அழகனின் ஆனந்த தரிசனம்!



பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி கோலத்தில், தம்பதி சமேதராகவும் முருகனை தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் பல்லடம்-உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது.

* பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.
*  பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை  வைக்கச் சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். அந்தப் பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.

* கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில், வழக்கத்துக்கு மாறாக, இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது ஆரோகணித்திருக்கிறார் முருகன்.
* கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.
* குமரி, தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோயிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார்.
* மாமல்லபுரம் - கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்குச் சமமாக போற்றப்படுகிறது.
* தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏறி தரிசிக்கலாம்.
* திருச்சியிலிருந்து 26 கி.மீ தொலைவிலுள்ள விராலி மலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்கிறார்.
* அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.
* திருவாரூரிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில், எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான்
காட்சியளிக்கிறார்.
* காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.
* நாகை, தில்லையாடிக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி தலத்தில் குஹ சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப் பெருமான். இது அபூர்வமான அமைப்பு.
* கோவைக்கு அருகிலுள்ள அநுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.
* கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை, பார்வை இழந்த அடியவர் ஒருவர் விழிக்குத்துணை உன் மென்மலர்ப் பாதங்கள் என திடமாக நம்ப, அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத் தந்தார்.
* கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் திருப்பெயர்களில் முருகப் பெருமான் சேலத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.
* சென்னை - பாரிமுனையில் கந்தகோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக தரிசனம் தரும் முருகன், வள்ளலாரால் வழிபடப்பட்டவர்.
* திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது, இலஞ்சி. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தரிசிக்கலாம்.
* தென்காசிக்கு 6 கி.மீ. தொலைவிலுள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ
குமரனை கண்குளிர காணலாம்.
* சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிராகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.