அரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்னதெளிவு பெறுஓம்

* அரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன
- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்

இடுப்பைச் சுற்றி ஆடை அணிபவர்கள் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் என்பது விதி. நவீன யுகத்தில் உள்ளாடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சாஸ்திர விதிகளின்படி கௌபீனம் என்ற கோவணத்தையே ஆண்கள் அணிய வேண்டும். இப்படி கௌபீனம் அணிய அரைஞாண் கயிறு அவசியம். பெண்கள் பாவாடை அணிய நாடாவைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த விதியைப் பின்பற்றுகிறார்கள். கேரளத்துப் பெண்கள் தங்கள் பாரம்பரியப்படி சேலை உடுத்தும்போது அதை இடுப்பில் கட்டுவதில்லை. அவர்கள் முண்டாவாக நெஞ்சுக்கு மேலே சுற்றிக் கொள்கிறார்கள். இடுப்பில் ஆடையை அணிபவர்கள் மட்டும் அரைஞாண் கயிறு கட்டியிருக்க வேண்டும் என்பது விதி. இடுப்பில் பெல்ட் அணிந்துகொள்ளும் ஆங்கிலேயரின் கலாசாரமும் இந்த விதியினை மெய்ப்பிக்கிறது.

* ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்று கூறுவதன் விளக்கம் என்ன?
 - அயன்புரம் த.சத்தியநாராயணன்.

தனது வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு உயிரினத்தைக் கொன்றால், பாவம் இல்லை. மீனைக் கொல்பவர், அதனைத் தனக்கு உணவாக்கிக் கொள்கிறார். ஆடு, கோழி முதலான உயிரினங்களும் மனிதனின் உணவிற்காக கொல்லப்படுகின்றன. இவ்வாறு உணவிற்காக உயிரினங்கள் கொல்லப்படும்போது, பாவம் வந்து சேராது. ஆனால், ஆடம்பர வாழ்விற்காகவும், ஆடம்பர பொருட்களை தயார் செய்வதற்காகவும், வீண் பெருமைக்காகவும் உயிரினங்கள் கொல்லப்பட்டால், அது பாவச் செயலாகும். பசியை போக்கிக்கொள்ள ஒருவர் ஒரு உயிரினத்தைக் கொல்வதால் பாவம் இல்லை என்பதை விளக்குவதே ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற பழமொழி.

* அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்யப்படுகிறது. அதேபோல கிரஹண காலத்தில் தர்ப்பணம் செய்யப்படுவதன் நோக்கம் என்ன?
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

அமாவாசை நாட்கள் மட்டுமல்லாது ஒரு வருடத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 96 நாட்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதற்கு ‘ஷண்ணவதி’ என்று பெயர். கால தேச வர்த்தமானத்தை அனுசரிக்கும்போது இந்த 96 தர்ப்பணங்களை எல்லோராலும் செய்ய இயலுவதில்லை. கிரஹண காலத்தில் செய்யப்படும் தர்ப்பணம், ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். பித்ருக்களுக்கு மற்ற நாட்களில் நாம் செய்யாமல் விட்ட கடனை இந்த கிரஹண கால தர்ப்பணம் தீர்த்துவிடுகிறது என்பதால் கிரஹண காலத்தில் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள்.

இயற்கைக்கு மாறாக சூரியனும், சந்திரனும் மறைக்கப்படும் கிரஹண காலத்தின்போது உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் என்ன நடக்கிறது என்பதை அறிய இயலாமல் அலைகின்றன. மனத் தடுமாற்றம் அடைகின்றன. இதைப்போலவே பித்ருலோகத்தில் உள்ள ஆன்மாக்களும் தடுமாறக்கூடும். அந்த நேரத்தில் வாரிசுகளாகிய நாம் செய்கின்ற தர்ப்பணமானது அவர்களை சாந்தப்படுத்துவதோடு அவர்களின் தாகத்தையும் தீர்த்து வைக்கிறது. ஆபத்து நேரத்தில் செய்யப்படும் உதவிக்கான பலன் சற்று அதிகமாகவே கிடைப்பது போலவே கிரஹண காலத்தில் செய்யப்படும் தர்ப்பணத்திற்கும் பலன் அதிகமாகக் கிடைக்கும் என்பதால்தான் சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுகிறது.

* எனது மதமே உயர்ந்தது, எனது கடவுளே உண்மையானது என்று சொல்வது சரியா?
- சு.பாலசுப்ரமணியன், இராமேஸ்வரம்.

தவறு. மதம் என்பது இறைவனை அடைவதற்கான ஒரு வழி. இறைசக்தி என்பதும் ஒன்றே. அவரவருக்கு பிடித்த வழியில் சென்று இறைவனைக் காண முயற்சிக்கிறார்கள். அவரவருக்கு பிடித்தமான உருவில் இறைவன் திருவுருவத்தைக் காண்கிறார்கள். பகவத்கீதையும், பைபிளும், திருக்குர்ஆனும் ஒரே மாதிரியான கருத்துகளையே வலியுறுத்துகின்றன. புனித நூல்கள் அனைத்தும் தத்துவ நூல்களே. இவற்றில் எந்த ஒரு நூலும் நாம் தற்போது கடைபிடித்து வரும் மதம் சார்ந்த நம்பிக்கைகளை வலியுறுத்தவில்லை. ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதே அனைத்து மதங்களும், புனித நூல்களும் உரைக்கின்ற கருத்து.

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் மட்டுமல்லாமல் பௌத்தம், சமணம் உட்பட அனைத்து மதங்களும் நீதி, நேர்மை, நாணயம், அன்பு, பரிவு, கருணை என்று சத்வ குணங்களையே போதிக்கின்றன. மதம் சார்ந்த மனிதர்களை விடுங்கள், நாத்திகவாதிகளாலும் இறைவனைக் காண இயலும். ஆம். நாத்திகமும் கூட இறைவனைக் காண்பதற்கான ஒரு வழியே. ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே, நீ எதைச் செய்தாலும் அதனுள் நான் இருக்கிறேன்’ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் உரைக்கிறார். நாத்திகவாதிகள் கடவுள் மறுப்புக் கொள்கை என்ற கடமையைச் செய்கிறார்கள். ‘கடவுள் இல்லை’ என்று சொல்லும்போதும் கடவுளை நினைத்துதான் அப்படி உச்சரிக்கிறார்கள்!

ஆத்திகவாதிகளைவிட கடவுளையும், மதநூல்கள் சொல்லும் கருத்துகளையும் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் நாத்திகவாதிகளே. கடவுள் குறித்த ஆராய்ச்சியும், அது சம்பந்தமான விமர்சனமும் (எதிர்மறையானதாகவே இருந்தாலும்) அவர்கள் மனதில் பக்குவத்தை உண்டாக்கும். முழுமையான நாத்திகவாதி பக்குவம் அடைந்தவர் என்பதால் அமைதியாகவே காணப்படுவார். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது’ம் உண்மையே. அன்பும், பாசமும், கருணையும், பரிவும் எங்கு நிறைந்துள்ளதோ அங்கு இறைவன் நிலைத்திருப்பதைக் காண இயலும். அத்தனை மகத்துவம் வாய்ந்த இறைவனுக்கு மதச்சாயம் பூச யாராலும் இயலாது. என் மதம்தான் உயர்ந்தது, எனது கடவுளே உண்மையானது என்று சொல்வது தவறு மட்டுமல்ல, அறிவீனமும் கூட.

* உதடுகூட அசையாமல் ஜபிக்கப்படும் மந்திரம் அதிக சக்தி வாய்ந்ததா?
-தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

நிச்சயமாக. ஜபம் என்பதே உதடு அசையாமல் மனதிற்குள் சொல்லவேண்டியதுதான். காயத்ரி ஜபம், மூலமந்த்ர ஜபம் என்று கேள்விபட்டிருப்பீர்கள். இந்த மந்திரங்களை உதடு கூட அசையாமல் மனதிற்குள் ஜபம் செய்யும்போதுதான் முழுமையான பலனை அடைய இயலும். அதேநேரத்தில் பாராயணம் செய்யப்படும் மந்திரங்களை அக்ஷர சுத்தமாக, சரியான ஸ்வரத்துடனும், ஒலியுடனும் உச்சரிக்க வேண்டும். உதாரணத்திற்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாமம் முதலான மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். அதிக சக்தி வாய்ந்த மந்திரங்களை உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையே.

* சுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியல்ல என்பது எல்லா சமுதாயத்திலும் கடைபிடிக்கப்படும் விதி. எனினும் ஒருசில பெண்கள் மொட்டை அடிப்பது, நுனிமுடி தருவது எனச் செய்கிறார்களே, இது சரியா?
-சு.கௌரிபாய், பொன்னேரி.

சரியே. சுமங்கலிப் பெண்கள் மொட்டை அடிப்பது, நுனிமுடி தருவது எல்லாம் பிரார்த்தனையாகவே நிகழ்கின்றன. சுமங்கலிப் பெண்ணிற்கு தலைமுடி அதிமுக்கியம் எனத் தெரிந்தும் அதனைத் தியாகம் செய்யத் துணிகிறார்கள் என்றால் அவர்களின் பிரார்த்தனை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். எந்த ஒரு சுமங்கலிப் பெண்ணும் சாதாரணமான கோரிக்கையை முன்வைத்து இவ்வாறு வேண்டிக் கொள்வதில்லை. கணவர் மற்றும் பிள்ளைகள் நோய் நொடிகள் ஏதுமின்றி தீர்க்காயுளுடன் வாழவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கடுமையான பிரார்த்தனைகளை இறைவனிடம் முன்வைக்கிறார்கள், அதனை நிறைவேற்றவும் செய்கிறார்கள். பிரார்த்தனை என்று வரும்போது அந்த சம்பிரதாயத்தில் குறை காண இயலாது.

* காசிக்கு சென்றால், ராமேஸ்வரத்திற்கும் செல்ல வேண்டுமா?
-பார்வதி வைரமுத்து, இராயபுரம்.

அவசியம் செல்ல வேண்டும். காசி யாத்திரைக்கு ஒரு மரபு உண்டு. முதலில் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக் கடலில் ஸ்நானம் செய்து அங்கிருந்து தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தப் புனித நீரை காசியில் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்யவேண்டும். பிறகு காசியிலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து 21 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து கங்கை நீரை ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகிக்கவேண்டும். இவ்வாறு அர்ப்பணம் செய்த நீரானது கோடி தீர்த்தம் என்ற பெயரில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

வழியில் நீங்கள் சந்திக்கும் அனைத்து புனித நதிகளில் இருந்தும் தீர்த்தத்தை சேகரித்துக் கொள்ள வேண்டும். யாத்திரை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் காசியிலிருந்து கொண்டு வரும் கங்கை நீர், ராமேஸ்வரத்தில் 21 தீர்த்தங்களிலும் சேகரிக்கும் நீர், கோடி தீர்த்தம், வழியில் சேகரிக்கும் அனைத்து புனித நதிகளினுடைய நீர் இவையெல்லாவற்றையும் ஒன்றிணைத்து குடும்ப சாஸ்திரிகள் அல்லது புரோஹிதரின் துணையுடன் கங்கை பூஜை செய்து வழிபட வேண்டும். இந்த கங்கை பூஜைக்கு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து எல்லோருக்கும் இந்த தீர்த்த பிரசாதத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்த்தங்களை சேகரிக்கும் யாத்திரை என்பதாலேயே இதற்கு தீர்த்த யாத்திரை என்று பெயர். ஆக, காசிக்கு செல்வதற்கு முன்னாலும், பின்னாலும் இருமுறையும் ராமேஸ்வரம் அவசியம் செல்ல வேண்டும். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தான் உங்களது யாத்திரை ஆரம்பிக்கிறது. எங்கிருந்து புறப்படுகிறோமோ, அங்கே திரும்பவந்து யாத்திரையை முடிக்க வேண்டும் என்பதால் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு அவசியம் செல்ல வேண்டும். அதன் பின்பே வீடு திரும்ப வேண்டும். அப்போதுதான் காசியாத்திரை முழுமை பெறும்.

* ஜாதகத்தில் சூரியன், ராகு இணைவு என்பது குழந்தையின்மை என்ற பித்ரு தோஷத்தினைத் தரும் என்கிறார்களே, சரியா?
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

தவறு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒருமாத காலத்திற்கு சூரியன்-ராகுவின் இணைவு நிச்சயமாக இருக்கும். இந்த விளம்பி வருடத்திலும் ஆடி மாதம் முழுவதும் சூரியன்-ராகுவின் இணைவு நிச்சயமாக உண்டு. அப்படியிருக்க இந்த ஒரு மாதம் முழுவதும் பிறக்கும் ஜாதகர்களுக்கு குழந்தையின்மை என்ற தோஷம் தாக்குமா? வருடத்திற்கு ஒரு மாதம் என்றால் எத்தனை பேருக்கு குழந்தை பிறக்காமல் போகும்? இந்தக் கூற்றினை உண்மை என்று வைத்துக்கொண்டால் இந்த ஒரு மாதம் முழுவதும் குழந்தை பிறப்பை தடை செய்யும் விதமாக எல்லோரும் முன்னரே திட்டமிட்டு வைத்துக் கொள்வார்களே!

ஜாதகத்தில் சூரியன்-ராகுவின் இணைவு, கண்டிப்பாக பித்ரு தோஷத்தினைத் தராது. பித்ரு தோஷம் என்பது ஒன்பதாம் பாவத்தினை வைத்தும், அந்த பாவத்தின் அதிபதியின் பலத்தினைக் கொண்டும், பாவத்தில் சஞ்சரிக்கும் கிரஹங்களின் பலத்தினைக் கொண்டும் அறியப்பட வேண்டியதாகும். சூரியன்-ராகுவின் இணைவு இருந்தாலே ஜாதகரை பித்ரு தோஷம் தாக்கும், அதனால் குழந்தையின்மை உண்டாகும் என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து.

* ராகு-கேது கிரஹங்கள் வலமிருந்து இடமாக சுற்றுகிறதே, அதன் காரணம் என்ன?
- ந. ஜெயசூர்யா, கண்ணமங்கலம்.

தேவர்களை வரிசையாக அமரவைத்து தன்வந்திரி பகவான் அமிர்தத்தை வழங்கிவரும்போது தேவர்களின் வரிசையினுள் புகுந்த அசுரன் ஒருவனும் அமிர்தத்தை பெற்று அருந்திவிடுகிறான். தேவர்களின் வரிசையில் இருந்த சூரியனும், சந்திரனும் அசுரனைக் காட்டிக்கொடுக்க, கோபம் கொண்ட மகாவிஷ்ணு அசுரனின் தலையை கொய்துவிடுகிறார். அமிர்தத்தை உண்டிருந்ததால் அசுரனுக்கு மரணம் சம்பவிக்கவில்லை. தனியாகச் சென்ற தலைப்பகுதிக்கு பாம்பின் உடலும், உடம்புப் பகுதிக்கு பாம்பின் தலையுமாக இரு உடல்கள் அந்த அசுரனுக்குக் கிடைக்கின்றன.

மனிதனின் தலையையும், பாம்பின் உடம்பினையும் கொண்ட உருவம் ராகு என்றும், மனித உடம்பு பாம்பின் தலையைக் கொண்டிருக்கும் உருவம் கேது என்றும் பெயர் பெற்று நவகிரஹங்களில் இடம் பிடித்ததாகவும், சூரியனும், சந்திரனும் அசுரனைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் இந்த ராகுவும், கேதுவும் சூரியனையும், சந்திரனையும் விழுங்கச் செல்வதாகவும், அவ்வாறு அவர்கள் விழுங்கும் காலமே கிரஹணம் என்றும், இவர்கள் அசுர குணம் கொண்டவர்கள் என்பதால் எதிர்திசையில் சுற்றுகின்றன என்றும் ஒரு கதை உண்டு. ஜோதிட அறிவியல் இந்த கதையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ராகு, கேது இருவரையும் ‘சாயா கிரஹம்’ என்று சமஸ்கிருத ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தமிழில் நிழல் கிரஹங்கள் என்கிறார்கள். ஆனால், உண்மையில், பழங்கால சமஸ்கிருத ஜோதிட நூல்களில் ராகு-கேது பற்றிய குறிப்பு இல்லவே இல்லை. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கோள்களைப் பற்றி மட்டுமே அந்த ஜோதிட நூல்கள் பேசுகின்றன. கிரஹணங்களைப் பற்றிய ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும், வேத மந்திரங்களின் அடிப்படையிலும், பின்னாளில் ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்கள் இருப்பதாக ஜோதிட அறிஞர்கள் நம்பத் தொடங்கினர்.

இவர்களது கண்களுக்கு இந்த இரண்டும் புகைசூழ்ந்த மண்டலமாக தென்பட்டதால் (தூம்ர வர்ணம்) நிழலாக பாவித்தனர். இவை இரண்டும் நிலப்பரப்பினைக் கொண்டவை அல்ல. புகை மண்டலமான, நிலப்பரப்பற்ற, நிழற்கோள்கள் என்று அறிவித்தனர். நிழல் என்பது, ஒரு ஒளி மண்டலத்தில் ஏதோ ஒரு பொருள் குறிக்கிடுவதால் அந்த ஒளி மறைக்கப்பட்டு உருவாகும் கருமையான பிம்பம் ஆகும். ஆனால் ராகுவும், கேதுவும் எந்த ஒரு பொருளின் பிம்பமும் அல்ல. அதேபோன்று நிழல் என்பது அதற்கு ஆதாரமான பொருளைப் பின்தொடர்ந்து வருவது. ஆனால் ராகுவும், கேதுவும் யாரையும் பின்தொடர்வதும் இல்லை.

இவை இரண்டும் ஒரே இடத்தில் நிற்கக்கூடிய புகை மண்டலங்கள். இவற்றை வெட்டும் புள்ளிகள் என்று ஜோதிட அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சரி, ஒரே இடத்தில் நிற்கக் கூடிய புள்ளிகள் என்றால் பிறகு ராகு-கேது பெயர்ச்சி என்பது என்ன? இன்ன ராசியிலிருந்து இன்ன ராசிக்கு இவை இடம்பெயர்வதாகச் சொல்கிறார்களே, அது தவறா? இதே கேள்வி சூரியனுக்கும் பொருந்தும். அறிவியல் ரீதியாக சூரியன், ஒரு மிகப்பெரிய விண்மீன். அது ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும் மிகப்பெரிய நெருப்புக் கோளம். ஆனால் மாதா மாதம் சூரியனின் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

அப்படியென்றால் இதில் எது உண்மை? உண்மையில் சூரியக் குடும்பம் அமைந்துள்ள இந்த அண்டத்தை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்துப் பார்க்கிறோம். இந்த அண்டம் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அண்டத்தின் மத்தியில் சூரியன் உள்ளதால் இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்தில் இடம் பிடிக்கிறது. ராகு-கேது இரண்டும் தொலைதூரத்தில் ஒரே இடத்தில் நிற்கின்ற வெட்டும் புள்ளிகள் என்பதாலும், சுழலுகின்ற இந்த அண்டத்தினூடே நமது பூமியும் சுற்றி வருவதாலும், பூமியில் வசிக்கும் நம் கண்களுக்கு அவை பின்நோக்கி செல்வதாகத் தெரிகிறது.

ஓடும் ரயிலில் பயணிக்கின்ற நம் கண்களுக்கு, அருகில் நிற்கும் ரயில் பின்நோக்கி செல்வதாகத் தோன்றுவதுபோல. ராகு-கேது வக்கிர கதியில், அதாவது வலமிருந்து இடமாகப் பின்நோக்கி சுற்றுவதாக நம் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த அண்டமும் சுழலுவதால் அந்தந்த காலக்கட்டத்தில் எந்த ராசி மண்டலம் இந்த புள்ளிகளுக்கு நேராக வருகிறதோ, அதில் இந்த நிழற்கோள்கள் வந்து அமர்வதாக நாம் கணக்கில் கொண்டு பலன் காண்கிறோம். உண்மையில் ராகு-கேது இரண்டும் வலமிருந்து இடமாக, அதாவது எதிர்திசையில் சுற்றுவதில்லை. அவை ஒரே இடத்தில் நிற்கின்றன. பூமிதான் சுற்றுகிறது. இது கதையல்ல, ஜோதிட அறிவியல் சொல்லும் உண்மை.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா