திருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!திருச்செந்தூர் முருகன் கோயில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்தில் அலைகள் தாலாட்டும் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது இந்த திருத்தலம். இங்கே பக்தர்களை காக்கும் பாலமுருகனாக எழுந்தருளியுள்ளார் சிவமைந்தன். இங்குதான் அவர் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி விழாவின்போது சிறப்பாக, இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. கடற்கரையோரம் நடைபெறும் இந்த காட்சியைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்கிறார்கள்.

அன்று தேவர்களை காக்க திருச்செந்தூர் கடற்கரையில் நின்ற கந்தன், இன்று பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வரத்தை வழங்கி, காத்தருளும் தெய்வமாக, செந்திலாண்டவர் என்ற திருப்பெயருடன் அருளாசிபுரிகிறார். சூரபத்மனை சம்ஹாரம் செய்தவுடன் தந்தை சிவபெருமானுக்கு பூஜை செய்ய விரும்பினார் முருகன். தேவதச்சனான மயன், திருச்செந்தூரில் அவருக்கு ஒரு கோயிலை உருவாக்கினான். அதுவே இன்றைய செந்தூர் தலம். கையில் மலர் எடுத்து சிவபெருமானை பூஜித்த சுப்ரமணியரை, தேவர்கள் பக்தி பரவசத்தில் அழைத்தனர்.

அவர்களின் குரல் கேட்டு திரும்பிய முருகப்பெருமான், அவர்களுக்கு அன்று காட்சி அளித்த கோலத்திலேயே இன்றும் இங்கு ஒரு கையில் மலர் ஏந்தி, நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார். மூலவரான பாலசுப்பிரமணியர், கிழக்கு நோக்கியபடி சிவபெருமானை வழிபடும் நிலையில் தோன்றுகிறார். தலையில் ஜடாமுடி, இடதுபுற கைகளின் ஒன்று இடுப்பிலும், மற்றொன்று ஜெபமாலையை தாங்கியபடியும் உள்ளன. வலதுபுற கைகளில் ஒன்றில் சக்தி வேலும், கீழ் கையில் மலரும் உள்ளன. மூலவரின் இடது பக்கம் ஜகந்நாதர் லிங்க ரூபமாகக் காட்சியளிக்கிறார்.

இதுவே சூரனை வதம் செய்தபின் முருகன் வழிபட்ட லிங்கம். இவரை வணங்கினால் மேற்கொள்ளும் பணிகளில் வெற்றியும், அதனால் ஆனந்தத்தையும் இவர் நல்குவார். செந்தூர் முருகன், பாலனாக இருப்பதால், மூலவர் அருகே வள்ளி-தெய்வானை இல்லை. ஆனால், அதற்கு மாற்றாக, அவருக்கு வலதுபுறத்தில் வள்ளி கோயிலும், தெய்வானை கோயிலும் உள்ளன. மூலவருக்கு பின்னால் பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த லிங்கங்களை தேவர்கள் தற்போதும் பூஜித்து வருவதாக ஐதீகம். கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகள் ஜெயந்தி நாதர், குமர பெருமான் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மூலவரின் பிரதிபிம்பம் ஜெயந்தி நாதர், இவரே சூரசம்ஹாரத்தின் போதும், ஆவணி, மாசி திருவிழாக்களின் போதும் தங்கத்தேரில் எழுந்தருளுகிறார். திருச்செந்தூரில் தனிச் சிறப்பு கொண்டு விளங்குகிறார்  ஆறுமுகப்பெருமான். இவர் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்கள் கொண்டு, வள்ளி-தெய்வானை சமேதராக தெற்கு நோக்கி காட்சி தருகிறார், இந்த ஷண்முகர். அறுபடை வீடுகளில் ஐந்து குன்றின்மீது அமைந்திருக்க, திருச்செந்தூரில் மட்டும் கடற்கரையில் வீற்றிருக்கிறார் முருகன். ஆனால் இந்த இடமும் மலைதான் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

இதற்கு சந்தனமலை என்று பெயர். இதற்கு வள்ளி குகை அருகே உள்ள மலையும், பெருமாள் கோயில் அமைந்திருக்கும் சந்தன மலையும் சாட்சி என்றும் சொல்கிறார்கள். பாவம் போக்கும் 24 தீர்த்தங்கள் திருச்செந்தூரில் உள்ளன. இந்த தீர்த்தங்களில் வதனாரம்ப தீர்த்தம் மற்றும் நாழிக்கிணறு மிகவும் சிறப்பு பெற்றவையாகும். வதனாரம்ப தீர்த்தம் என்பது மூலவருக்கு நேர் எதிரே கடலில் அமைந்துள்ளது. இந்த தீர்த்ததிற்குப் பல சிறப்புகள் உள்ளன. ஈசனால் துண்டிக்கப்பட்ட தன் தலை மீண்டும் கிட்ட பிரம்மதேவன் இந்த தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார். இந்த தீர்த்தம் உள்ள பகுதியில் பாறைகள் அதிகம் இருப்பதால் தற்போது இங்கு பக்தர்கள் நீராடுவது இல்லை.

ஷண்முக விலாசத்தில் இருந்து நேர் எதிரே அமைந்துள்ளது நாழிக்கிணறு. நுழைவுக் கட்டணம் செலுத்தி, படிகள் வழியாகக் கீழே இறங்கி கிணற்றை அடையலாம். ஒரு சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இந்த கிணற்றில், அள்ள அள்ள நீர் சுரப்பது மட்டுமல்லாமல், அது குடிப்பதற்குப் பாங்கான நன்னீராக அமைந்திருப்பது முருக அதிசயமே! கடலுக்கு மிக அருகாமையில் இந்த கிணறு இருந்தும்கூட நீர் உப்பு கரிப்பதில்லை.குரசம்ஹாரத்தின் போது, முருகப்பெருமான் தனது படைவீரர்களின் தாகம் தணிக்க தனது வேலால் குத்தி உருவாக்கியதுதான் இந்த தீர்த்தம். இதனை வடமொழியில் ‘கந்தபுஷ்கரணி’ என்கிறார்கள்.

இங்குள்ள செல்வ தீர்த்த கிணறும் சிறப்பு வாய்ந்ததுதான். செந்திலம்பதி தோன்றிய காலத்திலேயே கடல் அருகே உருவானது இந்த செல்வ தீர்த்தம். செப்பு குடம் கொண்டு போத்திமார் இந்த தீர்த்தத்தை முகந்து எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்கிறார்கள். திருச்செந்தூர் பல பெயர்களில் அழைகப்படுகிறது. கடல் அலைகள் தழுவுவதால் ‘அலைவாய்’ என்றும், திருச்சீரலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது. சூரனை வெற்றிகொண்டதால், ஜெயந்திபுரம் என்றும் பெயர் உண்டு. இலக்கியத்தில் திருச்செந்தூர் பல தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புகழ்மிக்க பக்தி இலக்கியமான திருமுருகாற்றுப்படையில், ‘அலைவாய் சேரலும் நிலைஇய பண்பே’ என நக்கீரர் இத்தலத்தைப் போற்றுகிறார்.‘திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேய்” என அகநானூறும், ‘வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுரை’ எனப் புறநானூறும், ‘சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமு நீங்கா இறைவன்’ என சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசர் அருளிய தேவாரப் பதிகத்தில், ‘நஞ்செந்தில்மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய் மறைக்காடுறையும் மணாளன் தானே’ என திருச்செந்தூரைச் சிறப்பிக்கிறார்.

‘வரை வயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்’ என பழம்பாடல் ஒன்றும் திருச்செந்தூர் முருகனின் புகழ் பாடுகிறது. ‘பருமணி வயிரமுத்தம் பலவளம் பிறவும் ஆழித்திரைஎறி அலையாய் ஆகும் செந்தி மாநகரம்’ என கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் திருச்செந்தூரின் புகழை விவரிக்கிறார்.

‘சூரரை வாயிடைத் தொலைத்து மார்புகீண்
டீரலை வாயிடு மெஃக மேந்தியே
வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீ இச்
சீரலை வாய்வரு சேயைப் போற்றுவோம்

- என கந்தபுராணம் போற்றுகிறது. ‘சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்’ என்னும் முதுமொழி இன்றும் பலராலும் நினைவுகூரப்படுகிறது. ‘மகாபுனிதம் தங்கும் செந்தில் கயிலைமலை அனைய செந்தில்’ எனத் திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றியுள்ளார். சிவந்த நிறமுடைய சேந்தனுக்கு இக்கோயில் சொந்தமாக இருந்ததால் செந்தன் என்று பெயர் பெற்று இதுவே மருவி செந்தில் என்றாகிவிட்டது. திருச்செந்தனூர் என்பதே மருவி திருச்செந்தூர் என்றாகி இருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

கோயில் வழிபாடு

திருச்செந்தூர் திருமுருகன் ஆலயம் கிழக்கு பார்த்து அலைகடலை நோக்கியுள்ளது. சம்பிரதாயப்படி முதலில் நாழிக்கிணறை அடைகிறோம். கடலிலிருந்து 200 அடி தொலைவில் சிறிய மணல் மேடு உள்ளது. அதில்தான் ‘கந்த புஷ்கரணி’ என்று அழைக்கப்படும் நாழிக்கிணறு உள்ளது. கிழக்குப்புறமும், மேற்குப்புறமும், உள்ளே இறங்கிச் செல்வதற்காக 34 படிகள் உள்ளன. கீழே, ஒரு சதுர அடி பரப்பளவில் நாழிக்கிணறு அமைந்திருக்கிறது.

இந்தக் கிணற்றில் இரண்டு நீரூற்றுகள் உள்ளன. சதுர கிணற்றின் நீர் கந்தக நாற்றத்துடன் சற்று கலங்கலாக உள்ளது. நாழிக்கிணற்றின் நீர் தெளிவாகவும், சற்றே உவர்ப்பு சுவையுடனும்  விளங்குகிறது. இந்த நாழிக்கிணற்றில் நீராடிய பின்பு கடலில் நீராடுவது மரபு என்று சொல்கிறார்கள். ஆனால் வழக்கத்தில் கடலில் நீராடிய பின்பு நாழிக்கிணற்றில் பக்தர்கள் நீராடுகிறார்கள். இந்த நாழிக்கிணற்றில் நீராடினால் பிறவிப் பயன் அடையலாம் என்பது தெய்வ வாக்கு.

தூண்டுகை விநாயகர் ஆலயம்

திருச்செந்தூரின் மற்றுமொரு சிறப்பு, தூண்டுகை விநாயகர் ஆலயம். தனது தம்பியான திருமுருகன் திருத்தலத்தை பக்தர்களுக்குக் காட்டும் முறையில் அமைந்ததால் இவர் ‘தூண்டுகை விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். இவரை வழிபடும் பக்தர்கள் முன்பகுதியில் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள். இவரை வணங்கிய பின்னரே ஆலயத்துள் சென்று முருகப் பெருமானை வழிபட வேண்டும் என்பது மரபு.

கிரிவீதி

கோயிலின் வெளியே அமைந்துள்ள வீதியில் கோவிலையொட்டி காங்கிரீட் கூரை போடப்பட்டிருந்தது. தற்போது இவை இடிக்கப்பட்டு விட்டது. இந்த வீதியில் தான் தங்கரதம் வலம் வருகிறது. சிறப்புக் கட்டணம் செலுத்தி தங்கரதத்தினை வலம் வரச்செய்து, தங்களது  நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள். கிரிவீதியின் மேற்பகுதியில் தேவஸ்தான அலுவலகம் உள்ளது. இதற்கு வடக்குப்புறத்தில் வசந்த மண்டபம்.

தேவஸ்தான அலுவலகத்திற்குப் பின்புறம் வேலவன் விடுதி உள்ளது. கிரிவீதியின் வடக்குப்புறத்தில் குடில்களும், வள்ளிக் குகையும் உள்ளன. கிரிவீதியின் கிழக்கில் வங்காள விரிகுடா கடல் உள்ளது. பொங்கி வரும் அலை, முருகன் காலடியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அப்படியே வேகம் தணிந்து பின்வாங்கிச் செல்கிறது. இப்போது மட்டும் அல்ல, சுனாமி பேராழி சுற்றுச் சூழலைத் தாக்கி அழித்தபோதும், நீரலை கொஞ்சமும் இக்கோயிலை அணுகாது இருந்தது முருகன் காட்டிய அதிசயமே! தெற்குப்பகுதியில் தங்கரதம் நிறுத்தப்பட்டுள்ளது.

திருக்கல்யாண மண்டபம்

கிரி பிராகாரத்தில் மேல கோபுர நுழைவு வாயிலுக்கு எதிரில் மேற்கே அமைந்துள்ள மண்டபம் திருக்கல்யாண மண்டபம். அழகிய வேலைப்பாடுகள் கொண்ட நான்கு பெரிய தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில்தான் முருகப் பெருமானின் திருக்கல்யாணம் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்படுகிறது. இங்குதான் குழந்தைகளுக்கு காது குத்துகிறார்கள். தவிட்டுக்காக முருகனிடம் தன் குழந்தைகளை தத்து கொடுத்து அவர்களுடைய நீடித்த நல்வாழ்விற்காக வேண்டிக்கொள்கிறார்கள்.  நாழி க்கிணறு அருகே மொட்டை நேர்ச்சை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள்.

வசந்த மண்டபம்

கிரிப்பிராகாரத்தில், மேற்கு வீதியில், திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிர்புறமாக வசந்த மண்டபம் அமைந்திருக்கிறது. சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறும் வசந்த விழாவில் செந்தில் நாயகரான மூலவரின் உற்சவர் இங்கு ஜெயந்தி நாதராக எழுந்தருளுகிறார். மாசி, ஆவணித் திருவிழாக்களில் பக்தர்களின் சிறப்பு பூஜையை ஏற்பதற்காக எட்டாம் திருநாள் இரவில் ஆறுமுகப்பெருமான் இங்கே எழுந்தருளுகிறார்.

இந்த மண்டபம் 120 தூண்களைக் கொண்டது. 1882ம் ஆண்டு காசி ஸ்வாமிகளால் தொடங்கப்பட்டு, 1895ம் ஆண்டு மௌன ஸ்வாமிகளால் நிறைவேற்றப்பட்டது. இங்குதான் கோயில் யானை தெய்வானை தங்குகிறது. இங்கே ஒரு மயில் தோகை விரித்து ஆடியபடியே காட்சியளிக்கிறது. கோயிலில் மேற்கு கோபுரம் நெடிதுயர்ந்து காட்சி தருகிறது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன், கோயிலுக்கு வழங்கிய வேலை இந்த கோபுரத்தில் காணலாம்.

வள்ளிக் குகை

கோயிலின் வடக்குப்புறத்தில், அமைந்துள்ளது வள்ளிக் குகை. இது குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஆலயம். முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. வட பக்கமுள்ள சுவரை, சூரசம்ஹார நிகழ்ச்சி ஓவியங்களாகச் சித்திரிக்கின்றன. வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜனும் அவனது படைவீரர்களும் முருகப்பெருமானுடன் போரிட வந்தபோது, வள்ளியம்மை, பயந்து ஒளிந்து கொண்டதுதான் இந்த குகை. இதனை ‘வள்ளி ஒளிந்த வளிநாடு’ என்றும் குறிப்பிடுவார்கள். குகைக்குள் சென்று நாம் வழிபடலாம் - மாலை 6 மணிக்குள். குழந்தை வரம் கோரி மலைமீது தொட்டில் கட்டி வணங்கும் பக்தர்கள் ஏராளம். இங்கும் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது.

ஆனந்த விலாசம்

கடல் மட்டத்திலிருந்து ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே, பல தீர்த்தங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. மாசி, ஆவணித் திருவிழாக்களில் எட்டாம் திருநாளில் ஷண்முகர் பக்தர்களுக்கு இந்த ஆனந்த விலாசத்தில்தான் தரிசனமும், அருளும் வழங்குகிறார்.

சஷ்டி மண்டபம்

கந்தசஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளன்று வேல்வாங்கிய ஜெயந்திநாதர், சஷ்டி மண்டபத்தில் தங்கியிருந்து தன் படைவீரர்களோடு சூரனை அழிப்பதற்காக புறப்படுவார். இது கிரி வீதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

ஷண்முக விலாசம்

கிரிவலம் வந்த பின்னர் திருமுருகன் சந்நதிக்குச் செல்லும் வழியில் கோயிலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மண்டபம், ஷண்முக விலாசம். 120 அடி நீளம், 86 அடி அகலம் பரப்பில் 124 தூண்களைக் கொண்டிருக்கிறது. மூன்றடி உயரத்தில் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த 15 சதுர அடி பரப்புள்ள சிறிய வீடு போன்ற அமைப்பு உள்ளது. இங்குதான் மாசி, ஆவணி திருவிழாக்களின் ஏழாம், எட்டாம் திருநாட்களில் சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட் பாலிக்கிறார். தூண்களே இல்லாமல் இம்மண்டபம், கட்டிடக்கலையின் சிறப்பைப் பறைசாற்றுகிறது.

வெளிப் பிராகாரம் (சீபலி மண்டபம்)

ஷண்முக விலாசத்திலிருந்து  பக்தர்களை உள்ளே வருகிறார்கள். ரூ250, ரூ100 சிறப்பு தரிசனம்; 10 ரூபாய் மற்றும் தர்ம தரிசனத்திற்கு அந்தந்த கட்டணப்படி பக்தர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி வெளிப்பிராகாரத்தை அடையலாம்.  தேவர்களுக்கு முருகப்பெருமான் பலி கொடுக்க எழுந்தருளும் இடம் என்பதால் இதனை சீபலி மண்டபம் என்கிறார்கள். மண்டபத் தூண்களை சிற்ப யானைகள் தாங்குவதால், இது ‘ஐராவத மண்டபம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

வெளிப்பிராகாரத்தின் மேற்குப்பகுதியில் சித்திவிநாயகர், ஐந்து தலை நாக குடையுடன் ஆசி வழங்கும் காட்சி வித்தியாசமானது. ஸஹஸ்ரலிங்கம், சூரசங்கரர், ஆன்மநாதர், மனோன்மணி அம்மன், பானுகேஸ்வரர், சோமசுந்தரர், மீனாட்சி அம்மன், ஸ்ரீமூலநாதர், திருக்காளத்தி ஈஸ்வரர் என்னும் வாயுலிங்கம், உமா மகேஸ்வரி, அருணாசலேஸ்வரர் என்னும் தேயுலிங்கம், உண்ணாமலை அம்மன், ஜம்புகேஸ்வரர் என்னும் நீர்லிங்கம், அருணகிரிநாதர் ஆகிய கடவுளர்கள் நமக்கு அருளாசி நல்குகிறார்கள்.

வெளிப்பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் சூரசம்ஹாரக் காட்சி ஒரே கல்லில் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து சூரனுடன் போரிடுவது, சூரன் நெஞ்சில் வேல் பாய்ந்த நிலை, சூரனை சேவலாக மாற்றியது எனப் போர்க் காட்சிகள் பேரழகுடன் மிளிர்கின்றன. ராகு-கேது தோஷ நிவர்த்தித் தலம் இது. சூரசம்ஹார மூர்த்திக்கு அபிஷேகம், ஹோமம் செய்து வணங்கினால், நமக்கு எதிரிகள் தொல்லை இருக்காது, செய்தொழில் விருத்தியடையும், திரைத்துறையில் உள்ளோர் மேம்படவும், இடையில் நிறுத்தப்பட்ட திரைப்படம் விரைவில் திரைக்கு வரவும் இங்கு யாகம் செய்கிறார்கள்.

மேலவாசல் நுழைவாயில் பூட்டப்பட்டிருக்கிறது.  அங்கே வல்லபகணபதி மேல வாசல் விநாயகராக காட்சி தருகிறார். மதுரை மீனாட்சியம்மன்  கோயில் முககுறுணி விநாயகரைப் போல, நெல்லையப்பர் ஆலய விநாயகர் போல, இவரும் உருவத்தாலும் கீர்த்தியாலும் பிரமிக்க வைக்கிறார். டச்சுக்காரர்கள் காலத்தில் நடந்த சுவாமி சிலை கடத்தல், வடமலையப்ப பிள்ளை கனவில் சுவாமி தோன்றுதல், கடலிலிருந்து சுவாமி சிலையை மீட்டல் முதலான ஒன்பது ஓவியங்கள் எழிலுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு பகுதியிலும் பார்வதி தவம், ரதி புலம்பல், மன்மத தகனம் உள்பட புராணச் சம்பவங்கள் ஓவியங்களாகப் பரிமளிக்கின்றன. 26.12.2004 அன்று கடல் உள்வாங்கி சுனாமியை வென்ற முருகப்பெருமான் ஓவியம் குறிப்பிடத்தக்கது. எதிரே வெளிப்பிராகாரத்தின் வடக்குப்பகுதியில் வெங்கடாஜலபதி, சந்தானகிருஷ்ணன் இருவரும் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். கஜலட்சுமி, பிரம்மா, பூதேவி, நீளாதேவி, கௌதமர், மார்க்கண்டேயர், விஷ்வக்சேனர், கருடன் ஆகியோர் சூழ, அரங்கநாதர் பள்ளிகொண்ட பெருமாளாகக் காட்சி தருகிறார்.
 
இந்த இடமெல்லாம் சந்தனமலை என்பதற்கு சாட்சியாக, சந்தன வண்ணத்தில் மண் சுவர் காணப்படுகிறது. புதன் தோஷம் நிவர்த்தி அடைய இந்த பெருமாளை வணங்குகிறார்கள். இங்குள்ள கருடாழ்வார் வித்தியாசமாகத் தோற்றமளிக்கிறார். இடது புறம் சற்றே சாய்ந்து பறக்கத் தயாராகும் தோரணையில் உள்ளார். சூரனுடனான போரில் முருகனுக்கு ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால், அவனுக்கு உதவ, பெருமாளைத் தாங்கிச் செல்லத் தயாராக இருக்கும் தோரணை! ஏதேனும் அவசரம், நெருக்கடி என்று ஏற்பட்டால் உடனே வெளியேற ‘எமர்ஜென்சி வழி’ ஒன்றுள்ளது.

கிழக்கு நோக்கிய சுவரில் துவாரம் ஒன்று காணப்படுகிறது. இதன் வழியாக பக்தர்கள் வெளியே இருந்தபடி மூலவரை தரிசனம் செய்வார்கள். சிலர் இங்கே தேங்காய் உடைத்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். இந்த துவாரத்தில் காது வைத்து கேட்டால் ‘ஓம்’ என்ற ஓங்காரம் ஒலிப்பதைக் கேட்கலாம். கொடிமரத்தில் நவகிரக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால் நவகிரக தோஷம் நீங்குகிறது. இந்தக் கொடிமரத்துக்கு ஆவணி, மாசி மாதங்களில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு உள்ள கல்யாண விநாயகரை வணங்கி நின்றால், திருமணத் தடை நீங்குகிறது. புதிதாக திருமணம் புரிந்த மணமக்கள் இவரை வணங்கி வளம் பெறுகிறார்கள்.

வெளிப்பிராகாரத்தின் தெற்குப் பகுதியிலிருந்து நடுப்பிராகாரம் செல்லும் வாயிலில் வீரகேசரி, வீர மார்த்தாண்டர் (நவ வீரர்களில் இருவர்) காவல் புரிகின்றனர். தெற்கு நுழைவாயிலின் மேற்புறத்தில் திருவிளக்குப் பூஜை நடைபெறும். இவ்வழியாகத்தான் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவார்கள். இதன் இடது புறம் கடலில் கிடைத்த 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்துக்குள், வாஷிங்டன் பிரபு காலத்தில், முருகனின் உடலிலிருந்து வேர்வை அரும்பிய சம்பவத்தை ஐந்து பிரமாண்ட ஓவியங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.

நடுப் பிராகாரம்

நடுப்பிராகாரத்தில் யாகசாலையும், கொடிமரமும் காணப்படுகின்றன. இது, கோயிலின் இரண்டாவது பிராகாரம். ஷண்முகரை நோக்கியுள்ள தெற்கு நுழைவாயில் வழியாக நடுப் பிராகாரத்திற்குச் செல்லலாம். இந்த பிராகாரத்தில் கிழக்கே 63 நாயன்மார்கள் மற்றும் மாணிக்கவாசகர் சிலைகள் வரிசையாக அணிவகுக்கின்றன. மேற்பகுதியில் கேரள பாணியிலான குண்டா, மடப்பள்ளி உள்ளது. இங்கே சிற்ப வேலைப்பாடுகள் மிக அதிகமாகக் காட்சியளிப்பது வியப்பானது. அருகில் தங்க கொடிமர மண்டபம் உள்ளது. மௌன சுவாமிகள், காசி சுவாமிகள், தேசிக மூர்த்தி ஆகியோர் வள்ளியம்மை கோயிலுக்கு முன்பு வடக்கு நோக்கிய தூணில் காணப்படுகிறார்கள்.

எதிரே தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறார். இதனால் இத்தலம் குருசேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. குருபகவானுக்கு நெய் தீபம் போட்டு வணங்குகிறார்கள். இவ்விடம் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. நடுப் பிராகாரத்தில் தென் மேற்குப் பகுதியில் வள்ளியம்மைக்கு தனிச்சந்நதி, கலைநயமிக்க நுணுக்கத்துடன் பொலிகிறது. கோயிலைச் சுற்றி முருகனின் பல்வேறு கோலங்களைத் தரிசிக்கலாம். கோயிலுக்கு முன்புறம் வருகிறோம். ஒருபுறம் யானை வடிவில் விநாயகர் வள்ளியை துரத்துவதும், பின் முருகப்பெருமான் முதியவர் வடிவில் வள்ளியை காப்பாற்றுவதுமான வரலாறு கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம்  நம்பிராஜன், முருகன்-வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார் பள்ளியறை கலைக்கூடமாகவே துலங்குகிறது. பள்ளியறை பூஜை நடைபெறும்போது, மூன்றாவது பிராகாரத்தில் உள்ள கண்ணாடிப் பேழையில் பள்ளியறை காட்சியை பார்த்து சுவாமி ரசிப்பதாக ஐதீகம். இந்த பூஜையில் கலந்துகொள்வோருக்குத் தடை நீங்கி உடனே திருமணம் நடைபெறுகிறது. ஆலயத்தை வலம் வர, வள்ளி, தெய்வானை ஆலயங்களுக்கு நடுவில் யாகசாலை தென்படுகிறது. எதிரே பாலசுப்பிரமணியர் சிற்பமாக ஆசி வழங்குகிறார்.

மேற்குப் பகுதியில் சங்கரநாராயணர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, வேதபுரீஸ்வரர், திருவாதபுரீஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர் ஆகியோர் கொலுவிருக்கின்றனர். வடக்குப் பகுதியில் மாணிக்க வாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி-நடராஜர், சனீஸ்வரர் ஆகியோர் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். நடுப் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். அருகில் மயூரிநாதர். அடுத்து திருட்டுப்போய் மீட்கப்பட்ட சிலைகள் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய ஸ்ரீஜக்கம்மாள், ஸ்ரீசண்முகர் சிலைகள் குறிப்பிடத்தக்கவை. அடுத்தடுத்து நடராஜர், சனீஸ்வரர், பைரவர் அருட்பாலிக்கின்றனர். சனிதோஷம் போகவும், எதிரிகள் பாதிப்பிலிருந்து மீளவும் பைரவருக்கு நெய்தீபம் போட்டு வணங்குகிறார்கள்.

உள் பிராகாரம் (மகா மண்டபம்)

இது மூன்றாவது பிராகாரம். கிழக்கு நோக்கி பாலசுப்பிரமணியர் பேரழகு தரிசனம் அருள்கிறார். அவருக்கு இடது பக்கத்தில் சிவலிங்கத்தைக் காணலாம். பாலசுப்பிரமணியர் முன்பு இருபுறமும் வீரபாகுவும், வீரமகேந்திரரும் உள்ளனர். விநாயகரும், பார்வதியும் அமர்ந்தபடி அருள்புரிகின்றனர். தெற்குப்புறத்தில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. சண்முகர் உள்பிராகாரத்தில் தெற்குநோக்கி வீற்றிருக்கிறார்.

அர்த்த மண்டபம்

கர்ப்பக் கிரகத்துக்கு அருகில் அர்த்த மண்டபம் உள்ளது. இங்கு வீரபாகு தேவருக்குதான் முதல் பூஜை, பிறகுதான் மூலவரான பாலசுப்பிரமணியருக்கு! வீரபாகு தேவருக்குப் புட்டமுது சாற்றி வழிபட்டால் விரும்பிய காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூலவர், பாலசுப்பிரமணியர், கிழக்கு நோக்கி நின்றபடி காட்சி தருகிறார். பெருமான் அருகில் இடதுபுறத்தில் சிவலிங்க ஜெகந்நாதர் உள்ளார். முருகப்பெருமானுக்குத் தினமும் நடைபெறும் பூஜைகளைச் சிவலிங்க ஜெகந்நாதரும் ஏற்றுக்கொள்கிறார்.

பஞ்சலிங்க தரிசனம்

அர்த்த மண்டபத்தின் வலதுபுறத்தில் சிறிய நுழைவாயில் உள்ளது. அதன் வழியாக உள்ளே சென்று ஐந்து சிவலிங்கங்களைத் தரிசிக்கலாம். இதனைப் பஞ்சலிங்கம் என்பார்கள். இந்த ஐந்து சிவலிங்கங்களும் முருகப்பெருமான் பூஜித்தவை என்பதால் இந்த தரிசனம் சிறப்புமிக்கது. சரியாக பார்வதி அம்மனுக்குப் பின்னால் குகைக்குள் இவை உள்ளன. காற்று, நெருப்பு, ஆகாயம், நீர், நிலம் ஆகியவற்றை இவை உணர்த்துகின்றன. இன்றளவிலும் இந்த பஞ்ச லிங்கங்களை தேவர்கள் வணங்கி வருகிறார்கள் எனப்படுகிறது. இந்த தரிசனத்திற்குக் கட்டணம் உண்டு - ஐந்து ரூபாய். வாசலிலேயே கட்டணம் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

குகைக்குள் நுழைந்து  மூலஸ்தானத்தினை சுற்றிவந்து பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்யலாம். ஒரு சமயத்தில் பத்துபேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் - இடப் பற்றாக்குறை! வெளியே வந்து ஷண்முகரை தரிசிக்கிறோம். அவர் தெற்கு நோக்கியுள்ளார். ஆறுமுகங்களும், பன்னிரண்டு கண்களும் நம்மை மெய்ம்மறக்கச் செய்கின்றன. வலது ஐந்து கரங்கள் சக்தி, பாணம், கடகம், சக்கரம், பாசம் ஆகியன ஏந்தியிருக்க, ஆறாவது கரம் வரமருள்கிறது.

இடது ஐந்து கரங்கள் வஜ்ராயுதம், தனுசு, கேடயம், கொடி, அங்குசம் ஏந்த, ஆறாவது கரம் அபயமளிக்கிறது. ஒளிவீசும், ரத்தினம், வைர, வைடூரியம் பதித்த கிரீடம் அணிந்துகொண்டு, சந்தன மலையில் வள்ளி-தேவசேனா மனோகரனாக, பக்தர்களுக்கு நற்றுணையாக விளங்குகிறார். திருச்செந்தூர் திருமுருகன் ஆறுமுகங்களால் பக்தர்களுக்கு அருள் பெருக்குகிறார். இவரது சந்நதியை வலம்வர வசதி உள்ளது. எனவே அவரது ஆறு முகங்களையும் தரிசிக்க இயலும். மிகுந்த நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் திருமுருகனை தரிசித்தோமென்றாலும், மூலவர் பாலசுப்பிரமணியரை திரும்பித் திரும்பி பார்த்து, மனமில்லாமல் வந்து கொடி மரத்தருகில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி, கோயில் தெற்கு வாசல் வழியாக வெளியேறலாம்.

வழிபடும் முறை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வழிபட வருவோர் முதலில் நாழிக்கிணற்றில் நீராடி, ஈரத்துணியுடன் கடலில் சென்றும் நீராட வேண்டும். அனைத்து நதிகளும் சங்கமம் கடல் என்பதால் அங்கு நீராடியபின், வேறு எந்தத் தீர்த்தத்திலும் நீராடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது. பின்பு தூண்டுகை விநாயகரைத் தரிசிக்க வேண்டும். பின்னர் கிரிவீதி வழியாக வலம் வந்து கோயிலின் தெற்குப் பகுதியிலுள்ள ஷண்முக விலாசம் வழியாக கோயில் உள்ளே செல்ல வேண்டும். அப்போது ஆண்கள் தங்கள் மேலாடைகளைக் கழற்றிக் கொண்டு படிக்கட்டு வழியாக கீழ் இறங்கி சீபலி மண்டபம் எனப்படும் வெளிப்பிராகாரத்தை வலம்வர வேண்டும்.

சீபலி மண்டபத்தில் படி இறங்கியவுடன் மேற்குப் பக்கம் திரும்பி சித்தி விநாயகரை வழிபட்டு பின் நடுப்பிராகாரம் வழியாக வலம்வர வேண்டும். பின்னர் தெற்கு நுழைவாயில் வழியாக மகா மண்டபம் சென்று மூலவர், பாலசுப்பிரமணியரை தரிசிக்க வேண்டும். பிறகு ஷண்முகரை வழிபட வேண்டும். அடுத்து கொடிமரத்தடியில் நமஸ்கரிக்க வேண்டும். பிறகு தட்சிணாமூர்த்தி, இவரைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர், நடராஜர், சனீஸ்வரர் மற்றும் பைரவரை வழிபடலாம். கோயிலுக்கு வெளியே வந்து ஷண்முக விலாசம் மண்டபத்தினருகே சிறிது நேரம் அமர்ந்து வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம்.

திருச்செந்தூர் முருகப்பெருமானின் மகிமைகள்

சதுர்வேதி மங்கலம் என்ற தலத்தைச் சேர்ந்தவர் பகழிக் கூத்தர். வைணவரான இவர், தீராத வயிற்று வழியால் மிகவும் இடர்பட்டார். முருகப்பெருமான் இவரது கனவில் தோன்றி, தன்மீது ‘பிள்ளைத் தமிழ்’ பாடும்படி கட்டளையிட்டார். குழந்தைப் பருவத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் புகழ்ந்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக்கூத்தரின் வயிற்றுவலி நீங்கியது. ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’ எனும் அவரது நூல் திருச்செந்தூர் முருகன் சந்நதியில் அரங்கேற்றப்பட்டது. இந்த பிள்ளைத்தமிழை நாள்தோறும் அபிஷேக நேரத்தில் திருப்புகழோடு சேர்த்து இன்றும் இக்கோயிலில் பாடப்படுகிறது.

- முத்தாலங்குறிச்சி காமராசு, பரமகுமார், சுடலை மணி செல்வன்