தவத்தின் பலன் என்ன?



மகாபாரதம் - 90

சனத் சுஜாத முனிவர் தொடர்ந்து விளக்கினார்: ‘‘இன்னாருக்கு இன்ன தர்மம் என்று வேதம் வகுத்திருக்கிறது. இந்தப் பிரிவினை பூமியின் தர்மத்தை காக்க பயன்படுகிறது. பூமியின் இயக்கத்தை நடத்துகிறது. பூமியின் இயக்கம் என்பது மனித வாழ்க்கை. ஆனால் இது மேம்போக்கான விஷயம். இவற்றைத் தாண்டி ஒரு இடத்திற்கு மனிதர்கள் போக முடியும். (சிந்திக்க முடியும்) என்று வேதமே கூறுகிறது. வேதம் என்பது வாழ்வுக்கான வழிகாட்டி. வாழ்வுக்கப்பாலும் அதுவே வழிகாட்டி. எனவே, அது ஒருகாலும் புறக்கணிக்கக்கூடியது அல்ல.

ஒரேவிதமான சரீர மன அமைப்புகளுடைய மனிதருக்கு நடுவே போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டியால் எப்படியும் மேன்மையடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தர்ம காரியங்களில் அந்தணர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள். இங்கேயே இந்த விஷயத்தை தெளிந்து ஆன்ம தரிசனம் பெற்று தெளிவு என்கிற உன்னத லோகத்தை அடைகிறார்கள். தர்மத்தை பஹிர் முகமாக பேசுபவன் உயர்ந்தவன் இல்லை. தர்மத்தை பேசியும், தான் இருப்பதாகச் சொல்லியும், வாழ்வதில் வெற்றி கிடைப்பதில்லை. மாறாக தர்மம் அந்தர்முகமாகி விடவேண்டும். அவனே தர்மமாகி விடவேண்டும். இது மிகப்பெரிய சாதனை.

ஓரளவுக்கு மேல் இதைச் சொல்லித்தர முடியாது. அப்படி தர்மத்தை அந்தர்முகமாக்கிக் கொண்டவனுக்கு, அதுவாகவே வாழ்கின்றவனுக்கு மரணம் பயம் தருவதில்லை. அவனைத் தீண்டுவதே இல்லை. தன்னைப் பற்றிய பெருமையை வெளியே சொல்லி தன்னை மிக உத்தமன் என்று சொல்லிக் கொள்கிறவன் அப்படி வாழ்வது உண்மையாயினும், நாய்க்கு ஒப்பாவான். நாய் கக்கியதை மறுபடி தின்பதுபோல தான் வாழ்வதைச் சொல்லி அதனால் மறுபடியும் பிராபல்யம் அடைய முயற்சிக்கிறான். இவன் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ச்சியடைவான்.

எவன் தன் குடும்பத்து மக்களாலும் தன் பிற பாவத்தை மறைத்துக் கொள்கிறானோ, தன்னை சாதாரணமாகக் காட்டி வலம் வருகிறானோ, உலக குணங்கள் பார்த்து உள்ளே நகைத்தபடி இருக்கிறானோ, அவனை மரணம் தீண்டுவதில்லை. அவனை காலம் நினைவில் கொள்கிறது. அவன் வாழ்பவனாக ஆகிறான். சரீரம் உகுத்தப் பிறகும் கெளரவிக்கப்படுகிறான். இருப்பதாக உணரப்படுகிறான். இவனை ஞானி என்றும் அழைக்கிறார்கள். இந்த ஞானிக்கு மரணம் இல்லையென்றும் சொல்கிறார்கள். எவன் இந்த ஒரு விஷயத்தை அடைய களைப்படையவதில்லையோ,

எவன் இந்த விஷயத்தை வழங்க தானம் பெறுவதில்லையோ, எவன் நல்லோர்களால் மதிக்கப்படுகிறானோ, எவனால் இந்த பூமிக்கு உபத்திரவம் இல்லையோ, எவன் இந்த விஷயத்திற்கு சீடனாக இருக்கிறானோ அவனே பிராமணனாவான். பெரிய வித்வான் ஆவான். பிரம்ம வேதாவும் அவனே. எவன் உலகப்பார்வையில் ஏழையாக இருந்தும் இந்த வித தெய்வ சம்பந்தம் கொள்கிறானோ, எவன் பூஜை உபாசனை முறைகளில் முழுமையாக இருக்கிறானோ, இந்த தத்துவத்திலிருந்து எவன் அசைக்க முடியாதவனாக இருக்கிறானோ, எவனை இந்த உலகம் அடக்க முடியாதோ அவன் பிரம்மத்தின் சாட்சாத் உருவம்.

உலகம் மதிப்பதால் எவன் கர்வப்படவில்லையோ அல்லது மதிக்கப்படும் மனிதனைப் பார்த்து எரிச்சலடைவதில்லையோ, எவன் இந்த வித ஆராய்ச்சி செய்பவர்களால் மதிக்கப்படுகிறானோ அவன் கௌரவிக்கப்பட வேண்டியவன். கண்களைத் திறந்து மூடுவது போன்ற இயல்பான தன்மையோடு இந்த வித்வானை மதிக்க வேண்டும். கட்டளை இட்டா இமைகள் அசைகின்றன? தானாக நடைபெறவில்லையா? இத்தகைய வித்வானை கண்டதும் தானாக பணிவு வரவேண்டும். இதுவே பூமியில் நல்லது வளரும் விதம். ஆனால் இந்த உலகத்தில் அதர்மத்தில் நிபுணனும், ஏமாற்றுவதில் கபடத்தில் நிபுணனும் கெட்டிக்காரனும், மதிக்கத்தக்க மனிதனை வலிந்து அவமதிப்பவனும் இருக்கிறார்கள்.

மானமும் மௌனமும் ஒருபொழுதும் ஒன்றாக இருப்பதில்லை. மானம் இந்த உலக சுகத்தோடு சம்பந்தப்பட்டது. மௌனம் பரலோக சுகத்தோடு சம்பந்தப்பட்டது. இப்பூவுலகில் ஐஸ்வர்ய ரூபமுடன் இருக்கும் லக்ஷ்மி சுகத்தின் இருப்பிடம். அவளே இடையூறுகளும் செய்வாள். ஆனால் பிரம்ம ஞானமயமான லக்ஷ்மி மனிதனுக்கு கிடைத்ததற்கு அரியவளாவாள். வித்வான்கள் பிரம்ம ஞானமயமான லக்ஷ்மியை அடைய பல வழிகளைக் கூறுகிறார்கள். இவற்றை பின்பற்ற கடினமானவை. அவற்றின் பெயர்கள் சத்தியம், எளிமை, வெட்கம், தவம், சௌசம், வித்தை என்பனவாகும்.’’

திருதராஷ்டிரன் கை உயர்த்தி தன் கேள்வியை சனத் சுஜாத முனிவர் முன்பு வைத்தார்: ‘‘மௌனம் என்பது என்ன, பேசாது இருத்தலா, பேச்சே தோன்றாது இருத்தலா?’’‘‘மனதோடு வாக்கு பேதம் ஏற்படுத்தாது இருத்தலே மௌனமாகும். மனம் என்ன உணர்கிறதோ அதை சொல்லாக மாற்றுவதே வாக்காகும். அவை பலன் கருதி சொல்லப்பட மாட்டா. வெறும் வெளிப்பாடு, அவ்வளவே. சிலநேரத்தில் உன்னை மன்னா என்று அழைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. காரியம் கருதி அழைத்தால் அது மௌனம் இல்லை சப்தம்.

மனம் நினைப்பதை சொல்வது பரமாத்மாவின் அம்சமாகும். அங்கே ஒரு தந்திரமும் இல்லை.’’‘‘அப்படியானால் சனத் முனிவரே வேதங்கள் சொல்லப்படுகின்றனவே, அவை சப்தமா, மௌனமா?’’‘‘மன்னா, உன்னிடம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. ரிக், யஜுர், சாம வேதங்கள் அவற்றைச் சொல்லுகின்ற மனிதனை எந்த பாவ கர்மத்திலிருந்தும் ரட்சிப்பதில்லை. பொய்யாக நடப்பவனை வேதங்கள் காப்பாற்றாது. வேதங்களை சொல்வதோடு உண்மையைத் தேடுபவனாகவும் ஒருவன் இருக்க வேண்டும். சிறகு முளைத்ததும் பறவை தனது கூட்டை துறந்து விடுவது போல இறுதி காலத்தில் அந்த மனிதன் வேதங்களையும் துறந்து விடுகிறான்.’’

திருதராஷ்டிரன் கவலையோடு அவரைப் பார்த்தார். ‘‘வேதங்கள் ரட்சிப்பதில் திறமையற்றது என்றா சொல்கிறீர்கள்? காலம் காலமாக சொல்லப்படும் ஒரு கூற்றை எளிதாக மறுக்கிறீர்களே. வேதங்களும், வேத பிராமணர்களும் உயர்வில்லையா?’’‘‘மகாராஜா அந்த பரப்பிரம்ம பரமாத்மாவின் பெயரும், செயலும் வேதத்தில் அறுதியிட்டு உறுதி செய்யப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவன் சொரூபம் இந்த உலகத்தின் நியதிகளிலிருந்து வேறானது. அலாதியானது. அவனை அடைவதற்கான வழி, வேதம். வழி இறுதியாகாது. வேதம் கடவுளாகாது. தொடர்ந்து பரமாத்மாவை விசாரிக்க வேதம் உதவி செய்கிறது.

ஆனால் வேதம் கடவுளை அறிய உதவி செய்யும் என்கிற பற்றும் அற்று அமைதியானவன் மனம் ஞானத்தால் பிரகாசிக்கிறது. இதை அடைய முடியாத வண்ணம் மனம் போகமென்னும் மார்கத்தையும் மினுமினுப்பு காட்டுகிறது. தர்மரீதியாக போகத்தை அனுபவித்தவனும் பரலோகம் வருகிறான். அங்கும் போகத்தை தொடர்கிறான். பிறகு மறுபடியும் பூமிக்கு வந்து ‘பற்றற்ற’ என்ற இடத்தை தேடுகிறான். அவன் தவம் தொடர்கிறது.’’‘‘சனத் முனிவரே, இந்த தவத்தைப் பற்றி மறுபடியும் விளக்கிச் சொல்லுங்கள். புரிந்தது போல் தோன்றுகிறது. இது எவ்வாறு உயர்ந்ததாக ஆகிறது என்று சொல்லுங்கள்.’’

‘‘மன்னா, தவத்தில் போக வாசனை சிறிதும் இல்லை. இந்த பூமியில் எல்லா உயிர்களோடும் அவன் வாழ்ந்தாலும் பார்வைக்கு சாதாரணமானவனாக இருந்தாலும் பூமியில் உள்ள விஷயங்கள் மீது, சக மனிதர்கள் தரும் மரியாதையின் மீது பற்றற்றவனாய் புலன்களை வெறுமே இருக்கவிட்டு வளர்கிறான். அவனை மாயத்தில் அழுத்த முடியாத அந்தப் புலன்கள் வெளிறி நிற்கின்றன. வெளிறிய புலன்கள் கொண்டவனுக்கு வாழ்வின் சூட்சுமம் புரியும். தான் பிறந்ததும், இருப்பதும் முந்தைய பிறவியில் வளர்ந்ததும், இறந்ததும் நன்கு அறிவான். இவை எவரோடும் பேசப்பட தகுந்தவை அல்ல.

இந்த தவமே புலன்கள் வெளிறி நிற்கும். பற்றற்ற மனோ நிலையான இந்த தவமே உலகத்தின் ஆணிவேர். இதுவே உலகின் குணம். மோகம் அதிகரிக்க உலகம் இயங்கும்.’’‘‘சனத் சுஜாத முனிவரே, தவம் பற்றி மேலும் கூறுங்கள். தவம் என்ற வார்த்தை மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் அது செய்வது என்ன என்று அறியாமல் இருக்கிறேன்.’’‘‘மன்னா தவத்திற்கு எதிராக பன்னிரண்டு குற்றங்கள் உள்ளன. முதல் குற்றம், கோபம். பிறகு காமம், குரோதம், லோபம், போகம், சிட்சை (தண்டிக்க விரும்புவது) இரக்கமின்மை, அசூயை, கர்வம், சோகம், ஆர்வம், பொறாமை, நிந்தை.

இந்த குற்றங்களால் ஒருவன் தவம் பாதிக்கப்படும். மான்களைக் கொல்ல வேடன் காத்திருப்பது போல இந்தக் குற்றங்கள் மனிதனை அவன் எதிர்பாராத சமயத்தில் தாக்குகின்றன.தன்னை பெருமைப்படுத்திக் கொள்பவன் பேராசைக்காரன். சிறிதளவு அவமானத்தையும் சகிக்காதவன் அறிவிலி. நிரந்தர கோபமுடையவன், நோயாளி. சஞ்சலமானவன், பைத்தியக்காரன். சலனடைந்தவர்களை தனக்கு அண்டியவர்களை காப்பாற்றாதவன், மிகப் பெரிய பாபி. இதில் சிக்கிக் கொண்டவர்கள் மீள்வது அரிது. தவம் பலிக்காது. எப்பொழுதும் சம்போக நினைப்பிலேயே இருக்கிறவன், உயிர்களிடத்தில் சமமற்ற நிலைமையுடையவன்,

தன்னை மானஸ்தவனாகக் காட்டிக் கொள்கிறவன், தானம் கொடுத்து விட்டு நொந்து கொள்பவன், தானமே கொடுக்காத கருமி, காமத்தை புகழ்பவன், பெண்களை ஈனம் என்று வெறுப்பவன் இவர்கள் குரூரமானவர்கள்.’’‘‘தவத்தின் பலன் என்ன? அல்லது யாரால் தவம் செய்ய முடியும்?’’‘‘தர்மம், சத்தியம், புலனடக்கம், வெட்கம் கொள்ளல், பொறுமையோடு இருத்தல், துவேஷமின்மை, யாகம் செய்தல், தானமளித்தல், தைரியத்தோடு இருத்தல், சாஸ்திர ஞானம், தொடர்ந்து தவம் செய்யும் உறுதி என்கிற விஷயங்களை எவன் கொள்கிறானோ அவன் இங்குள்ள மனிதர் அனைவருக்கும் தலைமை ஏற்கிறான். மேற்சொன்னவற்றில் இரண்டு மூன்று குணங்கள் இருந்தாலும் அவனை உலகம் மரியாதையோடு பார்க்கும்.

‘‘தவம் செய்ய முயற்சிக்கிறவன் பன்னிரண்டு விஷயங்களை அறவே தவிர்க்க வேண்டும். தன் கடமை தெரியாது இருத்தல், பொய் சொல்லுதல், பிறர் குணத்தில் குற்றம் பார்த்தல், பெண்ணாசை, எப்போதும் செல்வம் சம்பாதிப்பதில் ஈடுபடுதல், மது உணவு போன்ற சிற்றின்ப விருப்பம், கோபம், சோகம், ஆசை, லோபம், கோள் சொல்லும் வழக்கம், பொறாமை, இம்சை படுத்துவதில் ஆசை, எப்போதும் எதுவோ வேண்டுமென்ற தாபம், சாஸ்திரத்தை விரும்பாமை, கடமையை மறுத்தல், அதிகம் உளறுதல், தன்னை பெரியவனாகக் கருதுதல் போன்ற குற்றங்களிலிருந்து விடுபடுவது தவத்திற்கு அருகே அழைத்துப் போகும்.

தியாகத்தில் காம தியாகமே மிகக் கடுமையானது. காமத்தை தியாகம் செய்தால் எல்லாமே வெல்லப்பட்டதாகிறது. சிறந்த ஆறு தியாகங்களைச் சொல்கிறேன் கேள்.‘‘செல்வம் பெற்றும் மகிழ்ச்சி அடையாமை. யக்ஞம், ஹோமம் செய்தல், கிணறு குளம் தோட்டம் அமைக்க செல்வத்தை செலவிடுதல், வைராக்கியத்தோடு காமத்தை துறத்தல் ஆகியவை மிக முக்கியமானவை. காமத்தை துறப்பது, வாக்குக்கு எட்டாத மோட்சத்தை அடைவது என்று வித்வான்கள் கூறுகிறார்கள். அதிக செல்வம் சேர்ப்பதால் பற்றின்மை வராது. விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள செல்வத்தை பயன்படுத்துகிறபோது அவனுக்கு மனநிம்மதி கிடைக்காது.

தவறோ என்ற உறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கும். விரும்பத்தகாதது எது நடந்தாலும் கவலைப்படக்கூடாது. இது நான்காவது தியாகம். எனக்கு மனைவியைக் கொடு. மகன், மகளைக் கொடு என்று யாசிக்காது இருத்தல் ஐந்தாவது தியாகம். தகுதியுள்ள யாசகன் வரும்போது அவனுக்கும் மனமுவந்து தானம் அளித்தல் ஆறாவது தியாகம். இந்த ஆறு தியாகங்களால் மனிதன் குற்றமற்றவனாகிறான்.‘‘குற்றமற்ற தன்மைக்கு எட்டு குணங்கள் உண்டு. சத்தியம், தியானம், விசாரம், சமாதானம், வைராக்கியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் சேர்க்காமை இவைகள் ஆத்ம தரிசனம் தரும்.

‘‘ஐந்து புலன்கள், ஆறாவதான மனம். இவற்றைப் பல்வேறு விவகாரங்களில் ஈடுபடுத்தும் போக உத்தி. இறந்தகால கவலையையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் கொண்டு வந்து கொடுக்கும். இந்த இரண்டுமே குற்றங்களாகும். கடந்தகாலம் பற்றி கவலையற்று இருப்பதும், எதிர்காலம் பற்றி எதுவும் எண்ணாது இருப்பதும் மனிதனை சுகமுள்ளவனாக்குகின்றன. இதுதான் சத்தியத்தை நினைத்தல். இந்த சத்தியத்தோடு இருத்தலே மனிதன் செய்ய வேண்டிய விரதம்.’’‘‘யார் சிறந்த பிராமணன் முனிவரே? நான்கு வேதத்தோடு ஐந்தாவதாக புராணத்தையும் அறிந்தவனா? அல்லது நான்கு வேதம் தெரிந்தவனா?

என்ன படிப்பு படித்தவன் பிராமணன்?’’‘‘சிருஷ்டியின் தொடக்கத்தில் வேதங்கள் ஒன்றாகவே இருந்தன. அதை அறிந்து கொள்வார் இல்லாததால் வேதங்கள் நான்காக பகுக்கப்பட்டன. வேதத்தின் சாரத்தை அறிவதற்குப் பதில் தானம், கல்விப்பயிற்சி, யக்ஞம் போன்றவற்றால் ஈடுபட்டு ஆசைப் அகப்பட்டனர். உண்மையில் பரமாத்மாவிடமிருந்து நழுவியவர்கள் இவற்றைச் செய்தனர்.‘‘சத்தியத்தில் நாட்டம் உடையவர்கள் இடையறாது சத்தியத்திலேயே இருக்க வேண்டும். யக்ஞம், பூஜை போன்ற கர்மங்களை மனதாலோ, வாக்காலோ, செயலாலோ செய்தபடி இருத்தல் வேண்டும்.

வெறும் பேச்சினால் ஒருவனை பிராமணன் என்று சொல்லிவிட முடியாது. சத்தியத்தில் நிலைப்பவனை அறிந்து கொள்ளுதல் எளிது. உண்மையில் வேதத்தின் ரகசியத்தை அறிந்தவர் யாரும் கிடையாது. அல்லது ஓரிருவர் இருக்கக்கூடும். வேத வாக்கியங்களை அறிந்தவன் வேதம் அறிந்தவன் அல்ல.‘‘வேதங்களின் மூலம் பரமாத்மாவை அறிய வேண்டும். பரமாத்மாவை அறிந்தவரே அறிஞர். உள்ளம் தூய்மையாக இருக்குமானால் சத்குரு அல்லது பிரபுவின் மூலம் சாதகன் இந்த ரகசியத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆத்மாவைத் தேட வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று அலையவேண்டிய அவசியம் இல்லை.

திசைகள் மனிதரால் பகுக்கப்பட்டவையே. ஆத்மாவை வேத வாக்கியங்களில் தேடக்கூடாது. தவத்தால் மட்டுமே அதை அறிய முடியும். வாக்கு முதலிய புலன்கள் அற்று, எழுத்துகள் அற்று, பேச்சுகள் அற்று பரமாத்மாவை தேடவேண்டும். மனதுக்குள் தேட வேண்டும். ஈஸ்வர தியானம் இதுவே. மௌனமாக இருப்பதாலோ, காட்டில் வசிப்பதாலோ ஒருவன் முனிவனாகி விட முடியாது. உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்தே வெளிப்படுகின்றன. மண், மரம், நீர், காற்று, உயிரினங்கள் பிரம்ம சொரூபம். இவை அனைத்தையும் ஒரே பார்வையில் பேதமற்று எவன் பார்க்கிறானோ, இதுவும், அதுவும், எதுவும் ஒன்றே என்றுத் தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்கிறானோ அவன் பார்வையாளன் என்று கூறப்படுகிறான்.

தான தர்மத்தின் மூலமும், வேதம் கற்பதின் மூலமும் இந்த நிலைக்கு அருகே ஒரு மனிதன் போகக்கூடும்.’’‘‘சனத் சுஜாதரே ஒரு பிரம்ம வித்தையை மிக எளிதாக எனக்குச் சொல்லித் தருகிறீர்கள். தொடர்ந்து சொல்லுங்கள்.’’‘‘இப்படி அடிக்கடி கேள்வி கேட்பதால் சந்தோஷப்படுகிறாய். இப்படி அவசரப்படுவது பிரம்ம ரகசியத்தை சொல்லித் தராது. சுத்த அறிவில் மனம் லயித்த பிறகு எல்லா வளர்ச்சியையும் (விருத்தி) எதிர்க்கும், அடக்கும் நிலைக்குப் பெயரே பிரம்ம வித்தை. இது பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கிறது.’’

‘‘சனத் சுஜாதரே பிரம்மச்சரியம் எப்படி கடைப்பிடிக்கப்பட வேண்டும்?’’‘‘எவன் ஒருவன் ஆச்சாரியனின் ஆசிரமத்தில் பிரவேசித்து தன் விருப்பங்கள் அனைத்தையும் விலக்கி விடுகிறானோ, அவனே பிரம்மச்சாரி. அவனால் மௌஞ்சிப் புல்லிலிருந்து உதிர்வது போல இந்த சரீரத்திலிருந்து ஆத்மாவை தனியாக்கிக்கொள்ள முடியும். தாயும் தந்தையுமே பிறப்பளிக்கிறார்கள். இப்படிப்பட்டவனுக்கு ஆச்சாரியனின் உபதேசம் பரம பவித்ரம் உடையதாகும்.‘சத்தியத்தை அறிய எவன் சொல்லிக் கொடுத்தானோ அந்த ஆச்சாரியனுக்கு ஒருபொழுதும் துரோகம் செய்யக்கூடாது. கோபமும், கர்வமும் இல்லாதவனே பிரம்மச்சாரி.

மனம் வாக்கு செயலால் ஆச்சாரியனுக்கு உதவுவது அவன் இரண்டாவது வேலை. இது பிரம்மச்சாரியின் கடமை. குருவிற்கு தரவேண்டிய மரியாதை. குருவின் மனைவிக்கும், மகனுக்கும் தரப்பட வேண்டும். தான் மிகுந்த உன்னத நிலையை அடைவதற்கு ஆச்சாரியனே காரணம் என்று ஒரு பிரம்மச்சாரி நினைப்பது அவன் மூன்றாவது வேலை. ஆச்சாரியனுடைய உபகாரத்திற்கு பதில் சொல்லாது, குரு தட்சிணை அளிக்காது, போகக்கூடாது. குருவிற்கு நான் உபசாரம் செய்கிறேன் என்று நினைப்பதுகூட பாபம். இச்சொல் அறவே நீக்கப்பட வேண்டும்.

இது நான்காவது நிலை.‘‘பிரம்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் கிடைத்த செல்வத்தை பிரம்மச்சாரி ஆச்சாரியனனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆச்சாரியன் பார்த்து தருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரம்மச்சரியத்தின் இந்த உயர்நிலையை அடைந்தவனுக்கு பெரும் திரளான மக்கள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதற்காக வருகிறார்கள். இந்த பிரம்மச்சாரி நிலையே தேவர்களுக்கு ஈடானது.‘‘சிந்தாமணி என்கிற ரசக்குளிகை, கேட்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் பொருள் கிடைக்கச் செய்வதுபோல, பிரம்மச்சரியம், விரும்பும் பொருளைத் தரும்.

மேலும் அவனுக்கு தேவையானது என்று இந்த உலகில் ஒரு பொருளும் இல்லை. அவன் மோட்சத்திற்கு அருகே இருக்கிறான். உலகம் அவனை கொண்டாடுகிறது.’’‘‘சனத் சுஜாதரே, பரமாத்மா, பரமாத்மா என்று பல தடவை சொன்னீர்கள். அதன் சொரூபம் எத்தகையது? சிகப்பா, வெளுப்பா, கருப்பா, தங்க மயமா?’’‘‘நீ பார்த்த எதிலும் அந்த பிரம்மத்தின் சொரூபம் இல்லை. சந்திர சூரியரிடமோ, நட்சத்திரங்களிடமோ, மின்னலிடமோ அவை இல்லை. இதுவரை நீ பார்த்த ஒளியிலிருந்து அது முற்றிலும் வேறாக இருக்கிறது.

இதைச் சொல்வது எப்படி? ‘இது போல’ என்று பரமாத்மாவை சொல்வதற்கு இந்த பிரபஞ்சத்தில் எந்த விஷயமும் இல்லை. காலத்தை விழுங்கக்கூடியது அந்த சொரூபம். பிறகு நான், நீ என்ற விஷயம் எப்படி வரும்? கற்றுக் கொடுப்பது, கற்பது என்பது எப்படி ஏற்படும்? அவற்றையெல்லாம் தாண்டிய விஷயம் இது. ஆனால் அதுதான் பிரபஞ்சத்தின் ஆதாரம். எல்லா பூதங்களும் (சக்திகளும்) அதனிடமிருந்தே தோன்றின. அதிலேயே மீற முடியாமல் கிடக்கின்றன. இந்த விஷயத்தை அறிபவன் அமரராகிறான். மிகப்பெரிய விடுதலையடைகிறான். மரணம் என்கிற விஷயம் இங்கு இல்லவே இல்லை.

‘‘மன்னா, குண தோஷங்களைப் பற்றி சொல்கிறேன் கேள். பேராசைக்காரன், குரூரமானவன், கடுமையாகப் பேசுபவன், கருமி, மனதிற்குள் கோபத்தை தக்க வைத்துக் கொள்பவன், அதிக தற்புகழ்ச்சி செய்பவன் போன்ற மனிதர்கள் எப்பொழுதும் குரூரமான செயல்களையே செய்கிறார்கள். தாங்கள் பெற்ற செல்வத்தை நல்வழியில் பயன்படுத்துவதில்லை. எந்நேரமும் சம்போகத்தில் மனதை வைத்திருப்பவன் சமநிலை அற்றவன். மிகுந்த கர்வி, தானம் அளித்து தன்னை புகழ்ந்து கொள்பவர், சாமான்ய மக்களிடம் ஏழை எளியன் என்று துவேஷம் கொள்பவர் பாவிகள் என்று கருதப்படுவார்கள்.

தர்மம், சத்தியம், தவம், புலனடக்கம், ஆசூயை இன்மை, வெட்கம், பொறுமை, குற்றம் பாராமை, தானம், சாஸ்திர ஞானம், தைரியம், மன்னித்தல் போன்றவை உயர்ந்தோரின் விரதங்களாகும். இவற்றைக் கைக்கொண்டவன் உலகத்தை ஆள முடியும். உலகத்திற்கு விரோதமான காரியங்களை செய்தல், சாஸ்திரத்திற்கு எதிராக நடத்தல், நல்லவர்கள் மீது குற்றம் சாட்டுதல், பொய் பேசுதல், காமம், குரோதம், பாராதீனம், மற்றவர் குறையை கூறுதல், கோள் சொல்லுதல், செல்வத்தை அழித்தல்,  பொறாமை, பிராணிகளுக்கு கஷ்டம் அளித்தல், அசூயை, அதீத மகிழ்ச்சி, அதிக உளறல், விவேக சூன்யம், பிறர் குணங்களில் குற்றம் கண்டுபிடிக்கும் சுபாவம் போன்றவை வாழ்க்கையை பாழடிக்கக்கூடியது.

(தொடரும்)

- பாலகுமாரன்