எதிரெதிரே இருப்பதையும் பார்த்து மகிழலாம்.

சிவபெருமானால் 64 திருவிளையாடல்களில் சிலவாகிய வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்குப் பொற்கிளியளித்தது, கீரனைக் கரை ஏற்றியதுடன், இலக்கணம் உபதேசித்தது ஆகியவற்றுடன் இந்தப் பொற்றாமரைக் குளத்திற்கு தொடர்பிருக்கிறது. இன்னொரு விஷயம் இக்குளத்தில் மீன் வசிப்பதில்லை - மீனாக விழித்திருந்து, மக்களை மீனாட்சி காப்பதாகிய அதிசயத் தத்துவத்தை விளக்குவதுபோல!

சிறிதுநேரம் குளக்கரைப் படிக்கட்டில் அமர்ந்து தென்றல் வருடலோடு, ஆன்மிக உணர்வு மேலோங்க, ஓய்வெடுக்கலாம். படிகளில் இறங்கி தீர்த்தமாக நீரைத் தலையில் தெளித்துக்கொள்ளலாம். தென்மேற்கு கரை பிராகாரத்தில் விபூதி விநாயகரை வணங்கலாம். அவரைச் சுற்றிலும், தனியே ஒரு பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும் விபூதியை இரு கைகளாலும் அள்ளி விநாயகருக்கு அபிஷேகம் செய்யலாம். இந்த விநாயகரை வணங்கிய பிறகே அம்மன், சுவாமியை வணங்கச் செல்வது தொன்றுதொட்டு நிலவிவரும் வழிபாட்டு முறை.

தென்கிழக்குக் கரையிலிருந்து அம்மன்-சுவாமி கோயில்களின் தங்க விமானங்களை தரிசிக்கலாம். இதற்கென தரையில் ஒரு அடையாளம் போட்டு வைத்திருக்கின்றனர். அங்கே நின்றபடி அண்ணாந்து தங்க விமான தரிசனம் காணலாம். அடுத்து கிளிக்கூண்டு மண்டபத்து சித்திவிநாயகரையும், முருகரையும் வணங்கி, அம்மன் திருச்சந்நதியின் முன் உள்ள பலிபீடத்தை வலம்வந்து, மீனாட்சியம்மனை தரிசிப்பதற்கான பிரதான வாயிலுக்குள் நுழையலாம்.

இரண்டாம் பிராகாரத்தை வலம் வரும்போது கிழக்குப் பகுதியில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலையையும், மேற்குப் பகுதியில் கொலு மண்டபத்தையும் கண்டு வியக்கலாம். பின் வடமேற்கிலுள்ள கூடல் குமாரர் சந்நதியில் வழிபடலாம். கொடிமரத்தைக் கடந்து ஆறுகால் பீடத்தை அடையலாம். இங்குதான் குமரகுருபரர், மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றம் செய்திருக்கிறார் என்ற தகவல் சிலிர்க்கவைக்கிறது. அவர், மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழை உரத்து வாசிப்பதையும், அதை மன்னர் உட்பட, கற்றோரும், ஆன்றோரும், பொதுமக்கள் அனைவரும் முன்னமர்ந்து மனமுருகி கேட்பதையும் மனக்காட்சியால் கண்டு நெகிழ்கிறோம்.

இதன் வழி உள்ளே நுழைந்து முதல் பிராகாரம் அடைந்து வலம் வரலாம். மூலத்தானத்தின் தென்பகுதியில் உச்சிஷ்டர், கூத்தர் என இரட்டை விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இங்கே ஒவ்வொரு சந்நதியிலும் முதன்மையாக விநாயகர் இருக்கிறார். விநாயகரே, விநாயகரை வணங்கித் துவக்கும் தத்துவமாக இந்த ‘இரட்டை விநாயகர்’ இருக்கின்றனர்! தென்மேற்கில் உள்ள ஐராவத விநாயகர், வல்லபை விநாயகர் மற்றும் நிருத்த கணபதியுடன், வடமேற்கில் முத்து குமார சுவாமியையும் தரிசிக்கலாம்.

கருவறை வெளிச்சுற்று மாடங்களில் எழுந்தருளியுள்ள மூன்று சக்திகளையும் வழிபட்டு வலம் வந்து, அடுத்து மீனாட்சி அம்மனை தரிசிக்கலாம். மீன் போன்ற கண்களை உடையவள் என்ற பொருளில் இறைவி ‘மீனாட்சி’ எனப்படுகிறாள். மீன் தன் பார்வையால் முட்டைகளை பொரியச்செய்து பின் பாதுகாத்தும் வரும் கருணையைப் போலவே, உலக மக்களுக்கு தன் அருட்பார்வையில் நலம் தருவாள் எனும் நயமும் இதில் அடங்கியிருக்கிறது. கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக்கிடப்பது போலவே இந்த மதுரை தேவியும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் என்று பொருள்.

ஆயக்கலைகளின் முழுவடிவாகிய கிளியை மீனாட்சியம்மன் தன் திருக்கரத்தில் ஏந்தி நிற்கிறாள். பக்தர் அம்மனிடம் கோரிக்கையை தெரிவிக்கிறார், அதை கவனமாகக் கேட்கும் கிளி, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர் களைய அந்தக் கிளி உதவுகிறதாம்! மீனாட்சியம்மனை வணங்கிய பிறகு, வடபுறம் சண்டிகேஸ்வரியையும் பள்ளியறையையும் தரிசித்து அருகில் உள்ள வாயில் வழியாக சுவாமி கோவிலின் இரண்டாம் பிராகாரத்தை அடையலாம். இங்கு முக்குறுணி விநாயகர் அற்புதக் காட்சி தருகிறார்.

எட்டடி உயரமிக்க இந்த விநாயகர் கோயிலில் தெற்குமுகமாக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மதுரை நகரின் கிழக்கே திருமலை மன்னர், தெப்பக்குளம் தோண்டியபோது கிடைத்த இச்சிலையை, இங்கே பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அரிசி மாவில் ஒரே கொழுக்கட்டையாகப் படைத்து இந்த விநாயகருக்கு நிவேதனம் செய்யும் மரபு இன்றளவும் தொடர்கிறது. முக்குறுணி என்பது ஓர் அளவீடு, அதாவது 18 படி. பொதுவாகவே விநாயகரை தரிசிப்பது மனதுக்கு உற்சகம் அளிக்கும்.

இத்தகைய பிரமாண்டமான விநாயகரைப் பார்த்து பக்தி உவகையுடன் பிரமிக்கலாம். அடுத்து, நடுக்கட்டு கோபுர மாடத்திலிருக்கும் மடைப்பள்ளியில் கிடைக்கும் சாம்பலை எடுத்து திருநீறாக பாவித்து, அணிந்து முன்வினைகளை நீக்க வேண்டிக் கொள்ளலாம். அருகிலுள்ள பஞ்சலிங்கங்களையும் தரிசிக்கலாம். மதுரையில் சங்கம் வைத்து தமிழ் மணம் பரப்பிய மகத்துவத்தை உணர்த்தும் விதத்தில், இங்கே ‘சங்கத்தார் சந்நதி’ இருக்கிறது. சிவபெருமானைச் சேர்த்து கடைச்சங்க புலவர்கள் 49 பேர் என்று திருவிளையாடற்புராணம் தெரிவிக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, வடமேற்கு மூலையில் உள்ள இச்சந்நதியில் சிற்பங்களாகப் பொலியும் 49 சங்கப் புலவர்களையும் தரிசிக்கலாம். அருகிலேயே காளத்தீஸ்வரர், ஆதிபராசக்தி சந்நதிகளையும் வணங்கி, தொடர்ந்து செல்லலாம். வடபுறம் திருக்கல்யாண சுந்தரரை வணங்கலாம். ஏதேனும் தடை அல்லது ஜாதகக் கோளாறு காரணமாக திருமணம் நடைபெறாது வருந்தும் அன்பர்கள் இவரை உளமாற வணங்கிச் சென்றால், விரைவில் திருமணபந்தம் ஏற்பட்டு மனமகிழ்வர். அதற்குக் கட்டியம் கூறும்வகையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணக் கோலத்தையும் சிற்பமாகக் கண்டு ரசிக்கலாம்.

பக்கத்திலுள்ள நவக்கிரகங்களை வலம் வந்து, விளக்கேற்றித் தம் பக்தியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள் பக்தர்கள். அடுத்துள்ள சட்டநாதரையும் வழிபட்டு, பிறகு நந்தி மண்டபம் அடைந்து நந்தியம் பெருமாளை வணங்கலாம். இம்மண்டப விதானத்தில் அமைந்துள்ள சுதைச்சிற்பங்கள் கவினுற வடிவமைக்கப்பட்டுள்ளன. பிறகு அனுக்ஞை விநாயகரை தரிசித்து, கோயில் பிரதான வாயிலை அடைந்து அங்கு கொலுவிருக்கும் அதிகார நந்திக்கு நம் வணக்கத்தைத் தெரிவித்துக்
கொள்ளலாம்.

தொடர்ந்து முதல் பிராகாரத்தை அடைந்து அங்கு அருள்பாலிக்கும் வந்தியம்மை சிவலிங்கம், சூரியன், கலைமகள், தென்முகக்கடவுள், 63 நாயன்மார்கள் ஆகியோரை உள்ளம் நெகிழ கண்டு களிக்கலாம். சைவசமயத்திற்கு அருந்தொண்டாற்றிய 63 நாயன்மார்களின் சிலைகளுள் முதல் பிராகாரத்தின் நுழைவாயிலில் இருந்து, தெற்கில் நீடித்த வரிசையாக இடம்பெற்றுள்ளன. மகாமண்டபத்தில் இவர்களது உருவங்கள் படிமங்களாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த நாயன்மாரது முக்தி நட்சத்திர நாளன்று, உருவங்களை பல்லக்கில் வைத்து கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் மரபும் பின்பற்றப்படுகிறது.

தொடர்ந்து சோமகந்தர், பலவகை லிங்கங்கள், பிட்சாடனர், சுந்தரமகாலிங்கர், காசி விசுவநாதர் ஆகியோரைத் தொழுதுவிட்டு, எல்லாம் வல்ல சித்தர் ஆலயத்தை அடையலாம். திருவிளையாடற் புராண கதைகளின்படி சிவன் ஒரு சித்தராகத் தோன்றி மதுரையில் பல சித்து வேலைகளைச் செய்தார். இதனைக் கேள்வியுற்ற மன்னன் அபிஷேக பாண்டியன், சித்தரை அரண்மனைக்கு அழைத்து வருமாறு கூறி, தன் அமைச்சரை அனுப்பி வைத்தார்.

ஆனால் சித்தர் வரமறுத்துவிட்டார். தன் ஆணையை மதிக்காத அந்த சித்தர்மீது மன்னர் கோபம் கொண்டார். ஆனாலும் அவரே சித்தர் இடத்திற்கு வந்து, அங்கே சிற்ப வடிவில் அமைக்கப்பட்டிருந்த ஒரு யானையைச் சுட்டிக்காட்டி, ‘நீர் வல்லமை மிக்க சித்தராயின், இக்கல்யானை நான் கொடுக்கும் இக்கரும்பை உண்ணுமா?’ என்று கேட்டார். சித்தர் மெல்லச் சிரித்தார். பிறகு மன்னனையும் கல்யானையையும் தீர்க்கமாகப் பார்த்தார். அக்கரும்பை வாங்கி கல்யானை முன்னால் நீட்ட, யானை உயிர்பெற்றுக் கரும்பைத் தின்றதோடு அரசனின் கழுத்தில் கிடந்த முத்துமாலையையும் பறித்து விழுங்கியது.

உடனே காவலர்கள் யானையை அடிக்க கையை ஓங்கினார்கள். உடனே சித்தர் ‘நிற்க’ என்று கர்ஜிக்க, அவர்களது கைகள் விறைத்துப்போய் நின்றன. சித்தரின் மகிமையை நேரில் கண்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்க, சித்தர் கடைக்கண்ணால் கருணை பொழிந்தார். உடனே அவர்களது கைகள் இயல்பு நிலைக்கு வந்தன. யானையும் மாலையை அரசனிடமே அளித்து, கல்லாக மாறியது. சித்தர், சுவாமி சந்நதிக்குள் போனார். பளிச்சென்று மறைந்தார்.

கூடவே, ‘சித்தராக வந்தது நானே! உனக்கு என்ன வரம் வேண்டும்’ என இறைவனின் அசரீரி ஒலித்தது. மன்னர் தனக்கு வாரிசு வேண்டும் என்று விண்ணப்பிக்க, ‘அவ்வாறே அருள்கிறேன்’ என மீண்டும் அசரீரி சொன்னது. பின்னர் அரசனுக்கு ‘விக்ரமபாண்டியன்’ என்ற ஆண் குழந்தை பிறந்தது என்கிறது திருவிளையாடல் புராணம். மேலும் தொடர்ந்து நடைபயின்று, துர்க்கை சந்நதிக்குச் சென்று அவளருள் பெறலாம்.

அருகில் தலவிருட்சமான கடம்பமரம் வித்தியாசமாகக் காட்சி தருகிறது. ஆமாம், பல்லாண்டுகளாகிப்போன இந்த மரம், கல்லாக உறைந்திருக்கிறது! ஆனால்  மீனாட்சியம்மன் கோயிலின் தலமரம் என்பதற்கு சாட்சியாக வடக்கு கோபுர உள்வாசல் பகுதியில் கிளைகளுடன் கடம்ப மரம் இலை பரப்பி பசுமை பொலிய நின்றிருக்கிறது. அடுத்து கனகசபை நடராசர், அட்சரலிங்கம் 51, மகாலட்சுமி, ரத்தினசபை நடராசர், பொற்படியான், வன்னி மரம்- கிணறு-லிங்கம், பைரவர், சந்திரன் ஆகிய மூர்த்தங்களை அதே வரிசையில் வணங்குவது மரபு.

பிறகு, ஆறுகால் பீடம் வழியாகச் சென்று சந்திரசேகரப் பெருமானை தரிசிக்கலாம். அடுத்துள்ள வெள்ளியம்பலத்தில் நம்மை அருட்பார்வை பார்த்து ஆனந்தமடையவைக்கும் நடராஜர், நம்மை அப்படியே நிறுத்தி வைக்கிறார். ஆமாம், இவர் பொதுவான காட்சிபோல அல்லாமல், கால் மாறி ஆடும் கோலத்தில் காணப்படுகிறார். இந்த மாற்றம் நிகழ்ந்ததற்கும் ஒரு சம்பவம் காரணமாக இருந்திருக்கிறது. பாண்டிய மன்னன், இக்கோயிலுக்கு வந்து நடராஜப் பெருமானை தரிசித்திருக்கிறான். அவரைப் பார்த்ததுமே மனம் கலங்கினான்.

ஆமாம், யுகம் யுகமாக எத்தனை காலம்தான் இந்தப் பெருமான் இடது காலைத் தூக்கியபடியே ஆடிக்கொண்டிருப்பார்! அவருக்குக் கால் வலிக்காதா, இடது காலை ஊன்றி, வலதுகாலைத் தூக்கியபடி ஆடி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளக்கூடாதா என்று மனம் உருகி வேண்டிக்கொண்டான். அந்த தூய பக்தனின் எண்ணப்படியே இந்த நடராஜர் வலது பாதம் தூக்கி ஆடுகிறார்! பிறகு மூலவர் சுந்தரேஸ்வரரை தரிசிக்கலாம்.

ஆதியும் அந்தமுமில்லாத அந்தப் பெருங்கருணையை காணும்போது நெஞ்சு நிறைகிறது. எத்தனை எத்தனைத் திருவிளையாடல்கள் புரிந்த அற்புத இறைவன்! பக்தர்களை ஆட்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு அபிரிமிதமான ஏற்றங்களை அள்ளி அருளும் அரன்! நெஞ்சு விம்ம அவரை சிரம் தாழ்த்தி தொழுது வணங்குகிறோம். சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, சண்டிகேஸ்வரரை தரிசித்து வலம்வந்து, நந்தியம் பெருமாளை மீண்டும் தரிசித்து நன்றி கூறி, நந்தி மண்டபத்துள் நுழைந்தோமானால், கிழக்குப் பகுதியிலுள்ள தூண்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

அத்தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர், காளி என தத்ரூபமான சிற்பங்கள் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்கின்றன. இந்தச் சிற்பங்களைப் பற்றியும் புராணத் தகவல் உண்டு. ஒரு சமயம் அசுரர்களான சும்ப, நிசும்பனின் கொடுமை தாங்கமுடியாமல் தேவர்கள் பார்வதிதேவியிடம் முறையிட்டனர். பார்வதி அவர்களை வதம் செய்வதாக உறுதியளித்தார். அதன்படி, அசுரர்களுடன் சண்டையிட தன் படைகளான சப்தமாதர்களைத் தோற்றுவித்தார்.

சப்தமாதர்கள் அசுரர்படையை அழிக்க, பார்வதி அரக்கர்களின் தங்கை மகனான ரத்தபீசன் போருக்கு வந்தான். தான் யாருடன் போர் செய்தாலும், தன் உடலிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு ரத்தத் துளியிலிருந்தும் தன்னைப் போலவே அசுரர்கள் தோன்றுவர் என்ற வரம் பெற்றவன் அவன். சப்தமாதர்கள் இவனுடன் போரிட்டனர். இவனது உடலில் இருந்து வெளிவந்த ரத்தத் துளிகளிலிருந்து புது அசுரர்கள் தோன்றியது கண்டு திகைத்த சப்தமாதர்கள் இதனைத் தேவியிடம் கூறினர். உடனே பார்வதிதேவி, காளியைத் தோன்றுவித்தார். மீண்டும் போர் துவங்கியது.

ரத்தபீசன் உடலில் இருந்து தோன்றிய ரத்தத்தைக் அப்படியே குடித்தாள் காளி. தனித்து நின்ற ரத்தபீசனை பார்வதி தேவி வதம் செய்தாள். ஆனால் ரத்தபீசன் இறந்தபின், அவனுடைய ரத்தத்தைக் குடித்ததால் காளிதேவி அசுரகுணம் கொண்டு அனைவரையும் துன்புறுத்தினாள். நிலைமை வேறுமாதிரியாக உருவெடுக்கவே, பயந்துபோன தேவர் முதலானோர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களைக் காக்க சிவபெருமான் தானே நேரடியாக காளிமுன் தோன்றினார். அவரைக் கண்டு பயந்த காளி, அவருடன் சண்டையிட மறுத்து, அதற்கு மாறாக நடனப் போட்டிக்கு அழைத்தாள்.

இருவருக்கும் நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில், சிவபெருமான் வலது காலை மேலே தூக்கி ஆட, அவரைப் போலத் தன்னால் ஆட இயலாததால் காளிதேவி தோல்வியுற்றாள். இப்படி சிவபெருமான் ஆடிய நடனம் ஊர்த்துவ தாண்டம் எனப்படுகிறது. ஈசனும் ஊர்த்துவதாண்டவமூர்த்தி என அழைக்கப்படுகிறார். இச்சம்பவத்தை விளக்கும் வகையில்தான் இங்கு ஊர்த்துவதாண்டவ மூர்த்தி மற்றும் காளி சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஊர்த்துவதாண்டவமூர்த்தி சிற்பத்திற்குக் கீழே காரைக்கால் அம்மையார் சிற்பம் இடம் பெற்றுள்ளது. ‘பிறவாமை வேண்டும், இனிப் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்’ என்ற பிரார்த்தனையுடன் பிறர் யாரும் விரும்பவொண்ணா வகையில் பேயுருவம் கொண்டார். அதோடு நினது திருவடியின் கீழிருந்து என்றுமே உனது நடனத்தைக் காணும் வரம் வேண்டும் என்று வேண்டுவது போல் ஊர்த்துவதாண்டவமூர்த்தி சிற்பத்தின் கீழ் அவருடைய சிற்பம் இடம் பெற்றுள்ளது.

நந்திதேவர் குடமுழா எனும் இசைக்கருவியை மீட்ட, அதற்கேற்ப சிவபெருமான் நடனமாடுகிறார். மேலும், முயலகன் சிவபெருமானது பாதத்திற்கடியில் தஞ்சம் புகுந்துள்ளான். காளியின் சிற்பம் இடது காலை ஊன்றியும் வலது கால்பாதத்தின் பின்பகுதியை இலேசாகத் தூக்கிபடியும் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி கோயிலுக்குள் ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒரு புராணக் கதை இருக்கிறது தொடர்ந்து, கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானின் 25 மூர்த்தங்கள் நிறுவப்பட்டுள்ளன. சிவபெருமானின் 64 தாண்டவ மூர்த்தங்களில் இருபத்தைந்து இவை.

தென்புறத் தூணில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அவருக்கு வெண்ணெய் சாத்தி, திலகமிட்டு, பக்தர்கள் வணங்குகிறார்கள். நிறைவாக கொடிமரத்தருகே வந்து வடக்கு நோக்கி சாஷ்டாங்கமாக தரையில் வீழ்ந்து நமஸ்கரிக்கலாம். அங்கேயே சற்று ஒதுங்கி அமர்ந்தபடி பல தியானத்தில் ஆழ்ந்திருப்பதையும் கவனிக்கலாம். பிறகு கிழக்குக் கோபுர வாசல் வழி ஆயிரங்கால் மண்டபம் கடந்து கோயில் உலாவை நிறைவு செய்யலாம்.

பூஜைகளும், திருவிழாக்களும்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகமமுறைப்படி தினந்தோறும் 8 கால பூஜை நடக்கிறது. காலை 5 மணி முதல் 6 மணி வரை திருவனந்தல் பூஜை, காலை 6 மணி முதல் 7 மணி வரை விளா பூஜை, காலை 7.30 மணி முதல் 9 மணி வரை சந்தி பூஜை, காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை திரிகால சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சாயரட்சை பூஜை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை அர்த்த ஜாம பூஜை, இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை பள்ளியறை பூஜை.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதந்தோறும் விழா நடைபெறுவது பக்தர்களின் ஆன்மிக உணர்வுக்கு அருள் சேர்க்கிறது: சித்திரை: சித்திரைத் திருவிழா, சித்திரை மாதம் வளர்பிறையில் துவங்கி சித்ரா பவுர்ணமியன்று முடிவடையும். முதல் நாள் கொடியேற்றம். பின் ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் புராண சிறப்புடைய வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபிஷேகம், செங்கோல் வழங்கும் வைபவம். 9ம் நாள் மீனாட்சி திக் விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். 11ம் நாள் தேர்த் திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா மற்றும் வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.

வைகாசி: 10 நாள் வசந்த விழா, திருஞானசம்பந்தர் விழா. ஆனி: முளைக் கொட்டு விழா. ஆவணி: ஆவணி மூலப் பெருவிழா 12 நாட்கள் நடைபெறும். இதில் கரிக்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முத்தி தந்தது, மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்குப் பொற்கிழி வழங்கியது, உலவாக் கோட்டை அருளிய லீலை, அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, பரி நரியாக மாறியது, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு சுமந்தது என ஒவ்வொரு நாளும் ஒரு திருவிளையாடல் நிகழ்ச்சி இடம் பெறும்.

புரட்டாசி: நவராத்திரி விழா. கொலு மண்டபத்தில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஐப்பசி: 6 நாள் கோலாட்ட உற்சவம். கார்த்திகை: கார்த்திகை திருவிழா, 1008 சங்காபிஷேகம். மார்கழி: மீனாட்சிக்கு 4 நாள் எண்ணெய்க் காப்பு உற்சவம். தை: தை சங்கராந்தியன்று கல்யானைக்கு கரும்பு தந்தருளியது, வலை வீசியருளியது ஆகிய சம்பவங்கள் நடத்திக் காட்டப்படும்.

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் உலா வரும் தெப்பத் திருவிழாவும் நடைபெறும். மாசி: மகா சிவராத்திரியன்று சகஸ்ர சங்காபிஷேகமும் 4 கால பூஜையும் உண்டு. பங்குனி: மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.

மீனாட்சி குங்குமம் - புட்டு பிரசாதம்

குங்குமமிடுதல் ஓர் ஆன்மிக அடையாளம் என்பதோடு, இதனை ஒரு மங்கலச் சின்னமாகவும் பக்தர்கள் தம் நெற்றியில் தரித்துக்கொள்கிறார்கள். மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்தினர் அன்றாடம் இயற்கை முறையில் தயாரித்துத் தரும் குங்குமம் நெஞ்சை நிறைக்கும் நறுமணத்தோடு, அழகிய சிவந்த வண்ணமும் கொண்டு விளங்குகிறது.

கஸ்தூரி மஞ்சளுடன், வெங்காரம், படிகாரம், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குங்குமம் தயாராவதாக சொல்கிறார்கள். சிறிதும் ரசாயனக் கலப்பின்றி பிரத்யேகமாகத் தயாராகும் இந்த குங்குமமே கோயிலுக்குள் வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் பிரசாத ஸ்டால்களில் விற்பனைக்கும் கிடைக்கிறது. இதேபோல், கோயில் ஸ்டால்களில் ‘புட்டு பிரசாதமும்’ கிடைக்கிறது. திருவிளையாடல் புராணத்தில், புட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதையை நினைவுறுத்தும் வகையில் தரமாக புட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.

அம்மன் - சுவாமியின் ஆபரணங்கள்

பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன், சுவாமிக்கு பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில் ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். இவை திருவிழா காலங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. பாண்டிமுத்து, முத்து சொருக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்துமாலைகள், முத்து கடிவாளம், பெரியமுத்து மேற்கட்டி,

தலைப்பாகை கிரீடம், திருமுடி சாந்து, பொட்டுக்கறை, பவளக் கொடி பதக்கம், ரோமானிய காசு மாலை, நாகர் ஒட்டியாணம், நீலயாக பதக்கம், திருமஞ்சன கொப்பரை (வெள்ளி), தங்க காசுமாலை, தங்க மிதியடிகள், பட்டாபிஷேக கிரீடம், ரத்தின செங்கோல். தங்க கவசத்தை அம்மனுக்கு சாத்தினால், அழகிய புடவை அணிந்திருப்பது போல் தோன்றும். 1972ல் திருப்பணி நடத்தியபோது வைர கிரீடம் உருவாக்கப்பட்டது.

வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட இந்த கிரீடத்தில் முதல் தரமான 3,545 வைரக்கற்கள், 4,100 சிவப்பு கற்கள் உள்ளன. இது தவிர எட்டரை காரட் மரகத கல்லும், மாணிக்க கல்லும் பதிக்கப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் நான்கரை அங்குலம். இது தவிர அம்மன், சுவாமி வீதி உலாவுக்காக உலோகத்தாலான, கலை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்ட யானை, குதிரை, கற்பக மரம், பூதம், யாழி, நந்தி தேவன் போன்ற வாகனங்கள் பிரமிப்பூட்டுகின்றன.

கோயிலுக்குள் ஓவியங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளையாடல் காட்சிகளை விவரிக்கும் ஓவியங்கள் நிறைந்துள்ளன. செட்டி நாட்டு கலை பாணியிலான  97அடி நீளம், 47அடி அகலத்தில் பெரியதொரு கூடத்தில், இந்த ஓவியங்களைப் பார்வையிடலாம். அற்புத கலைப்பொக்கிஷமாக விளங்கும் இக்கூடத்தின் விதானம் காண்போர் மனதைக் கொள்ளை கொள்கின்றன. பக்கவாட்டில் 64 திருவிளையாடற் புராணக் கதைகளுடன், சிவபெருமானின் வடிவங்களும் கொண்ட இந்த 122 தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் காண்போரை கவர்கின்றன.  

இதேபோல், ‘களிறேறு’ அல்லது ‘யானைப் போத்து’ என்ற ஓவியக் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அம்மன் சந்நதி வழியாக பொற்றாமரைக்குளம் வந்தால் விபூதி விநாயகர் சந்நதி போகும் வழியில் மேல்தளத்தில் பல்வேறு தாமரை ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டு,  பொலிவோடு திகழ்கின்றன. இவற்றினூடே இந்த ‘களிறேறு’ என்ற சிலேடை ஓவியம் கண்ணில் படுகிறது. ஒருபுறம் யானை உடம்பும், மறுபுறம் எருதின் உடம்பும் இருக்கின்றன. யானையும், எருதும் எதிரெதிரே தலை முட்டிக்கொண்டு நிற்கின்றன.

யானையின் தலை தும்பிக்கையுடன் எருதின் தலைமேல் காணப்படுகிறது. அதேசமயம் எருதின் தலை யானை தலைமீது இருப்பதுபோலவும் தோன்றுகிறது. யானை முகத்தைப் பார்த்தால் எருதுமுகம் மறைந்தும், எருது முகம் காண்போருக்கு யானை முகம் மறைந்தும் ஒரு  ‘மேஜிக்’ காட்சிபோலத் திகழும் இந்த ஓவியம் அனைவரையும் வியக்க வைக்கிறது. ஓவியங்களாக மட்டுமல்லாது இதே பகுதியில் கோயில் தூணில் சிற்பமாகவும் இந்தக் காட்சி பொலிகிறது. மேலும், திருக்கல்யாணம் உள்ளிட்ட ஓவியங்களுடன், ககோளம், பூகோளம் என இயற்கை சார்பு ஓவியங்களும் பிரமிக்க வைக்கின்றன.

கோயிலுக்குள் சுரங்கம்

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சுவாமி சந்நதி உள்பிராகாரத்தில் உள்ள கிணற்றுப் பகுதியை சில ஆண்டுகள் முன்பு தோண்டினர். அப்போது கீழே படிகளும், சற்று தூரத்திற்குப் பாதையும் அதையடுத்து இடிபாடுகளும் காணப்பட்டன. இது பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல என்பதால் மூடப்பட்டது.

திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார்

மீனாட்சியான பார்வதி தேவியாருக்கு, தடாதகைப்பிராட்டி, அபிடேகவல்லி, கற்பூரவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, குமரித்துறையவள், கோமகள், பாண்டி பிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரித் தலைவி, முதுமலைத் திருவழுதிகள் என ஏராளமான திருப்பெயர்கள்! கல்வெட்டுகளோ, ‘திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார்’ என்று மீனாட்சியம்மனை புகழ்ந்துரைக்கிறது.

ஆயிரங்கால் மண்டப கண்காட்சி

மதுரை மீனாட்சி கோயிலுக்குள் 999 தூண்கள் கொண்டிருக்கிற மண்டபத்தை ஆயிரங்கால் மண்டபம் என்றே அழைக்கின்றனர். கிழக்கு வாசலில், கோவிலைவிட்டு வெளியேறும் பகுதிக்கு முன்னதாக உள்ள இம்மண்டபத்தில், நிரந்தர கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கோயில் பராமரிப்பு மற்றும் வேறு சில செலவுகளை ஈடுகட்டலாம் என்ற யோசனையின் அடிப்படையில் உருவான கண்காட்சி இது. 1964ல் நவராத்திரி காலத்தில் இந்தக் கண்காட்சி துவக்கப்பட்டது. கோயில் கலை வடிவங்களுடன், வழிபாட்டு முறை, சிலைகள், தலபுராண கதைகள் என பல்வேறு தகவல்களுடன் 15 பகுதிகளாக கண்காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. கலைச் சிற்பக் கூடாரமாக இம்மண்டபம் விளங்குகிறது.

பசுமடங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பில் கோயிலுக்குள் மேலஆடி வீதியில் பசுமடம் ஒன்று உள்ளது. 20க்கும் அதிகமான பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. அருகிலேயே தனியார் பராமரிப்பிலான மற்றொரு பசுமடமும் உள்ளது. இரண்டு மடங்களிலிருந்தும் நான்கு கால அபிஷேகதிற்கும் பால் வழங்கப்படுகிறது. இதுதவிர முக்கிய நாட்களில் பக்தர்கள் அளிக்கும் பாலும் அபிஷேகத்துக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

கோயிலுக்குள் மசூதி

தமிழ் மண்ணின் வாசமாய் இன்றளவும் மதம் கடந்த மனிதம் நிமிர்ந்து நிற்கிறது. இவ்வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளும் ஒரு காலத்தில் மசூதி இருந்த அடையாளமாக மொகலாயர் பாணி விமானத்துடன் கூடிய ஒரு மண்டபம் எஞ்சி நிற்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தெற்கு கோபுரம் அருகே தெற்காடி வீதியின் ராமநாதபுரம் சமஸ்தான அலுவலகத்திற்கு எதிரில் கிழக்குக் கோடியில் இம்மண்டபம் இருக்கிறது.

தற்போது போலீசாருக்கான புறக்காவல்நிலையமாக மாற்றம் கண்டுள்ளது. 2009 ஏப்.8ல் மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்களோடு செம்பு கலசம் நிறுவி புனித நீரிட்டு இம்மண்டப விமானமும் கும்பாபிஷேகம் கண்டது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயத் தளபதி ஜெ.வேல்ஸ் தெற்கு கோபுரத்துடன் இந்த மசூதி மண்டபத்தையும் கொண்ட பழங்கால மீனாட்சியம்மன் கோயிலை தத்ரூபமாய் ஓவியமாக வரைந்திருக்கிறார்.

இந்த பழமை ஓவியம் இன்றும் மதுரை திருமலை நாயக்கர் மகால் காட்சிக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மீனாட்சியம்மனை தரிசிக்க இக்கோயில் வந்திருந்த மருது சகோதரர்கள் பிறைக்கொடி கட்டியிருந்த இம்மசூதியைக் கண்டனர். மாற்றிடம் வழங்கி, அங்கிருந்தோரிடம் காலிசெய்திட வேண்டியதன் பேரில் நெடுங்காலம் அங்கிருந்தவர்களும், மன்னர் வார்த்தைக்கு மதிப்பளித்து இம்மண்டபத்தை விட்டுச் சென்றதாக அறியமுடிகிறது.

மருது சகோதரர்களின் உத்தரவை ஏற்று மசூதியாய் இருந்த மண்டபம் விட்டுச் சென்ற நிகழ்வை ரா.ஜானகிராமன் ‘மதுரை தல வரலாறு கோயில் அதிசயங்கள்’ என்ற நூலில் தெரிவித்திருக்கிறார். மன்னர்கள் பேச்சு அத்தனை மதத்தவர்களாலும் மதிக்கப்பட்டதன் வரலாற்று நிகழ்வாகவும் இதனைக் கொள்ளலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள ஒருநாள் போதாது.

கோயிலின் நுழைவாயில் துவங்கி, வெளியேறுவது வரை உள்ள சிற்பங்கள், கொண்டாடப்படும் விழாக்கள், கோயில் பொற்றாமரைக்குளம், கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளின் சிறப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக அணிவகுத்து நிற்கும்போது மலைப்பு ஏற்படுவது உண்மை. கோவிலில் பூஜைகளை நடத்துவது, திருமண நிகழ்ச்சிகளை மேற்கொள்வது முதலான விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள www.maduraimeenakshi.org என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம். 04522 344360 என்ற கோவில் தொலைபேசி எண்ணிலும் விவரங்கள் கேட்டு அறியலாம்.

- செ.அபுதாகிர், ஜி.டி.மணிகண்டன், டி.ஏ.அருள்ராஜ்