வேஷம் வேறு, உண்மை வேறு!திருமூலர் திருமந்திர ரகசியம்

தமிழை வளர்த்த பெருமையில் பெரும்பங்கு, நாடகத்துறையையே சாரும். எந்தவிதமான குறிப்பும் இல்லாமல், நாடக மேடையில் பேசப்பட்ட வசனங்களில் தமிழ் துள்ளி விளையாடிய காலமும் உண்டு. அந்த நாடக மேடைகளில் ஏராளமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று! மகாபாரத நாடகம் நடந்துகொண்டிருந்தது. நாடகக்குழுவின் தலைவர் கர்ணனாக நடித்துக்கொண்டிருந்தார். ஜமீன்தார் முதலாக உள்ளூர்ப் பிரமுகர்களும் பொதுமக்களுமாக, ஏராளமானவர்கள் கூடி நாடகத்தை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

நாடகம் முடிந்தது. ஜமீன்தார் மேடையேறி அனைவரையும் பாராட்டினார். ‘‘கர்ணனாக நடித்தவர், கர்ணனாகவே மாறிவிட்டார். வள்ளல் கர்ணன் பாத்திரத்தை வஞ்சனையில்லாமல், வாரி வழங்கிவிட்டார். அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்குகிறேன்’’ என்றார். அவர் அருகில் நின்றிருந்த கர்ணன் வேடம் பூண்டவரோ, ஜமீன்தாரின் வாக்கை மறுத்துவிட்டு, ‘மேக்கப்’பை (வேடத்தை)க் கலைக்கச் சென்று விட்டார்.

ஜமீன்தாருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. மற்ற நடிகர்களை வாழ்த்திப் பேசி, அவர்களுக்கெல்லாம் சிறுசிறு அன்பளிப்பு வழங்கினார். பிறகு, அவர் மேடையை விட்டு இறங்கிக் கீழே நடந்தபோது, கர்ணன் வேடம் பூண்டிருந்த குழுத் தலைவர், வேடத்தைக் கலைத்துவிட்டு, ஜமீன்தாரை எதிர்கொண்டார். ‘‘ஐயா! தாங்கள் தருவதாகச் சொன்ன சன்மானத்தை, இப்போது தாருங்கள்!’’ என்றார். ஜமீன்தார் திகைத்தார்.

‘‘மேடையில், பலபேர் முன்னிலையில் நான் தருவதாகச் சொன்னதை மறுத்தீர்கள். இப்போது கேட்கிறீர்களே, ஏன்?’’ எனக் கேட்டார். நாடகக்குழு தலைவர் பதில் சொன்னார்: ‘‘ஐயா, அப்போது நான் கர்ணன் வேடத்தில் இருந்தேன். கர்ணன் கொடை வள்ளல். அவன் அடுத்தவருக்குக் கொடுப்பானே தவிர, யாரிடமிருந்தும் வாங்கமாட்டான். ஆகையால்தான், கர்ணன் வேடத்தில் இருந்த நான், உங்களிடம் கை நீட்டவில்லை. அந்த வேடத்தை இப்போது, கலைத்து விட்டேன். இப்போது நான் கர்ணன் இல்லை. சாதாரண நாடக நடிகன்’’ என்றார். ஜமீன்தார் வியந்தார்; ஏற்கனவே சொன்னபடி ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.

திருமூலர் இதைப் பற்றியும்
பாடியிருக்கிறார். என்னவென்று?
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பலனாக
மெய் வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.
- (திருமந்திரம் - 1660)

கருத்து: துறவி போலவோ, அடியார்கள் போலவோ வேடம் போட்டு வாழ்பவர்கள், வயிற்றுக்கு சாப்பாடு போடுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள். உண்மையாகவே துறவியாகவோ, அடியார்களாகவோ இருப்பவர்கள் உயிர் வாழ்வதற்காக, அடுத்தவர்கள் விரும்பித்தரும் உணவை ஏற்பார்கள். இவர்கள் கைகளால் பிச்சை எடுத்து உண்பார்கள்; உடலை வளர்ப்பதற்காக அல்ல; உயிர் வளர்க்கத் தவம் செய்வார்கள். ஆனால், பொய் வேடம் போடுபவர்கள், தாங்கள் உண்மையிலேயே பக்திமான்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.

இப்படிப்பட்டவர்கள்கூட, உண்மை வேடத்தின் பொருள் உணர்ந்து, அதன்படி நடந்தால், அதுவே அவர்கள் கடைத்தேறும் வழியும் ஆகும். அடியார்களைப் போலவோ, துறவிகளைப் போலவோ வேடம் போடுபவர்களுக்கும், உண்மையான அடியார் - துறவிகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறும் பாடல் இது. இப்பாடலில் எந்த இடத்திலும், போலி வேடதாரிகளைத் திருமூலர் கண்டிக்கவே இல்லை என்பதை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.

முதலில் போலி வேடதாரிகள்! சாதாரணமாகப் பலர் பேசுவதைக் கேட்டிருப்போம்; சமயங்களில் நாமே பேசி இருப்போம்: ‘‘யப்பப்பா! தாங்க முடியலடா சாமி. பேசாம, வீட்ட விட்டு ஓடிப்போய், சாமியாராகி, நாலு வீட்டுல பிச்சை எடுத்து வயத்த வளத்துக்கலாம்’’ என்ற வாக்கு, தெரிந்ததுதானே! தப்பித்தல் - ‘எஸ்கேபிஸம்’ என்று சொல்லப்படுவது இதுவே. பிரச்னைகளில் இருந்து தப்பி ஓடப் பார்த்து, வயிறு வளர்ப்பதற்காக வேடம் போடுகிறார்களே தவிர, உண்மையை உணர்ந்து துறவு கொள்ளவில்லை; பக்திமானாக ஆகவில்லை.

ஏதோ கிடைத்ததைத் தின்றுவிட்டு, சத்திரம், கோயில் முதலான இடங்களில் தூங்கி, பிறகு மறுபடியும் வயிறு வளர்க்க, பிச்சை எடுப்பது உண்மையான துறவும் இல்லை, பக்தியும் இல்லை. இப்படிப்பட்டவர்கள், யாராவது ஏதாவது போட்டால், அதில் குற்றம் சொல்லிக் கோபிப்பார்கள். இவர்கள் வேடத்தைப் பார்த்து, வாய்க்கு பயந்துகொண்டு, விருப்பமில்லாமல் பிச்சை போடுவார்கள். போலி வேடதாரிகளும், விருப்பமில்லாமல் இடப்பட்ட உணவாகப் பார்த்து வாங்கி, ரசித்து, ருசித்து உண்பார்கள்.

இவர்களுக்குத் தெய்வத்தைப் பற்றியோ, தெய்வத்தன்மையைப் பற்றியோ, கடுகளவும் எண்ணம் இருக்காது. ஆனால் உண்மையான துறவிகளோ, பக்திமான்களோ, அடுத்தவர்கள் விரும்பி இடும் பிச்சையையே ஏற்பார்கள்; அது என்னதான் ருசியற்றதாக இருந்தாலும் சரி, விரும்பிப் போடும் பிச்சையை மகிழ்வோடு ஏற்பார்கள். அதேசமயம், விருப்பமில்லாமல் என்னதான் உயர்ந்த உணவு வகைகளைப் பிச்சையாக இட்டாலும், இந்த உத்தமர்கள் ஏற்க மாட்டார்கள். கைகளை நீட்டி, இடப்படும் பிச்சையை ஏற்று உண்டு வாழ்ந்தவர் பட்டினத்தார்.

அவர் சகோதரி, கெட்ட எண்ணத்துடன் உயர்ந்ததான அப்பத்தை, பட்டினத்தாரின் கரங்களில் போட்டாள். சகோதரியின் தீய எண்ணத்தைப் புரிந்துகொண்ட பட்டினத்தார், கரங்களில் போடப்பட்ட அப்பத்தைப் பிய்த்து, ‘‘தன் வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’’ என்று சொல்லி, அவள் வீட்டுக்கூரையில் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்த வீடு, தீப்பற்றி எரிந்தது. நல்ல எண்ணத்துடன், விருப்பத்தோடு இடப்படுபவையையே, துறவிகள் ஏற்பார்கள் என்பதற்கு, இதுவே உதாரணம்.

இப்படிப்பட்டவர்கள், தெய்வத்தை உணர்வதே வாழ்க்கை என்று கொண்டு, அதற்காகவே உயிர் வாழ்வார்கள், பிச்சை எடுத்து உண்பார்கள். தெய்வத்தின் பெயரைச் சொல்லி, சுக போகங்களை அனுபவிக்க மாட்டார்கள். இதற்கு மாறாக இருக்கும் போலி வேடதாரிகளும், தங்களை உணர்ந்து தெய்வத்தைப் பற்றிய எண்ணத்தில் ஆழ்ந்து தெய்வத்தை உணரத் தொடங்கினால் அவர்களும் தேறுவார்கள். வயிறு வளர்ப்பதற்காக, பக்தி வேடம் பூண்பவர்களும், தெய்வத்தை உணரத் தொடங்கினால் உயரலாம் என மென்மையாகச் சொல்கிறார் திருமூலர்.

நல்லவற்றில் கெட்டதையே பார்ப்பது, சாதாரண மனிதத்தன்மை. கெட்டவற்றில் இருக்கும் நல்லவற்றைப் பார்ப்பது, உத்தமர்களின் தன்மை. இதே தகவலை, இதே முறையிலேயே காஞ்சி மகாஸ்வாமிகள் எப்படிச் சொல்கிறார்? சில ஊர்களில் திருவிழா காலங்களில், சிலர் தெய்வ வடிவங்களை வேடம் பூண்டு வருவார்கள். அவர்களைக் கிண்டல் செய்வோம். மகாஸ்வாமிகளிடம் இதைப் பற்றிக் கேட்டார்கள்.‘‘ஸ்வாமி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வருபவர்களை ஏசவேண்டாம், ஏசக்கூடாது. அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு ஸ்வாமி நினைப்பு வருகிறதல்லவா?

இது பெரிய விஷயமல்லவா! ஏதேதோ சிந்தனையிலும், கவலைகளிலும் ஆழ்ந்திருக்கும் நம் மனதை, அப்படியே ஆகர்ஷித்துக்  கவலைகளில் இருந்து விலக்கி, தெய்வ சிந்தனையைத் தூண்டும் அவர்களை எதற்காக இகழ வேண்டும்? நம் மனதை ஸ்வாமியிடம் திருப்பியதற்காக அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும்!’’ என்பார். அதேசமயம் திருமூலரும், மகாஸ்வாமிகளும், போலி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டு, தீங்கு செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என எண்ணி விடக்கூடாது. திருமூலர் இதைப் பற்றி என்ன சொல்கிறார்?

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மான நலம்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
- (திருமந்திரம் - 1656)

கருத்து: தெளிவு இல்லாதவர்கள் பக்திமான்களைப் போல் வேடம் போட்டு, இந்நாட்டில் இழிவான செயல்களில் ஈடுபட்டு, பிச்சை எடுத்து வயிறு வளர்த்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால், இப்பூமியின் பெருமைகளும், நலன்களும் கெடும், ஆகையால், அப்படிப்பட்ட ஈனச் செயல் புரியும் பொய் வேடதாரிகளை, வேடம் கலையும்படிச் செய்து, அவர்களின் உண்மை உருவத்தை உலகறியச் செய்வது, நாட்டிற்கு நலம் செய்யும். பொய் வேடதாரிகளைச் சொல்லும் திருமூலர், இந்தப் பாடலிலும் அவர்களை வன்மையாகக் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

பொய் வேடதாரிகளைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்லி, வேடதாரிகளின் வேடம் கலையும்படியாகச் செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர். அதாவது முதலில் நமக்குத் தெளிவு வேண்டும். நம்மிடம் தெளிவு இருந்தால்தான், போலி வேடதாரிகள் யார் என்ற உண்மையை உணர முடியும், அதை மக்களிடையே உணர்த்தவும் முடியும். வேடதாரிகள், ஏதோ வயிற்றுப் பாட்டிற்காக, வேடம் மட்டும் போடவில்லையாம். அதை வைத்து மக்களை ஏமாற்றி, தீங்குகள் செய்து சுக போகங்களில் திளைக்கிறார்களாம்.

அப்படிப்பட்டவர்களின் உண்மையை உணர்ந்து அவர்களின் உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டுமாம். இப்பாடலில், ‘நாட்டிடை,’ ‘புவி’ எனும் சொற்களைத் திருமூலர் அமைத்திருப்பதைப் பார்த்தால், அவருடைய உள்ளம் புரியும். நாடு என்பது சிறுபகுதி; புவி என்பது உலகம் முழுவதையும் குறிக்கும். போலி வேடதாரிகளால் நாட்டிற்கு மட்டுமல்ல; உலகிற்கே தீமை விளையும் எனக்கூறி எச்சரிக்கிறார் திருமூலர். உணர்ந்து, தெளிவு பெற்று செயல்பட வேண்டியது நமது பொறுப்பு.

(மந்திரம் ஒலிக்கும்)

- பி.என்.பரசுராமன்