முருகனின் நேர்பார்வையில் சனிபகவான்!



சேங்கனூர்

ஒருங்கிணைந்த தஞ்சை (நாகை, திருவாரூர்)  மாவட்டத்தில் சேங்கனூர் என்ற பெயரில் பல சின்னஞ்சிறிய  ஊர்கள் உண்டு.  நாம் இங்கே  தரிசிக்கப்போவது ஸ்ரீவாஞ்சியத்தை  ஒட்டியுள்ள சேங்கனூர். இங்கே கோயில்கொண்டுள்ள பெருமான் சோமநாத சுவாமி; இறைவி - சிவகாமசுந்தரி. பெரிய சிவாலயம்தான். ஆனால், ராஜகோபுரம் இல்லை. தூரத்திலிருந்து  பார்க்க, மாடக்கோயில்  போலத்தோன்றும். ஆனால், இது  மாடக் கோயில் அல்லவாம். முன் மண்டபம், வௌவால் நெத்தி மண்டபம்  எனப்படுகிறது. அருகில் 7 கி.மீ. தொலைவில் உள்ள திருவீழிமிழலை சிவாலயத்தில் இதேபோன்ற, பிரமாண்டமான வௌவால் நெத்தி மண்டபத்தைக் காணலாம். அங்கே, அங்குள்ள ஆலய பிரான் மாப்பிள்ளை சுவாமிக்கு (உற்சவர்) திருக்கல்யாண விழா மிகக் கோலாகலமாக நடக்கும்.

இப்போது நாம் தரிசிக்கும் சோமநாத சுவாமி கோயிலின் வௌவால் நெத்தி மண்டப நுழைவாயிலில் மேலே பெரிய பலகை, ‘சிவகாம சுந்தரி சமேத சோமநாத சுவாமி ஆலயம் - சர்வ தோஷப் பரிகாரத் தலம்’ என்று அறிவிக்கிறது. உள்ளே சென்றால் விசாலமான பிராகாரம். ஒருசுற்றுப் பிராகாரம்தான். ஆனால், அந்தப் பிராகாரம் முழுக்க அழகிய நந்தவனம், பசுமை பூத்து கண்ணுக்குக் குளுமையாகக் காட்சியளிக்கிறது. அடுத்து, மகாமண்டபம். இங்கே மூலவரை நோக்கிய நிலையில் சூரியன், சனீஸ்வரர், பைரவர் ஆகியோர் எழுந்தருளியிருக்கிறார்கள்.

இவர்களில் சனீஸ்வரர் மூலவரை நோக்காமல், மூலவரின்  இடது புறமாக, அர்த்த மண்டபத்தின் ஓரமாக சந்நதி கொண்டிருக்கும் முருகப் பெருமானை நோக்கியபடி இருப்பது, அபூர்வமான, வித்தியாசமான காட்சி. ‘இங்கு வந்து உம்மை வணங்குவோரை நான் பீடிக்க மாட்டேன்; தோஷம் உண்டாக்க மாட்டேன்’  என்று சனீஸ்வரன் முருகப் பெருமானுக்கு  சத்திய வாக்களித்த தலமாம் இது! இடதுபுறம் அதேபோல் மூலவரை நோக்கிய நிலையில் நாகராஜனும் நர்த்தன கணபதியும் உள்ளனர்.

இவர்களை வணங்கிவிட்டு  மகாமண்டப  நுழைவாயிலை நோக்கி நடக்கிறோம். வாயிலின் இருபுறமும் ஆகம விதிப்படி விநாயகரும், முருகனும் கொலுவிருக்கிறார்கள். மகாமண்டபத்தை பிரமாண்டமான, பழங்காலத் தூண்கள், பெருமையுடன் தாங்கி நிற்கின்றன. மண்டபத்தின் வலதுபுறம், தெற்கு நோக்கிய நிலையில் அம்பாள் சிவகாம சுந்தரி சந்நதி. அம்பிகை, நின்ற திருக்கோலத்தில், இருகரங்களில் மலர் ஏந்தி, மேலும் இருகரங்களில் அபய, வரத முத்திரைகள் தாங்கி, அருட்கோலம் கொண்டுள்ளார். அன்னையைப் பார்க்கும்போதே நெஞ்சு நெகிழ்கிறது.

கண்களில் நீர் பனிக்கிறது. அம்பாளை தரிசித்துவிட்டுத் தொடர்ந்து நடந்தால், அர்த்தமண்டபம் எதிர்ப்படுகிறது. இருபுறமும் துவார பாலகர்கள். இந்த அர்த்த மண்டபவாயிலின் வலதுபுறத்தில் முருகப் பெருமான் எழிலார்ந்த  தோற்றத்துடன் பிரகாசமாக  விளங்குகிறார். இவரது நேர்பார்வையில்தான் தூரத்தே சனி பகவான் இடம்பெற்றிருக்கிறார். முருகப்பிரானை உளமாற வணங்குகிறோம். ‘யாமிருக்க  பயமேன்?’ என்று அவர் மென்முறுவலாய் ஆறுதலளிக்கும் பிரமை நம்மைத் தழுவுகிறது. மனதில் புதுத் தெம்பு பிறக்கிறது.

மூலக்கருவறையில், சோமநாத சுவாமி திவ்ய மங்கள லிங்க சொரூபனாக அருட்காட்சி அருள்கிறார். ஆரம்பமும், முடிவும் அறிய இயலாத அற்புதத் தோற்றம். கரம் கூப்பி ஐயனை வணங்க, உள்ளம் இனிய பாகாக உருகுகிறது. செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் போக்கும், சகலபாப நிவர்த்தித் தலம் என்று இந்தக் கோயிலை குறிப்பிடுகிறார்கள். அதனாலேயே இக்கோயில், சர்வதோஷ பரிகாரத்தலமென்று பெயர் பெற்றிருக்கிறது.

குறிப்பாக, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜாதகத்தில் தொல்லை தரும் சனி ஆதிக்கம் என்று அனைத்துவகையான சனிதோஷங்களையும் நீக்கும் சக்தி மிகுந்த ஆலயம் இது. இங்கு சனீஸ்வரரையும், முருகப் பெருமானையும் வழிபட்டு, சுவாமி பெயருக்கு அர்ச்சனை பண்ணினால், என்றென்றும் வாழ்வில் வசந்தம்தான் என்பது பல பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

மீண்டும் சோமநாதரை வணங்கி, பிராகார வலம் வரும்போது, கோஷ்டத்தில், துர்க்கை வித்தியாசமாக தரிசனம் அருள்கிறாள். காரணம், துர்க்கையை விட, அவள் காலடியில் மிதியுண்டு கிடக்கும் மகிஷத்தின் (எருமையின்) தலை பெரியதாகக் காட்சியளிக்கிறது! எத்தனை பெரியவனாக இருந்தாலும், பாவச்செயல் புரிபவன் தன் காலடியில் துச்சமாக மிதிபடுவான் என்பதை துர்க்கை சூசகமாக அறிவிக்கிறாளோ என்றும் தோன்றுகிறது!

இதே பிராகாரத்தில் பழங்காலக் கிணறு ஒன்றைக் காணலாம். இப்போதும் சுவாமிக்கு இதிலிருந்துதான் அபிஷேகத்திற்கு  நீர் எடுக்கப்படுகிறது. கோயில், காலை 9 முதல் 12 மணிவரையிலும், மாலை 5 முதல் 7.30 மணிவரையிலும் திறந்திருக்கும். சோலைகள் சூழ்ந்த எழிலார்ந்த கிராமமான சேங்கனூர், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் - குடவாசல் வழியில் ஸ்ரீவாஞ்சியத்திற்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

- ஆர்.சி. சம்பத்