எதிர் காலம், புதிர் காலம்; நிகழ் காலம், மகிழ் காலம்!



புத்தகம் புதுசு

அரண்மனையில் ஒரே கோலாகலம். கொண்டாட்டம். “நம் மாளிகையில் நமக்குத் தெரியாமல் என்ன விழா இன்று?” என்று எண்ணிய தர்மர் முன்பு பீமன் எதிர்ப்பட்டான். “பீமா! என்ன மேளச் சத்தமும், ஆரவாரமும்! உனக்குத் தெரியுமா?” ‘‘ஏற்பாடு செய்ததே நான்தான் அண்ணா,” என்ற பீமனிடம் ‘‘எதற்காக இந்த தடபுடல் நிகழ்ச்சிகள்?” என்று கேட்டார்.

“தீர்க்க தரிசனம் கொண்ட முக்காலமும் உணர்ந்த தங்களைப் பாராட்டி மகிழத்தான் இப்படி ஒரு ஏற்பாட்டை நான் செய்தேன்” “என்ன ஒரேயடியா என்னைப் புகழ்கிறாய்? அப்படி என்ன நான் த்ரிகாலஞானியாகிவிட்டேன்!” “அண்ணா! தற்போது தங்களிடம் வந்து உதவி கேட்ட ஒருவரிடம் ‘நாளை மறுநாள் வா! உனக்கான அன்பளிப்பை உறுதியாகத் தருவேன்” என்று கூறினீர்களாம். இப்படிக் கூறினால் என்ன பொருள்? அவருக்கும், உங்களுக்கும் ஆயுள் எத்தனை என்பதை நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள் என்றுதானே அர்த்தம்? கடவுளால் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள வாழ்நாள் விவரம் தங்களுக்குத் தெரிந்துள்ளதே! அதனால்தான் விழா எடுத்து விமரிசையாக உங்களைப் பாராட்ட உள்ளேன்”.

துணிச்சல் மிக்க பீமனின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைக் கேட்ட தருமர் உதவி கேட்டு வந்தவரை உடனே திரும்ப அழைத்து அவருக்குரிய அன்பளிப்பை அளித்தார். வாழும் நாட்களின் மர்மம் ஒருபுறம் இருக்க, ஓடிக்கொண்டே இருக்கும் காலச்சுழற்சியில் எதையும் ஒத்திப் போடுவது என்பது எவ்வளவு தவறு என்பதையும் அல்லவா இச்சம்பவம் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது!

“பிறகு பார்த்துக்கொள்ளலாம். அடுத்த மாதம் இதைச் செய்யலாம்” என்கிற வாசகங்கள் எல்லாம் அர்த்தம் இழந்த சொற்றொடர்கள்! ‘நெடுநீர் மறவி மடி துயில் நான்கும் கெடுநீரார் காமக்கலன்’ என்கிறார் திருவள்ளுவர். ‘நெடுநீர்’ என்றால் விரைந்து செய்ய வேண்டிய ஒன்றை ஒத்திப்போட்டு, காலம் நீட்டித்துச் செய்வது என்று பொருள். ‘நன்றே செய்க! அதுவும் இன்றே செய்க!’ என்பதோடு நின்றுவிடவில்லை நம் புறநானூற்றின் பாடல்வரிகள். அடுத்தவரிதான் மிகவும் அர்த்தம் பொதிந்தது.

அது என்ன தெரியுமா? ‘இன்னே செய்க’ என்பதுதான். இந்த வினாடியே செய்! நாளை செய்வோம்! இன்று மாலை பார்ப்போம் என்றெல்லாம் என்ணுவது தோல்வியின் தோழர்களாக நம்மை ஆக்குமே தவிர வெற்றியின் நண்பர்களாக நம்மை ஒருபோதும் விளங்கச் செய்யாது என்கிறது புறநானூறு. தள்ளிப் போடுவதும் தாமதமாகச் செய்ய நினைப்பதும் நாம் கிள்ளிப்போட வேண்டிய கீழான நடைமுறைகள். காலம் பொன் போன்றது என்பது கூட சரியல்ல. காலம் உயிர் போன்றது என்றுதான் உரைத்திட வேண்டும். ஏனென்றால் உயிர் போனால் மீண்டும் பெறமுடியாது என்பதுதானே உறுதி.

கடந்த காலம் - அது  நடந்த காலம்!
எதிர் காலம் - அதுவோ புதிர் காலம்!
நிகழ் காலம் - அதுவே  மகிழ் காலம்!

(தினகரன் நாளிதழின் ஆன்மிக மலரில் வெளியான கட்டுரைகளின் புத்தக வடிவம். இரண்டு பாகங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ. 180/-)