பணிப்பெண்ணாய்ப் பரிதவித்த பேரரசி!



மகாபாரதம் - 78

‘‘யாரப்பா அது? நம்முடைய பசுக்கொட்டிலில் அந்நியன் நுழைந்திருக்கிறான். என்ன செய்கிறீர்கள்?”பசுக்களின் அதிகார ஆட்கள் ஓடி வந்தார்கள். ‘‘பசுக்களைப் பார்வையிட வேண்டுமென்று வந்தார். யுதிஷ்டிரரிடம் பசுவின் பாதுகாவலராக இருந்தாராம். எண்பது லட்சம் பசுக்கள் இருக்குமாம். அத்தனையும் இவர் மேற்பார்வையில்தான் இருக்குமாம். நம்மிடம் எவ்வளவு பசுக்கள் இருக்கின்றன என்று கேட்டார். ஒரு லட்சம் என்று சொன்னேன். அவ்வளவுதானா என்பது போல பார்க்கிறார். எண்பது லட்சம் பசுக்கள் என்பதில் மயங்கி அவரை உள்ளே அனுமதித்தோம்.

பசுக்கள் அவரை கொஞ்சுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறது...’’ ‘‘இங்கே அழைத்து வாருங்கள்.” சகாதேவன் வந்து வணங்கினான். ‘‘மன்னா வணக்கம். நான் வைசியன். அரிஷ்ட நேமி என்பது என் பெயர். பசுக்களை பாதுகாப்பதில் வல்லவன். யுதிஷ்டிரருடைய பசுக்களை நான்தான் கவனித்து வந்தேன். அந்த பசுக்களையெல்லாம் யார் யாரோ எடுத்துக் கொண்டு விட்டார்கள். உங்களைப் பற்றி கேள்விப்பட்டு பசுக்களை பாதுகாக்கும் ஆவலினாலும் வேறு எந்த வேலையும் தெரியாததாலும் உங்களை நோக்கி வந்திருக்கிறேன்.

எனக்கு இங்கு வேலை கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும். பசுக்கள் அற்புதமாக இருக்கின்றன. செந்நிற பசுக்கள் கூடுதலாக இருக்கின்றன. பல வண்ணங்களுடைய பசுக்கள் குறைவாக இருக்கின்றன. பல வண்ணங்களுடைய பசுக்களை அதிகரிக்கச் செய்வது ஒரு நல்ல விஷயம். அதை என்னால் செய்ய முடியும். பசுக்களைப் போலவே மூத்திரத்தை முகர்ந்து பார்த்தவுடனேயே மலடியும் கர்ப்பம் அடையும் அளவுக்கு வேகமுள்ள காளைகளையும் நான் வளர்ப்பேன். என் சொல்லுக்கு அவை கட்டுப்படும். இனப்பெருக்கம் செய்ய வைப்பதில் நான் வல்லவன். என்ன செய்தால் அவை கூடலுக்கு தயாராகும் என்பதை நான் நன்கு அறிவேன். எனக்கு இங்கு வேலை கொடுங்கள்” என்று பணிவாகக் கேட்டான்.

உன் முகம் க்ஷத்திரியனுடைய முகம் போல் இருக்கிறது. உன்னை வைசியன் என்று சொன்னால் நம்பமுடியவில்லை. ஆனால் மேலிருந்து பசுக்களை நீ தடவுவதும், கொஞ்சுவதும் பார்க்கையில் நீ பல வருடங்கள் பசுக்களோடு பழகியவன் என்பது தெரிகிறது. என்னிடம் பசுக்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ஆட்களை தேடிக்கொண்டிருக்கிறேன். நீ வந்தது சந்தோஷம். வா, வேலையில் சேர்ந்து கொள்,’’ என்று சொல்ல அரிஷ்டநேமி என்ற சகாதேவன் அந்த விராட மன்னனுடைய பணியாளனாக சேர்ந்து கொண்டான்.

அரிஷ்டநேமியின் வருகையைக் கண்டு பசுக்கள் குரல் எழுப்பின. மேல் மாடியிலிருந்து அரிஷ்டநேமி அவற்றை நோக்கி விரைவதும், பசுக்கள் சிலிர்ப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எதனாலேயோ மிகப் பெரிய திருப்தி விராட மன்னனுக்கு ஏற்பட்டது. பஞ்ச பாண்டவர்களும், திரௌபதியும் ஒரு வருடம் தலைமறைவு வாழ்வு வாழ்வதற்காக விராட தேசத்து மன்னனுடைய அரண்மனையில் சேர்ந்து கொண்டார்கள். அங்கு அவரவர் மேற்கொண்ட தொழிலை செய்து சுகமாக இருந்தார்கள்.

ஆனால் விதி அவர்களுடைய அமைதியை குலைக்கத் தயாராக இருந்தது. திரௌபதியை மற்ற தாதிகள் பெருமையாகப் பார்த்தார்கள். அவளுக்கு தொண்டு புரிய ஆசைப்பட்டார்கள். ‘‘நீ ஏன் பெருக்குகிறாய். இது நீ செய்யக்கூடிய வேலை அல்ல” என்று பிடுங்கினார்கள். அவளுடைய படுக்கையைத் தட்டி, விரித்துப் போட்டு அமைதியாக தூங்கு என்று வற்புறுத்தினார்கள். வாயேன் சாப்பிடலாம் என்று அழைத்து அவளுக்கு வெஞ்சினங்கள் பரிமாறினார்கள்.

அவளை அதிகம் நெருங்காமலும், விலகியில்லாமலும், ‘உன்னைப் பார்க்கும்போதே ஒரு பரவசம், சந்தோஷம் ஏற்படுகிறது. உன்னோடு இருப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. சத்தியத்தைச் சொல். நீ சைந்தரியா, அரசிக்குண்டான பணிமகளா, தாதியா? இருக்கவே முடியாது. நீ படிகளில் இறங்கி வரும்போது ஒரு அரசியின் தோரணை தெரிகிறது. விழுந்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று காலையில் ஒரு ஜோதிடன் சொன்னான். உனக்கு மிகச் சிறந்த மனிதர்களின் நட்பு ஏற்படும்.

கெட்டியாக பிடித்துக் கொள். வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்றான்..... இப்படிக் கொஞ்சுகிறவர்களிடம் உண்மையைச் சொல்லலாம். ஆனால், மாலினி யார் தெரியுமா, மாலினி யார் தெரியுமா என்று தண்டோரா போட்டு விடுவார்கள். சைந்தரியான மாலினி என்கிற திரௌபதி மெல்ல சிரித்தாள். அந்தப் பணிப்பெண்ணைத் தடவிக் கொடுத்தாள். இரண்டு கன்னங்களையும் ஏந்தி உச்சி முகர்ந்தாள். எந்தப்பணிப்பெண்ணும், இன்னொரு எந்தப் பணிப் பெண்ணுக்கும் இப்படி ஒரு அன்பு காட்ட மாட்டார்கள்.

தாய்மைமிக்க ஒரு பெரிய பெண்மணிதான் இவ்விதம் செய்வார்கள். எவளுக்கு ஆசிர்வாதம் பண்ண யோக்கியதை இருக்கிறதோ அவள்தான் இப்படி ஆசிர்வாதம் செய்வாள். எவள் ஆசிர்வாதத்திற்கு பலம் இருக்கிறதோ அவளுக்குத்தான் அன்பை இப்படிச் சொல்ல முடியும். எவள் உள்ளத்தில் தெளிவும், திடமும் இருக்கிறதோ அவள்தான் இப்படி உச்சியில் கை வைப்பாள். அவளை முத்தமிட மனம் மயங்கியது. சுருண்டு அவள்மீது விழுந்து விடவேண்டும் என்று தோன்றியது. ஆனால், மரியாதையின் நிமித்தம் அவர்கள் கை கூப்பி விலகினார்கள்.

எல்லோரும் மாலினி என்கிற திரௌபதி மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தார்கள். அரச லட்சணங்கள் உள்ளவர்கள் அரசனாக இல்லாது போனாலும் அரசனுடைய போகத்தை அனுபவிப்பார்கள். மாலினி பணிப்பெண்ணாக இருந்தாலும் அரசியினுடைய போகத்தை அனுபவித்தாள். அந்த இடத்தில் சந்தோஷமாக வாழ்ந்தாள். அவள் அழகு அதிகமாயிற்று. நல்ல உணவாலும், நல்ல தூக்கத்தாலும், வெயிலற்ற, குளிரற்ற அரண்மனையினாலும், உடம்பு சோபையுற்றது.

நல்ல உடுப்புகள் அவள் அழகை மேம்படுத்திக் காட்டின. ஏற்கெனவே அழகியான அவள், பேரழகியானாள். இளைப்பாறுதல் மேனியின் சோபையை அதிகரித்தது. கண் மையும், திலகமும், சாந்தும், உதட்டுச் சாயமும், வாசனைப் பொடிகளும், தலைக்குளித்து உதறி சிக்கு எடுத்து சீவிய அடர்ந்த கூந்தலும் அவளை கந்தர்வ கன்னியைப்போல் காட்டின. வாயிற் காவலர்களும், அரண்மனை சேககர்களும் தலைகுனிந்து வணக்கம் சொன்னார்கள். மிகுந்த மரியாதை காட்டினார்கள். அரசி சுதேஷணையா, மாலினியா என்பது போன்ற ஒரு மயக்கத் தோற்றம் அந்த அரண்மனையில் உருவானது.

சுதேஷணையின் தம்பி கீசகன் என்பான் விராட மன்னனிடம் தளபதியாக இருந்தான். மிகப் பெரிய கர்வி. அதிகம் அலட்டல் உள்ளவன். குரூரமான சுபாவம் கொண்டவன். விராட மன்னனுக்கு வேலை தெரியாது, இங்கு அத்தனையும் நான்தான் என்ற எண்ணத்தில் மிதக்கிறவன். தனக்கு என்ன வேண்டுமானாலும் உதவி செய்ய தன் தமக்கை சுதேஷணை இருக்கிறாள் என்ற திமிரில் இருப்பவன். ஏதேச்சையாக சுதேஷணையின் அந்தப்புரத்திற்கு வந்தவன் திரௌபதியைப் பார்த்து திடுக்கிட்டான்.

பணிப்பெண்ணா, நீர் குடத்தை தூக்கிக் கொண்டு வருகிறாள்! அதற்காகவா இருக்கிறாள் இங்கே! ஒரு பணிப்பெண்ணா இத்தனை அழகு! யாரோ புதிதாய் தலைவாரிப் பின்னுகின்ற சைந்தரி வந்திருக்கிறாள் என்று சொன்னார்கள். இவளா அது. இவ்வளவு பேரழகா. இதென்ன தலைமுடி. இதென்ன முகவாய். இப்படியென்ன ஒரு பொங்கும் மார்பகம். அசையும் இடுப்பு. நீண்ட தொடைகள். இவள் அரசியைப் போல் அல்லவா இருக்கிறாள். பணிப்பெண் என்பது என்ன முட்டாள்தனம். எங்கேயோ அரசியாக இருக்க வேண்டியவள், இங்கு வந்து பணிப் பெண்ணாக இருப்பதா.

இவள் இருந்தால் நன்றாக இருக்குமே. இவளோடு சம்போகம் சந்தோஷம் தருமே. பணிப்பெண் தானே. அழைத்தால் வர வேண்டும் அல்லவா. அல்லது விலைக்கு வாங்கலாம் அல்லவா. என்ன விலை கொடுத்தாலும் வாங்கலாம். உள்ளுக்குள்ளே எண்ணங்கள் புரண்டன. கீசகன் மாலினியை அருகே அழைத்து உளறத் துவங்கினான். ‘‘யார் நீ? இத்தனை அழகியாக இருக்கிறாயே. எங்கிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? திருமணமாயிற்றா? ஆன உடம்பாக தெரிகிறது. ஆனால் இத்தனை யவனம் எப்படி சாத்தியம். திருமணமான பிறகும் கட்டுக் குலையாமல் இருப்பது என்ன வித்தை. நீ படுக்கையில் இருக்க வேண்டிய பெண் அல்லவா. உன்னை யார் நீர் குடத்தோடு அலையச் சொன்னது.

என்னிடம் வந்து விடு. ஸ்தானத்தில் வைக்கிறேன்....’’ அவன் கண்களை சந்திக்காமல் சைந்தரி பின்னடைந்தாள். தொலைவில் நின்று பேசினாள். ‘‘நான் பணிப்பெண். இதற்கு முன்பு கிருஷ்ணருடைய அரண்மனையில் ருக்மிணிக்கு சேவை செய்து வந்தேன். எனக்குத் திருமணமாகி ஐந்து கந்தர்வர்கள் திருமணம் செய்திருக்கிறார்கள். என்னை அவர்கள் பாதுகாக்கிறார்கள். என் கணவர்களைத் தவிர வேறு எவரையும் நான் மனதாலேயும் நினையேன். என் புருஷர்கள் கோபக்காரர்கள். என்மீது சிறிய தவறை எவர் செய்தாலும் கடுமையாக தண்டிக்கக் கூடியவர்கள்.

என்னிடம் நீங்கள் இவ்விதம் பேசியது தகாது. அரசி சுதேஷணையின் சகோதரன் என்பதால் நான் இதை பெரிதுபடுத்தவில்லை. தயவு செய்து இவ்விதம் பேச வேண்டாம்.’’ ‘‘அடி பைத்தியக்காரி’’ கீசகன் அலட்டத் துவங்கினான். ‘‘உன்னுடைய அழகு உனக்குத் தெரியவில்லை. உன்னைப் பார்த்த கண்கள் வேறு எவரையும் பார்க்க முடியாது. பெண்களே நேசிக்கின்ற அழகு உனக்கு இருக்கிறதென்றால் ஆண்கள் கிறுகிறுத்து மயக்கமாவதில் ஆச்சரியமில்லை. இந்த வார்த்தை நானா பேசினேன். என்னை மிஞ்சியல்லவா வந்திருக்கிறது.

நீ விராட தேசத்து அரண்மனையில் விராட மன்னனின் மனைவிக்கு துணையாக இருக்கிறாய் என்பது ஒரு அபத்தமான விஷயம். இந்த விராட தேசம் அந்த அரசனுக்குச் சொந்தமானதல்ல. எனக்குச் சொந்தமானது. இங்கு முக்கியமாக இதன் தலைமை ஏற்று இங்கு முதல்வனாக இருப்பது நான். அவர் பெயருக்கு இருக்கிறார். அரசனே பெயருக்கு இருக்கிறார் என்றால், அரசிக்கு என்ன மரியாதை. அந்த அரசிக்கு நீ பணிப்பெண் என்றால் உனக்கு என்ன மரியாதை. நீ எங்கு இருக்க வேண்டியவள் தெரியுமா. விராட தேசத்தின் மகாராணியாக இருக்க வேண்டியவள்.

நீ இருக்கிறாய் என்றால் உடனடியாக நான் விராட தேசத்தின் அரசனாக முடிசூட்டிக் கொள்வேன். அவ்வளவு வேகம் எனக்கு இருக்கிறது. உன்னைக் கண்டதும் அப்படி ஒரு ஆசை பொங்குகிறது. ஒரு தளபதியின் மனைவியாக நீ இருக்கக் கூடாது என்று என் மனது தவிக்கிறது. ‘‘அழகியே சொல். என்னை வந்து சேர்ந்து விடு. எனக்குத் துணையாக இரு. உன் கண்கள் கூர்மையாக இருக்கின்றன. நீ புத்திசாலி என்றுத் தெரிகிறது. அரசியல் ஆலோசனை சொல்வதற்குக் கூட உனக்கு வலிவு இருக்கிறது. அடியே, சைந்தரி வா. என்னிடம் வா.’’

அவன் எழுந்து நின்றான். அவள் மறுத்தாள். அவன் முன்னடைந்தான். அவள் பின்னடைந்தாள். ஓடிப்போய் சுதேஷனையின் அறைக்குள் நின்றாள். பின்னால் துரத்தி வந்து கீசகன் சுதேஷணையைப் பார்த்து அதட்டினான். ‘‘இவளை வரச் சொன்னால் வரமாட்டேன் என்கிறாள். பணிப்பெண்தானே, சொடுக்கினால் வர வேண்டியவள்தானே. இவள் என்ன இப்படி ஓடி வருவது. நான் துரத்திதான் பிடிக்க வேண்டுமா இவளை. சொல் பணியச் சொல். வந்து என் படுக்கையில் படுக்கச் சொல்’’ என்று உரக்கக் கத்த, சுதேஷனை தம்பியை எதிர்க்க முடியாமல், அதேசமயம் மாலினியை ஆதரிக்க முடியாமலும் தவித்தாள்.

‘‘இல்லை அம்மா. உங்களுக்கு முன்னமே சொல்லியிருக்கிறேன். என் புருஷர்கள் கோபக்காரர்கள். அடித்து விடுவார்கள் என்று. தயவு செய்து இதை செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள்.’’ ‘‘அடியே. கொஞ்சம் அமைதியாக இரு நான் பேசுகிறேன்.’’ சுதேஷனை ஒரு தர்மத்தின்பால் கட்டுப்பட்டு ஆத்திரமாக நிற்கின்ற கீசகனிடம், ‘‘இவளை விட்டு விடு. இவள் வேறு ஏதோ சில விஷயங்கள் சொல்கிறாள். இவளைப் பார்த்தால் வெறும் பணிப்பெண்ணாக எனக்குத் தோன்றவில்லை. அவளாக பணிப்பெண்ணாக இருக்கிறேன் என்பதால் இவளை ஏற்றுக் கொண்டேன்.

இவள் வேறு யாரோ என்றுதான் என் மனம் சொல்கிறது. நீ அவசரப்படாதே. உன் ஆத்திரத்திற்கு இங்கு பெண்களா இல்லை. இவளை விட்டுவிடு.’’ ‘‘இவளையா, விட்டுவிடுவதா. உன் அரண்மனையில் இருப்பதா. என் அரண்மனைக்கு அல்லவா தூக்கிப் போகப் போகிறேன். வரச் சொல்.’’ அங்கிருந்து மிக வேகமாக திரௌபதி தப்பித்தாள். சுதேஷனை காப்பாற்ற மாட்டாள் என்றுத் தெரிந்து படிகளில் இறங்கினாள். அவனும் பின் தொடர்ந்தான். பெரிய அரண்மனை தெருக்களில் ஓடி அரசவைக்கு முன்னால் ஏறி, அரசர் எங்கிருக்கிறார் என்று கேட்டு கடைசி அடைக்கலமாக அரசரிடம் போய் நிற்கலாம் என்ற எண்ணத்தில் அங்கு நின்றாள். அரசருக்கு அருகே தன்னுடைய புருஷன் தருமனும் இருப்பான் என்பது அவளுக்குத் தெரியும். அரசர் மட்டுமல்லாது தருமருக்கு இந்தத் தொந்தரவை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது.

அரசனிடம் ஓடிப் போய் வணங்கி நின்றாள். அரசன் என்ன என்றான். ‘‘உங்கள் மைத்துனன் என்னை வற்புறுத்துகிறார். என்னை துன்புறுத்துகிறார். என்னை இழிவாகப் பேசுகிறார். நான் திருமணமானவள். என் கணவர்களுக்கு கட்டுப்பட்டவள். இவரை ஏறிட்டு பார்க்கவும் முடியாது. இவ்வளவு சொன்ன பிறகும் அவர் விடவில்லை. பல கந்தர்வர்களை நான் அடித்து வீழ்த்திருக்கிறேன் என்று சொல்லி என்னுடைய புருஷர்களையும் இழிவாகப் பேசுகிறார். தயவுசெய்து அவரை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்.’’ என்று அரசனிடம் கை கூப்பி வேண்டினாள்.

மிகுந்த பலசாலியான ஐந்து வீரர்களின் மனைவி திரௌபதி, துருபதன் என்கிற மன்னனின் மகள், வலிமை வாய்ந்த சகோதரனை உடையவள், அக்னியிலிருந்து தோன்றியவள், கற்புக்கரசி, கடவுளின் அணுக்கிரகம் பெற்றவள், ஒரு நேரத்தில் ஒரு காலகட்டத்தில் கிரகசாரத்தால் பலமில்லாத மன்னன் முன்பு கை கூப்பியும் தன் பலத்தால் அதிகம் அட்டூழியம் செய்ய முடியும் என்ற ஆணவக்காரனுக்கு பயந்தும் அங்கு இருந்தாள். கங்கன் என்கிற தருமரோடு உரையாடிக் கொண்டிருந்த விராட மன்னன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.

கங்கனை ஏறிட்டு நோக்கினான். கங்கன் இதில் தான் சம்பந்தப்பட முடியாது என்பது போல தலைகுனிந்து கொண்டான். ஆனால் மாலினியின் பார்வை அவர் மீதே இருந்தது. ‘‘ஐந்து கணவர்கள் இருந்தும் எனக்கு இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்கிறது, பார்த்தீர்களா. அவர்கள் வேறு சில விஷயங்களில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக இங்கு வரமுடியாத நிலையில் இருக்கிறார்கள். எனக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கோபக்காரர்கள். நான் துன்பப்படுகிறேன் என்றுத் தெரிந்தால் பொங்கி எழுந்து அடித்து துவம்சம் செய்து விடுவார்கள்.

இதை யார் எடுத்துச் சொல்வது. சொல்ல வேண்டியவர்கள் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்களே’’ என்று தருமரை மெல்லியதாய் இடித்துரைத்தாள். இன்னும் சில மாதங்கள் அஞ்ஞாதவாசம் முடியும்படி இருப்பதால் தருமர் அமைதி காத்தார். என்ன செய்வது மன்னர் இருக்கிறார், கவனித்துக் கொள்வார் என்று இருந்தார். ஆனால் விராட மன்னனோ தன் மைத்துனனுக்கு பயந்தான். தன் தேசத்தை தன்னால் காப்பாற்ற முடியாது. தன் மைத்துனன் இல்லாமல் தன் படைகள் சரிவர இயங்காது என்று, பணிப்பெண் தானே.

இவள் எதற்காக இவ்வளவு பாசாங்கு பண்ணுகிறாள் என்ற எண்ணத்தில் இருந்தான். இவள் திருமணமானவள், ஆனால் என்ன, வலிமையுள்ள கீசகன் கூப்பிடுகிறபோது என்ன செய்ய முடியும். யார் கீசகனை தடுக்க முடியும் என்று குழம்பினான். ‘‘கீசகா விட்டு விடேன்’’ என்று பெயருக்குச் சொன்னான். கீசகனுக்கு அது கோபத்தைத் தந்தது. ஓடிப்போய் அவள் தலைமுடியைப் பற்றி சுழற்றி தரையில் தள்ளினான். ‘‘எத்தனை திமிர் உனக்கு. என்னைப் பற்றியா குறை சொல்கிறாய். நான் அழைத்த பிறகு அரசனிடம் வந்து அபயம் கேட்கிறாயா. ஐந்து புருஷர்களா. இந்தா வாங்கிக் கொள்.” எட்டி உதைத்தான். அவள் வாயில் அடி விழுந்தது.

‘‘இந்த வாய்தானே பேசியது.’’ மீண்டும் அடித்தான். புறங்கால் அவள் வாயை தாக்கியது. அவள் கடவாயிலிருந்து ரத்தம் வழிந்தது. மகாபாரதத்தில் மூன்றாம் முறையாக திரௌபதி துன்புறுத்தப்பட்டாள். ஐந்து புருஷர்கள் இருந்தும் அபலையாகி அசிங்கப்பட்டு நின்றாள். அவள் அழகுக்கு குறி வைத்தும், அவளை அவமானப்படுத்த வேண்டும் என்றும் ஆண்கள் துடித்து நின்றார்கள். எதற்கு இது என்று யோசித்துப் பார்த்தால், அந்த கால கட்டத்தின் க்ஷத்திரிய வம்சத்தின் திமிரை இந்த சம்பவம் சொல்கிறது என்பது புரியும்.

மகாரதர்களின் மனைவியான திரௌபதிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்கள் இந்த க்ஷத்திரியர்களிடம் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்! உடல் வலிவும், அதிகார பலமும் உள்ளவர்கள் முதலில் குறிவைப்பது அழகிய பெண்களைத்தான். எந்த தேசத்தில் பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்களோ, வதைக்கப்படுகிறார்களோ அந்த தேசத்தின் சுபிட்சம் கெட்டுப் போகிறது. சுபீட்சம் கெட்டுப் போவது என்பது அரசனுக்கு உடனடியாகத் தெரியாது. இந்த அயோக்கியத் தனத்தை முடிவு கட்ட இயற்கையின் உந்துதலால் பிறந்தவர்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அந்த அவதாரம் தானாக முன்னிருந்து நடத்தாது, தன் சக்கரத்தை பயன்படுத்தாது, ஒரு க்ஷத்திரிய குழுவிலிருந்தே ஐந்து அற்புதமான க்ஷத்திரியர்களை பொறுக்கி எடுத்து அந்த க்ஷத்திரிய குலத்தை நாசம் செய்ய வைக்கிறார்.

ஒரு இனம் மற்றொரு இனத்தால் அழிவது என்பதைவிட, அந்த இனமே இரண்டுபட்டு அந்த இனத்தை அழிக்கும். மகாபாரதத்தில் க்ஷத்திரியர்களுடைய வலிவை முற்றிலும் அழிக்க க்ஷத்திரியர்களே காரணமாக  இருந்தார்கள். பசுக்களை பேணிப் பாதுகாக்கும் யாதவ குலத்தில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணர் பசுக்களை நேசிப்பது போல, பரதகண்டத்து பெண்களை நேசித்து அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்க அங்கு அவதாரம் ஆனான். அந்த விஷயம் இன்னும் பலப்பட க்ஷத்திரியர்களின் வலிவு முற்றிலும் அழிய செய்வதற்காகவே இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்தன. கீசகன் க்ஷத்திரியர்களின் ஒரு எடுத்துக்காட்டு. அவன் மரணமும் ஒரு எடுத்துக்காட்டாகவே இருந்தது.

(தொடரும்)

பாலகுமாரன்