'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!’



குறளின் குரல் - 87

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலன்களில், மெய் என அழைக்கப்படுகிற உடம்பைப் பற்றிச் சொன்ன வள்ளுவர், `வாய் கண் மூக்கு செவி’ ஆகியவை பற்றியும் திருக்குறளில் ஆங்காங்கே பேசுகிறார்.

'செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?’ (குறள் எண் 420)

- என்ற குறளில் செவி, வாய் என இரண்டு புலன்களையும் எடுத்தாள்கிறார். செவிச்சுவை அறியாது வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இருந்தென்ன, இல்லாமல் இருந்தென்ன எனக் கேட்டு, கேள்வி ஞானத்தின் பெருமையை விளக்குகிறார்.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.’ (குறள் எண் 1100)
 
செவியையும் வாயையும் ஒரே குறளில் வள்ளுவர் சொன்னதுபோல், இன்னொரு குறளில் கண்ணையும் வாயையும் சேர்த்துச் சொல்கிறார். கண்ணாலேயே பேசிக்கொள்ளும் காதலர்கள் வாயால் பேசத் தேவையில்லை எனச் சொல்லும் அந்தக் குறள் காமத்துப் பாலில் வருகிறது. கண்ணைப் பற்றிப் பேசும் குறட்பாக்கள் காமத்துப் பாலில் இன்னும் ஏராளம் உண்டு. காதலுக்குக் கண் இல்லாமலிருக்கலாம். ஆனால் கண்ணால் பார்த்து வருவதுதானே காதல்! தூதுவன் மிக கவனமாகப் பேச வேண்டும், அவன் நிதானமாகவும் பக்குவமாகவும் சொற்களை ஆளத் தெரிந்தவனாய் இருத்தல் அவசியம் என்று சொல்லும்போது வாய் என்ற சொல் வள்ளுவரால் எடுத்தாளப்படுகிறது.

'விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.’(குறள் எண் 689)

தன்னை அனுப்பியவருக்குப் பழி நேராத வண்ணம் உறுதியோடு இருந்து வாய் சோராமல் (சொல்லில் பழுது நேராமல்) பேச வேண்டியது தூதுவனின் கடமை என்கிறது வள்ளுவம். புராணங்களில் இப்படிச் செயல்பட்ட மிகச் சிறந்த தூதுவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு. சீதையைத் தேடச் சென்ற அனுமன் தூதனாகவும் இயங்கினான். மகாபாரதத்தில் தெய்வமான கண்ணனே பாண்டவர்களின் தூதனாகச் சென்றிருக்கிறான். கண்ணன் பாண்டவர்களுக்குத் தூது சென்ற செய்தியைச் சிலப்பதிகாரத்தில் போற்றுகிறார் இளங்கோ அடிகள்.

'மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே!’

தூது செல்பவருக்கு முக்கியமானது அவர்களின் நாவிலிருந்து வரும் வாய்ச்சொல் என்கிறது குறள். இளங்கோ அடிகளோ நாவின் ஆற்றலுக்குப் புகழ்பெற்ற தூதுவனான கண்ணனை நாவாலேயே புகழச் சொல்கிறார். மூக்கும் குறளில் பேசப்படுகிறது. ஒரே ஓர் இடத்தில் மட்டும் மூக்கு என்ற சொல்லாலேயே அது குறிப்பிடப்படுகிறது. மற்ற எந்த இடத்திலும் அந்தச் சொல் தன் மூக்கை நுழைக்கவில்லை!

'புறம்குன்றிக் கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கிற் கரியர் உடைத்து.’(குறள் எண் 277)

கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள் இது. குன்றிமணி செம்மையாகக் காணப்படுவதாய்த் தோன்றினாலும் அதன் மூக்கு கறுத்துத்தான் இருக்கிறது. அந்தக் குன்றிமணிபோல் பார்ப்பதற்குச் செம்மையானவராகத் தோன்றினாலும் உள்ளத்தில் இருண்டு இருப்பவர் இவ்வுலகில் உண்டு என்கிறது வள்ளுவம். இந்தக் குறளுக்கு நடப்பியல் உதாரணமாய் விளங்குபவர்கள் இன்று பற்பலர் உண்டு! 'ஆண்டவன் கட்டளை’ படத்தில் கண்ணதாசன் எழுதி, சந்திரபாபு பாடி நடித்த சிரிப்பு வருது சிரிப்பு வருது! என்ற புகழ்பெற்ற பாடலில் உள்ள பின்வரும் வரிகள் இந்தக் குறளின் விளக்கம் தானே?

'மேடையேறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு! கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு! உள்ள பணத்தைப் பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு! ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன்போல் பேசு!’வாய் என்ற சொல்லைச் சில இடங்களில் பயன்படுத்தி, மூக்கு என்ற சொல்லை ஒரே ஓர் இடத்தில் பயன்படுத்தி, கண்ணைப் பற்பல இடங்களில் பயன்படுத்தும் வள்ளுவர் செவி என்ற சொல்லை மிகச் சில இடங்களில் எடுத்தாள்கிறார்.

'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை!’ (குறள் எண் 411)

கற்றலில் கேட்டலே நன்று இல்லையா? அதனால் கேள்விச் செல்வமே மிகச் சிறந்தது என்பது வள்ளுவர் கருத்து. இன்று வள்ளுவரின் கருத்தைத் தாமறியாமலே பலரும் பின்பற்றுகிறார்கள். ஆமாம், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது செவிச் செல்வத்தைப் பெற ஏதுவாக பற்பல சொற்பொழிவாளர்களின் ஒலிப்பேழைகளைக் கேட்டுக்கொண்டே பலர் பயணம் செய்வதைப் பார்க்கிறோம்.

'செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்!’ (குறள் எண் 412)

முதலில் காது நிறையக் கேளுங்கள். அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லாதபோது உணவை உண்ணுங்கள் என்கிறது வள்ளுவம்.

' செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?’ (குறள் எண் 420)

ஒருவனுக்குக் கேள்விச் செல்வத்தின் சுவை புரியவில்லை என்றால் பின் அவன் இருந்தென்ன போயென்ன என அலுத்துக் கொள்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

'கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி!’ (குறள் எண் 418)

கேள்வி ஞானத்தை அடையாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் கேளாத தன்மையுடைய செவிகள்தான் என்கிறது வள்ளுவம். வாய், கண், மூக்கு, செவி என்ற நான்கு புலன்களைப் பற்றியும், மெய் பற்றிப் பேசியது போலவே பேசுகிறது வள்ளுவம். இந்த உறுப்புகள் நம் புராணங்களிலும் பலவிதப் பரிமாணங்களைப் பெற்றுள்ளன. வயிற்றிலேயே வாயை உடைய அரக்கனான கபந்தனைப் பற்றிப் பேசுகிறது ராமாயணம். அஷ்ட வக்கிரர் என்ற மகரிஷி எட்டு கோணல் உடல் உடையவர். அவரை எள்ளி நகைத்த கபந்தனிடம் அவர் சீற்றம் கொண்டார். 'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தலரிது என்றாரே வள்ளுவர்?

கோபத்தோடு கபந்தனைப் பார்த்து, 'உன் வாய் வயிற்றுக்குப் போகக் கடவது!’ எனச் சபித்தார் அவர். அடடா! முற்றும் துறந்த முனிவரின் சாபத்தின் காரணமாக ஒரே கணத்தில் கபந்தன் முகத்திலிருந்த வாய் அவன் வயிற்றுப் பகுதிக்கு இறங்கி விட்டது. பதறிப்போன கபந்தன் அழுதவாறும் தொழுதவாறும் கல்லும் கரைந்துருக சாப விமோசனம் வேண்டினான். உருகியது முனிவரின் உள்ளம். ராம-லட்சுமணரால் அவனுக்கு சாப விமோசனம் கிட்டும் என அருளினார் மகரிஷி.

கபந்தன் தன் நீண்ட கைகளால் கிடைப்பவற்றை அள்ளி அள்ளி வயிற்றுவாயில் போட்டுக் கொண்டு வாழலானான். ஆண்டுகள் பல உருண்டோடின. ராம, லட்சுமணர் சீதையைத் தேடிக்கொண்டு வந்தபோது, அவன் அவர்களையும் தின்னும் பொருட்டுக் கையால் எடுக்க ராம, லட்சுமணர் அவன் கரங்களைத் துண்டித்தார்கள். அதனால் அவன் சுய உருப்பெற்று அவர்களை நன்றியோடு வணங்கி அவர்களுக்கு சுக்கிரீவனிடம் செல்லும் வழியைக் காட்டியதாகச் சொல்கிறது ராமாயணம்.

கண்ணும் நம் ஆன்மிகத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நெற்றிக் கண் உடையவன் பரமசிவன். அந்த நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறி பறக்கும். 'அன்னை பார்வதியின் கூந்தலேயானாலும் அதற்கும் இயற்கை மணம் கிடையாது!’ என நக்கீரன் வாதாடியபோது சிவபிரான் நெற்றிக் கண்ணைத் திறந்து தான் யார் என அறிவுறுத்தி எச்சரித்தான். அப்போது 'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என முழங்கியவன் புலவன் நக்கீரன்.

சிவபெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பின் மூலம் உதித்தவன்தான் கந்தக் கடவுள். அதனால் முருகன் ஒருவன் தான் ஆண் பெற்றெடுத்த ஆண்பிள்ளை, மற்ற எல்லா ஆண்களும் பெண்ணின் பிள்ளை என்ற வகையில் பெண் பிள்ளைகளே என்பார் வாரியார் சுவாமிகள்! ஆதி பராசக்தி’ என்ற திரைப்படத்தில், 'தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த முந்துதமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்’ என்ற பாடலில், இந்தச் செய்தி அழகாகச் சொல்லப்படுகிறது:

'ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி
ஆனவர்தம்
நீதிக்கண்ணிலே பிறந்த முருகன்
வந்தான் - கலை
ஞானக் கண் திறந்துவைத்துக் கவிதை தந்தான்!’
 
உண்மையில் சிவன் முக்கண்ணனா? இல்லை, அரைக்கண்ணன்தான் என்கிறார் காளமேகம். சிவனில் பாதி பார்வதி. எனவே அவளுக்குச் சொந்தமானது ஒன்றரைக் கண். மீதி ஒன்றரைக் கண்ணில் ஒரு கண் கண்ணப்பன் அப்பியது. ஆக சிவனுக்கென்று உள்ளது அரைக்கண்தான் என்பது கணிதவியல் வல்லுநரான காளமேகத்தின் கணக்கு!
 
'முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே -  மிக்க
உமையாள்கண் ஒன்றரை மற்று ஊன்வேடன் கண் ஒன்று
அமையும் இதனால் என்று அறி.’

எல்லா தேவர்களுக்கும் இரண்டு கண்கள் உண்டு. ஆனால் மனிதக் கண்களைப் போல் அவை இமைப்பதில்லை. மிதிலையில் ராமனது அழகைப் பார்த்த மக்கள், இமையாமல் அவன் அழகைக் கண்ணால் பருகுவதற்கு தேவர்களைப் போல் நமக்கு இமையாக் கண்கள் இல்லையே என வருந்தினார்களாம். தமயந்தி தன் சுயம்வரத்தில் நளன் வடிவில் வந்து நின்ற தேவர்களிடமிருந்து மனித நளனைப் பிரித்தறிய உதவியது நளனின் இமைக்கும் கண்கள்தான். பிரம்மதேவனுக்கு எட்டுக் கண்கள் உண்டு. அவன் நான்முகன் அல்லவா? அறுமுகனான முருகப் பெருமான் பன்னிரண்டு விழிகளைக் கொண்டவன்.

'பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும் - வாழ்வில்
இடரேதும் வாராது எப்போதும்!’

- என்பது சீர்காழி கோவிந்தராஜன் தன் வெண்கலக் குரலில் பாடிய புகழ்பெற்ற பக்திப் பாடல் வரிகள். பெற்ற குழந்தையைத் தாய்மார்கள் கண்ணே என்றுதான் கொஞ்சுகிறார்களே தவிர, மூக்கே, வாயே, காதே என்றெல்லாம் கொஞ்சுவதில்லை! என்ன இருந்தாலும் ஐம்புலன்களில் கண்ணுக்குள்ள பெருமை தனிதான்! அதற்காக மூக்கின் பெருமையைக் குறைத்து மதிப்பிட முடியுமா? மூக்கு இல்லாவிட்டால் மூச்சே நின்று விடுமே! மூக்கு என்றதும் முதலில் நினைவுக்கு வரும் புராண மூக்கு அரக்கி சூர்ப்பணகையின் அறுபட்ட மூக்கு தான்.

சீதாப்பிராட்டியைத் தூக்கிச் செல்ல நினைத்த சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் 'அரிந்த’து, அனைவரும் அறிந்ததே. ஆனால் மூக்கறுபட்ட சூர்ப்பணகை உடனே ராவணனிடம் போகவில்லையாம். ராமனிடம் தான் வந்தாளாம். 'அறத்தின் நாயகனே! முன்னராவது என்னை யாரும் மணக்க வாய்ப்பிருந்தது. இப்போது உன் தம்பியால் மூக்கிழந்து விட்டேன். மூக்கில்லாத என்னை இனி யார் மணப்பார்கள்? எனவே தர்மப்ரபுவான நீ, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் வழங்கும் வகையில் என்னைத் திருமணம் செய்துகொள்!’ என வேண்டினாளாம் சூர்ப்பணகை.

முன்னராவது உன்னைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாமோ என்னவோ? இப்போது எப்படி நான் மணம் செய்துகொள்ள இயலும்? உன்னோடு நான் அயோத்தி சென்றால், போயும் போயும் மூக்கில்லாத பெண்தானா உனக்குக் கிடைத்தாள் என்று என் நண்பர்கள் கேலி செய்ய மாட்டார்களா?’ எனப் பகடி செய்தான் ராமன். அதற்கு சூர்ப்பணகை என்ன பதில் சொன்னாள் என்பதைக் கம்பர் மிக நயமாகத் தெரிவிக்கிறார்:

'அதுசரி. இப்போது மட்டும் என்ன? இடையே இல்லாத சீதையைத் தானே நீ மணம் புரிந்து கொண்டிருக்கிறாய்!’ என்றாளாம் சூர்ப்பணகை! பெண்களின் இடை மிக மெலிதாக இருக்க வேண்டும் என்கிறது அழகியல் கண்ணோட்டம். கம்பர் கற்பனையை 'அன்பே வா!’ திரைப்படத்தில் 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்!’ என்ற பாடலில் காவியக் கவிஞர் வாலியும் எடுத்தாள்கிறார்:

'இடையோ இல்லை, இருந்தால்
முல்லைக்
 கொடிபோல் மெல்ல வளையும் -
சின்னக்
 குடைபோல் விரியும் இமையும் விழியும்
   பார்த்தால் ஆசை விளையும்!

சூர்ப்பணகை மூக்கறுபட்டதும், லட்சுமணன் செய்த அந்தச் செயலைப் பற்றி சீதை வருந்தினாள் என்கிறது அபூர்வ ராமாயணக் கதை ஒன்று. `லட்சுமணன் மறுபடி வளரக் கூடிய கூந்தலை அரிந்திருந்தால் அதிகச் சிக்கல் எழாது. ஆனால் இனி வளராத மூக்கையல்லவா அவன் அறுத்துவிட்டான்! தன் உருவத்தைப் பிறர் எள்ளி நகைக்கும் போதெல்லாம் சூர்ப்பணகைக்கு பழிக்குப் பழி தீர்க்க வேண்டும் என ஆவேசம் வருமே? எனவே இனி வனவாசத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!’ என்றாளாம் புத்திசாலியான சீதாதேவி!

ஐம்புலனில் ஒன்றான செவியைக் காது என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். ஊசியின் துவாரத்தையும் காது என்று சொல்லும் மரபு இருக்கிறது. அந்தக் காதின் வழியாகத்தான் நூலைக் கோக்க முடியும். காதில்லாத ஊசி பயன்படாது. அப்படிப் பயன்படாத காதில்லாத ஊசியும் கூட ஒருவர் இறந்துபோனால் கூட வரப்போவதில்லை. அப்படியிருக்க சொத்து சேர்த்து ஆகப் போவது என்ன? சிவபெருமானே மருதவாணன் என்ற தத்துப் பிள்ளையாக பட்டினத்தாரிடம் வந்து சேர்ந்தான். பட்டினத்தாருக்கு புத்தி புகட்ட விரும்பிய மருதவாணன் 'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!’ என எழுதி வைத்துவிட்டு மறைந்துவிட்டான். அதன் பின்னர்தான் பட்டினத்தார் அனைத்தும் அநித்தியம் என்ற ஞானம் பெற்றுத் துறவியானார் என்கிறது பட்டினத்தாரின் திருச்சரிதம்.

'வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க ஊணிருக்க பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்த
பொருளிருக்க
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!’

- எனப் பாடும் தெளிவைப் பட்டினத்தாரிடம் ஏற்படுத்தியது பரமசிவன் எழுதிய 'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!’ என்ற அந்த ஒற்றைத் தமிழ் வரிதான்! 'நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்’ என்ற ஐம்பூதங்களைப் பற்றிப் பாடிய திருவள்ளுவர், `மெய் வாய் கண் மூக்கு செவி’ என ஐம்புலன்களைப் பற்றியும் பாடி இலக்கிய உலகில் நிலைபெற்றுவிட்டதில் ஆச்சரியமில்லை.  

(குறள் உரைக்கும்)

- திருப்பூர் கிருஷ்ணன்