நலங்கள் அருள்வார் நரசிம்மர்!* கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது.

* விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது
அதிசயமான நிகழ்வாகும்.

* மதுரை, மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது. இங்கு அருளும் நரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ காலத்தில் பானகம் நிவேதித்து வேண்டிட நினைத்த காரியம் நிறைவேறுகிறது.

* விழுப்புரம், பரிக்கல்லில் அஷ்டகோண விமானத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி அருள்கிறார். பதவி உயர்வு வேண்டுவோரும், இழந்த பதவியைத் திரும்பப் பெற வேண்டுவோரும் இவரை தரிசித்து பலனடைகின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள் இவரை நினைத்த மாத்திரத்திலேயே நீங்கும்.

* காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார்.

* திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

* சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை  தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* ஆந்திர மாநிலம், கர்நூலில் உள்ள அகோபிலத்தில் பிரகலாத வரதன் எனும் திருப்பெயரில் பக்தபிரகலாதனுக்கு அருளிய நரசிம்மரையும் அவர் வெளிப்பட்ட உக்ரஸ்தம்பத்தையும் தரிசிக்கலாம். இத்தலம் நவ நரசிம்மத் தலமாக போற்றப்படுகிறது.

* திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள்.

* திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் 8 அடி உயரத்தில் திருமகளை தன் இடது மடியில் இருத்தி அருட்கோலம் பூண்டிருக்கிறார். ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்தன்றும் இந்த நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

* பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

* தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

* மைசூர் ஜெயலட்சுமிபுரம், காளிதாசர் சாலை, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பசு நெய் விளக்கேற்றி வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதாக நம்பிக்கை.

* சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோகநரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக்கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.

* திண்டிவனத்தில் உள்ள நரசிங்கப்பெருமாளை அவர் கோபம் தீர, வேண்டிக் கொள்ளும் தாயாரை வணங்கிய கோலத்தில் தரிசிக்கலாம். ராகுதசை நடப்பவர்கள் மற்றும் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.

- ந.பரணிகுமார்