வெற்றிமலையில் வீற்றிருக்கும் வேல்முருகன்குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற முதுமொழிக்கேற்ப அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேயரில் ஒரு சிறிய குன்றின்மீது முருகன் எழுந்தருளியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய தலைமைச்செயலகமாக இருந்த ராஸ்தீவில் 1930ம் ஆண்டில் இந்த முருகன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். சுதந்திரத்திற்குப் பின்னர்,1966ம் ஆண்டில் போர்ட்பிளேயரில் தற்போது உள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.

இருபத்து ஐந்து படிகளை (இந்த சிறு குன்றை வெற்றிமலை என்று அழைக்கிறார்கள்) ஏறிச்சென்று, வள்ளி-தேவசேனா சமேதராய் அழகிய திருக்கோலத்தில் காட்சியளிக்கும் வெற்றி முருகனை தரிசிக்கலாம்.

அவருக்கு முன்னால் அவரது வாகனமான மயில், அதற்குப் பின்னால் பலிபீடம் மற்றும் கொடிமரம் என்று அமைந்துள்ளன. முருகனுக்கு வலப்புறத்தில் அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் சந்நதி அமைந்துள்ளது. இச்சந்நதியின் கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கா ஆகியோர் அருட்காட்சி வழங்குகிறார்கள். அருகில் சண்டிகேஸ்வர் சந்நதி.

அருகில் முருகப்பெருமான் வள்ளி-தேவசேனாவோடு உற்சவ மூர்த்தியாய் திகழ்கிறார். முருகனுக்கு இடது புறத்தில் காமாட்சி தனி சந்நதியில் கருணை ததும்ப தரிசனம் அருள்கிறாள். அன்னைக்கு எதிரே குபேர பைரவரின் திவ்யவடிவத்தைக் காணலாம். சுற்றுப் பிராகாரத்தில் மூலஸ்தானத்திற்குப் பின்புறம், இரட்டை விநாயகர், ராதே கிருஷ்ணா மற்றும் ஐயப்பன் சந்நதிகள் அமைந்துள்ளன. கொடிமரத்திற்கு சற்றுத் தள்ளி ஒரு மண்டபத்தில் நவகிரகங்கள் விளங்கினாலும், சனீஸ்வரருக்குத் தனி சந்நதி துலங்குகிறது.

அந்தமான் வாழ் தமிழர்களால் 1967ம் ஆண்டு தொடங்கப்பட்ட  பங்குனி உத்திர விழா, இன்றளவும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாமண்டப மேற்கூரையில் ஒரு அதிசயமான சுழல் லிங்க ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தின் கீழே நின்று நாம் எந்த பக்கம் நகர்ந்தபடி மேல்நோக்கிப் பார்த்தாலும் லிங்கமும் அதே திசையில் நகர்ந்து நமக்கு ஆசி நல்குவதைக் காணலாம்! மிக வித்தியாசமான ஓவிய அமைப்பு இது. அதேபோல பிரமாண்டமான கொடிமரத்தின் கீழே அறுபடைவீடுகளைக் குறிக்கும் சிற்பங்களும் கவினுறத் திகழ்கின்றன. இதுபோன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என்கிறார்கள்.

இத்திருக்கோயிலில் மதிற்சுவர் அமைக்கப்படாதது இன்னொரு அதிசயம். கோயிலுக்குள்ளிருந்தபடி வெளியே எங்கு நோக்கினாலும் இயற்கை எழிலை ரசிக்கும் வகையான இந்த அமைப்பு தனிச் சிறப்புடையது. அந்தமானுக்குச் செல்லும் யாரும், வெற்றி நலம் அருளும் இந்த வெற்றிமலை முருகனை தரிசிக்காமல் வருவதில்லை என்று சொல்கிறார்கள்.

- ஆர்.வி.பதி