இறைவன் அருட்துணையுடன் பிறவிக்கடல் கடப்போம்!தர்மமே! தர்மமே -உன்னை
தவறாது கடைபிடிப்பது எப்படி?
கர்மமே! கர்மமே - நீ
பிறவி தோறும் தொடர்வது எப்படி?
தர்க்கமே! தர்க்கமே
என்னுள் உண்டானது எப்படி?
இன்பமே! மெய் இன்பமே
உன்னிடம் நிலைத்திருப்பது எப்படி?
துன்பமே! தீரா துன்பமே - எனை
நெருங்காது காத்துக்கொள்வது எப்படி?

சொர்க்கமே! சொர்க்கமே
இன்ப உலகில் நுழைவது எப்படி?
நரகமே! நரகமே! உன்னை
கடந்து செல்வது எப்படி?
போகமே! சுக போகமே-உனை
பொய்யென்று உணர்வது எப்படி?
யோகமே! யோகமே -உனை
மெய்யென்று உணர்வது எப்படி?

தாகமே! அறிவு தாகமே
நீ தணியாது இருப்பது எப்படி?
ஞானமே! பரஞானமே!
உன்னை வென்று மகிழ்வது எப்படி?
வானமே! புதிர் வானமே!
நீ விரிந்தே கிடப்பது எப்படி?

மானமே! தன்மானமே!
உனை போற்றிக்காப்பது எப்படி?
ஊனமே! மன ஊனமே!
உனை உடைத்தெறிவது எப்படி?
மாயையே! பொய் மாயையே!
நீ கானல் நீரென உணர்வது எப்படி?

சேவையே! அரும் சேவையே!
உனை செய்து கொண்டே இருப்பது
எப்படி? விதியே! வல்விதியே!
உன்வழி நடந்து வெல்வது எப்படி?
மதியே! உயர் மதியே!
மயக்கம் தெளிந்து விழிப்பது எப்படி?

வாழ்வை வென்ற பெருமக்கள்
இறைவனடியார் கூறிய சொற்படி
அவர்கள் மந்திர உபதேசம் துணைப்பிடி!
கேள்விக்கு விடை கிடைக்கும்!
இப்பிறவி கடக்க வழி பிறக்கும்!
இரக்கம், அன்பு, கருணை மனதை
இறைவனுக்கு காணிக்கையாக்கி
பேரருளுக்கு காத்திரு, அடைவாய்!

- விஷ்ணுதாசன்