துன்பங்கள் நம்மை எப்படித் தொடரும்?



மன இருள் அகற்றும் ஞானஒளி - 35

சாயம் தோய்க்கப்பட்ட துணி சாயத்தின் நிறத்தை அடைவதைப் போல, ஒருவன் நல்லவனையோ, கெட்டவனையோ, தவசியையோ, திருடனையோ சேர்ந்தால் அவர்களைப் போலவே ஆகிறான். மனிதன் எப்படிப்பட்டவர்களுடன் சேருகின்றானோ, யாருடன் வேலை செய்கிறானோ அப்படிப்பட்டவனாகவே ஆகிறான். எது எதிலிருந்து மனிதன் விலகி இருக்கிறானோ அது அதிலிருந்து வரும் தொல்லைகளிலிருந்தும் அவன் விடுபடுகிறான். மேலே சொன்ன கருத்துகள், விதுரர் திருதராஷ்டிர மன்னனுக்கு எடுத்துச் சொன்னவை. மிகவும் புகழ் பெற்ற ‘விதுர நீதி’ இதைத் தெளிவாக விளக்குகிறது.

இது ஏதோ முன்னொரு காலத்தில் நடைபெற்ற பாரதக் கதை என்று நாம் எடுத்துக் கொண்டாலும் அதில் சொல்லப்பட்ட நீதிக் கருத்துக்கள் இன்றும் நம் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ‘கூடா நட்பு கேடு தரும்’ என்று இதனை மிகவும் தருக்கிச் சொன்னார்கள் நம் பெரியவர்கள்! இன்றைய நம் சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் பேராசை, ஒன்றை அடைய வேண்டும் என்கிற வெறி, அடைய முடியாமல் போனதால் ஏற்படுகிற கோபம், அதனால் ஏற்படுகிற தவறான நட்பு இப்படி ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலிப் பிணைப்பாக நீளும். திருதராஷ்டிரனுக்கு உண்மை நிலை தெரியாதா என்ன? பஞ்சபாண்டவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை, அவர்கள் காருண்யம் மிக்கவர்கள் என்பது நன்றாகவே தெரியும். தெரிந்தும் என்ன பயன்?

மகன் துரியோதனன் மீது உள்ள பாசம், அவன் செய்யும் தவறுகள் இவர் கண்ணை மறைத்து விட்டது. இவனின் புத்திர பாசத்தால் பூமியே யுத்தத்தால் ரணகளமானது. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த துன்பங்கள் வராமல் தடுப்பது எப்படி? எல்லாவற்றுக்கும் வழிவகை இருக்கிறது. முதல் திருவந்தாதியில் பொய்கையாழ்வார் அற்புத பாசுரத்தின் மூலம் நமக்கு விடை தருகிறார்:

நயவேன் பிறர் பொருளை;
நள்றேன் கீழாரோடு;
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்;
திருமாலை அல்லது
தெய்வம் என்று ஏத்தேன்;

வரும் ஆறு என் நம்மேல் வினை? ‘பெருமாளிடம் அன்பு கொண்டாலும் நம் சகவாசம் சரியில்லை என்றால் அந்த இழிகுணத்தால் துன்பங்கள் நேரலாம். உறுதியான நிலைப்பாடு இருந்து விட்டால் பாவங்கள் தம்மைப் பற்ற வழியில்லை,’ என்கிறார் ஆழ்வார். இந்தப் பாசுரத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும். உள்ளே, ஊடுருவிப் பார்க்கும் போது பல உண்மைகள் புலப்படும். எடுத்த எடுப்பிலேயே ‘நயவேன் பிறர் பொருளை’ என்கிறார். அதாவது ‘நான் முழுவதும் திருமாலுக்கே அடிமைப்பட்டு விட்டேன். அப்படி இருக்கும்போது துன்பங்கள் எப்படி என்னைத் தொடர முடியும்?’ என்று கேட்கிறார்.

திருமாலுக்கே உரிய ஆத்மாவை எனது பொருளாக நினைத்து ஆனந்தப்பட மாட்டேன். ஆத்மாவை தம் உடைமையாக கருதியிருக்கும் கீழான சிந்தனைகள் கொண்ட மனிதர்களோடு நெருங்க மாட்டேன் என்கிறார், ஆழ்வார். பற்றை பரம்பொருளிடம் வைத்து விடு. அதை விட்டு விட்டு சொத்து சுகம், மனைவி, பிள்ளை என்று அளவுக்கு மீறி பாசம் காட்டினால் திருதராஷ்டிரன் நிலைமைதான். அதனால் தான் பாசுரத்தில் ‘உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்’ என்கிறார்.

உயர்ந்தவர்கள் என்றால் என்ன அர்த்தம்? மேலான குணங்களை உடையவர். விதுரனை பணிப்பெண்ணின் மகனாகப் பார்த்தார்களே தவிர உயர்ந்த ஞானம் பெற்றவர் என்று துரியோதனக் கூட்டம் கருதவில்லையே! ஏன்? கீழான சிந்தனை தான் காரணம். நல்ல சிந்தனை, நல்ல உறவு, நல்ல தொடர்பு, நல்ல பழக்கவழக்கங்கள் இவற்றையெல்லாம் ஒருவன் தன் வாழ்வில் கடைப்பிடித்தால் அவனை துன்பங்கள் ஒருபோதும் துரத்தாது. இது சத்தியம் என்கிறார் ஆழ்வார். இதைத்தான் நாம் விதுர நீதியிலும் பார்த்தோம்.

ஒருவனிடம் கோடிக்கணக்கில் பணம் வந்து சேரலாம். ஆனால், அவனிடம் நற்குணங்கள் இல்லையென்றால் அதனால் யாருக்கு என்ன பயன்? நெருஞ்சி முள்ளை நெஞ்சில் ஏந்தி வழிபட முடியுமா? அப்பர் ஸ்வாமிகள் தேவாரத்தில் அற்புதமான பாடல்:

அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்லவாறு சிவாயநம என்று
நல்லம் மேவிய நாதன் அடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே!

- ‘துன்பம் தரும் வகையில் பஞ்சபூதங்கள் நம்மை வருத்தினாலும் வல்லமை பெறும் உள்ளத்தோடு சிவாய நம என்று திருநல்லத்தில் உள்ள தலைவனின் திருவடியை வணங்கினால் நம்மை வெல்ல வந்த வினைப் பகை அழியும்,’ என்கிறார் அப்பர் பெருமான்! அதாவது பஞ்சேந்திரியங்கள் மூலமாகவும் சிற்றின்பங்கள் நம்மை ஆள முற்படும்போது பேரின்பமாகிய இறைவனின் திருவடியில் நாம் நம் மனதை பறி கொடுத்து விட்டால் நம்மை வந்து அடைய முற்படும் தீவினைகளில் இருந்து நாம் தப்ப முடியும்?

வயல்வெளியில் விவசாயத்திற்கு செல்லும் தண்ணீரை மடை மாற்றம் செய்வதைப் போல நாம் நம் மனதை அந்த ஈசனை நோக்கித் திருப்பிவிட்டால் வாழ்வில் துன்பம் ஏது? துயரம் ஏது? ‘வெல்ல வந்த வினைப்பகை வீடுமே’ - நம்மை நம்முடைய நல்வினைகள்தான், அதாவது, நல்ல செயல்கள்தான் ஆள அனுமதிக்க வேண்டும் என்கிறார். ஆழ்வாரும் அப்பர் பெருமானும் சொன்ன வழியில் நடக்க முற்பட்டால் எல்லா நாளும் இன்பம் பயக்கும் நாள்தானே!

- ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்