நவகிரகத் தகவல்கள்



* திருநள்ளாறு நளதீர்த்தத்தை சனிப்பெயர்ச்சி அன்று காக்கைகள் குறுக்கே பறந்து கடப்பதில்லை.
* தேனி மாவட்டம், குச்சனூரில் உச்சிக்கால வழிபாடு முடிந்தவுடன் காக்கைக்கு அன்னம் வைப்பர். காக்கை அன்னம் ஏற்காவிடில், ஏதோ தவறு நேர்ந்திருப்பதாக அர்த்தம். உடனே சனிபகவானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அன்னம் படைக்க, காக்கை உடனே அதனை ஏற்கின்றது.

* திருவக்கரையில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கித் திரும்பியுள்ளன.
* திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலய உள்சுற்றில் குருபகவான் கோயில் கொண்டுள்ளார். அங்கே சனி பகவானுக்கும் தனி சந்நதி உள்ளது. மற்ற கிரகங்கள் இந்த ஆலயத்தில் எழுந்தருளவில்லை.
* திருச்சி மாவட்டம், காவிரியின் தென்கரையில் பழுவூர் ஆலய நவகிரகங்கள் தங்கள் சக்தியர், பீடம், ஆயுதம் போன்றவற்றோடு அருட்காட்சியளிக்கின்றனர்.
* தென்காசி திருக்கோயிலில் ஒன்பது கோள்களும் ஆலயத்தில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுத் திகழ்கின்றன.
* திருவட்டாறு ஆதிகேசவர் மூலவரின் திருமுகத்தில் காலை வேளையில் சூரிய கதிர்கள் படர்கின்றன. மாலையில் சந்திரன் பெருமாளின் நேர் எதிரே தோன்றும் அற்புதம் நிகழ்கிறது.
* திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி ஆலயத்தில் நவகிரக சந்நதி கிடையாது. நந்திதேவர் முன் உள்ள ஒன்பது குழிகளே நவகிரகங்களாக போற்றப்படுகின்றன.
* தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலய நவகிரக சந்நதியில் சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் அவரைப் பார்த்தபடியே அபய வரத முத்திரையுடன் காட்சி தருகின்றனர்.
* சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் நவகிரகங்கள், விநாயகர் சந்நதிக்கெதிரே, மேலே உத்திரத்தில் இடம் பெற்றுள்ளனர்.
* ராமச்சந்திர மூர்த்தியால் சமுத்திரத்தினுள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒன்பது கற்களே தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்தில் நவகிரகங்களாக வழிபடப்படுகின்றன.
* திருவெண்காடு தலத்தில் நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.
* குரு தலமான சென்னை பாடி திருவலிதாயத்திலுள்ள கிணற்று நீருடன் கங்கை நீரைக் கலந்து, ஒரு மண்டலம் குரு ஹோரையில் அருந்த, குருவருளால் நோய்கள் நீங்கும்.
* சூரியன் சிவலிங்கபிரதிஷ்டை செய்து வழிபட்ட ஞாயிறு, சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதிநியமம், தலைஞாயிறு போன்ற தலங்கள் பஞ்ச பாஸ்கரத் தலங்கள் எனப் போற்றப்படுகின்றன.
* திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதரை பங்குனி புரட்டாசி மாத பௌர்ணமியிலும் அதற்கு முன் பின் இரு நாட்களிலும் சந்திரபகவான் தன்
கிரணங்களால் வழிபடுகிறார்.
* திருச்சி, உத்தமர்கோயிலில் பிரம்ம தேவனான நான்முகனே குருபகவானாக எழுந்தருளியுள்ளார். இத்தலம் சப்த குருதலம் என போற்றப்படுகிறது.
* நவகிரகங்களுக்கான தனிக்கோயில் எனும் பெருமையைப் பெற்றது ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோயிலாகும்.
* சிவாகம வழிபாட்டில் கூறியபடி சுபகிரகங்களான சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கும் நேர் திக்கிலும் பாவக்கிரகங்களான புதன், சனி, ராகு, கேதுஆகிய நான்கும் கோணத் திசையிலும் நடுவில் சூரியனும் உள்ள அமைப்பை அன்பில், ஆலந்துறை போன்ற தலங்களில் தரிசிக்கலாம்.
* வடமாநிலமான காசியில் பன்னிரு ஆதித்யர்களும் ஆலயம் கொண்டருள்கின்றனர்.
* கும்பகோணம்- திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலய பிராகாரத்தில் உள்ள ராகுபகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீல நிறமாக மாறிவிடுகிறது.