எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* நான் ஓய்வு பெற்றுவிட்டேன். நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் முதுமையில் பிறந்த ஒரே மகள் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறாள். தினமும் தாயிடம் போராட்டமாகவே இருக்கிறாள். முதுமையில் எங்களைக் காப்பாற்றுவாளா? அவளது எதிர்காலம் எப்படி உள்ளது?
- மருதமுத்து, திருச்சி.

ஜெனரேஷன் கேப் பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறீர்கள். தற்கால சந்ததியினரின் வேகத்தோடு ஈடுகொடுக்க முடியாமலும், சரியான புரிதல் இல்லாமலும் தவிக்கிறீர்கள். பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி 16.08.2018வரை புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தின்படி ஜென்ம லக்னாதிபதி சனி வக்கிரம் பெற்று ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சரியான முடிவெடுக்கத் தெரியாமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.

சத்ரு-ரோக-ருண ஸ்தானம் என்ற ஆறாம் வீட்டில் லக்னாதிபதி சனி அமர்ந்திருந்தாலும், சனி தசை ஏழு வயதிற்குள் முடிந்துவிட்டதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது ஜாதகத்தில் ஜெய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரின் இணைவு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். நான்காம் இடத்து ராகு ஆராய்ச்சி சார்ந்த கல்வியையும், பத்தாம் இடத்து கேது அந்நிய தேசத்தில் உத்யோகத்தையும் தருவார்கள். ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்ற சந்திரனின் அமர்வு அன்பான கணவரைப் பெற்றுத்தரும். அவரது எதிர்கால வாழ்வு வெகு சிறப்பாக உள்ளதால் அநாவசியமான பயம் வேண்டாம்.

இருப்பினும் தற்போது 16.08.2018 முதல் 22.06.2019 வரை நடைபெற உள்ள சூரிய புக்தி அவரது மன நிலையில் எதிர்மறையான சிந்தனையைத் தரக்கூடும். உளவியல் ரீதியாக, பெற்றோராகிய நீங்கள் அவரை கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். பருவப்பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவரது மனக்குழப்பத்தைப் போக்க வேண்டும். அன்புடனும், ஆதரவாகவும் பேசி அவரது மனம் தெளிவு பெற உறுதுணையாய் இருங்கள். பெற்றோரைக் குறிக்கும் பாவகங்கள் அவரது ஜாதகத்தில் சிறப்பாக உள்ளன.

குறிப்பாக தந்தையாரைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் வீட்டில் குருவின் அமர்வு, நற்பலனைத் தரும். அவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக தகப்பனாராகிய நீங்கள் செயல்படுவீர்கள். உங்கள் இருவரின் அந்திமக் காலம் வரை என்றென்றும் உங்கள் மகள் பக்கபலமாய் துணையிருப்பார். இன்னும் ஒரு வருட காலத்திற்கு புதன்கிழமைதோறும் அருகிலுள்ள சிவாலயத்தில் சண்டிகேஸ்வரர் சந்நதியில் மூன்று விளக்குகள் ஏற்றி வைத்து மகளின் மனதில் உள்ள குழப்பங்கள் தீர பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். மகளின் சிந்தனை தெளிவு பெறுவதோடு அவரது எதிர்கால வாழ்வும் சிறப்பாக அமையும்.

* விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் நான் வேலையில்லாமல் இருக்கிறேன். பெற்றோரைப் பார்த்திராத என்னை சொந்த பந்தங்கள் வார்த்தையால் வதைக்கிறார்கள். பசியுடன் நாள் நகர்கிறது. வாழ்க்கையை வெறுத்து இருக்கிறேன். திருமணம் பற்றி எனக்கு பெரிதாக ஆசையில்லை. எனக்கு வேலை கிடைக்குமா?
- ரம்யா, சென்னை.

பெற்றோரைப் பார்த்திராத நிலையிலும் இந்த அளவிற்குப் படித்திருக்கிறீர்கள். கேரியர் கவுன்சிலிங்கில் பட்ட மேற்படிப்பு படித்திருக்கும் நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறுகிறீர்கள். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகம் நினைத்ததை சாதிக்கும் பலம் பொருந்தியது. லக்னாதிபதி சந்திரன் 11ல் உச்சம் பெறும்போது ஏதேனும் ஒரு வகையில் வெற்றி சாத்தியமாகும். வாக்கு ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், கேது இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவருக்குத் தவறாகத் தெரிந்தாலும் அதையே உங்கள் பலம் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பதே உங்கள் முன்னேற்றத்திற்கான மந்திரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சூழலிலும் யாரைப் பற்றியும் தயங்காதீர்கள். உங்களுக்கு சரியென்று தோன்றுவதை எள்ளளவும் தயக்கமின்றி பேசிவிடுங்கள். உங்கள் ஜாதகக் கணக்கின்படி 28.07.2018 வரை குரு தசையில், குரு புக்தி நடக்கிறது. அதன் பின்னர் சனிபுக்தி துவங்குகிறது. குரு உங்கள் ஜாதகத்தில் 12ம் இடத்தில் இருப்பதால் நீங்கள் தற்போது இருக்கும் இடத்தை விட்டு மாற வேண்டியிருக்கும். உங்களுக்கான உத்யோகத்தை வடஇந்தியாவில் தேடுங்கள். மும்பை அல்லது புனே போன்ற நகரங்களில் உங்களுக்கான வேலை வாய்ப்பு கிட்டும்.

அரசுப் பணிக்காக காத்திருக்காமல் நீங்கள் படித்திருக்கும் விஷூவல் கம்யூனிகேஷன் துறையிலேயே வேலைக்கு முயற்சியுங்கள். அந்த நகரங்களில் உங்கள் நண்பர்கள் எவரேனும் வசித்தால் அவர்கள் மூலமாக முயற்சி செய்யுங்கள். இடம் விட்டு இடம் மாறுவது உங்கள் மனநிலைக்கும் நல்லது. 32வது வயதிற்குள் உங்கள் திருமணமும் நடந்துவிடும். உங்கள் மனதைப் புரிந்துகொண்டு நடக்கின்ற வாழ்க்கைத் துணைவர் அமைவார். வியாழன்தோறும் அருகிலுள்ள சாயிபாபா ஆலயத்திற்குச் சென்று ஆரத்தி காட்டி உங்கள் மனதில் உள்ள குறைகளை அவரிடம் சொல்லுங்கள். சாயிநாதனின் அருளால் உங்கள் வாழ்வு சிறக்கக் காண்பீர்கள்.

* இலங்கையில் வசிக்கும் எனக்கு அறுபது வயதாகிறது. தற்போது சனி தசையில், சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது. எனக்குரிய தோஷ பரிகாரங்களை விவரமாகத் தரவும்.
- ஆர். சுதாகரன், கொழும்பு, இலங்கை.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் சனி தசைக்கு உரிய பத்தொன்பது வருடங்களில் தற்போதுதான் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி தனஸ்தான அதிபதியாகிய சனி 12ம் வீட்டில் அமர்ந்திருப்பது வீண் விரயத்தைத் தரக்கூடும். மேலும் மூன்றாம் வீட்டிற்கும் சனியே அதிபதியாகி 12ல் அமர்ந்திருப்பதால் அதிக அலைச்சலையும், பிரயாணத்தையும் சந்திப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் கேட்டை நட்சத்திரக் காலில், அதாவது புதனின் சாரம் பெற்று அமர்ந்திருக்கிறார். புதன், ஏழு மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாதலால் தொழில் சிறப்படையும். நீங்கள் என்ன தொழில் செய்து வருகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. தொழில்முறையில் அடிக்கடி வெளியூர் பிரயாணம் செய்ய நேரிடும்.

எந்த அளவிற்கு அலைச்சல் உண்டாகுமோ, அதற்கேற்ற வகையில் சம்பாத்யமும் கூடும். மேலும் இந்த வயதில் செல்ல வேண்டிய புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள இயலும். சனி 12ம் வீட்டில் அமர்ந்திருப்பதை தோஷமாக எண்ணி வருந்தவேண்டாம். சனி தசை நடக்கிறதே என்று பயப்படவும் வேண்டாம். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு உரிய துதிகளைச் சொல்லி வழிபடுவதுடன் ஏழை எளியவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தைச் செய்து வாருங்கள். வறியவர்களின் பசியினைப் போக்குவதே சனி பகவானுக்குச் செய்யும் சிறந்த பரிகாரமாகும். சனியின் அருளால் உங்களுடைய உழைப்பு அதிகரிக்கும். உழைப்பின் பயனாக நல்ல சம்பாத்யமும், சிறப்பான வாழ்வும் காண்பீர்கள்.

* என் மகளுக்கு 2015ம் வருடம் ஜூன் மாதம் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றாள். அடுத்து 2018 ஜனவரியில் மீண்டும் விபத்து ஏற்பட்டு வலதுகை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றாள். அவளுக்கு மீண்டும் விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என் மகளுக்கும், என் மருமகனுக்கும் அடிக்கடி மனவேறுபாடு வருகிறது. இந்த பிரச்னை எப்போது தீரும்? மருமகனுடைய தொழில் முன்னேற்றமடையுமா?
- துரை, திண்டுக்கல்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தின்படி உங்கள் மகளுக்கு 16.05.2015 முதல் 28.01.2018 வரை ராகு தசையில் சனி புக்தி நடந்து வந்திருக்கிறது. நீங்கள் விபத்து நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் இரண்டு நாட்களும் இந்த காலக்கட்டத்திற்குள் வருகிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் ராகு, சனி இருவரும் ஒன்றாக இணைந்து ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அதிலும் சனிபகவான் சுக்கிரனின் சாரம் பெற்றிருக்க, சுக்கிரனும் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் விபத்தை சந்திக்க வேண்டியிருந்திருக்கிறது.

ராகு தசையில் சனி புக்தி காலத்தின் துவக்கத்தில் ஒருமுறையும், இறுதியில் ஒரு முறையும் சந்தித்து அதிலிருந்து மீண்டிருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு உச்சம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பதாலும், குருவின் பார்வை ஜென்ம லக்னத்தின் மீது விழுவதாலும் அவருக்கு தீர்க்காயுள் உண்டு. ஆயுள் ஸ்தானமாகிய எட்டில், ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதும், தீர்க்க சுமங்கலி யோகத்தினைத் தரும். தற்போது சனி புக்தி முடிந்து, புதன் புக்தி நடைபெறுகிறது. நான்கு மற்றும் ஏழாம் பாவகங்களுக்கு அதிபதியாகிய புதன், ஒன்பதாம் வீட்டில் இருப்பது நன்மையே.

தற்போதைய கிரஹ நிலையின்படி தம்பதியருக்குள் இருக்கும் கருத்துவேறுபாடு காணாமல் போகும். பரஸ்பரம் அன்யோன்யம் கூடும். மேலும் உங்கள் மகளின் பெயரில் லைசன்ஸ் பெற்று உங்கள் மருமகன் செய்து வரும் தொழிலும் புதனின் அருளால் விருத்தியடையும். புதன்கிழமைதோறும் அருகிலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்று நந்திகேஸ்வரருக்கு அறுகம்புல் மாலை சாத்தி காப்பரிசி நைவேத்யம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். தடைகள் நீங்கி வியாபாரம் செழிக்கக் காண்பீர்கள்.

*நான் பிறந்த நாள் முதல் இன்று வரை கஷ்டப்படுகிறேன். நிலையான வருமானம் இல்லை, நிரந்தரமான தொழிலும் இல்லை. இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? எனக்கு நல்வழி காட்டி உதவிடுங்கள்.
- லெட்சுமிபதி, மதுரை.

ஜென்ம லக்னாதிபதி குரு பகவான் வக்கிரம் பெற்றிருப்பதோடு, கேதுவின் சாரம் பெற்று ஆறில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்கிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். எனினும் வாழ்வில் சுக்கிர தசை என்பது பச்சிளம் பிராயத்திலேயே சென்று விட்டது. ஜென்ம லக்னத்தில் சுக்கிரனோடு இணைந்திருக்கும் சனியும், ராகுவும் இளம் வயதில் உங்கள் நடத்தையில் வேகம் தந்திருக்கிறார்கள். 46வது வயதோடு திருமண யோகம் சென்றுவிட்டது. தற்போது 51வது வயதில் இருக்கும் நீங்கள் இனிமேல் திருமணம் குறித்து யோசிக்க இயலாது.

2ம் வீட்டில் இணைந்திருக்கும் கிரஹங்கள் ஏதோ ஒரு வகையில் பொருள் வரவைத் தந்து கொண்டிருப்பார்கள். உண்ணும் உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவற்றிற்கு என்றுமே பிரச்னை உண்டாகாது. உத்யோகத்தைப் பொறுத்தவரை ஜீவன ஸ்தானம் சுத்தமாக உள்ளது. ஸ்தான அதிபதி குருவின் பார்வை உள்ளதால் ஆன்மிகம் சார்ந்த பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். உங்களுடைய ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. செலவுகளை சமாளிக்கின்ற வகையில் வரவு நிலை இருக்கும். 20.04.2019ற்குப் பின் அடுத்து வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு சிறப்பான தனலாபம் கிட்டும். பணம் வரும் நேரத்தில் சேமித்து வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.

ஆன்மிகம் சார்ந்த உத்யோகமே 70 வயதுவரை கைகொடுக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். வியாழன்தோறும் காலை ஆறு முதல் ஏழு மணி வரை உள்ள குரு ஹோரையில் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் உள்ள மகாசித்தர் சந்நதியில் அமர்ந்து தியானம் செய்யும் வழக்கத்தை கொள்ளுங்கள். சிந்தையில் தெளிவு பிறப்பதோடு உங்கள் வாழ்விற்கான பொருளையும் உணர்வீர்கள்.

*முப்பது வயதாகும் எனக்கு சரியான வரன் அமையவில்லை. எனக்கு திருமணம் நடக்குமா? செவ்வாய் தோஷம் உள்ளதா? என் வாழ்க்கைக்கு வழிகாட்டி உதவுங்கள்.
- தேவி, திருச்சி.

உண்மையாகவே கடுமையான குழப்பத்தில் உள்ளீர்கள் என்பது புரிகிறது. எதிர்மறையான சிந்தனை உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் 10ம் வீட்டிற்குரிய அதிபதி சந்திரன் நீசம் பெற்றிருந்தாலும் 2ம் வீடாகிய தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நற்பலனைத் தரும். லக்னாதிபதியும், தனகாரகனுமாகிய சுக்கிரனும் 2ல் இணைந்திருப்பதால் ஏதேனும் ஒருவகையில் தனலாபம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

நிரந்தரமாக வேலை பார்க்கும் யோகம் உங்களுக்கு உண்டு. அரசுப் பணிக்காகக் காத்திருக்காமல் தனியார் துறையிலேயே வேலை அமைத்துக் கொள்ளுங்கள். திருமணம் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தாலும், தனது சொந்த வீடான மேஷத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால், செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய் தோஷம் இல்லாத வரனாகவே பார்க்கலாம். திருமணத்திற்காக கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.03.2019ற்குப் பின் வரன் தேடி வரும். தென்திசையில் உள்ள ஊரைச் சேர்ந்தவராகவும் சுயதொழில் செய்பவராகவும் மாப்பிள்ளை அமைவார். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்வதோடு உங்கள் திருமணத்தையும் அதே ஆலயத்தில் நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வரும் வருடத்தில் உங்களது மணவாழ்வு நல்லபடியாக அமைந்து சிறப்பாக வாழ்வீர்கள். குழப்பங்களை விடுத்து இறைவனை நம்புங்கள். இறைவனை நம்பியவர்கள் என்றுமே கெடுவதில்லை.

- சுபஸ்ரீ சங்கரன்