பெருமாளுக்கென்று தனியாக ஏகாதசி விரதம் ஏன்?



தெளிவு பெறுஓம்

* குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இறந்தவர்கள் மேல் உலகத்திற்கு செல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பார்கள் என்றும், அவர்களின் ஆன்மா வீட்டில்தான் இருக்கும் என்பதும் உண்மையா?
- என்.ஆனந்தகுமார், திருப்பூர்.

இல்லை. திரிசங்கு சொர்க்கம் என்பது விஸ்வாமித்திரரால் திரிசங்கு மகாராஜாவிற்காக சிருஷ்டிக்கப்பட்டது. இறந்தவர்களின் ஆன்மாவிற்கும், திரிசங்கு சொர்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் குறிப்பிடுவது ‘தனிஷ்டா பஞ்சமி’ என்று குறிப்பிடப்படும் நாட்களை. பஞ்சாங்கத்தில் இதனை ‘இறந்தால் வீடு மூடவேண்டிய நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் குறிப்பிட்டிருப்பார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தால் ஆறு மாத காலத்திற்கும், ரோகிணி நட்சத்திரத்தில் உயிர் துறந்தால் 4 மாத காலமும், கார்த்திகை, உத்திர நட்சத்திரங்களுக்கு 3 மாத காலமும், மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராட நட்சத்திரங்களுக்கு 2 மாத காலமும் இறந்தவர்களின் வீட்டை மூடி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

இதற்கு ‘தனிஷ்டா பஞ்சமி’ என்று பெயர். அவ்வாறு வீடு மூடப்படாமல் இருக்கவும் தனியாக பரிகாரம் சொல்லியிருப்பார்கள். இறந்தவர்களின் ஆன்மா அவர்கள் வசித்த வீட்டைச் சுற்றி வரக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு உரிய அந்திம கிரியைகளையும், கரும காரியங்களையும் சரிவரச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம். பிள்ளைகள் அவர்களுக்கு செய்யும் சடங்குகளின் மூலமாக அவர்களின் ஆன்மா பித்ருலோகத்தை கண்டிப்பாகச் சென்றடையும்.

* கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி என்று அஷ்டமி, நவமியில் பெருமாள் அவதரித்திருக்க, பெருமாளுக்குத் தனியாக ஏகாதசி அன்று விரதம் ஏன்? இதில் ஏகாதசி எங்கிருந்து வந்தது?
- பரணிதரன், சென்னை-50.

சாகாவரம் தரும் அமிர்தத்தை அடைய தேவர்கள் அசுரர்களோடு இணைந்து பாற்கடலைக் கடைந்தனர். வாசுகிப் பாம்பினைக் கயிறாகவும், மேருமலையை மத்தாகவும் கொண்டு ஒருபுறம் அசுரர்களும், மறுபுறம் தேவர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அவ்வளவு எளிதாக அமிர்தம் கிடைத்துவிடவில்லை. வலி தாங்காத வாசுகிப்பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கியதுதான் மிச்சம். இந்த நிலையில் எல்லோரும் ஒன்றாக இணைந்து பெருமாளை நோக்கி விரதம் இருந்து ஒருமித்த மனதோடு சிரத்தையாக பிரார்த்தனை செய்ய பாற்கடலில் இருந்து அமிர்தம் நிறைந்த குடத்தோடு தன்வந்திரி வடிவில் பகவான் வெளிப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

இதில் நாம் கவனிக்க வேண்டியது தேவர்களும், அசுரர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கிய நாள் பிரதமை. வாசுகிப் பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கிய நாள் அஷ்டமி. அதனால்தான் இந்த இரண்டு நாட்களிலும் நாம் நல்ல காரியம் செய்வதில்லை. எல்லோரும் ஒன்றாக இணைந்து பெருமாளை நோக்கி விரதம் இருந்த நாள் ஏகாதசி. ஏகாதசியில் விரதம் இருந்ததன் பலனாகத்தான் சாகாவரம் தரும் அமிர்தத்தை அமரர்களால் அடைய முடிந்தது. மனிதர்களாகிய நாம் ஏகாதசியில் விரதம் இருப்பதால் தந்வந்திரியின் அருளால் உடல் ஆரோக்கியம் சிறக்கும், மறுபிறவி இல்லாத அமரத்துவம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* சிவன் கோயிலில் நந்தியைத் தொடக்கூடாது என்பது நியதி. ஆனால் சிலர் நந்தியின் காதைப் பிடித்து ஏதாவது சொல்லி வேண்டுகிறார்களே இது சரியா?
- கே.விஸ்வநாத், பெங்களூரு-8.

தவறு. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம்.

அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது தவறான செயல்.

* ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா?
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

‘ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து’ என்ற சொற்றொடர் காலப்போக்கில் ‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து’ என்று மருவி இருக்கிறது. உண்மையான உருவினைத் தெரியாமல் நாம் தவறாகப் புரிந்துகொள்ளும் பல பழமொழிகளுள் இதுவும் ஒன்று. ஆயிரம் பேர் கூட இல்லாமல் ஒரு கல்யாணத்தை நடத்தக் கூடாது என்பதிலும், கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளிலாவது ஆயிரம் பேருக்கு நாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் வயிறாற உணவருந்தி வாழ்த்தும்போது, அந்த வாழ்த்துகள் தம்பதியரை நூறாண்டு காலம் வாழ வைப்பதோடு, வம்சத்தையும் தழைக்க வைக்கும்.

* ஒரு சில ஆன்மிக பத்திரிகைகளில் காக்கைக்கு ப்ரெட் துண்டுகள் போடுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது சரியா?
- இராமூர்த்தி, திருச்சி.

சரியே. காக்கைக்கு ப்ரெட் துண்டுகள் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? அனைத்துண்ணி பிரிவினைச் சேர்ந்தது காக்கை. நாம் உண்பதற்கு முன்பாக மற்றொரு ஜீவராசிக்கு உணவளிக்க வேண்டும் என்ற வழக்கத்தில் காக்கைக்கு அன்னம் வைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தி உள்ளார்கள் நம் முன்னோர்கள். நாம் எதைச் சாப்பிடுகிறோமோ, அதனையே காக்கைக்கும் வைக்கலாம். நாம் காலை உணவாக ப்ரெட் சாப்பிடும்போது, அதையே காக்கைக்கும் வைப்பதில் தவறேது? தாராளமாக காக்கைக்கு ப்ரெட் துண்டுகளைப் போடலாம். இதில் தவறு இல்லை.

* தை அமாவாசை சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவதன் ஐதீகம் என்ன?
- அயன்புரம் த. சத்தியநாராயணன்.

உத்தராயணம் பிறந்து வருகின்ற முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை சிறப்பு பெறுகிறது. தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளில் சந்திரன் தன் சொந்த வீடான கடகத்தில் சஞ்சரிப்பார். 12 மாதங்களில் தன் சொந்த வீடான கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சந்திரன் முழு நிலவாக அதாவது பௌர்ணமி திதியோடு பூரண சந்திரனாக ஒளி வீசுவது இந்த தை மாதத்தில் மட்டுமே. இதே தை மாதத்தில் சந்திரன் தன் முழு ஒளியையும் இழந்து அமாவாசை திதியோடு தன் சொந்த வீடான கடக ராசிக்கு நேர் ஏழாவது ராசியான மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் இந்த நாள் வரும். மாத்ருகாரகன் ஆன சந்திரனும், பித்ருகாரகன் ஆன சூரியனும் இணைந்து மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில், உத்தராயண காலத்தில் வருகின்ற இந்த முதல் அமாவாசை சிறப்பு பெறுகிறது. அதேபோல, தக்ஷிணாயண காலத்தில் வருகின்ற முதல் அமாவாசையான ஆடி அமாவாசை நாளும் சிறப்பு பெறுகிறது.

* முட்டை சாப்பிட்டால் அது பாவச் செயலாகுமா?
- இரா.வைரமுத்து, இராயபுரம்.

ஆகாது. உணவு என்பது அவரவர் பழக்கத்திற்கு உட்பட்டது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து நெடுங்காலம் ஆகிவிட்டது. ஜீவராசிகள் என்று கணக்கில் கொண்டால் தாவரங்களும் அதில் அடக்கம். தாவரங்களை உண்பது தவறில்லை எனும்போது, மற்ற ஜீவன்களை உண்பதிலும் எந்தத் தவறும் இல்லை. உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை சைவம், அசைவம் என்று இரண்டு பிரிவாகப் பிரித்து வைத்துள்ளோம். முட்டை உட்பட ஆடு, கோழி, மீன் ஆகியவை அனைத்தும் அசைவப் பொருட்களாகக் கணக்கில் கொண்டுள்ளோம்.

அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதனைச் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நாம் சாப்பிடும் பொருட்களுக்கு ஏற்ப நமது குணமும் மாறுபடுகிறது என்பது தற்போது விஞ்ஞானபூர்வமாகவே சொல்லப்படும் ஆராய்ச்சி முடிவு. பொதுவாக அசைவம் சாப்பிடுபவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள் அசைவத்தைத் தவிர்த்தால் மட்டுமே அது சாத்தியமாகும். சைவம் சாப்பிடுபவர்களில் கூட ரஜோ குணத்தினைத் தரக்கூடிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், முள்ளங்கி முதலானவற்றைத் தவிர்ப்போரும் உண்டு. ஒரு சிலர் பால்கூட அருந்தமாட்டார்கள். அவரவருக்குப் பிரியமானதை அவரவர் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை.

விரதம் இருக்கும்போது ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்பதால் அந்நாட்களில் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய அசைவ உணவினைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் பெரியவர்கள். சங்ககாலம் மட்டுமல்ல, புராண காலத்திலிருந்தே க்ஷத்திரியர்கள் அசைவ உணவு சாப்பிட்டு வந்ததற்கான ஆதாரங்கள் பல உண்டு. சங்க இலக்கியங்கள் வாயிலாகவும், புராணங்கள் வாயிலாகவும் நாம் இதனை அறிந்துகொள்ள இயலும். கண்ணப்ப நாயனார் வேடுவனாக இருந்தபோது, தான் வேட்டையாடிய மிருகத்தைச் சமைத்து முதலில் அதனை இறைவனுக்கு நைவேத்யம் செய்த கதையைப் படித்திருப்போம். இந்த விஷயத்தில் அபிப்ராய பேதம் இருந்தாலும் முட்டை உட்பட எந்தவித அசைவ உணவினைச் சாப்பிட்டாலும் அது பாவச்செயல் ஆகாது என்பது என் கருத்து.

* பண்பாடும், கலாசாரமும் நவீன வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையா?
- நாராயணன், கூறைநாடு.

நிச்சயமாக இல்லை. பண்பாடும், கலாசாரமும்தான் ஒரு நாட்டின் அடையாளச் சின்னம். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் தங்கள் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கட்டிக்காப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. நாகரிக மாற்றம் என்ற பெயரில் என்னதான் மனிதனின் நடை, உடை, பாவனைகள் மாறியிருந்தாலும், அவர்களது அடிப்படை பண்பாடு மாறுவதில்லை. இந்தியர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், இருகரம் கூப்பி வணங்குவதை தங்கள் பண்பாடு எனக் கருதுகிறார்கள்.  நவீனமயமான வாழ்க்கையை பண்பாடும், கலாசாரமும் எந்தவிதத்திலும் பாதிக்காது. மாறாக, அவை இரண்டும்தான் நவீன வாழ்க்கைக்கு ஆணிவேர் என்றால் அது மிகையில்லை.

* ஜாதகம் நமக்கு சாதகமாக அமைவதில்லையே, ஏன்?
- பாரதிசுந்தர், குறண்டி.

‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்கிறார் கவியரசர். நமது ஜாதகமும் அப்படியே. ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரஹ நிலையின் தன்மைக்கேற்பவே நமது வாழ்க்கைமுறையும் அமைகிறது. நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் ஜாதக அமைப்பு இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் பலத்தினையும், அவை தரும் பலனையும் கணித்து அதற்கு ஏற்றார்போல் நமது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ளவேண்டும். ஜாதக அமைப்பு எவ்வாறு உள்ளதோ அதன் வழியிலேயே நாமும் பயணிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடம் வலுப்பெற்று இவர் கடனாளியாவார் என்று பலன் இருந்தால், அதற்குரிய காலத்தில் வங்கிக்கடன் பெற்று வீடு கட்டுதல், அல்லது மனை வாங்குதல் என்று ஏதேனும் ஒரு வழியில் முதலீடு செய்து கொள்ள வேண்டும். பிறகு மாதந்தோறும் அந்தக் கடனை கொஞ்சம், கொஞ்சமாக அடைத்து வரவேண்டும்.

குறிப்பிட்ட அந்த தசாபுக்தி காலத்தில் அவர் கடனாளியாக வாழ்ந்திருந்தாலும், இறுதியில் அவர் பெயரில் ஒரு சொத்து உருவாகியிருக்கும். இவ்வாறு ஜாதகத்தில் நடக்கவுள்ள பலனைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் நமது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் ஜாதகத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள் ஜோதிட சான்றோர்கள்.

* ஆலயத்தில் உள்ள தூண்களில் ஒரு வித்தியாசமான மிருகத்தின் சிலை தென்படுகிறதே, அந்த மிருகம் உண்மையில் வாழ்ந்த உயிரினமா அல்லது கற்பனையா?
- திருமலைகுமரன், ஈரோடு.

யாளி என்பது அந்த மிருகத்தின் பெயர். யானை மற்றும் சிங்கத்தின் இணைவாக அந்த மிருக உருவத்தைச் செதுக்கியிருப்பார்கள். இந்த மிருகம் டைனோசரைப் போன்று ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும், தற்போது அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அது ஒரு கொடூரமான விலங்கு என்றும், அது ஈன்ற குட்டியின் முதல் வேட்டையே யானைதான் என்றும் வரலாற்று நாவல் ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். என்றாலும், அதுபோன்ற ஒரு மிருகம் உயிருடன் இருந்ததாக இதுவரை எந்தவிதமான நேரடிச் சான்றும் கிடைக்கவில்லை.

பாலையும், தண்ணீரையும் பிரித்தறியும் அன்னப்பறவை ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு பறவை என்று சொல்வதைப்போல, யாளி என்ற மிருகத்தையும் அவ்வாறே வாழ்ந்ததாக கற்பனையாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், அறிவியல் ரீதியான சான்றுகள் கிடைக்கும்வரை அவற்றை கற்பனை என்ற எல்லைக்குள்தான் வைக்கவேண்டும் என்பது என் கருத்து.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா