அறிய இயலாத ஆற்றல்களை அருள்வாள் சக்தி!



அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 23

அபிராமி அந்தாதி பாடல் 16 விளக்கம் (தொடர்ச்சி)

‘வெளி முதற் பூதங்களாகி’ -
ஆகாயம் - சிதம்பரம் - சிவகாம சுந்தரி;
வாயு - காளஹஸ்தி - ஞானபிரசுன்னாம்
பிகா தேயு -  திருவண்ணாமலை - அபீத
குசலாம்பாள்; தீர்த்தம் - திருவானைக்கா
- அகிலாண்டேஸ்வரி; பிரித்வி - காஞ்சி
புரம் - ஏலவார்குழலி.

- என அம்பிகை ஐம்பூதத் தலங்களில் திகழ்கிறாள்.

‘‘அளியேன்’’- இந்த வார்த்தையால் அபிராமிபட்டர் தன்னுடைய ஆன்மாவை குறிப்பிடுகின்றார். ஆன்மாவானது சத்தை சாரும் போது சத்தாகவும், அசத்தை சாருகிறபோது அசத்தாகவும் இருக்கும் தன்மை பெற்றது என்கிறது சைவ சித்தாந்தம். அறிவை ஆண் என்றும், உடலை பெண் என்றும், ஆன்மாவை அலி என்றும் குறிப்பிடுகிறார். ஆன்மாவை வண்டு என்றும், குழவுக்குறியாக குறிப்பிடுவர். மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் ஆகியவற்றைக் கால்களாகக் கொண்டது ஆன்மா.

அந்த ஆன்மாவின் தன்மையை கொண்டு உமையம்மையை அறிந்து அனுபவிக்க இயலாது, உமையம்மையின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
உமையம்மையை அறியாத ஆன்மா அறியாமையில் துன்புறும். உமையம்மையை அறிந்தால் இன்புறும். அதனால்தான் தன் இயலாமையை ‘அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே’ (பாடல் 16) என்று வியக்கிறார். வியப்பிற்கு காரணம் இரண்டு - ஒன்று, உமையம்மையின் அருளாலே தாம் அறிவது என்பது, முன்பு தாம் அறிந்த எந்த ஒன்றோடும் ஒத்து போவதில்லை.

மேலும் புதியதாக உள்ளது. அதனாலேயே அதிசயம் என்கிறார். இரண்டு, ஆன்மாவாகிய தன்மைக்கு ‘மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத’ (பாடல் 87) உமையம்மையை அறியும் வல்லமையில்லை. வல்லமையற்ற தான் அறிவது என்பது அதிசயமாகும். காந்தத்தால் இரும்பு ஈர்க்கப்படுவது போல் உமையம்மையை அவள் அருளால் மட்டுமே அறிய முடியும்.

அளக்க முடியாததும் உறுதி செய்ய இயலாததும், தூய்மையானதும், வடிவமற்றதும், எங்கும் பரந்திருக்கும் வடிவமுடையதும், அறிவிற்கு புலப்படுவதும், கருணை என்ற  உறுதியான குணம் கொண்டதுமான உமையம்மை சிற்றறிவிற்கு, பேரறிவு எட்டும்படி செய்கிறாள். ஆலம் விதையில் ஆலமரம் ஒடுங்கியதுபோல தனக்காகக் குறுகி தோன்றியது கண்டு வியக்கிறார். இதையே வேதங்கள் ‘அப்ரமேயம் அனிர்தேஸ்யம்’ என்கின்றன. அளக்க இயலாததும் இடம்சுட்டி உறுதிசெய்ய இயலாததுமாகிய உமையம்மையின் இயல்புத்தன்மை கூறப்படுகிறது.

வியக்தா வியக்த நீரூபிஜ்ஜ பதமம் ஷட்
திரிம்ஷத் தத்வாதிகம் தஸ்மா உத்ர தத்வம்
அக்ஷரமிதம் த்தேயம் ஸதா யோகிபி:
ஓம்காராதி சமஸ்த மந்த்ர ஜனகம் சூக்ஷ்மாதி
சூக்ஷ்மம் பரம் வந்தே பஞ்சமம் ஸ்வரஸ்ய
வதனம் கவ்யாபி தேஜோமயம்

- இவ்வாறு ‘யாஜுசமந்தர ரத்னாகரம்’ என்ற நூலில் குறிப்பிட்டவாறு விளங்கி தோன்றியும், விளங்கி தோன்றாது என்று உறுதி செய்ய இயலாததும், மேலானதும், முப்பத்து ஆறு தத்துவங்களால் ஆன சரீரத்தோடு கூடிய ஆன்மாவினால் முற்றிலும் உணர்ந்து கொள்ள இயலாத தத்துவங்களுக்கு எல்லாம் மேலான தத்துவங்களாக இருப்பதும், குறைவற்றதும், இந்த வடிவமானது யோகிகளால் மனதுள் வைத்து எண்ணத்தக்கதுமான ஓம்காரம் முதலான அனைத்து மந்திரங்களின் தோற்றத்துக்கு காரணமானதும்,

நுட்பத்தை எல்லாம்விட மிக நுட்பமானதும், ஐந்து நிலைகளை கொண்டதுமாகிய ஒளி வெளியாகியிருக்கின்ற உமையம்மையின் வடிவம் மனதிற்கும், வாக்கிற்கும், விழிக்கும் எட்டும் நிலவாகவும், வாக்கிற்குள் அந்தாதியாகவும், மனதிற்குள் ஆனந்தமாகவும், அளவற்ற அவள் கருணையால் நின்ற இதுவரை அடையாத அந்த உமையம்மையின் தோற்றத்தை அதிசயம் என்கிறார். இவை எல்லாவற்றையும் இணைத்தே ‘அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே’ என்று வியந்து போற்றுகிறார்.

கிளி, ஒளி, ஒளிரும்-ஒளிக்கும் இடம், வெளி, பஞ்சபூதம், அன்பு, அளவு, அதிசயம், அறிவு, கிளைஞர், மனது ஆகிய பதினொரு சொற்களால் ‘ருத்ரவித்யா’வை மறைமுகமாக குறிப்பிடுகின்றார். இந்த ருத்ரர்கள் உமையம்மையின் அருளினாலே, ஆற்றலினாலே அனைத்து உயிர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து அவரவர் வினைப்பயனால் அவரவர் கொண்ட யாக்கையின்வழி, அவரவர் கொண்ட செம்மைத் தன்மையை, அவரவரைக் கொண்டே அறிவிக்கவும், அனுபவிக்க செய்யவும் வல்லவர்கள் அதில் தலையானவரே மிருத்யுஞ்ஜெயர். உமையம்மையோடு திருக்கடையூர் சிவனான மிருத்யுஞ்ஜெயரையும் இணைத்து சொல்லாக இறைவியையும், பொருளாக இறைவனையும் நினைத்து வணங்குவோம்.

அபிராமி அந்தாதி - பாடல் 17

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
    துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசய மானது அபசய மாக முன் பார்த்தவர் தம்
    மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே. (பாடல் - 17)

உமையம்மையின் வழிபாட்டில் மந்திரமும் தந்திரமும் இறைத் திருஉருவமும் சமமான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இப்பாடல், மூன்றாவதாகிய உருவத்தைப் பற்றிப் பேசுகிறது. உமையம்மையின் அருவத்தைக் கூறுகிறது. அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரி சரஸ்வதி, இலக்குமி, பார்வதி மூவரும் இணைந்த சண்டி, காளி, கெளரி அர்த்தநாரீஸ்வரன், காமதகனமூர்த்தி, தவக்கோல காமாட்சி போன்ற இறைத் திருஉருவங்களைப் பற்றி நுணுக்கமாகப் பேசுகிறது.
ஆசை பிறப்பீனும் வித்து.

அந்த ஆசையின் வடிவம் காமன். அந்த ஆசையை அறவே அழிப்பதுதான் தவம். அப்படிப்பட்ட தவத்தினாலே பெறுவது ஞானம். ஞானத்தினாலே வருவது காம ஜெயம். அதனாலே வருவது தன்னுணர்வாகிய ஆத்ம ஞானம். ஆத்ம ஞானம் அடைந்த பின்பே அருளால் அறியப்படுவது சிவ ஞானம். சிவ ஞானம் அடைந்த பின்பே ஏற்படுவது முக்தி அனுபவம். அதன் வடிவமே அர்த்தநாரி. ‘அவன் அருளாலேயே அவன் தாள் வணங்கி’ என்ற வாக்கியத்தை சிந்தித்து வாம பாகத்தை இனி அனுபவிப்போம்.

‘‘அதிசயமான  வடிவுடையாள்’’

அதிசயம் என்பது காண்பவரால் முன் எப்பொழுதும் காணப்படாத, அறியப்படாத நிலையில் ஒரு பொருளைக் காணும்போது தோன்றும் உணர்வாகும். அந்த வகையில் இறைவியை அபிராமிபட்டர் முதன்முதலாக காணுகிறபோது அவர் உள்ளத்துள் தோன்றிய உணர்வை ‘அதிசயமான’ என்ற வார்த்தையால் பதிவு செய்கின்றார். வடிவு என்பது உமையம்மை சார்ந்த சாக்த தந்திரங்களின் வழியே ஐந்து வகையாக பிரித்து கூறப்பட்டிருக்கிறது: 1. கலா ரூபம், 2. நிஷ்கலா ரூபம், 3. சகல நிஷ்கலம், 4. பார மார்த்தீகம், 5. சத்யம்.

இவற்றிற்கு உதாரணங்களாக மனோன்மணி, ஸ்ரீசக்கரம், சக்திபீடம், குரு, தனக்குள்ளே தோன்றுவது ஆகிய வடிவங்களைச் சொல்லலாம். இந்த ஐந்து வடிவங்களில் ‘சத்யம்’ என்பது, வழிபடுபவரின் இதயத்தில் அவருக்கு மட்டுமே விளங்கும் வண்ணம் பிறர் யாவரும் அறியாவண்ணம் மந்திர ஜபத்தாலோ, தியானத்தாலோ, பூஜையினாலோ, ஞானத்தாலோ தோன்றுவதாக இருப்பது. உடையார் என்ற சொல்லானது சிற்ப சாத்திரத்தின் வழியும், மந்திர சாத்திரத்தின் வழியும், கூறப்படுகிற உமையம்மையை குறிக்கிற கலைச் சொல்லாகும்.

உடையாள் என்பது சிவன் கோயில்களில் ‘உடனாய’ என்கிற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடப்படும் சக்தியின் வடிவமாகும் - அபிராமி அம்பிகை உடனாய அமிர்தகடேஸ்வரர், மீனாம்பிகா சமேத ராஜசேகரசாமி என்பதுபோல, சிவலிங்கத்திற்கு உரிய சக்தி வடிவான உமையம்மையை சிற்ப சாத்திரங்கள் மனோன்மணி என்ற பொதுப் பெயரால் குறிப்பிடுகின்றன. சைவத்தின் நோக்கில் சிவலிங்க வடிவமானது பிரம்மா, விஷ்ணு, ருத்ர என்ற மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

சிவலிங்கத்தில் தண்டு போன்ற உருண்டையான மையத்திலுள்ள வடிவம் ருத்ர பாகம் என்றும், தாமரை போன்ற பகுதி பிரம்ம பாகம் என்றும் இவை இரண்டையும் இணைக்கிற ஆலிலை போன்ற வடிவம் விஷ்ணு பாகம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆலிலை போன்ற விஷ்ணுபாகத்தை உமையம்மையாகவே கருதி சைவம் வழிபடுகிறது. இதை பிண்டிகை என்று குறிப்பிடுகின்றனர். இந்த பிண்டிகையை தான் தமிழில் உடையாள் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.

இந்த நோக்கில் சிவனோடு பிரியாத அருள் வடிவாக ஆலிலை வடிவில் இணைந்தே இருக்கும் உமையம்மையையே உடையாள் என்று குறிப்பிடுகின்றார்.
‘அதிசயமான வடிவுடையாள்’ என்பதால் மனிதனை சார்ந்து, மனிதனுக்குள் வெளிப்படாது உறங்கி கிடக்கும் பேராற்றல், அதிசயம் எனப்படுகிறது.
இதை தந்திர சாத்திரங்கள் குண்டலினி என்கின்றன. இந்த சக்தி உறங்குவதாகவும், இது விழித்த நிலையில் மனிதனுக்குப் பெரிய, அடைய இயலாத, அறிய இயலாத ஆற்றல்களை எல்லாம் பெற்றுத் தரவல்லது என்றும் சொல்கின்றன.

இது மந்திரத்தாலும், மூலிகையாலும், தியானத்தாலும் யோகப் பயிற்சியினாலும், வெளிப்பட்டு பல நன்மைகளைச் செய்யும். இந்த சக்தியையே உபாசிப்பவன் மட்டுமே அறிந்து உணர்ந்து அனுபவிக்க முடியும். இதையே அபிராமி பட்டர், ‘ஆனந்தமாய் என் அறிவாய்’, ‘வானந்தமான வடிவுடையாள்’ என்று வர்ணிக்கிறார். சத்யம் என்கின்ற வடிவத்தில் உபாசகனுக்குள் பயிற்சியாலும் அருளாலும் விளங்கி தோன்றும் உமையம்மையே ‘அதிசயமான வடிவுடையாள்’.

‘‘அரவிந்தமெல்லாம் துதி செய’’

‘அரவிந்தம்’ என்றால் தாமரை, ‘எல்லாம்’ என்றால் அனைத்தும், ‘துதி செய’ என்பது புகழ்ந்து பாடுவது. ‘அரவிந்தமெல்லாம் துதி செய’ என்பது தாமரை எல்லாம் அபிராமியை துதி செய்து வணங்குகிறது என்பது பொருள். ஆனால் வழக்கில், தாமரையால் இறைவனை துதி செய்ய கேட்டிருக்கிறோம். தாமரையே இறைவியை துதித்ததாக கேள்வியுறவில்லை. இதன் நுட்பம், தாமரை துதி செய்யாது தாமரையில் அமர்ந்துள்ள தேவதை துதி செய்யும், தாமரையும் அந்த தேவதையும் ஒன்றே என்பதால், ஆகுபெயராகி தேவதையை குறித்தது.

அந்த வகையில் செந்தாமரையை விட்டு நீங்காதவள் இலக்குமி. வேதம் அவளை ‘பத்மினி, பத்மா, பத்மதளாயதாக்ஷி, பத்மாலயா’ என்றெல்லாம் குறிப்பிடுகிறது. தாமரையால் தாமரை அனைய கண்ணினால், தாமரையை அகமாக கொண்டவள் என்பது இதன் பொருள். வெண்தாமரையில் இருப்பவள் சரஸ்வதி, ‘ஸ்வேத பத்மாஸனஸ்தா’ என்கிறது சரஸ்வதி அர்ச்சனை. திருமகளும், கலைமகளும், ராஜராஜேஸ்வரிக்கு சாமரம் வீசுவதாக லலிதாஸஹஸ்ரநாமம் குறிப்பிடுகிறது: ‘ஸசாமர ரமாவாணி சவ்யதக்ஷிண சேவிதாயை நம:’

பத்ம யோனி, பத்மஜன் என்று உலகத்தை படைக்கும் பிரம்மாவைக் குறிப்பிடுகிறது வடமொழி அகராதி. இதற்கு தாமரையில் பிறந்தவன் என்பது பொருள். புண்டரீகாக்ஷன் என்று மகாவிஷ்ணுவிற்கு பெயர். இதற்கு தாமரைக் கண்ணன் என்பது பொருள். அந்த வகையில் திருமாலும், அயனும் தாமரையோடு  இணைக்கப்படுகின்றனர். ‘படைத்தும், காத்தும், அழித்தும் திரிபவராம்’ (பாடல் - 26) என்பதால், நாராயணனும் அயனும் வணங்கியதையே ‘அரவிந்தமெல்லாம் துதி செய’ என்று குறிப்பிடுகிறார் பட்டர்.

துதி செய்வதற்கு மலர், நீர் போன்றவை இன்றியமையாததாகும். ‘போதேடு நீர் சுமந்து ஏந்தி’ என்கிறது தேவாரம். இங்கு ‘போது’ என்ற சொல், தாமரையைக் குறித்தது. ஆயிரம் தாமரைகளால் அர்ச்சிக்க விரும்பிய மகாவிஷ்ணு, ஒரு தாமரை குறைந்தபொழுது தனது கண்ணையே பெயர்த்து தாமரையாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு நீங்காச் சிறப்புடைய சக்ராயுதத்தை சிவனிடமிருந்து பெற்றார் என்கிறது திருவீழிமிழலை தலபுராணம். ‘மாலுக்கு சக்கரம் யீந்தானை’ என்ற தேவாரத்தை கொண்டு உணரலாம்.

துதி செய தேவையானது அரவிந்தம் என்பதனாலும் ‘அரவிந்தமெல்லாம் துதி செய’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார். தாமரையை உமையம்மைக்கு சாத்தி வழிபடுவது, செல்வத்தைத் தரும் என்கிறது சாக்த தந்திரம். தாமரையை ஆயுதமாக கொண்டு உமையம்மையை சரணாகதியால் துதி செய்கிறான் மன்மதன். ‘காமன் முதல் சாதித்த புண்ணியர்’ (பாடல் - 97) என்ற வரியால் இதை அறியலாம். உமையம்மையின் முகத்தையும் தாமரை என்றே பட்டர் குறிப்பிடுகின்றார். ‘வதனாம் புயமும்’ (பாடல் - 58)

‘‘ஆனன சுந்தரவல்லி’’

ஆனனம் என்பது முகத்தை குறித்தது. சுந்தர என்பது அழகைக் குறித்தது. ‘ஆனன சுந்தர’ என்ற வார்த்தையால் முகத்தழகுமிக்கவள் என்று அபிராமியை குறிப்பிடுகிறார். சாக்த தந்திரங்கள் உமையம்மையின் உறுப்புகளையும், அதன் சிறப்புகளையும், தனித்தனியாக குறிப்பிட்டு வெவ்வேறு உமையம்மையின் திருஉருவங்களை விவரிப்பது வழக்கம். அந்த வகையில், ‘பாதாம் புயத்தில்’ (பாடல் - 12) - லலிதா திரிபுரசுந்தரி; ‘நுண்ணிடையாள்’ (பாடல் - 91) - பாலா திரிபுரசுந்தரி; ‘பென்னம் பெரிய முலையும்’ (பாடல் - 53) -  மகா திரிபுரசுந்தரி.

அந்த வகையில் ‘ஆனன சுந்தரி’ என்பவள் இலக்குமி ஆவாள். இலக்குமியை முக அழகோடும், லலிதாவை பாத அழகோடும், மகா திரிபுரசுந்தரியை இடையழகோடும் சிறப்புற அமைக்க வேண்டும் என்கிறது சிற்ப சாத்திரம்.‘வல்லி’ என்பது மெல்லியல் கொடி போன்றவளாக குறிப்பிடப்படுகிறது. சரஸ்வதியை மெல்லியவளாய், ஒல்லியான தேகத்தை உடையவளாய் படைக்க வேண்டும் என்கிறது சிற்பம். ‘ஆனன சுந்தரவல்லி’ என்பதால் சரஸ்வதி, லட்சுமி ருவரையுமே சேர்த்துச் சொல்கிறார். திருக்கடையூரில் பாலாம்பிகை, இலக்குமி, சரஸ்வதி இருவரையும் தோழியாக பெற்று முக அழகுடையவளாக திகழ்வதையே இப்பாடலுள் மறைமுகமாக குறிப்பிடுகின்றார்.

‘அரவிந்தமெல்லாம் துதி செய ஆனன சுந்தரவல்லி’ என்பதால் இலக்குமி, சரஸ்வதி, காளி மூவரும் இணைந்த ஒரே வடிவமாக தோன்றும் சண்டி என்ற தேவதையை குறிப்பிடுகின்றார். ‘உயிர் அலி உண்ணும் உயர் சண்டி’ (பாடல் - 77). இந்த சண்டியின் மந்திரத்திற்கு மார்க்கண்டயரே ரிஷி ஆவார். இதை பட்டர் ‘மாயா முனிவரும்’ (பாடல் - 4) என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். திருக்கடையூர் தலபுராணமும் பார்வதி தேவியானவள் துர்க்கை வடிவம் கொண்டு சிவனை குறித்து தவம் இயற்றி வழிபட்டாள் என்கிறது. இதை பட்டரின் ‘மாத்தளே’ என்ற வார்த்தையின் வழி அறியலாம்.

மிருத்தியுஞ்ஜயரின் பூஜாவிதி கல்பமானது அவருக்கு உடனுறை சக்தியாக காத்யாயினி (‘காத்யாயினி சமேத அமிர்த மிருத்தியுஞ்ஜயே ஸ்வராய நம:’) என்ற பெயரையே குறிப்பிடுகிறது.  திருக்கடையூருக்கே சிறப்பாக உள்ள, வேறு எங்கும் இல்லாத சம்மேளன ஸஹஸ்ரநாமம் உமையம்மையும், சிவனையும் இணைந்து போற்றும் மிருத்தியுஞ்ஜய ரகசியத்திற்கு செய்யப்படும் பூசனை முறையையும் மறைமுகமாக இப்பாடல் வரியால் சுட்டுகிறார்.

‘‘துணை ரதி பதி சயமாக’’

ரதியின் துணைவனாகிற மன்மதனை வென்ற சிவபெருமான் என்கிறார். குறிப்பாக காலனை உதைத்தது, ஜலந்தரனை வதைத்தது, யானையைக் கிழித்தது என்று சிவபெருமானின் பிற வீரச்செயல்கள் இருக்க மன்மதனை வென்றதை இங்கே சிறப்பாகக் குறிப்பிடுவது ஏன்? மன்மதனின் பெயரைச் சொல்லாமல் ரதிபதி என்று மனைவியை முதலாக வைத்தது ஏன்? மன்மதனுக்கு பிற பெயர்கள் இருக்க ரதிபதி என்று குறிப்பிட்டது ஏன்?

மன்மதன் யுத்தம் செய்யச் செல்லும்போது ரதியை அழைத்துச் செல்லுகிறான். உலகியலில் யுத்தத்திற்குச் செல்பவர்கள் மனைவியை அழைத்துச் செல்வதில்லை. மனைவியுடன் சேர்ந்து வருபவருடன் யுத்தம் செய்வதில்லை. இந்த இடத்தில் மனைவியோடு வந்தவனை அழித்தது அத்துணை சிறப்பில்லை. இக்கருத்து சிவனை இழிவுபடுத்தும் நோக்குடன் குறிப்பிடப்படவில்லை. சாக்த பரம், சிவபரம், உபயம் என்ற சாக்த தந்திரத்தின் மூவகையில், சக்தி வழியில் சிவனை முதலாக உடைய உமையம்மை (சதாசிவ மனோன்மணி),

சக்தி மேலான உமையம்மை (புவனேஸ்வரி), சக்தி சிவம் சமமான உமையம்மை (உமையொருபாகர்) என்ற பிரிவில் சக்தி தழைக்கும் சிவமான வழிபாட்டு நெறியை தான் பிற்றுவதை இங்கே மறைமுகமாகச் சொல்கிறார் பட்டர். சிவபெருமான் மன்மதனை வென்றது சிறப்பல்ல என்கிறார். மேலும் புலன்களை அடக்கி வீட்டை விட்டு ஒதுங்கி துறவு ஏற்று பெண் சுகத்தை நீக்கி, பிரம்மச்சரிய விரதம் ஏற்று மூச்சை அடக்கி முழுமையாக செய்த தவம், திருமணமே வேண்டாம் என்று செய்த உயர் தவத்தை எதிர்த்த மன்மதனை வெற்றி கொண்ட சிவபெருமான் என்றும் சொல்கிறார்.

‘‘முன் பார்த்தவர் தம்’’

சிவபெருமான் மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் பார்த்து அழித்தார். சிவபெருமானின் பார்வையானது மூவகைப்படும். வலது கண் சூரியன், படைக்கும் தொழிலைக் கொண்டது. இடது கண் சந்திரன், காக்கும் தொழிலைச் செய்வது. நெற்றிக்கண் அக்னி அழிக்கும் தொழிலைச் செய்வது. இந்த மூன்று கண்களால் கந்தனை ஆக்கவும், தேவர்களைக் காக்கவும், மன்மதனை அழிக்கவும் செய்தார். அதனாலேயே முன் பார்த்தவர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். முன் என்பதல், காரண காரிய அடிப்படையில், மன்மதன் அழியுமாறு பார்த்தவனே என்ற நிகழ்வை ‘துணையிரதிபதிசயமாக... முன் பார்த்தவர் தம்’ என்று சொல்லி
சிறப்பிக்கிறார்.

‘‘அபசயமாக’’

மன்மதனை அழியப் பார்த்தவரான சிவபெருமான் பெற்ற வெற்றியை, தோல்வியுறுமாறு அம்பாள் வெற்றி கொண்டாள். தன்னை வணங்கும் தன் பக்தனுக்காக தன் கணவனை வெற்றி கொண்டாள். தவத்தால் வெற்றி கொண்டாள். தேவர்களின் நலனுக்காக வெற்றி கொண்டாள். பார்வதியின் வெற்றிச் செயலானது என்ன? எரித்து வீழ்த்திய தன் பக்தனை மீண்டும் எழச் செய்தாள். அதை தன் கணவனைக் கொண்டே செய்யச் செய்தாள். அதையே அபிராமி பட்டர் ‘காமன் முதல் சாதித்த புண்ணியம்’ (பாடல் - 97) என்கிறார்.

சிவபெருமானின் உயர்ந்த தவச் சிந்தனை நீக்கி அவனை இல்லறத்தாராக ஆக்கிய பெருமையையும் உடையவள் உமையம்மை இதையே பட்டர், ‘தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் முகனும்முந் நான்கிரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண் டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே’ (பாடல் - 65) என்று, மன்மதனை வெற்றி கொண்ட சிவனை, தான் வென்ற அந்த வெற்றியை மாறும்படியும் செய்த உமையம்மையையே என்கிறார். உமையம்மையின் இந்த சிறப்பை முதன்மையாக குறிப்பிடவே ‘சக்தி தழைக்கும் சிவத்தை’ (பாடல் - 29) என்கிறார்.

(தொடரும்)

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்