இன்றும் நாம் தவம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்!



திருமூலர் மந்திர ரகசியம்

மனிதப்பிறவியின் மகிமையை இம்மனிதர்கள் உணரவில்லையே எனத் திருமூலர் வருந்துகிறார். நல்ல முறையில் மனிதப்பிறவி வாய்த்தும், அதன் அருமையை உணராத நம் நிலைக்கு இரங்கிப் பாடுகிறார்:

‘‘பின் எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்பு எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அதுதானே’’
(பாடல் - 1629)

கருத்து: இனிமையான இன்ப நுகர்வுகளுக்கு இடமானது இம்மானிடப் பிறவி. பலவிதமான பிறப்புக்களைக் கடந்து, இறைவனை எண்ணுவதற்கு வாய்ப்பாக அமைந்த இம்மானிடப் பிறவி, பின்னும் பலபிறவி எடுத்து உழலாமல், முன்னதாகவே இறை அருள் சிந்தனையை அடையச் செய்த மூல முதல்வன், பரம்பொருள், பக்குவம் அடைந்த அடியார்கள் உள்ளத்தில் வெளிப்பட்டு, அருள வேண்டிய தருணத்தில் தானே தோன்றி அருள் செய்வான். மனதில் பரம்பொருளைப் பற்றிய நினைவு நிலையாகப் பொருந்தியிருக்கும் வேளையில், தெய்வம் தானே வந்து அருள் செய்யும்.

ஆரம்பத்தில் சொன்னதுதான்! இருப்பதை வைத்துக் கொண்டு, யாருமே திருப்திப்படுவதாக இல்லை. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், சேர்க்கப் புண்ணியம் செய்திருக்கிறோமே தவிர, சேர்த்ததை அனுபவிக்கப் புண்ணியம் செய்யவில்லை. ஓரறிவுள்ள செடி, கொடிகள் தொடங்கி, ‘புல்லாகிப் பூடாகி’ எனும் மாணிக்கவாசகரின் வாக்குப்படி பலவிதமான பிறவிகளைத் தாண்டி, இந்த மனிதப் பிறவியை எடுத்து இருக்கிறோம். ‘அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என ஒளவையார் சொன்னதைப்போல, அரிதான மனிதப்பிறவி நமக்கு வாய்த்திருக்கிறது.

‘பிறப்பெனும் பேதமை நீங்க, சிறப்பெனும் செம்பொருள் காண்பது அறிவு’ எனும் வள்ளுவர் வாக்குப்படி, வாழும் காலத்தில் இறைவனை எண்ணி, இருக்கும்போதே நிம்மதியாக, ஆனந்தமாக இருந்து, பிறப்பில்லாத நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்சி செய்யச் செய்ய, தெய்வம் தானே வந்து மனதில் வெளிப்படும். அப்புறம் என்ன? நலங்கள் தாமே உண்டாகாதா? இது நடக்குமா? நடக்கும். உதாரணமாக எதையாவது ஒன்றை நாம் அடைய வேண்டுமானால், அதைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்கிறோம்.

பிறகு அதை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம், அல்லவா? அதுபோல, தெய்வத்தை அடைய வேண்டுமானால், தெய்வ அருளைப் பெறவேண்டுமானால் அதற்கான வழிவகைகளில் ஈடுபட வேண்டும். முறையான பாதையில், முறையாகப் பயணம் செய்தால் போய்ச் சேரவேண்டிய இடத்தைச் சுலபமாக அடைவதைப் போல, தெய்வத்தின் அருளைப்பெற நாம் முழுமையாகச் செயல்பட்டால் தெய்வ அருள், தானே வந்து வாய்க்கும். இது நமக்குப் புரியுமோ, புரியாதோ என்ற எண்ணத்திலேயே இதிகாச, புராணங்களில் பலவிதமான பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.

சூரபத்மன், மகிஷாசுரன், ராவணன் முதலானவர்கள் எல்லாம் செய்த தவம் அளவிட முடியாதது. ஒருமித்த மனதோடு அவர்கள் செய்த தவத்திற்காகத் தெய்வமே இறங்கி வந்து அவர்கள் கேட்டதை எல்லாம் தந்தது. தெய்வத்திற்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு கிடையாது. பணத்தைக் கொடுத்தால் யாராக இருந்தாலும், கடைக்காரர் பொருளைக் கொடுக்கிறார் அல்லவா? அதுபோல, தவம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தெய்வம் அருளும். சூரபத்மன், ராவணன் முதலான அசுரர்கள், கடவுளிடமிருந்து பலவிதமான வரங்களைப் பெற்ற தகவல்கள், ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. ஒருவிதத்தில் பார்த்தால் இதிகாச, புராணங்களில் வரும் அந்த அசுர கதாபாத்திரங்கள் நாம்தான்! அவர்கள் கடுமையாக உழைத்துத் தவம் செய்து வரம் பெற்றதைப் போலவே, நாமும் கடுமையாக உழைத்துப் பலவிதமான செல்வங்களைச் சேர்க்கிறோம்!

அந்த அசுரர்கள் தவறுகளைச் செய்து அல்லல் பட்டதைப் போலவே, நாமும் கடும் உழைப்பால் நாம் சேர்த்த செல்வங்களின் காரணமாகத் தவறுகளைச் செய்து அல்லல்படுகிறோம். தவத்தின் மூலமாகக் கிடைத்த வரங்களை வைத்து இவ்வாறு அல்லல்படுவதற்குக் காரணம் என்ன? பிரச்னை எங்கு வருகிறது? அடுத்த பாடலில் அதை விவரிக்கிறார் திருமூலர்:

‘‘இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெருந்தன்மையாளரைப் பேதிக்க என்றே
இருந்து இந்திரனே எவரே வரினும்
திருந்தும் தம் சிந்தை சிவன் அவன் பாலே’’.
(பாடல் - 1627)

கருத்து : தவயோகிகள் ஓரிடத்தில் நிலையாக இருந்து, உடல் வருந்தத் தவம் செய்வார்கள். அப்படிப்பட்ட தவயோகிகளின் தவத்தைக் கலைத்து, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கென்றே இந்திரன் பலவிதமான சூழ்ச்சிகளையும் செய்வான். இந்திரன் மட்டுமல்ல, யார் வந்து தவத்தைக் கலைக்க முயன்றாலும், தவயோகிகள் தம் மனம் சிவனவன் நினைவிலேயே மேலும் மேலும் பொருந்தி இருக்குமே தவிர, அவர்கள் தவம் கலையாது. இப்பாடலில் ‘இருந்து’, ‘வருந்தி’, ‘பெருந்தன்மையாளர்’ எனும் சொற்களோடு, இந்திரன் எனும் சொல்லும் சேர்ந்து பலவிதமான பாடங்களை நடத்துகின்றன நமக்கு. ஒவ்வொன்றாக அனுபவிக்கலாம் வாருங்கள்!

தவம் செய்பவர்களின் நிலையை விளக்கத் தொடங்கும் இப்பாடல், ‘இருந்து’ எனத் துவங்குகிறது. இந்த ‘இருந்து’ பலவிதமான அர்த்தங்களைத் தரும். ‘இருந்து’ - ஆசைகளிலிருந்து விலகி ‘இருந்து’, தீமைகளில் இருந்து விலகி ‘இருந்து’. கூடவே மனதை ஒருநிலைப்படுத்தி ‘இருந்து’ என்ற பொருளையும் தரும். அடுத்ததாக ‘வருந்தி’ என ஒரு சொல் இடம் பெறுகிறது. முனிவர்கள் தவம் செய்யும்போது மழை, வெயில் என இயற்கை உத்பாதங்கள் குறுக்கிட்டுத் தவத்திற்கு இடையூறு செய்யும். அவற்றை, தவம் செய்யும் முனிவர்கள் பொருட்படுத்தாவிட்டாலும், அவர்களுடைய உடல் அந்த இயற்கை உத்பாதங்களை ஏற்று வருந்தித்தான் ஆகவேண்டும்.

இது முனிவர்களுக்கு! நம் நிலையிலிருந்து பார்க்கும்போது, எதையாவது ஒன்றை அடைய நாம் பசி, தாகம் மறந்து கடுமையாக உழைக்கிறோமல்லவா? இதுவும் தவம்தான்! அவ்வாறு உழைக்கும்போது பலவிதங்களிலும் நம் உடல் வருந்தும். அதைப் பொறுத்துக்கொண்டு நாம் உழைத்துத்தான் ஆகவேண்டும். இல்லையேல், நம் எண்ணம் நிறைவேறாது. இப்படிச் செய்யப்படும் தவத்தை ‘எழில் தவம்’ என்கிறார் திருமூலர். உண்மைதானே! நம் எண்ணங்களை நிறைவேற்றி, நம்மை எல்லாவகையிலும் உயர்த்தும் தவத்தை, நாம் எழில் பெறுமாறு செய்யும் தவத்தை ‘எழில் தவம்’ எனும் திருமூலரின் இப்பாடல் அவரது ஆழ்மனதை வெளிப்படுத்துகிறது.

திருமூலர் மட்டுமல்ல, திருவள்ளுவரும் தவத்தின் பெருமையை விவரிக்கிறார். ‘வேண்டியதை, வேண்டியபடி அப்படியே பெற வேண்டுமா? தவம் செய்யுங்கள்!’ என்கிறார் திருவள்ளுவர்: வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். (திருக்குறள் - 265) இதற்கு அடுத்த திருக்குறளிலேயே ஓர் அபூர்வமான தகவலையும் சொல்கிறார். தவம் என்றால் என்ன? தவம் செய்பவர்கள் யார்? இதற்கான பதிலை, வள்ளுவரைவிட வேறு யாருமே தெளிவாகவும், எளிமையாகவும், சுருக்கமாகவும் சொல்லவில்லை:

‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார்’ (திருக்குறள் - 266) கடமை தான் தவம்; தன் கடமையை ஒழுங்காகச் செய்பவரே, தவம் செய்கிறவர்கள். இப்படிச் செய்பவர்களை அதாவது தங்கள் கடமைகளைக் குறைவறச் செய்பவர்களைப் ‘பெருந்தன்மையாளர்கள்’, ‘உயர்ந்த நற்குணம் கொண்டவர்கள்’ என்கிறார் திருமூலர். இதை ‘எழில் தவம் செய்யும் பெருந்தன்மையாளர்’ எனும் சொற்றொடரின் மூலம் நம் மனதில் பதிய வைக்கிறார். ஆம், தன் கடமையைக் குறைவறச் செய்பவரே பெருந்தன்மையாளர்.

இவ்வாறு சொன்ன திருமூலர், இதன் பிறகும் நம் மனதை மயிலிறகால் அப்படியே நீவி விடுகிறார். ‘நல்வழியில் நடப்பவர்களைத் தடம் மாறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்திரன் செயல்படுவான்’ எனச் சொல்லி மென்மையாக எச்சரிக்கிறார் திருமூலர். இது, இதிகாச, புராணங்கள் சொல்லும் தவ இயலிலும், வாழ்வியலிலும் அனுபவபூர்வமாகச் சொல்லப்பட்டது. வசிஷ்டர், விசுவாமித்திரர், துர்வாசர் முதலான பல முனிவர்களும் கடுந்தவம் செய்தபோது அவர்கள் தவத்தைக் கலைப்பதற்காகவே தேவேந்திரன் பலவிதமான எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இதிகாச புராணங்கள் விரிவாகவே பேசுகின்றன.

காரணம்? இந்திர பதவி என்பது மிகவும் உயர்ந்தது. அப்பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்திரன் பலவிதமான செயல்களிலும் ஈடுபடுவான். யாராவது தவம் செய்தால், அவர்கள் தனக்கும் மேலான ஆற்றல் பெற்று எங்கே தன் பதவியைப் பறித்துவிடுவார்களோ என்ற எண்ணமே, இந்திரனை அவ்வாறு தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டியது என்பதே ஞான நூல்களின் விளக்கம். இதை, நம் தற்கால வாழ்வியலின்படி பார்க்கலாம்!

முன்னேற வேண்டும் என்று பலவிதங்களிலும் கடுமையாக முயன்று உழைப்போம்; முன்னேறவும் செய்வோம். அம்முன்னேற்றம் பலரது கண்களை உறுத்தும். அவர்கள் பலவிதங்களிலும் நமக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். நமக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்யப்படும் இடையூறுகளைத் தவிர, முகத்திற்கு நேரடியாகவே செய்யப்படும் இடையூறே நமக்கு மிகப்பெரும் எதிரி. நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் செய்யப்படும் இடையூறுகளைத் தாண்டி விடலாம். நம்மால் தாண்ட முடியாத இடையூறு, நேரடியாகவே நம்மை உயர்வாகப் புகழ்ந்து பேசி நம்மைக் கவிழ்ப்பதுதான்.

இதையேதான், தவம் செய்தவர்களுக்கு இந்திரன் தொண்டாக செய்து அவர்கள் தவத்தைக் கெடுத்ததாக, இதிகாச-புராணங்கள் விவரிக்கின்றன. இந்திரனின் அச்செயலில் இருந்தும், மனதை ஒருமுகப்படுத்தி, தவம் செய்தவர்கள் தப்பி இறையருளைப் பெற்றார்கள். அவ்வாறே நாமும் எதிலும் மயங்காமல் நம் கடமையைக் குறைவின்றிச் செய்து வந்தால் தெய்வ அருள் தானே வந்து சேரும். முயல்வோம்! முதல்வன் அருள்வான்!

(மந்திரம் ஒலிக்கும்)

பி.என்.பரசுராமன்