மூச்சை அடக்கினால் மனது அடங்கும்!



பகவத் கீதை - 60

அபானே ஜுஹ்வதி ப்ராணம் ப்ரணேபானம் ததாபரே ப்ரணாபானகதீ ருத்த்வா ப்ராணாயாமப்ராயணா (4:29) ‘‘சில யோகிகள் தம் சுவாசத்தைக் கணிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தம் மூக்கினால் உள்ளிழுக்கும் காற்றையும், வெளியிடும் காற்றையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உள்ளிழுக்கும் பிராண வாயுவையும், வெளியிடும் அபான வாயுவையும் ஒன்றுக்கொண்டு ஆகுதி செய்யத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த இரு வாயுக்களின் போக்கைக் கட்டுப்படுத்தி பிராணாயாமத்தில் ஈடுபடும் திறன் படைத்தவர் களாக இருக்கிறார்கள்.’’

பகவான் கிருஷ்ணர் யோகத்தின் இன்னொரு பிரிவை இந்த ஸ்லோகத்தின் மூலம் சொல்கிறார். அடங்காதது மனம், அதைப்போலவே எங்கும் வியாபித்திருப்பது காற்று. நிர்ச்சலனமான முகத் தோற்றம் கொண்ட ஒருவரது மனம் எவ்வாறெல்லாம் ஆர்ப்பரிக்கும் என்று அவருக்கு மட்டுமே தெரியும், அவருடைய முகத் தோற்றத்தைப் பார்த்து பிறரால் அவர் மனதை அனுமானிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதேபோல காற்று எங்கும் பரந்து வியாபித்திருக்கிறது. அது, உடலால் உணரப்பட முடியாத இடத்திலும் நாசியால் இயல்பாக உள்ளிழுக்கப்படுவது, வெளியே விடப்படுவது.

அத்தகைய சூட்சுமமானது காற்று என்ற வாயு. இடிபாடுகளுக்கிடையே பல நாட்கள் புதைந்திருக்கக்கூடிய ஒருவன், மீட்கப்படும்போது உயிரோடு இருக்கிறான் என்றால், அந்த இடிபாடுகளுக்கிடையேயும் கொஞ்சம் காற்று அவனுடைய உயிரைத் தக்கவைக்க உதவியிருக்கிறது என்றுதானே அர்த்தம்! ஆக, அங்கும் காற்று இருக்கிறது! மனதுக்கும் இந்த வாயுவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைத்தான் கிருஷ்ணர் இங்கே சுட்டிக்காட்டுகிறார். எதற்காகவாவது, எதனாலாவது பயம் ஏற்பட்டால், மனம் பாதிப்படைகிறது, கூடவே, அதுவரை சீராக இருந்த சுவாசமும் தடுமாறுகிறது. இயல்பாக ஓசையற்ற அந்த மூச்சு இயக்கம், ‘புஸ், புஸ்ஸெ’ன்று தாறுமாறானதாகி விடுகிறது. ஆனால், ஒரு யோகியால், எந்த நிலையிலும் சுவாசத்தைச் சீராக வைத்திருக்க முடியும், அதாவது அவன் தன்னுடைய மனதை அலைபாயவிடாமல் வைத்திருக்க முடியும்.

எல்லா நன்மை தீமைகளுக்கும், எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும், எல்லா மான அவமானங்களுக்கும் மனமே காரணம். இவை மட்டுமல்ல இயல்பான சுவாச ஓட்டத்துக்கும் அதே மனம் காரணமாக இருக்கிறது! சந்தோஷத்தால் திகைக்கும்போதும், அச்சத்தால் ஓட நேரும்போதும் ‘மேல்மூச்சு, கீழ்மூச்சு’ வாங்குவது பலருடைய  அனுபவமாக இருக்கிறது. இதில் மேல்மூச்சுதான் மூக்கால் உள்ளிழுக்கப்படும் காற்று, கீழ்மூச்சுதான் வெளியிடப்படும் காற்று.

ஆனால் சுவாசத்தை நேர்ப்படுத்துவதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் புரிந்துகொள்ளப்படவேண்டிய உண்மை. அதாவது மனக்கட்டுப்பாட்டிற்கான உடல்ரீதியான முதல் பயிற்சி - பிராணாயாமம். அதாவது பிறருடைய அறிவுரை, ஆறுதல் எல்லாவற்றையும்விட சுயமாக ஒருவர் மேற்கொள்ளக்கூடிய எளிய பயிற்சி அது.

இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது இதன் ஆரம்பக்கட்டத்திலேயே மனசு ஒடுங்குவதை உணரமுடியும். ஆமாம், முழு கவனமும் உள்ளிழுக்கப்படும், வெளியிடப்படும் காற்றிலேயே பதிந்திருக்கும். உள்ளிழுக்கும் காற்றை எத்தனை விநாடிகள் நுரையீரலுக்குள் சிறைப்பிடித்து வைத்திருக்க முடியும், வெளியிட்டபின் எத்தனை விநாடிகள் காற்றை உள்ளிழுத்துக்கொள்ளாமல் தாக்குப் பிடிக்க முடியும் என்று இந்தப் பயிற்சியின் பரிமாணம் விரிவடையும். இவ்வாறு காற்றை உள்ளிழுப்பதை ‘பூரகம்’ என்பார்கள்; வெளியிடுவதை ‘ரேசகம்’ என்பார்கள். நீண்டநேரம் மூச்சுக்காற்றை உள்ளே இருத்தி வைத்துக்கொள்வதையும், வெளியேற்றிய பிறகு நீண்டநேரம் உள்ளிழுக்காததையும் ‘கும்பகம்’ என்பார்கள். இந்த பூரக - ரேசக - கும்பகப் பயிற்சியையும் வெகு நிதானமாகவே செய்யவேண்டும்; ஆர்வக் கோளாறாலோ, அதீத நம்பிக்கையாலோ இந்த மூன்று முறைகளிலும் கால அளவின் எல்லையை மீறினால் அது உடலுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கக்கூடும் என்றும் எச்சரிப்பார்கள்.

இப்படி நிதானமாக, சீராக, பிராணாயாமப் பயிற்சியை மேற்கொள்ளும் ஒரு யோகிக்கு அது இயல்பான சுவாசமாகவே அமைந்துவிடுகிறது - நன்றாக நடக்கக்கூடியவர், தன் கால்களைப் பற்றிய உணர்வே இல்லாமல், எந்தப் பிரச்னையுமின்றி நடந்துசெல்வதைப் போல! பிராணாயாமப் பயிற்சியால் சுவாசம் சீராக அமையக்கூடிய ஒருவருக்கு மனது தெளிவாகிறது. அவருடைய மனம் உணர்வுகளுக்கு அடிமையாவதில்லை. எத்தனை பெரிய பலன் தரும் அற்புதமான பயிற்சி இது! மனம் மட்டுமல்லாமல் மூளையும் புத்துணர்வு பெறும் ஆக்கபூர்வமான பயிற்சி.

ஒருவருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர் உடனே கோப விளைவுகளைக் காட்டாமல் சில விநாடிகள் மூச்சடக்கி, பிறகு அதை மெல்ல வெளியே விடுவாரானால், அவருடைய கோபமும் அந்த மூச்சுக் காற்றோடு வெளியேறிவிடும் என்பார்கள். இவ்வாறு கோபத்தை வெளிக்காட்டாவிட்டால், நாம் ஏமாந்தவர்களாகி விடுவோமோ என்ற கேள்வி தோன்றுவதும் இயற்கையே. ஆனால் மூச்சடக்கி, கோபத்தையும் அடக்கியவர்கள் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.

ஏனென்றால், அவர்களால் நன்மையையும், தீமையையும் ஒன்றேபோல பாவிக்க முடியும். நல்லன வந்தாலோ, நல்லன அல்லாதவை வந்தாலோ அவர்களால் மனக் கிலேசம் அடையாமல் இருக்க முடியும். தேவைப்பட்ட இடத்தில், தேவைப்பட்ட நேரத்தில் அவர்களால் தம் ஆக்கபூர்வமான வலிமையைக் காட்ட முடியும். அதேபோல அடங்கிப்போகவும் இயலும். நிதானமான சுவாசம் மனதை அமைதிப்படுத்துவதோடு, ரத்தக் கொதிப்பையும் உண்டாக்குவதில்லை, பிற எந்த உடற்கூறு பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது இக்காலத்திய அனுபவ உண்மை. இதனை கிருஷ்ணர் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டார். அர்ஜுனனுக்கு அறிவுறுத்தும் விதமாக, ஒரு யோகியை உதாரணமாகக் காட்டி, அந்த யோகியைப் போல நல்ல மனநலனும், உடல்நலனும் பெறுமாறு போதித்திருக்கிறார்.

யாருக்கெல்லாம் சுவாசக் கட்டுப்பாடு கைவருகிறதோ, அவருக்கு மனக்கட்டுப்பாடும் எளிதாகும். அவருடைய கோபத்தில் நியாயம் இருக்கும், ஆனால் விபரீத பின் விளைவுகள் இருக்காது. ஆக்கபூர்வமான சிந்தனைகளும், செயல்களும் அவற்றால் பொதுநலனும் உண்டாகும். இந்த மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்)யின் தொடர்ச்சிதான் தியானம். மூச்சை உள்ளிழுப்பதற்கும், வெளியே விடுவதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள், அதேபோல வெளியே விடுவதற்கும், உள்ளிழுப்பதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள் - இவற்றை ஆழ்நிலை தியானத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம்.

இப்படி சுவாசம் நிற்கும் விநாடிகளில் ‘பரம’ ஆனந்த நிலை ஏற்படுகிறது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்நிலையை பலமுறை எட்டியவர் என்று சொல்வார்கள். சில சமயங்களில் நாலைந்து நாட்களுக்குக்கூட அவர் அப்படியே உணர்வற்றுக் கிடப்பாராம். சுற்றி நிற்பவர்கள் திகைத்துப் போவார்கள். அவருடலில் உயிர் இருக்கிறதா என்ற சந்தேகமும் வந்துவிடும். மெல்ல அவர் உடலை ஸ்பரிசிக்கும்போது அது சூடாக இருப்பதிலிருந்து அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று நிம்மதியடைவார்களாம். வெகு நாட்கள் நீடிக்கும் அந்த சில சமயங்களில் ‘‘அவரை ‘எழுப்ப’ வேண்டியிருக்கும்’’ என்பார்கள் அவரது சீடர்கள்.

உண்மைதான். சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் அந்த ஓரிரு விநாடிகளில் நம் சிந்தனையும் கட்டுப்படுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை. ஆமாம், அந்த நேரத்தில் நாம் முற்றிலும் ‘ப்ளாங்க்’ ஆகிவிடுகிறோம். ஆனால், அந்த நிலை நீடித்திருக்க முடியாது என்பதால், நுரையீரல் காற்றுக்காக ஏங்கித் திணறும் என்பதால், நம் இயல்பான சுவாசத்துக்குத் திரும்புகிறோம். ஆனால், அந்த சூன்யம், ப்ளாங்க்னஸ், ஒரு நல்ல அனுபவம். ஒரு பயிற்சியாக இதனை மேற்கொண்டோமானால் அந்தப் பயிற்சி விநாடிகளிலாவது நாம் சிந்தனை வசப்படாமல் இருக்க முடியும், அதன்மூலம் புலன்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இயலும்.

கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிப்பதன் தத்துவமும் இதுதானோ? மூச்சை உள்ளிழுத்து, பிறகு அதையே புல்லாங்குழல் வழியாக ஓர் இனிய இசையாக வெளியிடும்போது அது கேட்போரையெல்லாம் கிறங்கவைக்கும். அதாவது, மூச்சை நம் ஆளுமைக்குள் கொண்டுவந்தால், நமக்கு மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் விளையும் என்பதை கிருஷ்ணன் மறைமுகமாக உணர்த்துகிறாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் பிராணாயாமப் பயிற்சியால் ஒருவருடைய மனம் மென்மையாகிறது, அவரால் தீயவற்றை சிந்திக்க இயலாது, அதனால் அவரது சொல்லும், செயலும் ஆக்கபூர்வமானதாகவே இருக்கும் என்று விளக்குகிறார் கிருஷ்ணர். இதற்குத் தன் புல்லாங்குழல் மோகன இசையை எடுத்துக்காட்டாகத் தெரிவிக்கிறார்!

அபரே நியதாஹாரா ப்ராணான்ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேப்யேதே யக்ஞவிதோ ய்க்ஞக்ஷபிதகல்மஷா (4:30)

‘‘இன்னும் ஒருவகை யோகியர் நியமமான ஆகாரம் உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பிராணனை, பிராணனிலேயே ஹோமம் செய்யக்கூடியவர்கள். இத்தகைய யாகங்களால் அவர்களுடைய பாவங்கள் தீய்ந்துபோய் அவர்  பரிசுத்தவான்களாக - ஞானிகளாக - ஆகிறார்கள்.’’ ஆகாரம் என்பது உட்கொள்ளப்படுவது. வாயால் உட்கொள்ளப்படுவதை உணவு என்கிறோம். வாயைப் பொறுத்தவரை இது ஆகாரம். இந்தவகையில் பானங்களும் ஆகாரம்தான். இதேபோல பிற புலன்கள் தமக்குள் ஈர்த்துக்கொள்ளும் எல்லாமும் அவ்வவற்றுக்கான ஆகாரமே! கண்களுக்குக் காட்சிகள், நாசிக்கு காற்று - வாசம், காதுக்கு ஒலி - கானம், மேனிக்கு மேல்பூச்சு - ஸ்பரிச உணர்வு. எல்லாமே ஆகாரம்தான். ஏற்கெனவே சொல்லியிருந்ததுபோல அந்தந்த ‘ஆகாரங்களே’ அந்தந்தப் புலன்களுக்கு ஆஹுதியாகின்றன. அதாவது யாகம் தொடர்கிறது.

உடலைப் பொறுத்தவரை வாயால் உட்கொள்ளப்படும் ஆகாரம், உடல்நலத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இதில் ஒரு வேடிக்கையை கவனிக்கலாம். உணவாக மாறுமுன், அப்படி ஆகாரமாகும் பொருட்கள் உயிர்கொண்டவையாக இருந்திருக்கின்றன! சைவ உணவோ, அசைவ உணவோ எதுவுமே அதற்குமுன் உணர்வுள்ளவையாக இருந்திருக்கின்றன. தாவர இனங்கள் வாடுதல், அழுகுதல் போன்ற தம் இறுதி நிலைக்கு முன்னால் மனிதருக்கு ஆகாரமாகிவிடுகின்றன; ஆனால், அசைவ உயிரினங்கள் தாம் உயிர்நீத்த பின்னரே ஆகாரமாகின்றன என்பதுதான் வித்தியாசம். (சுவாமி சின்மயானந்தா அவர்கள், அசைவ உணவை உண்பவர்களைப் பார்த்து, ‘உங்கள் இரைப்பையை ஏன் சவக்குழிகளாக மாற்றிக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்பார்!)
வாயைப்போல தத்தமது ஆகாரங்களை உட்கொள்ளும் பிற இந்திரியங்கள் அந்த ஆகாரங்களைத் தங்களுக்கே ஆஹுதியாக்கிக் கொள்கின்றன.

இந்த ஆகாரங்கள் சாத்வீகமானவையாக இருத்தல் வேண்டும். வாய்க்கு வஞ்சமில்லை, எந்த உணவையும், அதன் சுவையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும். ஆனால், உடலுக்குள் செல்லும் அந்த உணவு உடல் நலத்துக்கு ஏற்புடையதுதானா என்பதை வாய் அறியவேண்டும். நாக்குச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ளப்படும் உணவுகள் பெரும்பாலும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பவையாகவே இருக்கின்றன. தனக்கு ஒவ்வாததை விலக்கும் முயற்சியில் உடல் நோய்வாய்ப்படுகிறது.

(‘வயிற்றைக் கேட்டுக்கொண்டுதான் வாய் சாப்பிடவேண்டும்’ என்று ஜப்பானிய பழமொழி ஒன்று உண்டு!) காரம் மிகுந்த மசாலாப் பொருட்கள், போதை தரும் லாகிரி வஸ்துகள், எளிதில் செரிக்காத கொழுப்பு வகைகள் என்று உடல்நலத்தை பாதிப்பதோடு, மனதையும் நல்வழியினின்று திசை திருப்பும் ஆகாரங்களைத் தவிர்ப்பது மேலே குறிப்பிட்ட யோகியரின் வழக்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பொருட்களை அவர்களால் ஆஹுதியாக்க முடிவதில்லை.

ஆகவே தன் பிராணனையே பிராணனுக்கு ஆஹுதியாக்கும் வல்லமை படைத்த இத்தகைய யோகியர் எல்லாம் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்களுக்கு எதைத் தவிர்க்க வேண்டும், எதை ஏற்கவேண்டும் என்று நன்கு தெரிந்திருக்கிறது. அதனாலேயே அவர்கள் பாபங்கள் தொலைந்தவர்களாகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ‘தான்’ என்று கருதாமல் எல்லாம் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்ற உறுதியை அவர்கள் மேற்கொண்டிருப்பதால்தான்.

(தொடரும்)

- பிரபுசங்கர்