சிறப்பால் சிறப்புபெறும் சீர்மிகு திருக்குறள்!



குறளின் குரல் - 75

திருக்குறளுக்கு எத்தனையோ சிறப்புக்கள் உண்டு. `எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று திருக்குறளைக் கற்றறிந்தோர் பாராட்டுகிறார்கள். `மன்பதைக்கென ஒரு பொதுமறையை அருளிய திருவள்ளுவரைத் தமிழ்மணி என்று மட்டும் வழுத்தாது, உலகுக்கு ஒளிவழங்கத் தமிழ்நாடளித்த வான்மணி என்று வழங்குவோமாக!` என்று போற்றுகிறார் தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள்.

வானுக்குச் செங்கதிர் ஒன்று- புனல்
வன்மைக்குக் காவிரி ஒன்று - நல்ல
மானத்தைக் காத்து வாழ்ந்திட என்றும்
மாந்தர்க்கு ஒன்று திருக்குறள்!
 
- என வள்ளுவத்தைக் கொண்டாடுகிறார் பாவேந்தர் பாரதிதாசன். இவ்விதமெல்லாம் பலவாறாகச் சிறப்புப் பெற்ற திருக்குறள், ‘சிறப்பு’ என்ற சொல்லைப் பல இடங்களில் கையாண்டு அதனாலும் சிறப்புப் பெறுகிறது! திருவள்ளுவர் சிறப்பு என்கிற சொல்லைக் கையாளும் இடங்களைப் பார்ப்போமா?

`சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.’
(குறள் எண் 18)
 - வானம் பொய்த்து மழைவளம் குன்றிவிட்டால் வானோர்க்குச் செய்யும் சிறப்பான பூஜைகள் கூட நடைபெறாது. மழை பொழிந்தால்தான் தெய்வங்களுக்கு சிறப்பான பூஜை நடக்கும் என வள்ளுவர் சொல்வதை இன்றுவரை நாம் நடைமுறையில் காண்கிறோம். கிராமம் தோறும் மாரியம்மன் திருவிழாக்கள் மாரியைத் தரும் அம்மனுக்காக நடப்பவைதானே?

புராண காலங்களிலும், மழை பெய்தால் அதற்குக் காரணமான இந்திரனுக்கு நன்றி தெரிவித்து விழா எடுத்தார்கள். கண்ணன் வளர்ந்த கோகுலம் செழித்தது மழையால்தான். எனவே மழைக்கடவுளான இந்திரனுக்கு யாகம் நிகழ்த்த விரும்பினார் கண்ணனின் வளர்ப்புத் தந்தையும் யசோதையின் கணவருமான நந்தகோபர். நமக்குச் செழிப்பைத் தருவது கோவர்த்தன மலை அல்லவா? மேகங்கள் அந்த மலையில் மோதித்தானே மழை உருவாகிறது? மழைக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமானால் மலைக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். யாகத்தை மலையின் பொருட்டாக நிகழ்த்துவதே நல்லது! என்றான் கண்ணன்.

அவன் சொன்னால் தட்ட முடியுமா? கீதை சொன்ன கண்ணன் சொன்னதெல்லாம் கீதை தானே? தேவன் இந்திரனுக்கான யாகம் கோவர்த்தன மலைக்கான யாகமாக மாறி நடந்தேறியது. தன் ஆணவத்தை அழிக்கவே இப்படித் திட்டமிட்டான் கண்ணன் என்பதை அறியாத இந்திரன் கோகுலத்தையே அழித்துவிடும் உத்தேசத்துடன் தன் கீழ் உள்ள வருண தேவனை விடாது மழை பொழியுமாறு ஏவினான். கொட்டித் தெறித்தது வானம். பிரளயம் வருவதுபோல் பொழிந்தது பெருமழை. ஆகாயச் சீலையில் பெரும் பொத்தல் விழுந்துவிட்டதோ என கோபர்களும் கோபிகைகளும் அஞ்சி நடுங்கினார்கள்.

பிரளயகால வெள்ளத்திலேயே ஆலிலை மேல் கட்டைவிரலைக் கடித்துக் கொண்டு சிரித்தவாறே படுத்துக் கொண்டிருப்பவன் அல்லவா கண்ணக் குழந்தை? இந்த மழைக்கா அவன் அஞ்சுவான்? தன்னையே நம்பிய யாதவர்கள் மேல் அவன் கருணை மழை பொழியலானான்! மழை ஏழு நாட்கள் விடாது பெய்தது. சக்கரம் தாங்கும் கண்ணக் கடவுள், ஒற்றைச் சுண்டுவிரலில் கோவர்த்தன கிரியைத் தூக்கித் தாங்கினான். அந்த மலையின் கீழ் அனைத்து கோபர்களையும் பாதுகாப்பாக நிற்க வைத்து கோகுலத்தைக் காத்தான். கண்ணனின் சாகசத்தைக் கண்ட இந்திரனின் ஆணவம் அடியோடு அழிந்ததையும் அவன் கண்ணக் கடவுளுக்கு நேரில் வந்து பாத பூஜை செய்ததையும் பாகவதம் சொல்கிறது.

துவாபர யுகத்தில், தன்னை `ஏழுநாள், தாங்கி நின்ற கண்ணனை, தான் என்றென்றும் தாங்கிநின்று, நன்றி தெரிவிக்க விரும்பியது கோவர்த்தன கிரி. மலையின் மனம் கல்மனம்தான் என்றாலும் நன்றியுணர்ச்சியால் அது தழதழத்தது. கலியுகத்தில் `ஏழு மலை,யாகப் பிறப்பெடுத்தது அது. திருப்பதியில் வேங்கடவனாய்த் தோன்றிய கண்ணனை நிரந்தரமாய்த் தாங்கி நின்று அது தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்கிறதாம்!  

அன்பீனும் ஆர்வ முடைமை அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.’ (குறள் எண் 74)
 
-அன்பு முதலில் பிறரிடம் நம்மைப் பற்றிய விருப்பத்தை ஏற்படுத்தும். பின்னர் அந்த விருப்பமே நட்பு என்ற அளவு கடந்த பெரும் சிறப்பைத் தரும். உங்களின் நண்பர்கள் யார்யார் என்று சொல்லுங்கள். நீங்கள் யார் என்று நான் சொல்கிறேன்!, என்று சொல்லப்படும் கூற்று உண்மைதானே? நட்பு வட்டம் தானே ஒருவனின் ஆளுமையை உருவாக்குகிறது? அன்பாய்ப் பழகத் தொடங்கும்போது பிறர் நம்மை விரும்பத் தொடங்குகிறார்கள். பின்னர் அதுவே நட்பாய் மாறுகிறது. இந்த உளவியல் பரிணாமத்தை அழகாக விளக்குகிறது இந்தக் குறள்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!,- என அன்பே கடவுள் என்று போற்றுகிறது திருமூலரின் திருமந்திரம். அன்பு நட்பாய்ப் பரிணமிக்கும் அதிசயத்தைச் சிறப்பாக்கி மகிழ்கிறது திருமந்திரத்திற்கும் முன்பே தோன்றிய திருவள்ளுவம்.
`அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.’
(குறள் எண் 75)
 
- உலகத்தில் இன்பமடைவோர் எய்தும் சிறப்புக்குக் காரணம் அவர்கள் மற்றவர்களுடன் அன்புகொண்டு பழகுவதேயாகும். மகிழ்ச்சியுடன் இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு நல்ல நண்பர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். மற்றவர்களுடன் அன்பு கொண்டு பழகப் பழக வாழ்க்கை இன்பம் நிறைந்ததாய் மாறும். இன்பமுடையவர்களின் சிறப்புக்குக் காரணம் அடிப்படையில் அவர்கள் மற்றவர்களிடம் அன்பாக இருப்பதே. நல்ல நண்பர்களின் எண்ணிக்கையை இயன்றவரை அதிகப்படுத்திக் கொண்டு வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

இன்னாமை இன்பம் எனக் கொள்ளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.’
(குறள் எண் 630)
 
- துன்பப் படுவதையே ஒருவன் இன்பம் எனக் கருதி வாழ்வதற்குக் கற்றுக் கொண்டால், அவனுக்கு அவனுடைய பகைவர்களாலும் விரும்பப்படும் சிறப்பு உண்டாகும். மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்களும் மதித்தார்கள். என்ன காரணம்? அவர் எளிமையை ஆபரணமாக ஏற்றவர். `ஏன் ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறீர்கள்?, எனக் கேட்டபோது `நான்காம் வகுப்புப் பெட்டி இல்லை அல்லவா, அதனால் தான், என்றவர் அவர்! துன்பங்களை இன்பங்களாகக் கருதியவரை எதிரிகளும் மதித்ததில் வியப்பில்லையே? பகைவர்களாலும் விரும்பப்படும் சிறப்பு காந்திக்கு எப்படி வந்தது என்பதன் பின்னணியில் இயங்கிய கோட்பாட்டை வள்ளுவம் சிறப்பாக விளக்கி விட்டது. துன்பங்களை விரும்பி ஏற்ற காஞ்சிப் பரமாச்சாரியாரின் எளிமையான வாழ்க்கை முறை தானே அவரை அவரது முகாம் சாராதவர்களும் போற்றக் காரணம்?

இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு’,(குறள் எண்752)
 
- பொருட்செல்வம் இல்லாதவர்களை எல்லோரும் ஏளனம் செய்வார்கள். செல்வம் உடையவர்களை எல்லோரும் சிறப்புச் செய்வார்கள். இது உலக நடைமுறை. சிறப்பு வேண்டுமானால் செல்வத்தைச் சேர்த்துக் கொள் எனச் சொல்லாமல் சொல்கிறது வள்ளுவம். பிறரின் ஏளனத்திற்கு ஆளாகாமல் இருக்க நல்ல வழியில் செல்வம் சேர்ப்பது நல்லது. `பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை, அருளிலார்க்கு வானுலகம் இல்லாதது போன்று’ என்பதும் வள்ளுவர் சொல்லும் கருத்தல்லவா?

`ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாண்உடை மாந்தர் சிறப்பு.’ (குறள் எண் 1012)

- உணவும் உடையும் மற்றுமுள்ள பலவும் எல்லா மனிதர்க்கும் பொது. ஆனால் பழிபாவங்களுக்கு அஞ்சி வாழ்தல் நல்ல மனிதர்களுக்கு உரிய சிறப்புப் பண்பாகும் என்கிறது வள்ளுவம். கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய புறநானூற்றுப் பாடல் பழிக்கு அஞ்சி வாழவேண்டும் என்ற கருத்தை அழகாக விளக்குகிறது.

உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!
(புறநானூறு 181)

பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்கிறது இப்பாடல். அதாவது, உலகம் முழுவதையுமே பரிசாகத் தருவதாய்ச் சொன்னாலும் பழிவரும் செயல்களைச் சான்றோர் செய்ய மாட்டார்களாம். வள்ளுவத்தின் விளக்கமல்லவா  இந்த வரிகள்?

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.’(குறள் எண் 31)

-சிறப்பைத் தருவதும் செல்வச் செழிப்பைக் கொடுப்பதும் அறமே ஆகும். எனவே அறத்தைக் காட்டிலும் மேன்மை மிக்கது வேறு எதுவும் இல்லை. எனவே அறத்தைக் காப்பாற்றுங்கள் என்கிறது வள்ளுவம். அறநெறி ஒருவனுக்குக் கட்டாயம் செல்வத்தைத் தரும். கூடவே பெருமையையும் தரும். அறமே ஒருவனுக்குச் சிறப்புச் சேர்க்கும்.

`சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.’ (குறள் எண் 311)

- சிறப்பைத் தரக்கூடிய செல்வத்தைக் கொடுப்பதாகவே இருந்தாலும் அடுத்தவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற சான்றோரின் கொள்கையாகும். கோடிப் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அடுத்தவர்களுக்குத் துன்பம் செய்ய மாட்டேன் என கம்பீரமாகத் தலைநிமிர்ந்து வாழ்பவர்கள் உள்ள தேசமல்லவா இது? சுதந்திரப் போராட்ட காலத்தில் எத்தனையோ தியாகிகளை விலைக்கு வாங்க முயன்றது பிரிட்டிஷ் அரசு. பணம் பதவி போன்ற ஆசைகளைக் காட்டியும் அச்சுறுத்தியும் தங்களுக்கு ஆதரவாகத் தியாகிகளைத் திருப்ப முயன்றது. ஆனால், பணத்திற்கு விலைபோகாமல் சுதந்திரப் போரில் கலந்து கொண்டு உயிரையே நீத்தவர்கள் திருப்பூர் குமரனைப் போல இன்னும் எத்தனை எத்தனை பேர்!

`பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.’ (குறள் எண் 358)
 
- பிறவிக்குக் காரணமான அறியாமையை நீக்கிக் கொள்வதும் பிறவாமையைத் தரும் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்வதுமே சிறந்த அறிவாகும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் ஐயனே உன்னை என்றும் மறவாமை வேண்டும்!’ என மெய்ப்பொருளை வேண்டினார் புனிதவதியாகிய காரைக்கால் அம்மையார். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க வேண்டுமானால் இறைவன் அடியைச் சேரவேண்டும்’ எனக் கடவுள் வாழ்த்திலும் கூறுகிறது வள்ளுவம். இவையெல்லாம் அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் வந்து சிறப்புச் சேர்த்த’ குறட்பாக்கள். காமத்துப் பாலிலும் சிறப்பைச் சேர்க்கிறார் வள்ளுவர்.

`எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.’ (குறள் எண் 1208)

-‘பிரிவுக் காலத்தில் நான் எவ்வளவு அதிகமாக அவரை நினைத்தாலும் அதுபற்றி அவர் கோபம் கொள்ள மாட்டார். அதுதான் அவர் கருணையோடு எனக்குச் செய்யும் சிறப்பு’ எனத் தலைவனைப் பற்றிச் சலித்துக் கொள்கிறாள் தலைவி. பிரிந்துசென்ற காதலன் வருவான் வருவான் எனக் காத்திருந்தாள் தலைவி. வழிமேல் விழிவைத்துப் பார்த்திருந்தாள். அவன் சென்ற நாளைக் கணக்கிட்டு சுவரில் கோடுபோட்டு வைத்தாள். அப்படிக் கோடுபோட்டுப் போட்டு அவள் விரலே தேய்ந்து விட்டது. `அவர் சென்ற நாளைக் கணக்கிட்டுச் சுவரில் ஒற்றித் தேய்ந்த விரல்’ என்கிறார் வள்ளுவர்.
 
மங்கையர்கண் புனல் பொழிய மழை பொழியும் காலம்
மாரவேள் சிலைகுனிக்க மயில் குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்
கோகனக நகை முல்லை முகை நகைக்கும் காலம்
செங்கை முகில் அனைய கொடைச் செம்பொன் செய் ஏகத்
தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்
அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்
 அவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம்!’

- எனப் பிரிவாற்றாமையைப் பற்றிப் பேசுகிறது பிற்காலத்தில் எழுந்த நந்திக் கலம்பகம். தலைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் வள்ளுவத் தலைவி, சலிப்போடு கூறுவதாக அமைந்துள்ள குறள் நம் சிந்தையை அள்ளுகிறது. `தலைவன் அவளுக்குச் செய்கிற சிறப்பு ஒன்றே ஒன்றுதானாம். அவள் அவனை எவ்வளவு நினைத்துக் கொண்டாலும் அதுபற்றி அவன் சீற்றம் கொள்ள மாட்டானாம்! என்னே அவன் அன்பு!’ என்கிறாள், அவன் காலந்தாழ்த்துவதை எண்ணிச் சற்றே கோபத்தோடு காத்திருக்கும் அந்தப் பேதைத் தலைவி.

மழை பொழியாவிட்டால் வானுலகத் தேவர்களுக்கும் திருவிழாச் சிறப்பு கிடையாது, நட்பு என்கிற அன்புடைமைதான் ஒருவருக்கு என்றென்றும் சிறப்புத் தரும், செல்வந்தர்களுக்கு எல்லோருமே சிறப்புச் செய்வார்கள், பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்வதே மானிடர்க்குச் சிறப்பு, இன்ப துன்பங்களை சமமாகக் கருதும் மன உறுதி பகைவர்களாலும் விரும்பப்படும் சிறப்பு, பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருப்பது எப்போதும் சிறப்பானது, அற வழியில் நடந்தாலே சிறப்புத்தான், நினைவில் தோய்ந்திருப்பதில் காதலரின் சிறப்புத் தெரியும், இறைவன் ஒருவனே சிறப்பானவன் என்பன போன்ற எத்தனையோ சிறப்புக்களைப் பற்றிப் பேசும் வள்ளுவம் சிறப்பான நூல் என்பதில் என்ன சந்தேகம்?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்