அம்பிகை அருளால் அகிலம் வசப்படும்



* ஒளிமுகம் நட்சத்திர மண்டலம்
ஒளிரும் முழுநிலவு கண்கள்
கடல் ஒடுங்கும் பொற்பாதம்
கனல் விழுங்கிய செவ்வாய்
நிலமாளும் வளைக்கரம்-மன
எல்லைக்காவல் அம்பிகையே, தாயே!

* நிறைமதி கலைவாணர் சூழ
அரியணையில் புன்னகை பூப்பவளே!
குறைமதி குழந்தை என்னை
குறைநீக்கி மடிசேர்த்த குணவதியே!
குவளை கண்கள் அருள்நோக்கால்
குங்கும அறிவு மணம்வீசும்!
* தாயின் அருகமர்ந்து அவள்
வீரத்திருவழகை ரசிப்பது தியானம்!
மந்திரம் ஆயிரம் திருநாமம்
மனதில் உருகுதல் தவம்!
அசையா சுடரென நானிருக்க
ஆடுவதும், ஆடவைப்பதும்
அம்பிகையே!
* ஆடிமாதம் மனநோய் அச்சமகற்ற
வேப்பிலை ஏந்திவரும் அருள்மாரி!
அம்பிகையருளால் அகிலம் வசப்படும்
அறிவுப்பொருள் விளங்கி மெய்ப்படும்!
அன்பு பெருந்தெய்வம் துணையால்
நாளும் நலமே விளையும்!
* இளமை, செல்வம், செல்வாக்கை
இன்புறும் காதலி அவளல்ல!
மாசற்ற மாறாதமனம் கண்டு
மகிழ்ந்து செல்வம் தந்து
பெருமைசூழ் வாழ்வை மாலைசூடி
பெருமிதம் கொள்வாள் அம்பிகை!
* மாஞ்சோலை பறவையாகி
மாட்டுத்தொழுவ மதில் கறவையாகி
மகத்தான மனித பிறப்பெடுத்தோம்!
மீனாட்சி பாதம் சரண்புகுவோம்!
வாழ்க்கை சகதியில் உழல்வதுவீண்!
சுழலும் பிறவி தொலைப்போம்!
* செடி, கொடிகளில் பசுமைதீட்டி
உயிர்தந்து விதிவகுத்து- மண்ணில்
அடிபரந்து வேராகி நிற்கிறாள்!
இயற்கை மூச்சாகி, உணவாகி
நிலமாகி, நீராகி, நெருப்பாகி
அழியாத வடிவெடுத்து சிரிக்கிறாள்!
* பிறந்தோம், தவழ்ந்தோம், நடந்தோம்
உண்டோம் சுகம் கண்டோம்!
நரை தரித்து நடை தளர்ந்தோம்1
நோயால் படுக்கை கிடந்தோம்!
அருள்விழி அம்பிகையை வணங்கி
ஒளிவாழ்வு, இளமை பெறுவோம்!

- விஷ்ணுதாசன்