ரதசப்தமி அன்று சூரிய நமஸ்காரம்



தைமாத அமாவாசைக்குப் பிறகு வரும் நாள் ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. இது ஒரு விரத நாள். சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது, பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையில் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை ஏழாம் நாளான சப்தமி அன்றுதான் சூரியனின்  தேரானது வடக்குத் திசை நோக்கித் திரும்புகிறது. இதனை ரத சப்தமி, மகா சப்தமி, ஜெயந்தி சப்தமி என்று சொல்வர். அன்று சூரியன் விசேஷமான ஒளியுடன் பிரகாசிக்கிறது என்று சாத்திரங்கள் சொல்கின்றன.

சூரியனின் தேருக்கு மற்ற ரதங்களில் உள்ளதுபோல் இரண்டு பக்கங்களிலும் சக்கரங்கள் கிடையாது. ரதத்தின் மையப்பகுதியில் மட்டும் ஒரே ஒரு சக்கரம் உண்டு. இச்சக்கரத்தின் குடத்தில் மூன்று மேகலைகள் மட்டும் இருக்கும். அந்த மூன்று மேகலைகள் காலை, நண்பகல், மாலை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இந்த ஒற்றைச் சக்கரத்தி்ன் ஆரங்கள், வெளிவட்டத்தில் உள்ள கார்காலம், இலையுதிர் காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்  ஆகிய ஆறு பருவங்களைக் குறிக்கும். இந்தச் சூரிய ரதத்தினை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. அவை, வைலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு ஆகிய நிறங்களைக் குறிக்கின்ற - சூரிய  ஒளியின் வர்ணஜாலங்கள்.

ரத சப்தமி நாளை சில திருத்தலங்களில் தீர்த்தவாரி நாளாக கொண்டாடுகிறார்கள். ரத சப்தமி அன்று சூரிய தேவனை வழிபட்டு விரதம் கடைப்பிடித்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனை அர்ச்சித்து வழிபட்டால் நவகிரகதோஷங்கள் விலகும். ரத சப்தமி அன்று சில திருமால் திருத்தலங்களில் ஏகதின பிரம்மோத்ஸவம் நடைபெறும். அன்று ஏழு வாகனங்களில் பெருமாள் பவனி வருவார். சில தலங்களில் காலையில் சூரிய பிரபையிலும் மாலையில் சந்திர பிரபையிலும் பெருமாள் பவனி வருவார். குறிப்பாக திருமலையில் (திருப்பதி) இவ்வைபவம் சிறப்பாக நடத்தப்படுகிறது.

சூரியதோஷம் நீங்கவும், சூரியனின் அருள் பெறவும், நவகிரகத் தொகுப்பில் உள்ள சூரிய பகவானுக்காவது அல்லது சில கோயில்களில் தனித்துக் காணும் சூரிய பகவான் விக்கிரகத்திற்காவது அபிஷேகம் செய்வது சிறப்பு. அன்று அவருக்குச் சிவப்பு வஸ்திரம் அணிவித்து, சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். இன்று கடல் நீராடுதலும் நன்று.

சூரிய தீர்த்தங்கள் பல திருத்தலங்களில் உள்ளன. காஞ்சியில் உள்ள சூரிய தீர்த்தம், பரிதிக் குளம் எனப்படுகிறது. திருமீயச்சூர் திருக்கோலக்கா, திருசெம்பொன் பள்ளி ஆகிய தலங்களில் உள்ள குளங்களில் நீராடினால் சூரிய தோஷம் நீங்கும். இறைவனுடைய ஞானசக்தியான அருள்தான் சூரியன். அந்த ஞான சக்தி ஒரு தை மாத வளர்பிறை சப்தமி திதி நாளில் வெளிப்பட்டதாகப் புராணம் கூறும். மேலும் சூரியன் தோன்றியபோது அதன் ஒளிக்கதிர்களின் வீச்சு அளவுக்கதிகமான உஷ்ணமும் ஒளியும் கொண்டிருந்தனவாம். அதனைப் பூலோக வாசிகள் தாங்கமாட்டார்கள் என்பதற்காக இறைவனின் ஆணைப்படி விஸ்வகர்மா அவற்றைக் குறைத்தாராம். அந்த நாள் ரத சப்தமி என்று புராணம் கூறும்.

ரத சப்தமி அன்று விரதம் கடைப்பிடிப்பவர்கள் அன்று அதிகாலையில் கடல் நீராட வேண்டும். அப்போது ஏழு எருக்கு இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் மேல் சிறிது அரிசி, அறுகம்புல் ஆகியவற்றை இட்டு உச்சந்தலையில் வைத்துக்கொண்டு சூரிய பகவானை நினைத்து நீராட வேண்டும். இது ஆண்களுக்குரிய நீராடல். மேலே சொன்ன பொருட்களுடன் சிறிதளவு மஞ்சள்தூளையும் சேர்த்துக்கொண்டு பெண்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். நீராடல் முடிந்ததும் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசை நோக்கி சூரிய வழிபாடு செய்வதால் கண்ணொளி பிரகாசிக்கும். சரும நோய்கள் ஏற்படாது.

புத்துணர்ச்சி உண்டாகும். தோஷங்கள் நீங்கி சுகமான வாழ்வு கிட்டும். ரத சப்தமி அன்று மட்டும் சூரிய வழிபாடு செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தினமும் சூரிய நமஸ்காரம் முறைப்படி செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். (சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை. இந்த கோதுமையில் தயாரித்த சில நிவேதனங்கள் 48-49 பக்கங்களில்)

-எம்.என்.ஸ்ரீநிவாசன்