பயங்களை விரட்டியடிக்கும் வரகுணேஸ்வரர்!அளுந்தூர், சின்னஞ்சிறிய அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பச்சை பசேல் வயல்வெளிகள்.  ஊரில் நுழைந்து வெளியே வயல்வெளிகளுக்கு இடையே செல்லும் சாலையில் நடந்தால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மிகப் பழமையான ஓர் ஆலயம் தெரியும். இந்த ஆலயத்திற்கு தென்மேற்கே அரைகிமீ.

தொலைவில் செங்குளம் என்ற நீர் நிறைந்திருந்த பகுதி, தற்போது வெற்றுத்திடலாகக் காட்சி தருகிறது.  இந்தத் திடலில் ஒரு நந்தியும் எதிரே ஆவுடையார் இல்லாத சிவலிங்கமும்  காணப்படுகின்றன. தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் சிலை ஒன்றும் இங்கே இருந்ததாம். இந்த சிலைகள் இங்கே அமைந்ததற்கு ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதி இருந்தனர். அவர்களுக்குப் பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை.  செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள் சொந்தமாக இருந்தன. அந்தக் குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதியர் காளைகளைப் பூட்டி வயலை, வழக்கம்போல உழத் தொடங்கினர். 

விவசாயி வயலை கலப்பையால் உழ அந்தப் பெண் களைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். இருவரும் ஆழ்ந்த சிவபக்தர்கள். விடிவதற்குள் நிலமனைத்தையும் உழுது முடித்துவிட வேண்டும் என்ற ஆவலில், நள்ளிரவைத் தாண்டியும் வேலையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருந்தனர்.

திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதேசமயம், கிராமத்தார்கள் சிலர் அந்த வழியாக வந்துகொண்டிருந்தனர். இளம் குழந்தை ஒன்று அழுவதையும், சற்றுத் தொலைவில் நள்ளிரவு என்றும் பாராமல் தம்பதி நிலத்தை உழுதுகொண்டிருப்பதையும் மருட்சியுடன் பார்த்தார்கள். அந்தப் பெண் வயலைவிட்டு கரையேறி திடலுக்கு வந்தாள்.

குழந்தையை மடியில் கிடத்தி, மார்புச் சேலையை ஒதுக்கிக் குழந்தை பால்  பருகச் செய்தாள். குழந்தை பருகி பசியாறியது. அந்த அகால நேரத்தில் அந்தத் தம்பதி நடந்துகொண்ட விதம் மர்மமாக இருக்கவே ஊரார் திகைத்துப் போயினர். அதேசமயம், அந்தப் பெண், குழந்தை, அவளது கணவர் மற்றும் காளைகள் எல்லாம் பளிச்சென்று சிலைகளாக மாறினர். பிரமித்துப்போன ஊரார் அது இறைவனின் கருணை என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை அப்படியே இறையம்சங்களாக பாவிக்கத் தொடங்கினார்கள்.

இவ்வாறு ஒரு கதை சொல்லப்படுகிறது.ஒரு காளை மற்றும் விவசாயி சிலைகள் தற்போது திடலாக காட்சி தரும் செங்குளம் ஏரிப்பகுதியில் காட்சி தருகிறது.  குழந்தைக்குப் பால் தரும் கோலத்தில் உள்ள தாயின் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் உள்ளது. இன்னொரு காளையின் சிலை அருகே உள்ள ஆலயத்தில் நந்தியம்பெருமானாக அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் வரகுணேஸ்வரர் மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. காலப்போக்கில் சற்றே சிதிலமடைந்த இக்கோயிலை முதலாம் குலோத்துங்கன் திருப்பணிகள் செய்து புதுப்பித்துள்ளான்.

பத்தாம் நூற்றாண்டு தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. சைவ வரலாற்றின் பொற்காலமும் இதுதான். சோழ மன்னர்களின்  கனிவான அரவணைப்பில் சைவம் தழைத்தோங்கியது நாடெங்கும் பல திருக்கோயில்கள் கட்டப்பட்டன, புனரமைக்கப்பட்டன.

அளுந்தியூர் சிவாலயமும் அந்தக் காலக்கட்டத்தில் புதுப்பொலிவு பெற்றது.  அளுந்தூர் என்று தற்போது அழைக்கப்படும் இந்தக் கிராமம், திருஅலுந்தியூர், அலுந்தியூர், அலுந்தூர் என்று அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இறைவன் வரகுண ஈஸ்வரமுடைய மகாதேவர், எனவும் வரவுணீஸ்வரமுடைய நாயனார் எனவும் போற்றப்பட்டிருக்கிறார். தற்போது வரகுணேஸ்வரர், காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி, காசி விசாலாட்சி. ஆலய முகப்பைத் தாண்டியதும் எதிரே நந்தியம் பெருமானும், பலிபீடமும் இருக்க வலதுபுறம் அன்னை விசாலாட்சியின் சந்நதி உள்ளது. இச்சந்நதியின் இரண்டாம் விமான தளம் முற்றிலும் அழிந்துவிட்டது.

இறைவி நாற்கர நாயகியாய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மேல் இருகரங்களில் அங்குசத்தையும் மலர்மொட்டையும் ஏந்தி,  கீழ் கரங்கள் அபய-வரத முத்திரைகளுடன் திகழ்கின்றன. இறைவியின் கரத்தில் அங்குசம் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. சிரத்தை மகுடமும், கழுத்து, கைகளை ஆபரணங்களும் அணிசெய்ய பட்டாடை உடுத்திப் பாங்காய்  மிளர்கிறாள் அன்னை.

அடுத்து தென்புறம் சற்றே நடந்து உயர்ந்த படிக்கட்டுகளில் ஏறி வடபுறம் திரும்பி மகாமண்டபத்தினுள் நுழையலாம்.  இறைவனின் சந்நதிக்கு முன்னே உள்ள மகாமண்டபத்தின் கூரையில் காணப்படும் நீளமான கற்கள் கீழே விழுந்துவிடுவோம் என்று அச்சுறுத்துகின்றன.

சிதிலமடைந்த இந்த மகாமண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், எவ்வளவு நாளைக்கு என்பதை அந்த இறைவனே அறிவார். இந்த நான்கு தூண்களிலும் சோழர்கால சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இரு தூண்களில் அடியவர்களின் வடிவங்களும், பூ வேலைப்பாடுகளும் உள்ளன. ஒரு தூணில் நந்தி, யானை முதலிய விலங்குகளைக் காணலாம்.

அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடபுறம் ஒரு பெரிய சுரங்க வாசல் செவ்வக வடிவில் காணப்படுகிறது.  இப்பாதை, அரை கி.மீ. தொலைவில் இருக்கும் பிடாரி தோப்பிற்குச் செல்கிறது என்கிறார்கள்.  தற்போது ஒரு சிமென்ட் பலகையைக் கொண்டு இந்தவாசலை மூடி வைத்துள்ளனர்.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் வரகுணேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்த்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் அனைத்து விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.  ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும் கார்த்திகை மாத அனைத்து சோமவாரங்களிலும் 108 சங்காபிஷேகமும் சிறப்பாக நடந்தேறுகின்றன.

மகா சிவராத்திரி திருநாள் வெகு அமர்க்களமாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று இறைவனுக்கு இரவில் ஐந்துகால பூஜை நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். மாதப் பிரதோஷம் பலநூறு பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அனைத்து விசேஷ நாட்களில் அன்னதானமும் உண்டு. ஆலய வளாகத்தில் பாம்பாட்டி சித்தரின் வாரிசு ஒருவர் ஐக்யமானதாகச் சொல்லப்படுகிறது.

மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் கால பைரவர் அருள்பாலிக்கிறார். பதினான்காம் நூற்றாண்டின் சிற்பக்கலையழகு மிளிர அமைந்துள்ள இவருடைய சிரம் சுடர்முடி அமைப்பில் உள்ளது. வலது முன்கரத்தில் முத்தலை ஈட்டியும், இடது முன்கரத்தில் தலையோடும், பின் கரங்களில் உடுக்கையும், பாசமும் உள்ளன.

பைரவரின் பின்னால் அவரது வாகனமான நாய் திறந்த வாயுடன் நின்றிருக்கிறது. பைரவரின் கழுத்திலிருந்து தொங்கும் மண்டையோட்டு மாலை அவரது முழங்கால்வரை நீண்டிருக்கிறது. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளும் பைரவர் யாகமும் நடைபெறுகின்றன.

மகாமண்டபத்தின் மேற்கில் முருகப்பெருமான் திருமேனி உள்ளது. வலது முன்கரம் அபயஹஸ்தமாகத் திகழ, இடது பின்கரம் ஈட்டி தாங்கியிருக்கிறது. சிரசை மகுடமும், கணுக்கால்களை சிலம்புகளும் அணிசெய்கின்றன.

கந்த சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை நாட்களில் இந்த முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், சிவதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சமான வில்வம் ஆலய முகப்பிலேயே உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் ஓர் அரசமரமும் அதன் அடியில் மன்னன் வரகுணபாண்டியன் சிலையும் உள்ளன. இந்த அரசமரம் பலநூறு ஆண்டுகளை கடந்தது என்கிறார்கள்.

இந்த ஆலயம், இன்றும் சித்தர்கள் உலவும் இடமாகத் திகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆலயத்தின் தென்மேற்கு திசையில் ஒரு கற்கட்டிடம் இருந்த சுவடு தெரிகிறது. அதனிடையே பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலமரம் ஒன்று உள்ளது. ஆலமரத்தின் அடியில் பீடம் ஒன்றும் உள்ளது.

மாத அமாவாசை நாட்களில் பின்னிரவு 3 மணி முதல் 4.30  மணிவரை அந்த ஆலமர பீடத்தில் இருவர் அமர்ந்திருப்பது போன்ற பிம்பம் சுமார் 5 நிமிடங்களுக்குத் தெரிவதாகவும், இதை பல பக்தர்கள் பார்த்ததுண்டு எனவும் சிலிர்ப்புடன் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் அகஸ்தியர் போல் குள்ள உருவத்தில் காட்சி  தருகிறாராம். இருவரில் ஒருவர் வடதிசை நோக்கியும், இன்னொருவர் கீழ் திசை நோக்கியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்களாம்.

இங்குள்ள சுந்தரபாண்டியன்  கல்வெட்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘ஆசரயம்’ என்ற சொல்லின் மூலம் இத்தலத்தின் சிறப்பை அறிய முடிகிறது. ஆசிரியம் அல்லது ஆஸிரியம் என்பதற்கு மரண பயம் உட்பட அனைத்து பயத்தையும் நீக்கும் தலம் இது என்பது பொருள்.

எனவே இத்தலத்து இறைவனான வரகுணேஸ்வரர் தன்னை நாடும் பக்தர்களின் மரண முதலான அனைத்து பயங்களையும் அறவே நீக்கி அவர்கள் நல்வாழ்வு வாழ அருள்புரிகிறார் என்பதில் சந்தேகமேயில்லை. திருச்சியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலுள்ளது இக்கோயில். நகரப் பேருந்தில் சென்று அளுந்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி, 3 கி.மீ. செல்ல வேண்டும். திருச்சியிலிருந்து ஆட்டோ,கால் டாக்ஸி வசதிகள் உண்டு.

- ஜெயவண்ணன்