கோடி வளமருள்வாள் கோடிவனமுடையாள்!கருந்திட்டைக்குடி

தஞ்சை ராஜராஜேச்சரம் எனும் பெரிய கோயிலுக்கு பெருந்திருவிழாக்கள் நிகழும்போதும், மகாகும்பாபிஷேகங்கள் நிகழும்போதும், அப்பெருநகரத்தில் திகழும் நான்கு மகாகாளி கோயில்களுக்கு பலி பூஜை செய்வித்த பின்புதான் மேற்குறித்த விழாக்கள் தொடக்கம் பெறும். தஞ்சை நகரத்தின் மேற்கு கோட்டை வாயிலில் திகழும் கோட்டை வாயிற் காளி கோயில், விஜயாலய சோழன் ஸ்தாபித்த நிசும்பசூதனி எனும் வடபத்ரகாளி கோயில், சோழப்பெருவேந்தர்கள் காலத்தில் ரெளத்திர மகாகாளம் எனும் பெயரில் விளங்கிய கீழ்திசை குயவர் தெருவில் உள்ள மகாகாளி கோயில்,

தஞ்சை நகரத்துக்கு வரும் கோடிவனமுடையாள் பெருவழி எனும் நெடுஞ்சாலை அருகில் திகழும் கரந்தை கோடியம்மன் கோயில் ஆகிய நான்கு காளி கோயில்களே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான ஆலயங்களாகும். இந்த நான்கு காளி கோயில்களும் கி.பி. 9ம் நூற்றாண்டு காலகட்டத்தில் எடுப்பிக்கப் பெற்றவை என்பதை கல்வெட்டுச் சாசனங்கள் மற்றும் பழந்தடயங்கள் மூலம் அறிய இயலுகின்றது.

தஞ்சை நகரத்தின் புறநகராக விளங்கும் கருந்திட்டைக்குடிக்கும், வெண்ணாற்றுக்கும் இடையில் கோடியம்மன் கோயில் எனற பெயரில் இக்காளி கோயில் உள்ளது. பழங்காலத்தில் இது வனப்பகுதியாக இருந்ததால் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுச் சாசனமான்று இதனைக் கோடிவனம் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு கோயில் கொண்டுள்ள வடவாயிற் செல்வியான மாகாளியை கோடிவனமுடையாள் என்றும், இவ்வனத்தின் வழியே சென்ற பழங்கால நெடுஞ்சாலையை கோடிவனமுடையாள் பெருவழி என்றும் அச்சாசனமே குறிக்கின்றது.

வடக்கு நோக்கி அமைந்த அழகான இவ்வாலயத்தின் கருவறை சாலாகார விமானத்துடன், அர்த்த மண்டபம் மகாமண்டபம் ஆகிய கட்டுமானங்களுடன் இணைந்து காணப்பெறுகின்றது. திருச்சுற்றில் பண்டு அப்பகுதியில் திகழ்ந்து முற்றிலுமாக அழிந்துபோன சிவாலயமொன்றின் தெய்வத் திருமேனிகளான இரண்டு பைரவ மூர்த்தங்கள், இரண்டு அம்பிகையின் திருமேனிகள், துர்காதேவி எனப் பல தெய்வ உருவங்களைத் தற்போது பிரதிட்டை செய்துள்ளனர் கோடி வனமுடையாள் எனப்பெறும் தேவி கருவறையில் எட்டுத் திருக்கரங்களுடன் வீராசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி நல்குகின்றாள்.

அம்பிகையின் திருமேனி சுதையால் வடிக்கப் பெற்றதாகும். மிகத் தொன்மைக் காலத்திலிருந்து சில குறிப்பிட்ட காளிதேவியின் திருவடிவங்களையும், சில வைணவ ஆலயங்களில் மூல மூர்த்தியையும் படாசாதனம் என்ற முறையில் சுண்ணாம்புச் சுதையாலேயே வடிப்பது மிகத் தொன்மையான கோயிற்கலை மரபாகும். அவ்வகையிலேயே இங்கும் அம்மரபு போற்றப் பெறுகின்றது. தீச்சுடர்கள் ஒளிரும் திருமகுடத்தோடு கையில் திரிசூலம், வாள், கேடயம், மணி, கபாலம் பாசம் போன்ற ஆயுதங்களைக் கையில் தரித்தவளாக அமர்ந்த கோலத்தில் திகழும் கோடியம்மனின் திருமேனி, செம்மாந்த கோலத்துடன் காட்சி நல்குகின்றது.

அர்த்த மண்டபத்தில் கருவறையின் வாயிலின் இருமருங்கும் பல்லவர் காலத்துக்குரிய மிகப் பழமையான இரண்டு அமர்ந்த கோல தேவியின் கற்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு தேவி தன் இடக்காலை மடித்தும், வலக்காலைத் தொங்கவிட்ட நிலையிலும் நான்கு திருக்கரங்களோடு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். ஜடாபாரம் விரிந்து திகழ்கின்றது. காதுகளில் பத்ரகுண்டலங்கள் காணப்பெறுகின்றன. வல மேற்கரத்தில் கத்தியும், இட மேற்கரத்தில் கபாலமும் உள்ளன.

இட முன்கரத்தை தொடையின் மீது இருத்தியும், வல முன்கரத்தால் அபயம் காட்டியும் அம்பிகை திகழ்கின்றாள். மார்பில் பாம்பாலான உரக கச்சையைத் தரித்துள்ளாள். மற்றொரு பாம்பாலான யக்ஞோபவீதம் எனும் மார்பணி காணப் பெறுகின்றது. கையிலும், தோளிலும் அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன. அவள் தரித்துள்ள ஆடை அழகுடன் திகழ்கின்றது. திருமுகம் கருணையின் வடிவமாகவே காட்சி நல்குகின்றது. மற்றொரு புறம் உள்ள தேவியின் சிலா வடிவமும் பல்லவர்கால கலை அமைதியுடன் அமைந்துள்ளது. இத்தேவி தாமரை பீடத்தின் மேல் இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளாள்.

 தலையில் சிகை ஜடாபாரமாக விரிந்து திகழ்கின்றது. ஒரு காதில் குழையும், ஒரு காதில் பிரேத குண்டலமும் தரித்துள்ளாள். வலமேற்கரத்தில் திரிசூலமும், இடமேற்கரத்தில் கபாலமும் உள்ளன. இடமுன்கரத்தை தொடையின் மீது அமர்த்தியுள்ள இத்தேவி வலமுன் கரத்தால் அபயம் காட்டுகின்றாள். இவள் அணிந்துள்ள யக்ஞோபவீதம் கபாலங்கள் கோர்க்கப் பெற்றதாகத் திகழ்கின்றது. அணிகலன்களும் இடுப்பாடையும் இத்தேவிக்கு மேலும் அழகூட்டுகின்றன. இவ்விரண்டு தேவிகளின் திருவடிவங்களை தற்காலத்தில் பச்சைக்காளி பவளக்காளி எனக் குறிப்பிட்டு வழிபட்டு வருகின்றனர்.

பேரழகு வாய்ந்த இந்த இருதேவிகளும் தேவி வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் யோகினிகள் ஆவர். அறுபத்து நாலு யோகினிகளுடன் காளிதேவியின் கோயிலை அமைப்பதும், காலபைரவர் பைரவி ஆகியோருடன் அத்தேவியருக்கு கோயில் அமைப்பதும் உண்டு. இந்தியாவில் யோகினிகளுடன் அமைந்த கோயில்கள் ஒரு சிலவே. தமிழகத்தில் இருந்த ஓரிரு கோயில்களும் அழிந்து அவற்றின் எச்சங்களாக ஒரு சில யோகினிகளின் திருவடிவங்களே நமக்குக் கிடைக்கின்றன.

கோவைக்கு அருகில் ஒரு கோயிலும், தஞ்சைக்கு அருகில் ஒரு கோயிலும் இருந்ததற்கானத் தடயங்கள் கிடைத்துள்ளன. அத்தகைய திருக்கோயில்களில் இடம்பெறும் அறுபத்துநான்கு யோகினிகளின் திருமேனிகளை பின்வரும் பெயர்களால் குறிப்பிடுவர் திவ்ய யோகி, மகா யோகி, சித்த யோகி, கணேஸ்வரி, பிரேதா சிபிகினி, காளராத்ரி, நிசாசரி, ஜங்காரி, ஊர்துவ வேதாளி, பிசாசி, பூதடாமரி, ஊர்த்துவகேசி, விருபாக்ஷி, சுஷ்காங்கி, நரபோஜினி, ராக்ஷசி, கோரரக்தாக்ஷி, விஸ்வரூபி, பயங்கரி, வீரகௌமாரி, கீசண்டி, வராகி, முண்டதாரிணி, பிராமரி, ருத்ர வேதாளி, பீஷ்கரி, திரிபுராந்தகி, பைரவி,

துவம்சனி, குரோதி, துர்முகி, பிரேதவாகினி, கட்வாங்கி, தீர்க்கலம் மோஷ்டி, மாலினி, மந்திரயோகினி, காலாக்னி, கிறாமணி, சக்ரி, கங்காளி, புவனேச்வரி, பட்காரி, வீரபத்ரேசி, தூம்ராக்ஷி, கலகப்பிரியை, கண்டகி, நாடகி, மாரி, ஏமதூதி, கராளினி, கௌசிகி, மர்த்தனி, எக்ஷி, ரோமஜங்கி, பிரஹாரிணி, ஸஹஸ்ராக்ஷி, காமலோலா, காகதமாஷ்டரி, அதோமுகி, தூர்சடி, விகடி, கோரி, கபாலி, விஷலங்கினி என்ற திருநாமங்களால் அறுபத்து நாலு யோகினிகளையும் தொண் நூல்கள் குறிப்பிடுகின்றன.

தஞ்சை கருந்திட்டைக் குடியில் உள்ள பராந்தகசோழன் காலத்து கல்வெட்டொன்றில் கோடிவனமுடையாள் திருக்கோயிலை நந்தி மாகாளி கோயில் எனக் குறிப்பிடுவதோடு அக்கோயிலின் இருபது நாள் பூசை உரிமை ஆத்திரையன் சீதரன் என்பானுக்கு வழங்கப் பெற்றதாகவும் கூறுகிறது. நந்தி மகாகாளம் என்ற இந்த கோயிலோடு இணைந்தோ அல்லது அருகிலோ அறுபத்துநான்கு யோகினிகளுக்கான கோயில் அமைந்திருந்து பிற்காலத்தில் முற்றிலுமாக அழிந்துள்ளது. அதில் இடம் பெற்றிருந்த இரண்டு யோகினிகளின் அரிய திருமேனிகளே தற்போது அங்கு இடம் பெற்றுள்ளன. கி.பி.846ல் சோழப்பேரரசன் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்ட பிற்கால சோழராட்சியைத் தோற்றுவித்தான்.

அவன் புதிய தலைநகரைத் தோற்றுவிக்கும்போது நிசும்ப சூதனி எனும் தேவியின் கோயிலை எடுத்த பிறகே நகரை நிர்மாணித்தான் என கன்னியாகுமரி பகவதி கோயிலில் உள்ள சோழர் கல்வெட்டு கூறுகின்றது. பின்பு ராஜேந்திரசோழனின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி.1024), கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரைத் தோற்றுவித்து தஞ்சை நகர மக்களை அங்கு புலம்பெயரச் செய்தான். அதன் பிறகு தஞ்சையின் முக்கியத்துவம் சற்று குறையலாயிற்று.

சோழராட்சியின் இறுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று தஞ்சையையும், உறையூரையும் முற்றிலுமாகத் தீயிட்டு அழித்தான். அழிந்த தஞ்சைப் பகுதியில் மீண்டும் பாண்டியனின் தளபதி தொண்டைமான் என்பவரால் புதிய குடியிருப்புகளும், நரசிம்மர் கோயிலொன்றும் அமைக்கப்பெற்றன.  அப்பகுதிக்கு சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும் பெயரிட்டான். அது தொடர்ந்து புதிய தஞ்சை நகரம் மீண்டும் பொலிவு பெறலாயிற்று.

சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலத்தின் தோற்றம் பற்றி விவரிக்கும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள பாண்டியனின் கல்வெட்டில் அதற்கென அளிக்கப்பெற்ற நிலங்கள் பற்றி கூறும்போது கோடிவனமுடையாள் எனும் தேவியின் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. வரலாற்றுச் சிறப்புடைய கோடியம்மன் கோயிலும், அதில் இடம்பெற்றுள்ள இரண்டு யோகினிகளின் திருமேனிகளும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தஞ்சை செல்லும் அன்பர்கள் கோடியம்மன் கோயில் சென்று தேவியை வழிபடுவதோடு அங்கு திகழும் இரண்டு அரிய யோகினிகளையும் தரிசனம் செய்யுங்கள். அது மறக்க இயலா அனுபவமாக நிச்சயம் அமையும்.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்