பிரசாதங்கள்



லவங்க லதா

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு:

மைதா - 2 கப்,
லவங்கம் (கிராம்பு) - 12,
நெய் - 1½ டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
பொரிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.

பூரணத்திற்கு:

தேங்காய்த் துருவல் அல்லது கொப்பரை துருவல் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரைத்தூள் - 1/2 கப்,
பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ந்ததிராட்சையாவும் கலந்தது - 1/2 கப்,
கோவா - 100 கிராம்.

பாகு செய்ய:

சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
எலுமிச்சைச்சாறு - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும். பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை கலந்து நன்றாக பிசறி கொள்ளவும். பாகிற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

பிசைந்த மாவிலிருந்து எலுமிச்சைப்பழ அளவு மாவு எடுத்து மெல்லியதாக வட்டமாக பூரி போல் தேய்த்து, நடுவில் 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து சுற்றிலும் தண்ணீர் தடவி இரண்டு பக்கத்திலிருந்து மடித்து சீல் செய்து, மீண்டும் திருப்பிப் போட்டு அடுத்த பாகத்தை மடித்து சதுர வடிவமாக செய்து ஒரு லவங்கத்தை குத்தி பிரியாமல் செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து லவங்க லதாவை போட்டு கரகரப்பாக பொரித்தெடுத்து சிறிது சூடான பாகில் போட்டு எடுத்து ஆறியதும் பரிமாறவும்.

கசகசா வெள்ளரி விதை சாதம்

என்னென்ன தேவை?

அரிசி - 1 கப்,
கசகசா, வெள்ளரி விதை - தலா 1/4 கப்.
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கிள்ளிய காய்ந்தமிளகாய் - 4,
கறிவேப்பிலை, வேர்க்கடலை - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசியை உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். கசகசாவை சுத்தப்படுத்தி சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கடைசியில் வெள்ளரி விதையை சேர்த்து சிறிது வதக்கி, சாதத்தை சேர்க்கவும். பிறகு உப்பு, கசகசா பொடி சேர்த்து கலந்து இறக்கவும்.

வெண்ணெய் கச்சாயம்

என்னென்ன தேவை?

வெண்ணெய் - 1 கப்,
பச்சரிசி மாவு - 2 கப்,
பொடித்த சர்க்கரை - 3 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை 10 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி உலர்த்தி மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, ஒரு தட்டின் மேல் ஈரத்துணியை போட்டு, அதன் மீது மெல்லிய வடைகளாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பொரித்தெடுத்து எண்ணெயை வடிக்கவும். சர்க்கரை பொடியில் கச்சாயத்தை பிரட்டி எடுத்து பரிமாறவும்.

கதம்ப சுண்டல்

என்னென்ன தேவை?

கொண்டைக்கடலை, காராமணி, பச்சைப்பட்டாணி, வேர்க்கடலை, மொச்சை, சிவப்பு ராஜ்மா - தலா 1 கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 1/2 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தானியங்களை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த சுண்டலில் கொட்டி கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் கடலைப்பருப்பு, தனியா - தலா 1/2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 சேர்த்து வறுத்து பொடித்து கலந்து பரிமாறலாம்.

மோர் கேக்

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1 கப்,
புளித்த தயிர் - 1/2 கப்,
மோர் மிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தயிரில் உப்பு, சிறிது தண்ணீர், அரிசி மாவு சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து இஞ்சி சேர்த்து வதக்கி கரைத்த மோர் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து கிளறவும். இந்த கலவை வெந்து சுருண்டு வந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகள் போட்டு இட்லி மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய்த்துண்டுகள் சேர்க்கலாம்.

கடலைப் பருப்பு டிலைட்

என்னென்ன தேவை?

வேகவைத்து மசித்த கடலைப்பருப்பு - 200 கிராம்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
துருவிய வெல்லம் - 250 கிராம்,
நெய் - 100 கிராம்,
தேங்காய்த்துருவல் அல்லது கொப்பரை துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
வறுத்த கசகசா - 1 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, காய்ந்ததிராட்சை - 25 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த கடலை மாவு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் மசித்த கடலைப்பருப்பு சேர்த்து கிளறி நன்றாக சுருண்டு வரும்போது கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
நான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றி தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், கரைத்த குங்குமப்பூ கலவை, முந்திரி, திராட்சை, கசகசா சேர்த்து கிளறி கடலைப்பருப்பு கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.

- சந்திரலேகா ராமமூர்த்தி