உங்களுக்கு உலகக் கோப்பை பரிசு!உள்ள(த்)தைச் சொல்கிறோம்

பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் அரங்கேறி வரும் நவராத்திரி உட்பட்ட வைபவங்கள் பற்றிய தகவல்கள், முருகன் ஆலயங்களின் சிறப்புகள் மற்றும் பல்வேறு குறுந்தகவல்களை மிகுந்த பரவசத்துடன் படித்து அறிந்துகொண்டோம்.
- இரா.இளையாபதி, தோட்டக்குறிச்சி.

அதிசயங்கள் நிறைந்த அற்புதத் திருத்தலமான சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு மகத்துவம் சேர்க்கிற மகத்தான ஆலயமான மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைப்பற்றிய முழு விவரங்களைத் தொகுத்து, எழில்மிகு வண்ணப்படங்களுடன் தாங்கள் வழங்கிய கட்டுரை, பிரமாண்டமான அந்த கோயிலை வலம் வந்து தரிசித்த பிரமிப்பை ஏற்படுத்தி விட்டது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பிரதோஷ நாயகன் அட்டையில் காணக்கிடைக்காத காட்சி. பன்னிரண்டு பக்கங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தகவல்கள் தாழம்பூ குங்குமம் போல் மணத்தது. வெங்கடாஜலபதி, திருவடி-திருமுடி, வித்தியாசமான விக்கிரகங்கள், பூஜையறை டிப்ஸ், மழலை வரம் தரும் தலங்கள், பூக்களும் பரமேஸ்வரனும், நவகிரகத் தலங்கள், அழகனின் ஆனந்த தரிசனம், தேவியர் தரிசனம் என விதவிதமாக தொடுத்து பக்தி மாலை சமர்ப்பித்த ட்வென்டி-20, சூப்பர்! 100/100 மதிப்பெண்கள் கட்டாயம் கொடுக்கவேண்டும்!
- சிம்ம வாஹினி, வியாசர் காலனி,
- ப.மூர்த்தி, பெங்களூரு,
- K.சிவக்குமார, சீர்காழி-10

‘ட்வென்டி-20 பக்தி ஸ்பெஷல், அட்டகாசம். மெகா சிக்ஸர்களாக விளாசிவிட்டீர்கள். ஆனந்தமாக இருந்தது. அர்த்தமுள்ள இந்து மதம் தொடருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கலாம். அருணகிரிஉலா, கல்வெட்டு சொல்லும் கோயில்கள் மகாபாரதம் பல ஆன்மிக படைப்புகளை அள்ளி, அள்ளி வழங்கிய தங்களுக்கு ஆன்மிக உலக கோப்பையைப் பரிசாக வழங்கலாம்.
- வைரமுத்து பார்வதி, ராயபுரம், சென்னை-13.

கொண்டையா ராஜுவின் கலை நயம்மிக்க அட்டைப்படம் அற்புதம். ரிஷபாரூடர் தரிசனம் கோடி புண்ணியம் என வேதாகமம் கூறுகிறது. அப்படி வாசகர்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கச் செய்த தங்களுக்கு மதுரை சொக்கநாதர் - மீனாட்சி ஆசி என்றென்றும் உண்டு.
- ஆர்.அரிமளம், தளவாய்,
- நாராயணசாமி, பெங்களூரு-76.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி புராணம் தொடங்கி இன்றைய செய்தி வரை ஆதியோடு அந்தமாக விரிவாக விளக்கி எங்களை பிரமிக்கவைத்து பரவசப்படுத்தியும் விட்டீர்கள். நன்றி! முருகா என்ற சொல் ஒருமை அல்ல. பன்மையே என்பதற்கு திருப்புகழ் திலகம் மதிவண்ணன் விளக்கியதைப் படித்து மெய்சிலிர்த்தேன். திருப்பூர் கிருஷ்ணனின் குறளின் குரல் பகுதியை அப்படியே பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற வைக்கலாம், அவ்வளவு அருமை.
- ப.த.தங்கவேலு, சரஸ்வதி நகர், பண்ருட்டி-106.