ஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான கனுப் பொங்கல் திருவிழா!



ஆந்திரா - கோனசீமா

சிவபெருமான், ஏகாதச ருத்திரர்கள் என்று அழைக்கப்படும் பதினோரு ருத்திரர்களாகக் காட்சி தருவதாக ஐதீகம். நிருதி, சம்பு, அபராஜிதா, ம்ருக வ்யாதா, கபர்த்தி, தஹனா, மகரா, அஹிரப்ரத்யா, கபாலி, பிங்களா மற்றும் சேனானி என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த ஏகாதச ருத்திரர்கள், துவாதச ஆதித்யர்கள் என்ற பன்னிரண்டு ஆதித்யர்கள் (சூர்யர்கள்), அஷ்ட வசுக்கள் என்ற எண்மர் மற்றும் இரண்டு அஸ்வினி தேவர்கள் என இவர்கள் அனைவரும் கச்யபர்-அதிதி தம்பதியின் புதல்வர்கள்  என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த பதினோரு ருத்திரர்களையும், பதினோரு கிராமங்களிலிருந்து அர்த்த சந்திர அமைப்பில் பிரபாலு எனப்படும் பிரபாவளிகளில் மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து, ஒரே இடத்தில் காட்சி தருமாறு அமைக்கும் பிரபால உற்சவம், ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டம், ஜக்கண்ண தோட்டம் என்ற இடத்தில் நடைபெறுகிறது. இந்த விழா ஆண்டுதோறும் சங்கராந்தி எனப்படும் தைப் பொங்கலுக்கு அடுத்தநாளான கனு (மாட்டுப் பொங்கல்) அன்று (ஆந்திராவில் கனும பண்டிகா என்கின்றனர்) மிகச் சிறப்பாக, சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்தின் கடற்கரைப் பகுதியான கோனசீமா என்பது கிழக்கு மற்றும் மேற்குக் கோதாவரி மாவட்டங்களை உள்ளடக்கிய, கேரளா போன்றே அடர்ந்த தென்னை மரங்கள், வாழை, நெல் வயல்கள் சூழ்ந்த மிகச் செழிப்பான  இயற்கை எழில் மிக்கப் பகுதியாகும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சையைக் குறிப்பிடுவது போல, கோனசீமா பிராந்தியத்தை ஆந்திராவின் நெற்களஞ்சியமாகக் கருதுகின்றனர். கேரளாவைப் போல இப்பகுதி திகழ்வால் இதை கிழக்குக் கேரளா என்றும், ‘கடவுளின் சிறப்பு படைப்பு’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

உத்தராயண காலத்தின் முதல் மாதமான தை மாதப் பிறப்பு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தமிழர் திருநாளாக, தைப் பொங்கலை மூன்று நாட்கள் கொண்டாடுவது போலவே, ஆந்திர மாநிலத்திலும் முதல் நாள் போகி, இரண்டாவது நாள் மகர சங்கராந்தி, மூன்றாவது நாள் கனும, மற்றும் நான்காவது நாள் முக்கனும என்ற பெயர்களில் நான்கு நாட்கள் கொண்டாடுகின்றனர். கனுமப் பண்டிகை, மாடுகளுக்குரிய மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப்படுவதோடு, இந்திரன் தன் ஆற்றலினால் கடுமழை பொழியச் செய்து கோகுலம் வெள்ளக் காடானபோது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கோவர்த்தனகிரியை தன் சுண்டு விரலால் தூக்கிக் குடைபோல பிடித்து, ஆநிரைகளையும் ஆயர்குலத்தாரையும் காப்பாற்றிய நிகழ்ச்சியின் நினைவாக கோவர்த்தன ஜயந்தியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

(இந்த கோவர்தனை ஜயந்தி, வட மாநிலங்களில் தீபாவளியை அடுத்த நான்காம் நாள் கோவர்த்தன் பூஜா என்றும் அன்னகூட் என்றும் கொண்டாடப்படுகிறது.) கோனசீமா பிராந்தியத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக கனுமா பிரபால தீர்த்தப் பெருவிழா அமைந்துள்ளது. இந்த ‘பிரபால  தீர்த்தாலு’ என்ற பெருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் செய்தி உள்ளது. சாளுக்கிய மன்னனான ராஜேந்திர சோழன் தனது மகள் ராணி அம்மங்கா தேவியை வேங்கி நாட்டு மன்னன் ராஜேந்திர நரேந்திரனுக்கு (1022-1063) மணம் முடித்துக்கொடுத்தபோது, தமிழ்நாட்டு வலங்கைமானைச் சேர்ந்த 18 வேத விற்பன்னர் குடும்பங்களை உடன் அனுப்பிவைத்தார் என்றும், இந்த வேத விற்பன்னர் குடும்பத்தினரே பல, வைணவ ஆலயங்களில் ரதோற்சவத்தையும், சிவாலயங்களில் பிரபால தீர்த்த உற்சவங்களையும் அறிமுகம் செய்தனர் என்றும் சொல்லப்படுகின்றன.

ஆலயங்களில் மூர்த்திகளின் விக்கிரங்களைச் சுற்றிலும் அமைக்கப்படும் பிரபாவளியே பிரபாலு எனப்படுகிறது. ஜக்கண்ண  தோட்டம் என்ற பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும் இந்த ஊர்வலத்தில் சுற்றிலுமுள்ள 150 கிராமங்களிலிருந்து பக்தர்கள் பெருந்திளாகக் கலந்து கொள்கின்றனர். பொதுவாக 6 அடி முதல் 50 அடி உயரம்வரை இந்த பிரபாவளிகள் மூங்கில் கழிகள், பட்டைகள் கொண்டு வலுவாகத் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் மலர்கள், வண்ணத் துணிகள், மயிற்பீலிகள், பலூன்கள், மணிமாலைகள் என மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு (இந்தப் பிரபாவளிகள் கேரள மாநிலத்தில் ஆலய  உற்சவங்களில் பயன்படுத்தப்படும் திடம்பு போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது) பக்தர்களால் தோள்களில் தூக்கி வரப்படுகின்றன.

இந்த பிரபாவளிகளின் நடுநாயகமாக  சுற்றிலுமுள்ள கிராம சிவாலய உற்சவ மூர்த்திகள் அல்லது சிவபெருமானின் படங்கள் வைத்து வழிபடப்படுகின்றன. எண்ணற்ற பிரபாவளிகள் பங்கேற்றாலும் இவற்றில் பதினோரு கிராமங்களின் பங்களிப்பே மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த பதினொரு வண்டிகள் பதினொரு ‘ஏகாதச ருத்ராலு’ என்ற ருத்திரர்களைக் குறிப்பிடுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். மொசலப் பள்ளி கிராமத்தில் உள்ள ஜக்கண்ண தோட்டம் என்ற ஒரு தென்னந்தோப்பில் இந்த அனைத்து வண்டிகளும் ஒன்றுசேரும். இந்த உற்சவத்திற்கு ஜக்கண்ண தோட்ட பிரபால தீர்த்தாலு என்றே பெயர் அமைந்துள்ளது.

முக்கியமாக கீழ்காணும் பதினொரு கிராமங்களைச் சேர்ந்த சிவாலய மூர்த்திகளை இவர்கள் ஏகாதச ருத்ராலு என்றே போற்றுகின்றனர். 1. இருசுமண்டா (ஸ்ரீ ஆனந்த ராமேஸ்வர ஸ்வாமி). 2 வக்கலங்கா (ஸ்ரீகாசி விஸ்வேஸ்வர ஸ்வாமி), 3.  நேதுனூரு (ஸ்ரீசென்ன மல்லேஸ்வர ஸ்வாமி), 4. முக்கமாலா (ஸ்ரீராகவேஸ்வர ஸ்வாமி), 5. ஜக்கண்ண தோட்ட - மொசலிபல்லி - (ஸ்ரீபோகேஸ்வ ஸ்வாமி), 6. புல்லேட்டிக்குர்ரு (ஸ்ரீஅபிநவ வியாக்ரேஸ்வ ஸ்வாமி), 7. வ்யாக்ரேஸ்வரம் (ஸ்ரீவ்யாக்ரேஸ்வ ஸ்வாமி), 8. கங்காளக்குர்ரு (ஸ்ரீவீரேஸ்வர ஸ்வாமி), 9. தொண்டவரம் (ஸ்ரீதோடேஸ்வரஸ்வாமி), 10. வக்ககாலகுருவு (ஸ்ரீராமலிங்கேஸ்வர ஸ்வாமி) மற்றும் 11. பாலகுன்னு (ஸ்ரீமோகினீஸ்வர ஸ்வாமி) - இவர்கள் அனைவரும் மொசலிப்பள்ளி  கிராமத்தில் சுமார் ஏழு ஏக்கர் விஸ்தீரணத்திற்குப் பரந்து விரிந்துள்ள ஜக்கண்ண தோட்டத்தில் ஒருசேர வரிசையாக நின்று பக்தர்களுக்கு அருட்காட்சி தருகின்றனர்.

பித்தாபுரம் மன்னரின் அமைச்சராக இருந்த விட்டல் ஜக்கண்ணா என்பவர் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த பிராந்திய மக்கள் ஒன்றுகூடவும், அவர்களிடையே ஒற்றுமை வளரவும், முதன்முதலில் இதைத் துவக்கி வைத்ததாகவும், அவர் நினைவாக பிரபாலு தீர்த்தம் நடைபெறும் இடம் ஜக்கண்ண தோட்டம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

வயல்கள், வாய்க்கால்கள் மற்றும் தென்னந்தோப்புகள் நடுவே ஊர்வலம் நடைபெறும். பிரபால தீர்த்த நாளன்று மிக முக்கியமான நிகழ்வு இந்த ஏகாதச ருத்திரர்கள் ஜக்கண்ண தோட்டத்திற்கு அருகில் பாயும் கௌசிகா என்ற சிறிய நதியைக் கடப்பதாகும். கங்காளக்குர்ரு கிராமத்தின் பிரபாவளி முதலில் கௌசிக நதியில் இறங்குகிறது. இந்நாளில் 12 முதல் 2 மணிக்கு உள்ளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மிகவும் அதிகமான பக்தர்களின் கூட்டத்தை இங்கு காணமுடியும். ஆறு மணிக்கு பின்னர் ஒவ்வொரு பிரபாவளியும் அந்தந்தக் கிராமத்திற்குத் திரும்புவதோடு, இந்த உற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் ஆந்திர மக்களும் தவறாது இச்சமயத்தில் வந்து கலந்து கொள்கின்றனர்.

ஜக்கண்ண தோட்டம் தவிர நாகுலங்கா, கொத்தப்பேட்டா, முக்தேஸ்வரம், தொண்டவரம், ஆசண்டா சிந்தலூரு போன்ற இடங்களிலும் பிரபால தீர்த்தம் கொண்டாடப்படுகிறது. அமலாபுரம், கடில்லி போன்ற தலங்களில் இது போன்றே ஸ்ரீசுப்ரமண்ய தீர்த்தம் கொண்டாடப்பட்டு வருகிறது கோனசீமா கனுவப் பண்டிகா பிரபால தீர்த்தப் பெருவிழா, ஆயிரக் கணக்கான கிராம மக்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும் ஓர் அரிய சமுதாய விழாவாக காலங்காலமாகக்  கொண்டாடப்படுவதும் இதில் அனைத்து கிராம மக்களும் ஒற்றுமையோடு தங்களை இணைத்துக் கொள்வதும் இந்த விழாவின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

-விஜயலட்சுமி சுப்பிரமணியம்